உ தவி பற்றி வாய்கிழிய பீற்றப்பட்டு நடத்தும் அரசியல், வெட்கக்கேடான வகையில் பொய்களில் முகிழ்கின்றது. ஏகாதிபத்திய உதவி என்பது, வாங்கிய கடனுக்கு வட்டியை மீளக் கொடுப்பதையும், புதிய கடனை வாங்குவதையும் உறுதி செய்வதைத்தான் அடிப்படையாக கொண்டது. ஏகாதிபத்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டே உதவிகள் வழங்கப்படுகின்றன. இது கொடுக்கும் உதவியை விட, அதிகம் எடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு வெளியில் ஏகாதிபத்திய உதவி என்று எதுவும் கிடையாது. இதையே அண்மைய சுனாமி பின்பான ஏகாதிபத்திய வக்கிரங்கள் மறுபடியும் நிறுவியுள்ளது.
சுனாமியின் பின் மிகப் பிரமாண்டமாகத் தம்பட்டமடித்தபடி ஏகாதிபத்தியங்கள் களத்தில் இறங்கியுள்ளனர். உதவி பற்றி ஆர்ப்பாட்டமாகச் செய்தி ஊடகங்களில் கூக்குரல் இடுகின்றனர். சிறுதொகையை அறிவித்தவர்கள், பின்னால் அதுவே மிகப் பெரிய தொகையாகின்றது. ஏகாதிபத்திய நாடுகளில் தீர்மானகரமாக முடிவு எடுக்கக் கூடியவர்கள் தொடர்ச்சியாகவே பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அடிக்கடி செல்லுகின்றனர். அங்கு அவர்கள் தாம் விரும்பிய பல முடிவுகளை எடுக்கின்றனர். அதை அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவை எல்லாம் உதவியின் பின்னாலான ஒரு மக்கள் விரோத அரசியலாக உள்ளது.
மறுபக்கத்தில் மேற்கு வாழ் மக்கள் இந்த உதவியின்பால் திருப்பப்பட்டு, மூட்டை மூட்டையாகவே பணத்தைத் திரட்டினர். தமிழ் மக்களைப் புலிகள் எப்படி ஏமாற்றி திரட்டினாரோ அதையே ஏகாதிபத்தியமும் சொந்த மக்களை ஏமாற்றி திரட்டினர். பல ஆயிரம் கோடி பணம் மக்களிடம் இருந்து திருடிக் குவிக்கப்பட்டது. இதையடுத்தே ஏகாதிபத்திய உதவித் தொகைகள் அதிகரித்தன. ஏகாதிபத்திய அரசுகள் தனது சொந்த கஜானாவில் இருந்து பணத்தை வழங்கிவிடவில்லை அப்படி வழங்கினாலும் அதுவும் மக்கள் பணம் தானே? அரசு இப்படி என்றால் தனியார் நிறுவனங்கள் வழங்கும் நிதி கட்டவேண்டிய வரியில் கழிந்து போவதுடன், விசேட வரிச் சலுகையையும் பெறுகின்றது. இதன் மூலம் உலகை ஏமாற்றவும், மக்களை அடிமைப்படுத்தவும் முடிகின்றது.
இதற்கு வெளியில் மக்களை ஏமாற்றி திரட்டிய பணத்தில் இருந்தே, இந்த உதவி பற்றிய அறிக்கைகளை வெளியிடுகின்றனர். மறுபக்கத்தில், மக்களிடம் திரட்டிய பெரும்பகுதி தனியார் உதவி நிறுவனங்களின் சொந்த நிர்வாகச் செலவுக்குள் போய்விடுகின்றது. கழிவுகளையும் எஞ்சிய சிறிய தொகைகளையும் கொண்டே, ஏழை மக்களின் மேல் இலையான்கள் போல் மொய்க்கின்றனர். இதில் முக்கியமானதும் அடிப்பனையானதுமான ஒரு மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. எதிர்காலத்தில் இயற்கை அனர்த்தங்கள் மீது, பிரமாண்டமான பிரச்சாரத்தைக் கட்டமைத்து மக்களிடம் பணம் திரட்டும் வழிமுறை ஒன்றை உலகமயமாதல் கண்டறிந்துள்ளது. மக்களிடம் திரட்டும் பணத்தைக் கொண்டே, மக்களுக்கு எதிராக இயங்கும் அரசு சாராத நிறுவனங்களின் சதிக்கான ஒரு பாதையையும் கண்டறிந்துள்ளது. மக்களைச் சொல்லி உழையாது வாழ, மக்களின் பணத்தில் நக்கிப் பிழைக்கும் நிவாரணப் பணியாளர் கும்பல் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் பங்களிப்பைச் சமூக நோக்கில் இருந்து ஒழித்துக் கட்டுகின்றது. சமூகச் செயற்பாடும் பணத்தைக் கொண்டு உயிர் வாழ்கின்றது. பணமே சமூகச் செயற்பாடாகின்றது. அரசுகளின் செயற்பாட்டை இல்லாததாக்கி, மக்கள் நலன் என்ற அரசியல் உள்ளடக்கத்தை அரசியலில் இல்லாதொழிக்கின்றது.
உண்மையில் மக்களிடம் திரட்டிய பணத்துக்கு என்ன நடக்கின்றது? சுனாமி நிவாரணம் என்ற பெயரில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் 42 கோடி ஈரோவைத் திரட்டியுள்ளது. இப்படி திரட்டிய ஒவ்வொரு ஈரோவிலும் 15 சதவீதம் மட்டுமே, மக்களின் நிவாரணத்துக்கு எனப் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது 6.3 கோடி ஈரோ தான் (அண்ணளவாக 800 கோடி ரூபா) பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்றடைகின்றது. மீதம் 35.7 கோடி ஈரோவும் (அண்ணளவாக 4500 கோடி ரூபா) அவர்களின் நிர்வாகச் செலவுக்குச் சென்று விடுகின்றது. இதில் தலைமை வகிப்பவர்களின் வருடாந்தரச் சம்பளம் பல லட்ச ஈரோவாகும். இப்படி நிவாரணங்களின் பின்பு பொறுக்கித் தின்னும் ஒரு சமூகக் கட்டமைப்பே உருவாகின்றது. இப்படிச் சமூகச் சேவை செய்யும் பொறுக்கிகளுக்கு, உழைக்கும் மக்கள் தமது உழைப்பில் இருந்தே நிதியை வழங்கினர். ஜெர்மனியில் 82 சதவீதமான மாணவர்கள் சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கினர். இதில் 54 சதவீதம் மாணவர்கள் 1 முதல் 50 ஈரோவையும் 22 சதவீதமானவர்கள் 51 முதல் 200 ஈரோவையும், இரண்டு சதவீதமானவர்கள் 201 முதல் 500 ஈரோவையும் ஒரு சதவீதமானவர்கள் 500 ஈரோவும் அதற்கு மேற்படவும் நிதி வழங்கியிருந்தனர். இப்படிததான் உலக மக்களின் பணத்தை ஏகாதிபத்தியங்கள் திருடிக் கொண்டன. அதைக் கொண்டே உலகை அடிமைப்படுத்தும் வக்கிரங்களை அரங்கேற்றுகின்றனர். சுனாமியின் பெயரில் அரசு சாராத சர்வதேச நிறுவனங்கள் திரட்டிய தொகை அண்ணளவாக 60,000 கோடி ரூபாவாகும். இது பாதிக்கப்பட்ட முக்கிய நாடுகள் இந்த வருடம் கட்டவேண்டிய வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு தொகைக்குச் சமமானது. ஆனால் அரசு சாராத நிறுவனங்கள் திரட்டிய தொகையில் பெரும்பகுதி, அவர்களின் சொந்த நிர்வாகச் செலவுக்கே சென்று விடும் என்பது ஒன்றும் கற்பனையானவையல்ல. மறுபுறம் இந்த நிதி பெருமளவில் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளையே உற்பத்தி செய்கின்றது. அதாவது மக்களின் உதவியே, தமக்கு எதிராக இயங்கும் சக்திகளை உருவாக்கி விடுகின்றது.
அறிவிக்கப்படும் உதவி பற்றி அரசுகளின் அறிக்கைகள் கூட எப்போதும் பித்தலாட்டமானவை. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தர ஒப்புக் கொள்ளப்பட்ட மொத்த நிதி 270 கோடி (27000 கோடி ரூபா) டொலர். ஆனால் தை நடுப்பகுதிவரை 30 கோடி டொலர் (3000 கோடி ரூபா) மட்டுமே பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாசி முடிவுக்குள் 97.7 கோடி டொலர் (9770 கோடி ரூபாய்) வழங்கப்படும் என்றும் மீதம் இடைக்கால மற்றும் நீண்ட காலத் திட்டத்திலேயே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. வழங்கப்பட்டவை கூட பொருட்கள் வடிவில் அமைந்தன. உதாரணமாக ஜெர்மனி ஒப்புக் கொண்ட 50 கோடி ஈரோவில் 5 கோடி ஈரோ மட்டுமே வழங்கியுள்ளது. இந்த உதவி நிபந்தனைகளுடனும், பொருட்களாகவுமே வழங்கப்பட்டது. அதாவது இதுவரை அறிவிக்கப்பட்ட உதவியில் 30 சதவீதம் ஏகாதிபத்தியப் பொருட்களாகவே உள்ளது.
இந்த 30 சதவீதம் பொருட்களாக உள்ள போது, மீதமுள்ளவையும் ஏகாதிபத்தியப் பொருட்களாகவே வழங்கப்படும். அவையும் கூட கடுமையான நிபந்தனைக்கு உட்பட்டவை. தமது சொந்த நேரடி வழிகாட்டலுக்கு உட்பட்டே வழங்கப்படும். இந்த உதவிகளைத் தேசியமாகக் காட்ட புலிகள் செய்வது போல் சிலர் நடிக்க முனைகின்றனர். அரசுசாரா நிறுவனங்கள் வழங்கும் பொருட்களுக்கு லேபில் ஒட்டவும் அல்லது இடையில் கைமாற்றி வழங்கவும் அல்லது மேடையில் கவுரவ வழங்குனராக நின்று வாங்கி கொடுக்கும் இடைத்தரகர்களாகவே செயல்பட முடிகின்றது. இப்படி வழங்கப்படும் பொருட்களின் பெரும் பகுதி, மேற்கில் பயன்படுத்தி கைவிடப்பட்ட கழிவுகளை மீள் புனரமைப்பு செய்யப்பட்டே வழங்கப்படுகின்றது அல்லது மேற்கில் தேங்கிப் போன பொருட்களாகவும் அல்லது மேற்கில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட பொருட்களாகவும் இருக்கின்றன.
உதாரணமாக அனுப்பப்பட்ட மருந்துப் பொருட்களில் பெரும்பகுதியை அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஐட்ண் ஏஞுச்டூtட, கஞூடித்ஞுணூ, ஒணிடணண்ணிண ச்ணஞீ ஒணிடணண்ணிண பிரிட்டிஷ் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான எடூச்துணி ண்ட்டிtடடுடூடிணஞு, ஜெர்மனியின் ஏணிஞுஞிடt என்பனவே வழங்கியிருந்தன. இதை உற்பத்தி விலையுடன் கொடுக்கவில்லை. சர்வதேசச் சந்தை விலையிலேயே இதை வழங்கி, பெருமளவில் சுனாமி வடிவில் கொள்ளையடித்தன. இதன் மூலம் உண்மையில் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களே இயற்கை அழிவிலும் கொழுக்கின்றன. கஞூடித்ஞுணூ நிறுவனம் ஒரு கோடி டொலர் பணமாகவும் 2.5 கோடி டொலர் மருந்து வகைகளையுமே வழங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பிரதேசத்திற்கு தேவைப்படாத, அவர்களால் கேட்கப்படாத மருந்து வகைகளையும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியில் வழங்கினார்கள். இதன் மூலம் பெரும் இலாபத்தையும், பெரும் வரிச் சலுகையையும் பெற்றுக் கொள்கின்றன. உதவியாக மக்கள் வழங்கிய நிதியை சுருட்டிக் கொள்ளவும், தங்களுடைய உற்பத்தி தேக்கங்களையும், கழிவுகளையும் கூட நிவாரணத்தின் பெயரில் தலையில் அரைத்து விடுவதே நிகழ்கின்றது. பிரெஞ்சு பத்திரிகையான ஃஞுண் உஞிடணிண் நிவாரண உதவிகள் பற்றி கூறும்போது, பெருந்தொகையான பொய்களுடன், அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக உதவியில் பெயரில் தலையிடுவதாகவும், இவை மாபெரும் மோசடிகள் என்று எழுதி அம்பலப்படுத்தியது. உடனடி உதவியாக 40 நாடுகளில் இருந்து 140 கப்பல்கள், 142 விமானங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டதாய் கூறப்பட்ட போதும், இவை எவையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் இருந்து வழங்கப்படவில்லை. அரசியல் பொருளாதார நோக்கத்துடன் குறுகிய மனித விரோத வக்கிரத்துடனேயே அரங்கேறியது. இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், வறுமையில் சிக்கியுள்ள ஆப்பிரிக்கா மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி நிதிகளை வெட்டியதன் மூலம், பட்டினிச் சாவை ஏகாதிபத்திய நாடுகள் அங்கு ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் ஐ.நா. அறிக்கை சுனாமியின் பெயரில், ஏகாதிபத்தியம் உறுதியளித்த உதவித் தொகைகள் ஆப்பிரிக்கா பிரதேசத்துக்கு வெட்டப்பட்டதைச் சொல்லி புலம்பியுள்ளது. ஆப்பிரிக்காவில் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் மக்களின் வாழ்வு கேள்விக்குள்ளாகியுள்ளது. உண்மையில் இங்கும் மனித இனம் பற்றிய மனிதாபிமான அக்கறை எதுவும் பொதிந்து கிடக்கவில்லை. ஏகாதிபத்திய நிதியாதாரத்தில் இயங்கும் சர்வதேச உதவி நிறுவனமான Oதுஞூச்ட் இன் அறிக்கைப்படி, மேற்கத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்கும் உதவி 1960 ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது அரைவாசியாகியுள்ளதாகக் கூறுகின்றது. அதேநேரம் மேற்கு நாடுகளின் வாழ்க்கைத்தரம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. மறுபக்கத்தில் ஏழைநாடுகள் ஒவ்வொரு நாளும் 100 மில்லியன் டொலர்களை அதாவது 10 கோடி டொலர்களை (1000 கோடி ரூபாவை) வட்டியாகவும் திருப்பிச் செலுத்துகின்றன.
மறுபக்கத்தில் உதவி பற்றி மிகப் பிரமாண்டமான போலியான மனிதாபிமான பிரச்சாரங்களின் பின்னால், ஏழைநாடுகளின் கடன் மற்றும் வட்டியால் ஏற்பட்டுள்ள சுமையை நீக்கவில்லை. கடனை அதிகரிக்க வைக்கும் அடிப்படையில் உதவி திட்டங்கள் திட்டமிட்டே புகுத்தப்படுகின்றது. இதில் நுட்பமான ஏகாதிபத்தியச் சதிராட்டங்கள் அரங்கேறுகின்றது. உண்மையில் சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளின் போது கூட, கடனுக்கான வட்டியைச் செலுத்தாமல் இருப்பதை ஏகாதிபத்தியம் எந்தவிதத்திலும் அனுமதிக்கவில்லை. வட்டி மற்றும் மீள் கொடுப்பனவை பெறுவதை உறுதி செய்துகொண்டன. இதன் அடிப்படையில் மட்டும்தான் உதவி என்ற பெயரில் சில்லறைகளை வழங்க முன்வந்தனர்.
இங்கு உண்மையில் இந்தக் கடன்கள் மற்றும் அதற்கான வட்டி என்பன ஏகாதிபத்தியங்களின் வங்கிகளுக்குச் சொந்தமானவை. அதாவது இந்தக் கடனுக்குரிய பணம் மிகப்பெரிய பணக்காரக் கும்பலுக்குச் சொந்தமானவை. முதலீடு அல்லாத வழிகளில் மக்களின் ழைப்பை உரிந்தெடுக்கும் வகையில், பணத்தின் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கடன் மற்றும் வட்டி அறவிடும் உலகமயமாதல் ஒழுங்கு, நாடுகளின் மேல் திணிக்கப்படுகின்றது. இந்தக் கடனுக்கான வட்டியை அறவிடும் வகையில் தேசிய உற்பத்திகள் மாற்றி அமைக்கப்படுகின்றது. இதை உறுதி செய்ய மக்களின் வரிப்பணத்தையும், மக்களை ஏமாற்றி திரட்டும் உதவிகளிலும் இருந்தே உதவிகள் அறிவிக்கப்படுகின்றது. இதிலும் பல மீண்டும் புதிய கடனாக, உதவி என்ற போர்வையின் ஊடாகச் செல்லுகின்றது. இந்த இரண்டு வேறுபட்ட விடையங்கள் தான், கடன் நிலுவைகளையும் வட்டி அறவிடுவதையும் உறுதி செய்கின்றது.
இன்று மூன்றாம் உலக நாடுகள் தமது கடன் மற்றும் மீள் கொடுப்பனவாக அண்ணளவாக வருடாந்தரம் 35,000 கோடி டொலரை (35,00,000 கோடி இலங்கை ரூபாவை) ஏகாதிபத்தியத்துக்குச் செலுத்துகின்றன. இதில் இலங்கை விதிவிலக்கல்ல. அதாவது ஏகாதிபத்தியம் வழங்கும் ஒவ்வொரு டொலருக்கும் 1.44 டொலர் திருப்பி செலுத்தப்படுகின்றது. இதை எப்படி உதவி என்று சொல்ல முடியும். இது ஒரு திட்டமிட்ட சூறையாடல் தான். இதை அடிப்படையாகக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் திமிரெடுத்து கொழுக்கின்றன. நாடுகளையே அடிமைப்படுத்துகின்றன. இந்த 35 லட்சம் கோடி இலங்கை ரூபா பெறுமதியான வட்டி மற்றும் மீள் கொடுப்பனவை எப்படி யார் மீளக் கொடுக்கின்றனர்? மூன்றாம் உலக நாடுகளின் ஏழை மக்கள்தான், தங்கள் சொந்த உழைப்பில் இருந்து ஏகாதிபத்தியப் பணக்காரக் கும்பலுக்கு ஒவ்வொரு நாளும் வழங்குகின்றனர். இவற்றை அறவிட்டு வழங்குவதே தேசிய அரசுகளின் அரசியல் கடமையாகின்றது. இதை வாங்கி, வழங்க மறுப்பது, ஜனநாயக விரோத அரசு என்று முத்திரை குத்தபோதுமானது. இதுதான் இன்றைய உலக ஒழுங்கு. இந்த வட்டி மற்றும் மீள்கொடுப்பனவில் ஒரு சில சில்லறைகளையே உதவியாக வீசியெறிகின்றனர். ஒருபுறம் அறவீடும் மறுபக்கம் புதிய கடன் என்ற இரட்டை முறைமையே ஏகாதிபத்தியத்தின் அன்றாட இராஜதந்திர நடவடிக்கையாகும். இந்த உண்மைகளை இன்று பொதுவான அறிவியல் உலகமும், ஊடகத்துறையும் மக்களுக்குத் திட்டமிட்டே மறைக்கின்றது. பாதிக்கப்பட்ட நாடுகளின் கடன் தொகை என்ன? அவர்கள் வட்டியாகவும், மீள் கொடுப்பனவாகவும் வருடாந்தம் எவ்வளவு தொகையை ஏகாதிபத்தியத்துக்கு வழங்குகின்றனர். இதை வருடாந்தம் தமது சொந்த உழைப்பின் மூலம் கொடுக்கும் மக்கள் கூட அறியார். இப்படி இருக்கும் வகையில் தான் ஊடகங்கள் ஏகாதிபத்தியங்களால் இயக்கப்படுகின்றது.
மிக அதிக பாதிப்பைச் சந்தித்த இந்தோனேசியாவின் வெளிநாட்டுக் கடன் 13,432 கோடி டொலர். அதாவது 13,43,200 கோடி (இலங்கை ரூபா) இதற்காக வருடம் கட்ட வேண்டிய வட்டி 300 கோடி டொலர். அதாவது 30,000 கோடி இலங்கை ரூபா. உள்நாட்டு உற்பத்தியில் இந்தோனேசியாவின் கடன் 64.5 சதவீதமாகும். இது போல் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 1,016 கோடி டொலர். அதாவது 1,01,600 கோடி இலங்கை ரூபா. இதற்கு வட்டியாக கட்ட 2005ஆம் ஆண்டு வரவு செலவில் ஒதுக்கிய தொகை 50 கோடி டொலர். அதாவது 5,000 கோடி இலங்கை ரூபா. இலங்கையின் கடன் உள்நாட்டு உற்பத்தியில் 55.7 சதவீதமாகும். சீசெல்ஸ் தீவுகள் கடனோ 55 கோடி டொலர். அதாவது 5,500 கோடி இலங்கை ரூபா. இதற்கான வட்டி 50 லட்சம் டொலர். அதாவது 50 கோடி இலங்கை ரூபா. 2005இல் பாதிக்கப்பட்ட இந்த நாடுகள் கட்ட வேண்டிய மொத்த வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு 600 கோடி டொலர். அதாவது 60,000 கோடி இலங்கை ரூபா. இந்த இலட்சணத்தில்தான் ஏகாதிபத்திய உதவிகள் பற்றி பீற்றப்படுகின்றது. இந்த வட்டி மற்றும் மீள கட்டவேண்டிய மொத்த தொகையின் அரைவாசியைத் தான், உலகம் முழுக்க உதவியாக அறிவித்துள்ளனர். அதாவது உதவியாக அறிவிக்கப்பட்ட மொத்த பெறுமதி 365.5 கோடி டொலர் மட்டுமே. அதாவது 36,550 கோடி ரூபாதான். ஆனால் இந்த நாடுகள் ஒரே வருடத்தில் கட்டும் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு 60,000 கோடி இலங்கை ரூபாவாக உள்ளது. ஏகாதிபத்தியம் அறிவித்த உதவிகள் கூட வெறும் வாக்குறுதியாகவும், அதேநேரம் சில வருடங்களுக்கு நீடித்த ஒரு உதவியாகவே உள்ளது.
உலகை ஏமாற்றவும், மக்களின் அறியாமையைத் தமது சொந்தப் பொருளாதார நலனுக்கு இசைவாக மாற்றவும், உதவி பற்றி வீம்பாகப் பறைசாற்றுகின்றனர். இப்படி அறிவிக்கப்பட்ட உதவிகளைப் பார்ப்போம். ஐ.நா. சுனாமி மீள் கட்டமைப்புக்கு என ஒதுக்கிய உதவியைக் கீழ்க்கண்ட அட்டவணை 1இல் காணலாம்.
அட்டவணை: 1
நாடு தொகை இலங்கை மதிப்பில்
இந்தோனேசியா 37.1 கோடி டொலர் (3710 கோடி ரூபா)
இலங்கை 16.7 கோடி டொலர் (1670 கோடி ரூபா)
மாலைதீவு 6.6 கோடி டொலர் (660 கோடி ரூபா)
சோமாலி 1.0 கோடி டொலர் (100 கோடி ரூபா)
சீசெல்ஸ் தீவுகள் . 89 கோடி டொலர் (89 கோடி ரூபா)
ஐ.நா. உதவியாக அறிவித்த தொகை இதுதான். இந்த நிதியும் கூட பல சொந்த நிர்வாகச் செலவுகளைக் கடந்து செல்லும் போது, ஒரு சிறிய தொகையே மக்களுக்குச் சென்று அடையும். இதுவும் சந்தைப் பொருளாதார இலாப எல்லைக்குள் சிக்கிய பின், மக்களிடம் சென்றடைவது என்பது மிகச் சிறிய தொகையே. உதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு உடுப்பு ஒன்றை வழங்க 50 இலட்சத்தை ஒதுக்கினால், அதை வழங்குபவர் 25 இலட்சத்தைக் குறைந்தபட்சம் நேரடி இலாபம் கிடைக்கும் வகையில் தான் வழங்குவார். இதுதான் இப்போதைய சந்தை விதி. இப்படிதான் உதவிகள் லாபத்தை சிலருக்குக் குவிப்பதாக அமைந்து விடுகின்றது. உதாரணமாக மீள் கட்டுமானத்தில் கூட, பாதிக்கப்பட்ட மக்களின் உழைப்பைக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்குவதில்லை. பல இடைத்தரகர்களின் கொள்ளைக்கு உட்பட்ட வகையில், தரமற்ற கட்டுமானங்களையே கட்டமைக்கின்றனர்.
இந்த வகையில் மொத்த உதவியாக உலகம் முழுக்க அறிவிக்கப்பட்ட உதவிகளை அட்டவணை 2இல் பார்ப்போம்.
அட்டவணை 2
நாடு தொகை
ஆஸ்திரேலியா 76.4 கோடி டொலர்
ஜெர்மனி 66.0 கோடி டொலர்
ஜப்பான் 50.0 கோடி டொலர்
அமெரிக்கா 35.0 கோடி டொலர்
உலக வங்கி 25.0 கோடி டொலர்
நோர்வே 18.0 கோடி டொலர்
பிரான்ஸ் 10.3 கோடி டொலர்
பிரிட்டன் 9.6 கோடி டொலர்
இத்தாலி 9.3 கோடி டொலர்
டென்மார்க் 7.5 கோடி டொலர்
சுவீடன் 7.4 கோடி டொலர்
ஸ்பெயின் 6.8 கோடி டொலர்
கனடா 6.7 கோடி டொலர்
சீனா 6.0 கோடி டொலர்
தாய்வான் 5.0 கோடி டொலர்
மற்றவை 26.5 கோடி டொலர்
மொத்தம் 365.5 கோடி டொலர்
மேலே அட்டவணை 2இல் எடுத்துக் காட்டியது போல் மொத்த உதவியாக அறிவிக்கப்பட்ட தொகை, பாதிக்கப்பட்ட நாடுகள் வருடாந்தரம் வழங்கும் வட்டி மற்றும் மீள் கட்டுமானத் தொகையை விட மிகக் குறைவானதே. இந்த உதவி கூட பாதிக்கப்பட்ட பல மூன்றாம் உலக நாடுகளையும் உள்ளடக்கியதே. ஏகாதிபத்தியங்கள் இந்த நாடுகளிடம் அறவிடும் தமது வருடாந்தர வட்டி மற்றும் மீள் கொடுப்பனவில் பாதியைக் கூட உதவியாக அறிவிக்கவில்லை. அறிவிக்கப்பட்டவையும் சில வருடங்களில் வழங்குவோம் என்றுதான் உறுதி அளிக்கின்றது. இந்த உதவியும் தத்தம் நாடுகளின் கழிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருட்களாகவே வழங்கப்படுகின்றது. வழங்கப்படும். ஏகாதிபத்தியச் சந்தையில் தேங்கிப் போன பொருட்கள், கழிவுப் பொருட்கள், மற்றும் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பொருட்கள் என்ற நீண்ட வரிசையிலேயே ஏகாதிபத்திய உதவிகள் வக்கரிக்கின்றது. வருடாந்தரம் வட்டி மற்றும் மீள் வரவை உறுதி செய்யவே, உதவி வழங்கப்படுகின்றது. உண்மையில் இந்த நாடுகளின் கடன் என்பது, மேலே குறிப்பிட்ட தொகையை விட அதிகமாகும். உள்நாட்டு கடன் தொகை தனியாக உள்ளது. இதற்கு வட்டி என்று மக்களின் உழைப்பை உறிஞ்சி கொழுத்தபடிதான், புனர்நிர்மாணம் என்று மூக்கால் சிந்தி ஏகாதிபத்தியங்கள் களமிறங்கின. உதாரணமாக இலங்கையில் உள்ள ஒவ்வொருவரும் 7 ரூபா கொடுத்தால், மொத்தமாக இலங்கைக்கான புனர்நிர்மாண நிதியே 14000 கோடி ரூபா கிடைக்கும். இந்தத் தொகையை அந்த மக்கள் வழங்க தயாராகவே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் தேசியத்தை ஏகாதிபத்தியத்திடம் விற்பவர்கள், தேசிய அடிப்படையில் புனர் நிர்மாணத்தைச் செய்ய விரும்பவில்லை. இங்கு ஏகாதிபத்தியங்களின் தனிப்பட்ட நாடுகளின் அரசியல் பொருளாதார நலன்கள் உள்ளிட்ட, உலகமயமாதல் நலன்களை உறுதி செய்யும் பிச்சைக்காசைக் கொண்டு, உலகில் உள்ள கழிவுகளை நிவாரணமாக வாங்கி வழங்கப்படுகின்றது. உண்மையான தேசிய அரசுகள் வெளிநாட்டு உதவிகள் வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாகத் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய வட்டியை இரத்து செய்தாலே போதும் என்றும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்ல அவை மக்கள் நல அரசுகளா என்ன?
சுனாமியின் பெயரால் சில நாடுகளுக்கு, சில நாடுகளின் மேல் விசேட கருணையுள்ளம் பொத்துக் கொண்டு வருகின்றது. இலங்கை மீது நோர்வேக்கு தீராத காதல் அடிக்கடி ஏற்படுகின்றதது. அந்தக் காதல் பரிசாக இலங்கை உலக வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடனில் 11.3 கோடி அமெரிக்க டொலரை (1130 கோடி ரூபா), நோர்வே அரசு இலங்கைக்கு வழங்கி உள்ளதாக உலகவங்கி தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினையில் சமாதான வேடம் கட்டியாடும் நோர்வேயின், உள்நோக்கம் இலங்கையின் வளங்களைச் சூறையாடுவதுதான். நோர்வே பழங்குடி மக்களை அழித்து அவர்களின் சமாதிகள் மீது நோர்வே குடிகளாகியுள்ள முன்னாள் கடல் கொள்கைகாரர்கள் தான், உலகக் கொள்ளைக்காரர்களாக பவனி வருகின்றனர். உதவி, மனிதாபிமானம், சமாதானம் என்ற வேடங்களின் பின்னால் திட்டவட்டமான அரசியல் பொருளாதார நலன்கள் செறிந்து காணப்படுகின்றது. ஐரோப்பிய நகரங்களைக் கொள்ளையடிக்க நோர்வே கடற்கொள்ளைகாரர்கள் எப்படி அன்று திரிந்தார்களோ, அதையே சமாதான வேடம் காட்டியபடி உலகெங்கும் ஒரு வேட்டை நாயாகவே அலைந்து திரிகின்றது. அமெரிக்கா உலகைக் கொள்ளையடிக்க பயங்கரவாதம், ஜனநாயகம் பற்றி கூறிக் கொண்டு உலகையே ஆக்கிரமிப்பது போல் தான், நோர்வேயும். சமாதானம், நடுநிலை வேசம் கட்டியாடும் நோர்வேக்கு, மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் கிடையாது. மக்களைச் சுரண்டி சூறையாடுபவர்களுடன் கூடிக் கூத்தடித்தபடி, மக்களைச் சூறையாடுவதற்கு ஏற்ற வழித்துணைவர்களாக இருக்கின்றனர். மக்களின் உழைப்பை மேலும் அதிகமாகக் கொள்ளையடிக்கவும், இதற்குத் துணை செய்வதற்கு அனுமதி தேவை என்பது நோர்வேயினதும் உலகத்தினதும் இன்றைய கொள்கை. இதன் மூலம் நோர்வே தனது சூறையாடலை உறுதி செய்யவே விரும்புகின்றது.
உதவியின் பெயரில் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவுகளைப் புடுங்குவது ஒருபுறம் நிகழ்கின்றது. மறுபக்கத்தில் உள்நாட்டு பொருளாதாரக் கட்டுமானத்தையே தமது சொந்த நலனுக்கு இசைவாக மாற்றுகின்றது. அதேநேரம் சுனாமியைப் பயன்படுத்தி நாட்டின் கடற்கரையை ஆக்கிரமிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். கடலிருந்து 100 முதல் 300 மீற்றர் நிலத்தை மக்களிடம் இருந்து புடுங்குவதன் மூலம், மிகப் பெரிய சூறையாடலை ஏகாதிபத்தியம் நடத்த முனைகின்றது. சுனாமி கழுவி வெற்றிடமாக்கியுள்ள இலங்கைக் கடற்கரைகளின் மொத்தப் பெறுமதி 3000 கோடி டொலர் (அதாவது 3,00,000 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான கடற்கரைகளை, சர்வதேசப் பன்னாட்டுச் சுற்றுலாத்துறையும், சர்வதேசப் பன்னாட்டு மீன்பிடித்துறையும் மலிவாக அபகரிக்க முனைகின்றன. இந்தச் சர்வதேச மனித விரோதக் கும்பல் வீசும் எலும்புக்காகவே, மனிதாபிமானம் மற்றும் மக்களின் பாதுகாப்பு பற்றி மூக்கால் சிணுங்கி அழுகின்றனர். ஏகாதிபத்தியமும், உள்ளூர் எடுபிடி தரகர்களும் அறிவிக்கும் உதவிகள் முதல் மக்களின் வாழ்வியல் பிரச்சினை மீதான எல்லாவிதமான முன்னெடுப்பு வரை அனைத்தும் ஏகாதிபத்திய மூலதன நலன்களுடன் பின்னிப் பிணைந்ததாகவே உள்ளது.
5.1 ஒருபுறம் உதவி என்ற பெயரில் இலங்கையில்ஏகாதிபத்தியத் தலையீடுகள் மறுபுறம் நிவாரணமும் அது ஏற்படுத்தும் வக்கிர அரசியலும்
சுனாமியால் 15000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த மீள் கட்டமைப்புக்கு 13694 கோடி ரூபா வெளிநாட்டு உதவி கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது. அவற்றை அட்டவணை 3இல் காணலாம்.
அட்டவணை: 3
நாடுகள், நிறுவனங்கள் இலங்கை ரூபா
இந்தியா 2724 கோடி
ஜப்பான் 2560 கோடி
சர்வதேச நாணய நிதியம் 2500 கோடி
ஐரோப்பிய ஒன்றியம் 1400 கோடி
ஆசிய அபிவிருத்தி வங்கி 1000 கோடி
உலக வங்கி 500 கோடி
அமெரிக்கா 134 கோடி
நோர்வே 115 கோடி
இவற்றை விடவும் வேறு சில நாடுகளும் உதவிகளை அறிவித்துள்ளன. உதாரணமாக சீனா ஒரு அறிவிப்பை விடுத்தது. தனக்கு நாடு தழுவிய வலைப்பின்னல் கொண்ட ஒரு அமைப்பு உண்டு என்று சீனத் தூதுவர் அறிவித்ததுடன், இதன் மூலம் சீனா அரசு 12 கோடி ரூபா பெறுமதியான கூடாரங்கள், கம்பெனிகள் உணவுப் பொருட்களை வழங்கியதாக அறிவித்தார். அத்துடன் நிவாரணப் பணிக்காக 20 கோடி ரூபாவை வழங்கினார். இப்படி பல நாடுகள் வழங்கின. வழங்கிக் கொண்டிருக்கின்றன.
உதவி குறித்த ஆர்ப்பாட்டமான அறிக்கைகள் முதல் நாட்டின் உள் வந்து சேரும் பொருட்கள் வரை அனைத்தும் எந்த விதத்திலும் மக்கள் நலன் சார்ந்து கொண்டு வரப்படவில்லை. வந்து சேரும் பொருட்கள் இலங்கை வாழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறைமைக்கு இசைவானதாக இருப்பதில்லை. மேற்கின் பண்பாட்டுக் கலாச்சார எல்லைக்கு உட்பட்ட வகையில், அந்த நாட்டுக் கழிவுகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டது, குவிக்கப்படுகின்றது. மேற்கில் ஒவ்வொரு வீட்டிலும் பாவித்து கழித்த உடுப்புகள் பெருமளவில் திரட்டப்பட்டதை நாம் அறிவோம். ஏழைகள் மீதான இழிவான பார்வையும், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை கையாளும் முறைமையும் இணைந்து இந்த வக்கிரம் அரங்கேற்றப்படுகின்றது. இலங்கை மக்களின் பண்பாடு, கலாச்சாரங்கள் மீது மட்டுமின்றி, நுகர்வு வடிவங்களைச் சிதைக்கவல்ல ஒன்றாகவே உதவி பெயரில் இலங்கை ஆக்கிரமிக்கப்படுகின்றது. மக்கள் தமது வாழ்வில் இருந்து மீண்டு எழ, சொந்த உழைப்பைக் கொண்டு வாழும் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட உதவிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றன.
மறுபுறம் சர்வதேச உதவி, சொந்த மக்களின் உதவி என்று ஆர்ப்பாட்டமாகத் திரட்டப்பட்ட பெரும் தொகை நிதிக்கு என்ன நடந்தது என்று தெரியாத மர்மம் ஒருபுறம் நீடிக்கின்றது. இதில் புலிகளும், அரசும், ஏகாதிபத்தியமும், ஏகாதிபத்தியத் தன்னார்வ நிறுவனங்களும் கூட விதிவிலக்கற்ற வகையில் ஒரேவிதமான அணுகுமுறையையே கையாளுகின்றனர். மூடுமந்திரமான மோசடியை அரங்கேற்றி நடத்தும் நாடகங்கள் ஒருபுறம் தொடர, உதவியை இனம், மொழி, மதம், சாதி என்று பிரித்து, அதற்குள் தமது மோசடிகளை மறைக்கும் அரசியல் விளையாட்டை நடத்துகின்றனர். தம் குறுகிய நலன் சார்ந்து கிடைக்கும் நிதியைக் கூட இல்லை என்பதும் ஒரு பிரச்சாரமாகவே அரங்கேறுகின்றது. இதன் மூலம் தாம் கொடுக்காததை மூடிமறைக்க முனைகின்றனர். தமது சொந்த மோசடியை மறைக்க மற்றவர்கள் மீது கொடுக்கப்படாமையைக் குற்றமாகக் காட்டுவது அரங்கேறுகின்றது. குறிப்பாக புலம்பெயர் தமிழ்மக்கள், எந்தவிதமான உதவியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட மக்களால் முன்வைக்கப்படுவது ஒரு செய்தியாகின்றது. புலம் பெயர் சமூகம் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க முடியாத ஒரு குற்றவாளியாகி நிற்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் எதுவும் பெருமளவில் செல்லாமை, ஒரு சமூகக் குற்றமாகி உள்ளது. புலம் பெயர் சமூகத்தின் பெருமளவிலான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்வதை உறுதி செய்யாமை கூட, சொந்த மக்களுக்கு செய்த ஒரு வரலாற்றுத் துரோகம் தான். உண்மையில் இலங்கையில் என்ன நடந்தது, என்ன நடக்கின்றது என்பதை ஆராய்வது அவசியமாகின்றது.
5.2 சுனாமியின் விளைவு என்ன?
ஆசிய அபிவிருத்திவங்கி தனது அறிக்கை ஒன்றில் சுனாமியைத் தொடர்ந்து இலங்கையில் 2,50,000 பேர் வறியவர்களாகி விட்டனர் என்று கூறுகிறது. மீன்பிடி மற்றும் உல்லாசத்துறையைச் சார்ந்து வாழ்ந்த 4 லட்சம் பேர் ஒரு நேர உணவுக்கான தமது தொழிலை இழந்துள்ளனர். இலங்கையில் வேலையற்றோர் அளவு சுனாமிக்கு முன்னர் 9.2 சதவீதமாக இருந்தது. இது சுனாமியின் பின் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர் எண்ணிக்கை அண்ணளவாக 38 ஆயிரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாகும். இந்தத் தொகை இறப்பின் கொடூரத்தின் வீச்சைக் காட்டுகின்றது. சேதமடைந்த வீடுகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ 1,40,000 வீடுகள் ஆகும். சேதமடைந்த உல்லாசப் பயண விடுதிகள் எண்ணிக்கை 50 ஆகும்.
இலங்கை மத்திய வங்கி மொத்த இழப்பை 15,000 கோடி ரூபாவாக அறிவித்துள்ளது. உதவி என்ற பெயரில் கடன் வழங்கும் சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை 100 கோடி அமெரிக்க டொலர்கள் (10,000 கோடி ரூபா) என மதிப்பிட்டுள்ளது. இலங்கைக்குக் கடன் வழங்குபவர்கள் நாட்டைப் புனரமைக்க 150 கோடி டொலர்கள் (15,000 ஆயிரம் கோடி ரூபா) தேவை எனவும் மதிப்பிட்டுள்ளனர். இப்படி ஒரு பொதுவான சித்திரத்தை ஆளும் வர்க்கங்கள் தருகின்றன. இந்தச் சேதத்தைத் துறை சார்ந்து முன் வைப்பதைப் பார்ப்போம்.
1. கல்வி சார்ந்த கட்டிடத் துறைக்கு 270 கோடி ரூபா (168 பாடசாலையும், 4 பல்கலைக்கழகமும், 18 தொழிற்பயிற்சி நிலையமும் சேதமடைந்ததாக அறிவித்துள்ளனர்.) இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறைக்கு நேரடி மற்றும் மறைமுக இழப்பு 470 கோடி ரூபா ஏற்பட்டுள்ளது.
2. சுகாதாரத்துறைக்கு 630 கோடி ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது. (இதில் 92 மருத்துவமனைகள் சேதமடைந்தன.) மேலும் வைத்திய உபகரணங்கள் மற்றும் பல்வேறு மருத்துவத்துறை சார்ந்து 880 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
3. வீடமைப்புக்கு 430 முதல் 510 கோடி ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 99,480 வீடுகள் முற்றாக அழிந்துள்ளது. 44,290 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
4. விவசாயத் துறைக்கு அண்ணளவான 30.4 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. கடல்நீர் புகுந்ததால் நான்கு வருடம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இப்படி 2308 ஹெக்டேர் நெற்செய்கையும், 589 ஹெக்டேர் தானிய பயிர் செய்கை நிலமும், 473 ஹெக்டேர் காய்கறித் தோட்டமும், 201 ஹெக்டேர் பழச் செய்கை நிலமும் சேதமடைந்துள்ளது. மேலும் 63,000 பறவை இனங்களும், 6,500 மாடுகளும், 3,100 ஆடுகளும் கொல்லப்பட்டன.
5. தொழில் இழப்பு சார்ந்து 1,470 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து ஆயிரம் சிறு வியாபாரிகள் தொழிலை இழந்துள்ளனர். 2,800 விடுதிகள் சேதமடைந்தன. இதனால் 40000 பேர் தொழிலை இழந்துள்ளனர். உல்லாசத்துறை சார்ந்து 27000 பேர் தமது தொழிலை இழந்துள்ளனர்.
6. மின்சாரத்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 100 கோடி டொலர். மொத்தமாக 70000 வீடுகளுக்கு மேல் மின் இணைப்பை இழந்துள்ளன. மேலும் 70000 மின்மானிகள் சேதமடைந்துள்ளது. 88 உப மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளது. இதற்கு 810 கோடி ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது.
7. சுத்தமான குடிநீருக்கு ஏற்பட்ட இழப்பு 440 கோடி ரூபா. மொத்தமாக 12000 கிணறுகள் சேதமடைந்துள்ளது. 50000 கிணறுகளில் கடல் புகுந்து உவராக்கியுள்ளது. நீர் விநியோகம் செய்த குழாய்கள் சேதமடைந்துள்ளது. இவற்றின் இழப்பு 1220 கோடியாகும்.
8. போக்குவரத்துக்கு ஏற்பட்ட சேதம் 150 கோடி ரூபா. மேலும் நாள் ஒன்றுக்கு 78000 பேர் பயணம் செய்த கரையோர போக்குவரத்து 20 கிலோமீற்றருக்குச் சேதமடைந்துள்ளது. கூடுதலாக அது சார்ந்த தகவல்துறையும் சிதைந்துள்ளது. மொத்தமாக 1360 கோடி ரூபா தேவை. இது மட்டுமல்லாமல் வீதிப்போக்குவரத்துக்கு ஏற்பட்ட சேதம் 630 கோடி ரூபாவாகும். 690 கி.மீற்றர் நீளமான பாதை சேதமடைந்துள்ளது. மேலும் 1100 கி.மீற்றர் உள்ளூர் வீதிகளும், பாலங்கள் கூட சேதமடைந்துள்ளது இதற்கு 2100 கோடி ரூபா தேவை.
9. மீன்பிடித்துறைக்கு 1010 கோடி ரூபா தேவை. 27 ஆயிரம் கடல் தொழிலாளர்களும் (மீனவர்களும்) அவர்களின் குடும்பத்தினரும் இறந்துள்ளனர். 90000 கடல் தொழிலாளர்கள் (மீனவக் குடும்பங்கள்) புலம் பெயர்ந்துள்ளனர். 29700 மீன்பிடிக் கலங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளது. மேலும் வெளியிணைப்பு இயந்திரங்கள், ஐஸ் தொழிற்சாலைகள், மீன்பிடி துறைமுகங்களுக்கு ஏற்பட்ட சேதம் 1240 கோடி ரூபாவாகும்.
10. உல்லாசத்துறைக்கு ஏற்பட்ட சேதம் 2620 கோடி ரூபாவாகும். இதனால் 50000 பேர் நேரடியாகவும், 65000 பேர் மறைமுகமாகவும் வேலையை இழந்துள்ளனர்.
உலக வங்கி தனது அறிக்கை ஒன்றில் கடல்கோள் அனர்த்தம் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 20 கோடி அமெரிக்க டாலர் (2000 கோடி ரூபா) சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டிலேயே 5.65 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இது 2005இல் 6 இலட்சமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுனாமியினால் இது ஒரு லட்சத்தால் குறையும் என்று அறிவித்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 2 சதவீதமாக உள்ளது. கடல்கோள் அனர்த்தத்தால் 100இக்கும் அதிகமான ஹோட்டல்கள் முற்றாக சேதமடைந்தோ அல்லது அழிந்தோ போயுள்ளது. உண்மையில் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்ட அழிவு குறித்த நாட்டை மட்டும் பாதிக்கவில்லை. சர்வதேச சுற்றுலாத் துறையையும், சர்வதேச விமான துறையையும் கூட நேரடியாகப் பாதித்துள்ளது. இதனால் சர்வதேச மூலதனங்கள் சில கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
இந்த சிதைவில் இருந்து மீள, ஆரம்ப மீள் கட்டுமானத்தைச் செய்ய ஒரு திட்டத்தை அரசு முன்வைக்கின்றது. அந்தத் திட்டத்தை அட்டவணை 4இல் காணலாம்.
அட்டவணை: 4
இறந்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 40,000 பேர்
வீடுகளை இழந்தோர் 1,00,000 பேர்
காணாமல் போனோர் 6,000 பேர்
காயமுற்றோர் 15,000 பேர்
நாட்டை மீளகட்டியெழுப்பும்
பணிக்குச் செலவாகும் தொகை 348.33 கோடி ரூபா
மூன்று கட்டங்களாகப் புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அந்த மூன்று கட்டங்களையும் புனரமைப்புப் பணிகளையும் அட்டவணை 5அஇல் காணலாம்.
அட்டவணை: 5
முதலாவது கட்டம் 27.04 கோடி ரூபா
இரண்டாவது கட்டம் 168.83 கோடி ரூபா
மூன்றாவது கட்டம் 152.57 கோடி ரூபா
அட்டவணை: 5 அ
துறைவாரியாகச் சீரமைக்கச் செலவாகும் தொகையினை அட்டவணை 5 அவில் காணலாம்.
வீதிப் போக்குவரத்து சீரமைப்பிற்கு 66.14 கோடி ரூபா
புகையிராத போக்குவரத்து 43.14 கோடி ரூபா
தொலைத் தொடர்பு 8.7 கோடி ரூபா
நீர் விநியோகம், சுத்திகரிப்பு 41.96 கோடி ரூபா
துறைமுக மீள்கட்டுமானம் 3.2 கோடி ரூபா
மின்சாரம் 12.6 கோடி ரூபா
கல்வி 13.2 கோடி ரூபா
சுகாதாரம் 11.8 கோடி ரூபா
சமூக நலன் 60.0 கோடி ரூபா
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி 52.0 கோடி ரூபா
மீன்பிடி அபிவிருத்தி 33.0 கோடி ரூபா
தொழிற்சாலைகள் புனரமைப்பு 3.5 கோடி ரூபா
உல்லாசப் பயணத்துறை 32.8 கோடி ரூபா
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு 7.5 கோடி ரூபா
வர்த்தக முதலீடுகள் அபிவிருத்தி 5.5 கோடி ரூபா
சட்ட ஒழுங்கு பாதுகாப்பு 4.5 கோடி ரூபா
வறுமை ஒழிப்பு தற்காலிக நிவாரண உதவி குடும்பம் ஒன்றிற்கு 5000 ரூபா
இலங்கையில் ஏற்பட்ட இழப்பும், மீள் கட்டுமானமும் பற்றிய ஒரு சித்திரத்தையே அட்டவணை 5 மற்றும் 5 அஇல் காண்கின்றோம். இது குறுகியகாலம் மற்றும் நீண்டகாலத் திட்டமிடுதலின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது. மீள் கட்டுமானம் முதல் சீரமைப்பு வரை மக்களின் இழப்பைப் பற்றிய சித்திரம், பொதுவாகவே மக்களின் அடிப்படையான நலன்களில் இருந்து முன்வைக்கப்படுவதில்லை. மக்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களில் இருந்து, உடனடியான மீள் கட்டுமானத்தைத் திட்டவட்டமாகப் புறக்கணிக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட இழுபறியான ஒரு அலைக்கழிந்த வாழ்வையே பரிசாக அளிக்கின்றது. மற்றவர்களிடம் கையேந்தி தங்கி வாழும் ஒரு இழிந்த வாழ்வைத் திணிக்கின்றது. எதிர்காலத்தை இட்டு எந்தவிதமான நம்பிக்கை அளிக்கும் திட்டங்கள் எதையும் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுவிடவில்லை. சொந்த தங்குமிடமின்றி, சொந்தத் தொழிலும் இன்றி, உழைப்புக்கும் வழியின்றி வாழக்கோரும் மீள் கட்டமைப்பு, இடைத்தரகர்களின் கொழுத்த பணத்திரட்டலுக்கே உதவுகின்றது.
உண்மையில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரியாக இனம் காணவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கும், வாழப் போகும் மக்கள் கூட்டத்தில் மீள் வாழ்வு என்பது, உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டியவை. உடனடியாக நம்பிக்கையுடன் வாழ்வில் காலடிகளை எடுத்து வைக்கும் வகையில் உதவவேண்டும். சில உதவிகள் காலம் தாழ்த்தப்படலாம், ஆனால் அவை கிடைக்கும் என்ற உறுதியை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்று தமது வாழ்வுக்கான அஸ்திவாரத்தைப் பெறும் வகையில் உதவிகள் திட்டமிடுதல் அவசியமானது. ஆனால் இவை முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றது.
பெருமளவிலான பாதிப்பைச் சந்தித்த கடலை அண்டி வாழ்ந்த, மக்களின், கடலில் தங்கி வாழ்ந்த மக்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை. ஓர் அமைதியான சூனியமே திணிக்கப்பட்டுள்ளது. இழந்துபோன வள்ளங்களைப் பெறும் வகையில் எந்த ஒரு முன்முயற்சியையும் முன்னிலைப்படுத்தி அரசு இயங்கவில்லை. மீன்பிடி வள்ளத்தைப் பெறுவதும், மீன்பிடிப்பதும் உடனடியான ஒரு பணியாக இருக்க வேண்டும். ஒரு சில வள்ளங்களை வழங்குவதன் மூலம், மீன்பிடி சமூகத்தையே திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றனர். மீன்பிடித்துறையில் வள்ளங்களை இழந்த மீன்பிடியாளர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு இழப்புகளைச் சந்தித்தவர்கள் மீன்பிடித் தொழிலை நடத்த விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கும் மீன்பிடி உபகரணங்களை இலவசமாகவே உடனடியாக வழங்கப்படவேண்டும். மீன்பிடி தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும். இது ஒன்றும் அதிகமானது அல்ல. உதாரணமாக இன்றைய திட்டமிடலாளர்கள் நிவாரணம் என்ற பெயரில், பாதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, மக்கள் அல்லாத துறைகளில் விரிவாக்கும் போது ஏன் அதை மக்களுக்குச் செய்வதை மறுக்க வேண்டும். 100 மீற்றர் கடற்கரையைக் கூட கொள்ளையிடுவர்கள்? மக்களுக்கு வாழ்வையே மறுப்பதை நாம் கவனிக்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீன்பிடி வள்ளங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் வாங்குவதற்கான எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. இதைப் பெறுவதற்கான முன்முயற்சிகளைக் கூட அரசு எடுக்கவில்லை.
இதே போன்றே வீடுகளை இழந்த மக்களின் நிரந்தர குடியிருப்புக்கான ஒரு நாடு தழுவிய முயற்சி எடுக்கப்படவில்லை. 100 மீற்றர், 200 மீற்றர் பாதுகாப்பு பிரதேசம் என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களின் இனப் பிரச்சினையைப் போல் நீடித்த இழுபறியான ஒரு நிலைக்குத் தள்ளி, அந்த மக்களின் வாழ்வையே திட்டமிட்டு அழிக்கின்றனர். பல பத்தாயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான அடிப்படை முயற்சிகள் கூட ஒழுங்கமைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு தேசிய இனப்பிரச்சினை தீர்வு போல் முடிவற்ற வகையில் துன்பமான இழுபறியான துயரங்களில் சிக்கி அழுகுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளியில் ஏகாதிபத்தியச் சந்தைப் பொருளாதாரத்துக்கு இசைவான வகையிலும், உல்லாசத்துறையைக் கொழுக்க வைக்கும் வகையிலும் வீதிப் போக்குவரத்து போன்ற துறைகளிலேயே அரசு தனது முதன்மை கவனத்தைச் செலுத்துகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் இனம், மொழி, மதம் கடந்து ஒரேவிதமான எதிர்வினையைத் தான் அரசிடம் எதிர்கொள்கின்றனர். இதில் வடக்கு கிழக்கு மக்கள் மேலான சுமை இனவாதத்தினால் அதிகரித்துள்ளது. இதில் முஸ்லீம் மக்கள் மேல் புலிகளினால் ஏற்படும் சுமையானது பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வாழ்வைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கும் கீழாக்குகின்றது. இதை விட புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான முடிவற்ற இழுபறியான பேரங்கள், மக்கள் நலனுக்கு வெளியில் நடத்தப்படுவதால் மேலும் சுமை பன்மடங்காகின்றது. இந்தப் பேரங்கள் தமிழ் மக்கள் நலன்களில் இருந்து நடத்தப்படவில்லை. சொந்த நலன்களில் இருந்தே நடத்தப்படுகின்றது. மீள் கட்டுமானம், மீள் நிர்மாணம் முதல் பாதிக்கப்பட்ட சேதங்களைக் கூட மேல் இருந்து திணிக்கும் முறையூடாகவே திட்டமிட்டு மக்கள் விரோத வடிவங்களுடாகவே கையாளப்படுகின்றது. உண்மையில் மக்களுக்கான மீள்கட்டுமானம், மீள்நிர்மாணம் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடியான கண்காணிப்புக்கும், உட்பட்ட வகையில் செய்யப்பட வேண்டும். அவர்களின் விருப்புக்கு ஏற்பவே இவை திட்டமிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் தெரிவுசெய்யும் பிரதிநிதிகளை மையப்படுத்தி, அவர்கள் உருவாக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு ஊடாக மட்டும்தான், நேர்மையான மீள்கட்டமைப்பு மக்கள் சார்ந்ததாக இருக்கும். இதன் மீது மக்கள் தமது கருத்தைச் சொல்லக் கூடிய, மாற்றக் கூடிய ஒரு கட்டமைப்பு மட்டும் தான், மீள கட்டுமானத்தை மக்களுக்கானதாக உருவாக்கும்.
இது இல்லாத மீள்கட்டுமானம் மக்களுக்கு எதிரானதாகவே திட்டவட்டமாக இருக்கும். இது தரகர்களினதும், அரசியல்வாதிகளினதும் கொள்ளைக்கும், திருட்டுக்கும் உட்பட்டே மக்களிடம் செல்லும் போது, அவர்கள் விரும்பாத ஒன்றைப் பலாத்காரமாகத் திணிப்பதாகவே அமையும். இதில் அரசும் சரி, புலிகளும் சரி, ஏகாதிபத்தியமும் சரி, தன்னார்வ நிறுவனங்களும் சரி ஒரே விதமாகவே செயல்படுகின்றது. மக்களின் சொந்த விருப்பங்களில் இருந்து, இந்த மீள் கட்டுமானம் புனர்வாழ்வு முன்வைக்கப்படவேயில்லை. மீள்கட்டுமானம் என்ற பெயரில் கையேந்தி நிற்கும் அவலத்தையே, இந்த ஜனநாயகம் வெட்கங்கெட்ட முறையில் மக்கள் மேல் திணிக்கின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்படித்தான் என்று சொல்லும் அதிகாரத்தை, மற்றவர்களுக்கு யார் வழங்கினார்கள்? மக்களின் அபிப்பிராயத்தை உள்ளடக்கி எந்தக் கட்டுமானமும் திட்டமிடப்படவில்லை. வடக்கு கிழக்கிலும் கூட இதுதான் நிலைமை. மறுபக்கத்தில் இனமுரண்பாடு ஏற்படுத்தும் சோகம் இதைவிட கேவலமானதாகவே உள்ளது. திட்டமிட்ட சிங்களப் பேரினவாதம் ஒருபுறம், தமிழ்க் குறுந்தேசியவாதம் மறுபுறம், அதிகளவில் பாதிக்கப்பட்ட கிழக்கு வடக்கு மக்களின் வாழ்வியல் தலைவிதியையே கேவலமாக்குகின்றது. குறிப்பாக அதிக சேதத்தைச் சந்தித்த முஸ்லீம் மக்களின் சோகம் சொல்லி மாளாதது. இதில் குறுந்தேசியப் புலிகளின் அணுகுமுறை இதை மிகக் கேவலமாக்குகின்றது.
5.3 வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மனித அவலங்களும், சூறையாடல்களும்
வடக்கு கிழக்கில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றைய பகுதியைவிட அதிகமாகும். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்பு இலங்கையிலேயே மிக அதிகமாகும். இது இலங்கையின் மொத்த இழப்பில் மூன்றில் ஒன்றாகும். இலங்கை அளவில் இனரீதியாக பார்த்தால் முஸ்லிம் மக்கள்தான் அதிக இழப்பைச் சந்தித்துள்ளனர். இதற்கு அடுத்தளவிலான இழப்பு சிங்கள மக்களுக்காகும். இறுதியாகத் தமிழ் மக்கள் அதிக இழப்பைச் சந்தித்து உள்ளனர். இந்தச் சுனாமி அழிவை இனரீதியாக அணுகும் அரசியல் முதல் ஊடகத்துறை வரை இழப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் காட்டுகின்றனர். தமிழ் தரப்பு தாமே அதிக இழப்பைச் சந்தித்ததாகக் காட்ட முனைகின்றனர். இதையே சிங்களத் தரப்பும் செய்ய முனைகின்றது. இதன் மூலம் அதிக இழப்பைச் சந்தித்த முஸ்லிம் மக்களின் அவலத்தைத் திட்டமிட்ட வகையில் தமிழ், சிங்கள தரப்பு ஒடுக்கி அவர்களின் மீள் புனர்வாழ்வையே ஒடுக்கும் பலம் வாய்ந்த சக்தியாக நிற்கின்றனர்.
சுனாமி பேரலையால் ஏற்பட்ட இறப்பில் 53 சதவீதம் முஸ்லீம் மக்களாவர். இதன்பின்னால் தான் மற்றைய இனங்களான சிங்கள இனமும் தமிழ் இனமும். வடக்குகிழக்கைப் பொதுவாகக் காட்டி சுரண்ட, குறுந்தேசியத் தமிழ் இனவாதிகள் முனைகின்றனர். முஸ்லீம மக்களின் நிவாரணத்தைப் பற்றி எதுவும் பேச முனைவதில்லை. இதைப் புலிகளின் அன்றாட கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களில் நாம் இலகுவாக இனம் காணமுடியும். முஸ்லீம் மக்களின் அழிவைத் தமிழ்க் குறுந்தேசிய நலனுக்கு இசைவான வகையில் பயன்படுத்தும் பேரங்களைச் செய்கின்றனர். அம்பாறையில் ஏற்பட்ட அழிவை எந்தத் தமிழ்த் தேசியத் தலைமையும் அக்கறை காட்டவில்லை. சிங்கள இனவாதிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது இவர்களின் குறுந்தேசிய நிலைப்பாடாகும்.
சுனாமி மீள்கட்டமைப்பைச் செய்ய அரசுடன் புலிகள் நடத்தும் பேரங்களில் கூட ஒரு முஸ்லீம் விரோத வக்கிரமே அரங்கேறுகின்றது. கசிந்துவரும் தகவல்களின்படி வடக்குகிழக்கு மீள்கட்டமைப்புக்கான குழுவுக்கான பேரங்கள் முஸ்லீம் விரோத உணர்வையே பிரதிபலிக்கின்றது. 11 பேர் கொண்ட குழுவில் புலிகள் 6 பேரும், முஸ்லீம்கள் இரண்டு அல்லது மூன்று உறுப்பினரும், மிகுதி அரசு என்றவகையில் இழுபறி நடக்கின்றது. குறுந்தேசிய உணர்வு கொண்ட புலிகளிடம் 53 சதவீகிதச் சேதத்தைச் சந்தித்த மக்கள் கூட்டம் எதைத்தான் பெறப் போகின்றார்கள் என்பது எப்போதும் வெட்டவெளிச்சமானது.
இந்த மோசடிகளை மூடி மறைக்கவே தமிழ்ச்செல்வன் குழுவினர் முஸ்லீம் மதவாதிகளையும், சில புத்திஜீவிகளையும் சந்தித்து நட்புறவை வளர்ப்பதாக நடித்து பீற்றுகின்றனர். சிங்கள அரசு தமிழ் மதக் குருக்களையும், சில புத்தி ஜீவிகளையும் சந்தித்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு வெட்கக்கேடான நாடக மோசடியை அமுல் செய்யும் போது, ஈ காக்கா கூட சத்தமிடாத ஒரு மௌனக் கொலையை நடத்தினர். முஸ்லீம் அரசியல்வாதிகளைத் திட்டமிட்டுப் புறக்கணித்ததன் மூலம், முஸ்லீம் மக்களின் சுனாமி நிவாரணத்தை அப்படியே விழுங்கி ஏப்பமிடும் கபட நாடகத்தையே, சிங்கள இனவாதிகளிடமிருந்து குறுந்தேசியத் தமிழ் இனவாதப் புலிகள் அபகரித்து அதையே அமுல் செய்துள்ளனர். இந்த வெட்டுமுகத்தைக் கிடைக்கும் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.
அம்பாறை மாவட்டத்தின் இழப்பு காணாமல் போனோர் உள்ளடக்கி அண்ணளவாக 12600 பேர். இதில் கணிசமானவர்கள் தமிழர்கள். இதைவிட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மொத்த இழப்பு அண்ணளவாக 10800 பேராவர். இதில் மட்டக்களப்பு, திருகோணமலையில் கணிசமான முஸ்லிம் மக்கள் அடங்குவர். திருகோணமலையில் தமிழர், முஸ்லீம், சிங்களவர் என ஒரு கணிசமான பகுதியினர் அடங்குவர். சிங்களப்பகுதியில் கணிசமான அளவு முஸ்லீம் மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றைச் சற்று விரிவாகவே ஆராய்வோம்.
5.4 வடக்கு கிழக்கில் ஏற்பட்ட சேதங்களின் உண்மை விபரம் என்ன?
சிங்கள இனவாத அரசு தமிழ் மக்கள் மீது காட்டும் இனவாத வக்கிரங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. மறுபக்கத்தில் புலிகளின் குறுந்தேசிய வெறியும், சுயநலனும் ஒரு தமிழ்ச் சமூகத்தையே பந்தாடுகின்றது. இதனைச் சிங்கள இனவாதிகள் தமக்குச் சாதகமாக கொண்டு வடக்கு கிழக்கு மக்களின் மேல் ஏறி அமர்ந்து கொள்கின்றனர். அந்த மக்களின் வாழ்வியல் கோலங்கள் சிதைந்து கட்டெறும்பாகின்றது. சர்வதேச அரசுசாராத நிறுவனங்களின் உதவிக்கு வெளியில், அந்த மக்கள் எதையும் பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகியுள்ளது. அதுவும் சர்வதேச அரசு சாராத நிறுவனங்களின் நிவாரணங்கள் கூட அரசின் பல இடையூறுகளைக் கடந்து செல்கின்ற போது, அதில் ஒரு பகுதியைப் புலிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகின்றது. இப்படி உருவான சமூக அவலம் மிகப் பிரமாண்டமானது. குறைந்தபட்சம் இதற்காகப் போராடக் கூட முடியாது. மனதுக்குள் வைத்து புளுங்கவும், புலம்பவும்தான் முடியும். இந்த நிலையில் உண்மையில் வடக்கு கிழக்கின் ஏற்பட்ட அழிவுகள் சிதைவுகள்தான் என்ன என்பதை அட்டவணை 6இல் பார்ப்போம்.
அட்டவணை: 6
பகுதி இடம் காண முற்றாக பகுதி அகதி
பிரதேசம் பெயர்வு இறப்பு காயம் வில்லை வீடு அழிவு வீடுஅழிவு முகாம்கள்
யாழ்ப்பாணம் 39933 2640 1647 540 6084 1114 —
கிளிநொச்சி 1603 560 670 1 1250 4250 2
முல்லைத்தீவு 22557 2771 2590 552 3400 600 23
திருகோணமலை 81643 1078 — 337 5974 10394 42
மட்டக்களப்பு 59000 2840 2375 1033 15939 5665 45
அம்பாறை 75492 10436 120 876 29077 — 82
அம்பாந்தோட்டை17382 4500 361 963 2303 1744 4
மாத்தறை 13321 1342 6652 613 2362 5659 30
காலி 5504 4216 313 554 5525 5966 46
களுத்துறை 23541 256 400 148 2572 2930 16
கொழும்பு 30652 79 64 12 3398 2210 28
கம்பஹா 21354 6 3 5 292 307 2
புத்தளம் 66 4 1 3 23 72 2
மொத்தம் 392048 30957 15196 5637 78199 40911 322
இவை உத்தியோகப்பூர்வமான அறிக்கையாக உள்ளது. சில தகவல்கள் இல்லாதபோதும், அண்ணளவாக இவை சரியானவை. இவை இலங்கை இழப்பின் சில பக்கங்களைக் காட்டுகின்றது. இந்த மனித இழப்பின் மீது, உண்மைகளைத் திரிபுபடுத்தி இனவாத அரசியல் கறைபடிந்து வெளிவருகின்றது. நிவாரணம், மீட்பு என்ற பெயரில் இனவாத அரசியல் வக்கிரம் அரங்கேறி, ஒவ்வொரு இனத்தையும் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர் எதிராக நிறுத்துகின்றது. மனிதனின் வாழ்வியல் அழிவை ஒருதலைபட்சமாக ஒரு இனத்தின் மீதானதாகக் காட்டி, அனைத்து மீள் கட்டுமானத்தையும் ஒரு இனத்தின் பெயரால் சூறையாடும் இனவாதப் பிரச்சாரக் கோட்பாடு கட்டமைக்கப்படுகின்றது. இன அதிகாரத்துக்காகப் போராடும் பலம் வாய்ந்த இனங்கள் சார்பாக எழும் இனவாதம், பலம் குன்றிய இனங்கள் மேலாக நடத்துகின்றது. இப்படி உருவாகும் இனவாத வக்கிரங்கள் மூலமான மீட்பு மற்றும் மீள் கட்டுமானம் உண்மையில் மக்களின் நலனில் இருந்து பிறக்கவில்லை. மக்களின் பெயரால் இனப்பிரிவுகளின் அதிகாரத்தைப் பெற்றவர்கள் சுருட்டிக் கொள்ளும் உள்ளடக்கமே முதன்மை பெற்றுள்ளது. இந்த இனவாத அரசியல் கபடத்தை நிர்வாணப்படுத்த இனரீதியாக, பிரதேசரீதியாக உண்மையான புள்ளிவிபர ஆய்வை வைப்பது அவசியமாகின்றது. இதனை அட்டவணை 7இல் காணலாம்.
அட்டவணை: 7
பகுதி/ இடம் காண முற்றாக பகுதி அகதி
பிரதேசம் பெயர்வு இறப்பு காயம் வில்லை வீடு அழிவு வீடு அழிவு முகாம் கள்
வடக்கு 64093 5971 4907 1093 10734 5964 25
கிழக்கு 216135 14381 2495 2246 50990 24029 169
வடக்கு கிழக்கு 280228 20352 7402 3339 61724 29993 194
தெற்கு 111820 10403 7794 2298 16475 18888 124
அம்பாறை 75492 10436 120 876 29077 8000 82
முல்லைத்தீவு 22557 2771 2590 552 3400 600 23
மொத்தம் 392048 30957 15196 5637 78199 48911 322
மேற்கண்ட அட்டவணை 7இல் ஒரு இனரீதியான, பிரதேச ரீதியான சித்திரத்தை எமக்குத் தருகின்றது. பொதுவாக வடக்கு கிழக்கு அதிக சேதத்தைச் சந்தித்துள்ளதைக் காட்டுகின்றது. இதைச் சிங்கள இனவாத அரசு மூடிமறைத்து, தெற்கை முதன்மைப்படுத்தி செயல்படுகின்றது. தமிழ்மொழி பேசும் மக்களின் இழப்பை மூடிமறைக்கின்றது. இது இப்படி என்றால் வடக்குகிழக்கில், கிழக்கே அதிக சேதத்தைக் காட்டுகின்றது. ஆனால் குறுந்தேசிய உயர்சாதிய பிரதேசவாதப் புலிகள் சேதத்தை வடக்குக்கு மட்டுமானதாகக் காட்டுகின்றனர். அதிலும் தமது அதிகாரத்தில் உள்ள முல்லைத்தீவே அதிக சேதத்தைச் சந்தித்தாகக் காட்டுகின்றனர். இதன் மூலம் கிழக்கின் அழிவை மூடிமறைக்கின்றனர். கிழக்கிலும் முஸ்லிம் மக்களின் இழப்பை ஒட்டு மொத்தமாக மூடிமறைக்கின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டம் மட்டும் மொத்த இழப்பில் மூன்றில் ஒன்றாக உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடல்கொண்ட பகுதி முற்றாக மூழ்கி எழுந்ததைக் காட்டுகின்றது. காயம் அடைந்தவர்களின் மிகக் குறைந்த எண்ணிக்கை (120) கூட இதற்குச் சாட்சியம் சொல்லுகின்றது. கடல் முழுமையாக அள்ளிச் சென்றுள்ளது. வீடுகள் மீன்பிடி உபகரணங்கள் என அனைத்தையும் முற்றாக அழித்துள்ளது. அம்பாறையில் ஏற்பட்ட இழப்பின் பெரும்பகுதியை முஸ்லீம் மக்களே சந்தித்துள்ளனர். இந்த உண்மை பொது அறிவு மட்டத்தில் முற்றாக மறுதலிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகத்துறை தமிழ் மக்களின் இழப்பை மூடிமறைக்கின்றது என்றால், தமிழ் ஊடகத்துறை முஸ்லீம் மக்களின் இழப்பை மூடிமறைக்கின்றது. ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் பெயரில் இயங்கும் ஊடகத்துறை மனித அவலங்களையே குழிதோண்டி புதைத்து வருகின்றது. தெற்கு, கிழக்கு, வடக்கு என எடுத்தால் அதிக சேதத்தைக் கிழக்கும், அடுத்து தெற்கும் இறுதியாக வடக்கும் சந்தித்துள்ளது. ஏனெனில் சுனாமி அலைகள் கிழக்கிலும் தெற்கிலும் மட்டுமே தோன்றுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதேநேரம் வடக்கில் தோன்றும் அலைகள் இந்தியாவைக் குறிப்பாகத் தமிழகத்தையே தாக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் அதிக புறக்கணிப்பைச் சந்திக்கும் பிரதேசம், மிக அதிக பாதிப்பைச் சந்தித்த அம்பாறையும் மொத்தக் கிழக்குமே, ஒருபுறம் சிங்கள இனவாத அரசு பறக்கணிப்பைச் செய்ய, புலிகள் அதற்கு நிகராக மறுபக்கம் செய்கின்றனர். புலிகள் வடக்குக்கும் அதிலும் குறிப்பாக முல்லைத்தீவே அதிக சேதத்தைச் சந்தித்தாகக் கூறி பிரச்சாரத்தைக் கட்டமைத்து, மீள் கட்டுமானத்தை வடக்கு நோக்கியும் குறிப்பாக முல்லைத்தீவு நோக்கியும் திருப்பியுள்ளனர்.
இனரீதியாகப் பார்த்தால் அதிக சேதத்தைச் சந்தித்தவர்கள் முஸ்லீம் மக்களாவர். அம்பாறை மட்டுமின்றி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் தெற்கிலும் கூட சில ஆயிரம் முஸ்லீம் மக்கள் இறந்துள்ளனர். மொத்த முஸ்லீம் மக்களின் இறப்பு மொத்த இறப்பில் 53 சதவீதம் என்ற ஒரு புள்ளிவிபரம் வெளிவந்துள்ளது. மற்றைய இனங்கள் சரிக்குச் சமமான இறப்பையே சந்தித்துள்ளனர் என்பதே உண்மை. ஆனால் இன்று இன அதிகாரத்துக்காக மார்பு தட்டும் சிங்கள இனவாதிகளும், குறுந்தேசியப் புலிகளும் முஸ்லீம் மக்களின் இழப்பை மூடிமறைக்கின்றனர். புலிகள் நிவாரணத்துக்காக ஒதுக்கியதாக அறிவித்த 30 கோடியில், முஸ்லீம் மக்களுக்கு ஒரு கோடி ரூபா நிவாரணமே வழங்குவதாகக் கூறினர். ஒதுக்கிய 30 கோடி ரூபா நிவாரணங்கள் வழங்கப்பட்டதையும், முஸ்லீம்களுக்குக் கொடுப்பதாக அறிவித்த ஒரு கோடி கொடுக்கப்பட்டதையும் உறுதி செய்யும் எந்த ஒரு ஆதாரத்தையும், அவர்களின் சொந்த செய்திகளே உறுதி செய்யவில்லை. ஆனால் இங்கு முஸ்லீம்களுக்கு ஒரு கோடி மட்டும்தான் கொடுக்க உள்ளதாக அறிவித்தனர். ஆனால் அவர்களையும் தமிழ் மக்கள் என்று கூறிக் கொண்டு திரிகின்றனர். நிவாரணம் முழுக்க தம்மிடம் தரவேண்டுமென கூறிக் கொண்டு நிவாரணங்களையே முடக்கி வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் 62949 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை முற்றாகவும், 25583 குடும்பங்கள் பகுதியாகவும் இழந்துள்ளனர். இதிலும் அம்பாறையே அதிகமானது. இந்த நிலையில் எந்த நிவாரணங்களும் சரியாகச் செய்யப்படாத நிலையில், அரசும் புலிகளும் திட்டமிட்டே இம்மக்களைப் புறக்கணிக்கின்றனர். மீள்கட்டமைப்பில் திட்டமிட்டே சிங்கள இனவாதமும், குறுந்தேசியத் தமிழ் இனவாதமும் முஸ்லீம் மக்களின் முதுகில் குத்துகின்றன. இனவாதச் சேற்றில் மூழ்கியுள்ள இந்த நாட்டில் வாழும் மக்களின் கருணையோ குறுகிய வக்கிரப் புத்தியால் சிதைந்து வக்கரிக்கின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்வதற்குத் தாளம் போடுவதற்கு அப்பால், சுயமாக மக்களைப் பற்றி எதையும் சிந்திக்க திறனற்ற புத்திசுவாதீனமான சமூகத்தையே தேசியம் படைத்துள்ளது.
5.5 மீனவர்களின் அவலம்
சுனாமி அனர்த்தத்தால் இலங்கை முழுமையிலும் 30 ஆயிரம் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி கலங்கள் அழிந்துள்ளன. இலங்கையில் படகு உற்பத்தி செய்யப்படும் 50 மையங்கள் அழிந்துள்ளன. 10 மீன்பிடித் துறைகள் அழிந்துவிட்டன.
இதிலும் அம்பாறை மீனவர்களின் இழப்பு மிகக் கடுமையானது. அம்பாறையில் 1035 மீனவர்கள் பலியாகினர். அம்பாறையில் மட்டும் கடல் தொழிலில் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 3250 மீனவர்களின் வீடுகள் முற்றாக அழிந்துள்ளது. இதன் மொத்த பெறுமானம் 161.5 கோடி ரூபாவாகும். பகுதியாக 1735 வீடுகள் சேதமடைந்தன. இதன் பெறுமதி 24.7 கோடி ரூபா. 7501 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 35235 பேர் இடம் பெயர்ந்தனர். படகு, தோணி உட்பட மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 130 கோடி ரூபா. மீனவர் நலன்புரி நிலையங்கள், மீனவக் காரியாலயங்கள், மீனவர் தங்குமிடங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதம் 15 கோடி ரூபா. அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் அண்ணளவாக 10 ஆயிரம் மீனவர்களின் வீடுகள் முழுமையாக அழிந்துள்ளது. 1500க்கும் மேற்பட்ட மீன்பிடிக்கலங்கள், இயந்திரங்கள் சிதைந்துள்ளன. 60 கிலோமீற்றர் நீளமான மீன்பிடி வீதிகள், மீன்பிடிக் காரியாலயங்கள் அழிந்துள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் அழிவுக்குள்ளான மீனவச் சங்கங்களின் எண்ணிக்கை 184 ஆகும். இதில் அழிவுக்குள்ளான அந்தச் சங்கங்களுக்குரிய மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை 1160 ஆகும். இவற்றின் பெறுமதி 78.75 கோடி ரூபாவாகும். வடக்கு கிழக்கில் அழிந்த மீன்பிடிப் படகுகள் 13,698 ஆகும். இவற்றின் பெறுமானம் 382.3 கோடி ரூபாவாகும்.
இப்படி ஒரு மீன்பிடிச் சமூகம் முற்றாகச் சிதைந்துள்ளது. குறிப்பாக உற்பத்தியில் வடக்கு கிழக்கில் பிரதான வருமானத்தை விவசாயத்துக்கு அடுத்ததாக மீன்பிடியே வழங்கியது. இதனால் பல பத்தாயிரம் மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமை அழிந்துள்ளது. இதில் இருந்து மீள்வது என்பது பல தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் கடந்தாக வேண்டும். உண்மையில் இதை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்க முடியாத வகையில், அடிப்படையாகவே மனிதனிடம் காணப்படும் போராடும் திறனை மக்கள் சமூகம் இழந்து நிற்கின்றது. சிங்கள இனவாதமும், குறுந்தேசியத் தமிழ் இனவாதமும், அதிகாரத்தில் உள்ளவர்களின் பொதுவான சூறையாடல்களும், இந்த மக்களின் கண்ணீர் வாழ்வை நிரந்தரமாக்கி வருகின்றது.
5.6 பாதிக்கப்பட்ட சிறுவர்கள்
சுனாமியில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களே அதிகம். அடுத்து பெண்கள். சேர்க்கையாக மனிதன் உருவாக்கிய சுரண்டும் சுதந்திரமான ஜனநாயக அமைப்பிலும், குழந்தைகளே அதிகம் பலியிடப்படுகின்றனர். அடுத்தது பெண்கள். காட்டுமிராண்டிச் சமூகத்தில் கடவுளுக்கு உயிர்களைப் பலியிட்டபோது, குழந்தைகளே நேர்த்திப் பொருளாகி கொல்லப்பட்டனர். இதையே இயற்கையும் செய்துவிட்டது. பலவீனமானவர்கள் மீதான ஒரு அராஜகமாக இது வெளிப்பட்டது.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை எடுப்பின், மொத்தமாக 77161 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 40000க்கும் மேற்பட்டவர்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இதிலும் கிழக்கே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிட்டத்தட்ட 18000 பேர் அம்பாறை மாவட்டத்தினையும், 11514 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தினையும் சேர்ந்தவர்கள். மிகவும் பின்தங்கியதும், பிரதேச ரீதியாகத் தாழ்த்தப்பட்ட, அதிக இன மற்றும் வர்க்க ஒடுக்குமுறைக்குள்ளான ஒரு பிரதேசத்தின் எதிர்காலத் தலைமுறையின் அவலம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தையும் இழந்து, வறுமையே கொண்ட ஒரு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை, ஒரு சமூக முன்முயற்சி ஊடாக மட்டும் தான் மீட்கமுடியும். அதிகார வர்க்கங்களாலும் இனவாதிகளாலும் நிவாரணத்தைச் சூறையாடுவதைக் குறிக்கோளாகக் கொண்ட பேரங்களே தேசியமாகிப் போன இன்றைய எமது சமூக அவலத்தில், இந்தக் குழந்தைகளின் கதி நிரந்தரமாகவே தற்குறியாக்கப்பட்டுள்ளது.
இதைவிட வடக்கு கிழக்கைச் சேர்ந்த 2407 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 29 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 54 பாடசாலைகள் முழுமையாகவும், 67 பாடசாலைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. கல்வி வலய ரீதியாக உயிரிழந்த மாணவர்கள் கல்முனை 1502, மூதூர் 217, மட்டக்களப்பு 235, அக்கரைப்பற்று 141, திருகோணமலை 38, முல்லைத்தீவு 250, கல்குடா 125 ஆகும். வடக்கு கிழக்கில் 2125 பேர் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளார்கள். மாவட்ட ரீதியாக அம்பாறை மாவட்டம் 954, மட்டக்களப்பு மாவட்டம் 699, முல்லைத்தீவு மாவட்டம் 393, யாழ் மாவட்டம் 47, திருகோணமலை மாவட்டம் 32 ஆகும். 737 பேர் தாய் தந்தை என இருவரையும் இழந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டம் 406, அம்பாறை மாவட்டம் 162, திருகோணமலை மாவட்டம் 35, முல்லைத்தீவு மாவட்டம் 94, யாழ் மாவட்டம் 39, கிளிநொச்சி மாவட்டம் 01 ஆகும்.
பாடசாலை மாணவர்களின் இறப்பு முதல் பெற்றோரை இழத்தல் வரை பெருமளவில் கிழக்கையும், குறிப்பாக அம்பாறையையும் சேர்ந்ததாக உள்ளது. தெற்கு பற்றி துல்லியமான புள்ளிவிபரத்தைப் பெறமுடியவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் கிழக்கே அதிகச் சேதத்தை அனைத்துத் துறையிலும் சந்தித்துள்ளது. இதில் அம்பாறையே மிகக் கடுமையான அழிவைச் சந்தித்தது. ஆனால் அதிகம் புறக்கணிப்புக்கும், அதிகம் செய்தி தணிக்கைக்கும் உள்ளாகும் பிரதேசமும் இதுவாகும். இந்தப் பிரதேசத்தின் மனித அவலங்கள் இலங்கை மக்களும் சரி, உலக மக்களும் அறிந்த கொள்ள முடியாத சூனியத்துக்குள் தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகள் இட்டுச் சென்றுள்ளனர். இதன் மூலம் அந்த மக்களின் அவலத்தின் மேல் தான், மற்றைய இனங்கள் பிரதேசங்கள் மீள்கட்டுமானம் பற்றி திட்டமிடுகின்றனர்.
இதே காலத்தில் மற்றொரு அதிர்ச்சி வெளிவந்துள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 57 பாடசாலைகளில் 2005 முதல் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை சகலப் பாடங்களும் ஆங்கிலம் மூலமாகவே கற்பிக்கப்படவுள்ளதாகவும், மாகாணங்களுக்குத் தேவையான புத்தகங்களையும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அச்சிட்டுக் கொடுத்துள்ளது. தமிழ்மொழிக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்க, தமிழ்த் தேசியவாதிகளின் துணையுடன் பெருமளவிலான ஒரு முயற்சி தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியவாதிகளினதும், "தேசிய தலைவரின்' வழிகாட்டலில் இயங்கும் புலிகளின் ஆதரவுடனும், அங்கீகரிப்புடனும், இந்த மொழி அழிப்பு தொடங்கியுள்ளது. இது மற்றொரு சுனாமியாகி, தமிழ் மொழியை அழிக்கத் தொடங்கியுள்ளது. அன்னிய மொழிக் கல்வி, வாழும் மக்களின் மொழியுரிமையை மறுப்பதுடன், கல்வி மீதான வறிய மக்களின் கற்கும் அடிப்படை உரிமையைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றது. இதன் மூலம் உலகமயமாதலுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்யும் ஒரு கல்விக் கொள்கையை இலங்கை இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் அமுல் செய்ய தொடங்கியுள்ளனர். இது சுனாமி அழிவைவிட மிகப் பயங்கரமானது. இதில் கட்டாய சிங்கள மொழித் திட்டத்தைத் தமிழ்த் தேசியம் எதிர்த்தே போலியாகியுள்ளது.
5.7 நிவாரணமும் மோசடிகளும்
கடனைக் கொடுப்பவனும், அதற்கு வட்டி அறவிடுபவனுமே நிவாரணங்களைத் திட்டமிடுகின்றான், நிவாரணங்களை வழங்குகின்றான். இது ஒரு முரணான செயலாகவே இருந்த போதும், உண்மையில் இவை முரணல்ல. அதாவது கிராமங்களில் ஊரையே சுரண்டுபவன் கோயில் கட்டுவது போல் தான் இதுவும். உதவி, நிவாரணம் என்பன மக்களிடம் சூறையாடியதில் ஒரு சிறுதுளியை மீள வழங்குவதுதான். அதாவது இதைச் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்துவதில்லை. மக்களை ஏமாற்றி திருடிச் சூறையாடிய பணத்தில் இருந்து கொடுக்கும் சில்லறைகளே இவை. இந்தச் சில்லறைகளைக் கைப்பற்றவும், அதை மோசடி செய்யவும் முனையும் உள்ளூர் திருடர்களின் போராட்டங்கள், பேரங்கள், இன ஒதுக்கலுக்கும் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகின்றது. இதுவே இலங்கையின் உள் அரசியலாகி அதுவே பேரங்களாகின்றது.
உலகைச் சூறையாடும் திருடர்களை ஒழுங்குபடுத்தி, அதை அமைதியாகவும் கூட்டாகவும் திருட உதவும் ஐ.நா. அமைப்பானது இலங்கை உட்பட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் மக்களுக்கு ஆறு மாதகாலத்துக்கு உணவுப் பொருள்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் தான் இன்று மெதுவாக மக்களிடம் பல இடைச் சூறையாடல்களைக் கடந்து செல்லத் தொடங்கியுள்ளது. ஐ.நா. வழங்கும் இந்த உதவிக்கு ஏகாதிபத்தியமே நிதி வழங்குகின்றது. ஆனால் மறுபக்கம் வறுமையில் மடிந்துவரும் ஆப்பிரிக்க மக்களின் நிவாரணம் வெட்டப்பட்டே, இந்த ஆறுமாத உதவி பற்றி பீற்றப்படுகின்றது. இதை ஐ.நா.வே ஒத்துக் கொண்டு, ஏகாதிபத்தியத்திடம் மேலதிக நிதியைக் கோருகின்றது. இது ஒரு முரணான மக்களுக்கு எதிரான உலக வக்கிரம்தான்.
இதேபோல் தான் யுனிசெவ் நிறுவனம் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன்களைப் பேணுவதற்காக என்று கூறி 400 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. யுனிசெவுக்கு நிதியளித்து இயக்கும் ஏகாதிபத்தியம் தான், மறுபக்கத்தில் உலகில் வறுமையை விதைத்து பாடசாலைக் கல்வியையே மலடாக்குகின்றது என்ற உண்மை, பொது அறிவுமட்டத்தில கிடையாது. இந்த அறியாமையையே யுனிசெவ் தனக்கு மூலதனமாக்குகின்றது. குழந்தைகளில் அக்கறை உள்ளதாகக் காட்டி ஏகாதிபத்தியத்தின் நலன்களை உறுதி செய்கின்றது. முரணான ஒன்றை உருவாக்கி, இரண்டையும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தும் ஏகாதிபத்தியக் கயமைத்தனமே உலகெங்கும் மனிதன் சந்திக்கும் பல தொடர் நெருக்கடிகளுக்குக் காரணமாகவுள்ளது.
இலங்கைக்கு ஜனவரி 22 வரை 58 நாடுகளிடமிருந்து 256 விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் 43236 தொன் (டன்) நிவாரணப் பொருட்கள் சுனாமியின் பெயரில் வந்திறங்கின. என்னே மனிதாபிமானம்? என்னே அக்கறை? சொந்த மக்களைப் பட்டினியில் வைத்திருப்பதே ஜனநாயகமாகக் கருதும் இவர்கள்தான், உதவிப் பொருட்களை அனுப்புகின்றனர். இப்படி அனுப்பிய பொருள்களில் 5,6 வருடங்களுக்கு முன்பாகவே திகதி (தேதி) இட்டு பாவனைக்கு (பயன்பாட்டுக்கு) உதவாது என்று எறியவேண்டிய உணவுப் பொருட்களும் உள்ளடங்கும். இதைவிட ஐரோப்பிய மிருகங்களுக்கு என தயாரிக்கப்பட்ட உணவும் அடங்கும். பாவனைக்கு (பயன்பாட்டுக்கு) உதவாது என வெள்ளையர்களின் வீடுகளில் கழித்த பழைய உடுப்புகள் முதல் பல கழிவுகள் உதவியின் பெயரில் வந்து குவிந்துள்ளது. இப்படியான கழிவுகளை எல்லாம் எப்படி அகற்றுவது என்று தெரியாத நிலையில், அரசு திணறுகிறது. உண்மையில் இப்படி திரட்டி அனுப்பிய கழிவுப் பொருட்கள் மூலம், மூலதனம் வரி குறைப்புக்குள்ளாகி இலாபத்தையே அடைந்துள்ளது.
இப்படி ஒரு மாதத்தக்குள்ளாகவே வந்து குவிந்த 43236 தொன் (டன்) பொருட்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8272 தொன் நிவாரணப் பொருட்கள் மட்டுமே அரசு விநியோகித்தது. அண்ணளவாக ஐந்தில் ஒன்று தான் விநியோகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் பல மோசடிகள் நடந்தது அம்பலமாகி வருகின்றது. மறுபக்கத்தில் விநியோகிக்காத விலையுயர்ந்த பொருட்கள் திடீர் திடீரென காணாமல் போவது அம்பலமாகி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் இன்றி, வாழ்வுக்கான அடிப்படையும் இன்றி கையேந்தி நிற்கின்றனர். நிவாரணப் பணியுடன் தொடர்புடைய இடைப்பட்ட இடைத்தரகர்கள் நிவாரணத்தின் பெரும் பகுதியைக் கொள்ளையிட்டுக் கொழுக்கின்றனர்.
மறுபக்கம் 4000 சர்வதேசப் படையினரும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்தோரும் நாட்டில் உதவி நிவாரணம் மீட்பு என்ற பெயரில் களமிறங்கினர். இந்தப் படையில் அமெரிக்கப் படையினரும் உள்ளடங்குவர். இப்படி 58 நாடுகளைச் சேர்ந்த இராணுவ மற்றும் உளவு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உதவி என்ற பெயரில் இலங்கையில் தலையிட்டனர். சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் சதி வேலைகளில், இலங்கை மக்களின் பொருளாதாரத்தைத் தத்தம் நாட்டுக்கு இசைவான வகையில் மாற்றியமைப்பதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அமெரிக்கா தனது தலையீட்டைச் சும்மா நடத்தவில்லை. நீண்டகால நோக்கில் இராணுவப் பொருளாதார அடிப்படையிலேயே தலையிட்டுள்ளது. இது புலிகளைக் கையாளும் நோக்கில் மட்டும் அமையவில்லை. சிலர் அப்படித்தான் காட்ட முனைகின்றனர். மாறாக நீண்டகால நோக்கில் இலங்கை உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் மீதான ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ""அமெரிக்காவின் நோக்கங்களுக்குப் பலன் அளிக்காத நாடுகளுக்கு உதவுவதற்கு, அமெரிக்கா தர்மசத்திரம் நடத்தவில்லை'' என்று அமெரிக்காவின் அதிகார வர்க்கம் தெளிவாக அறிவித்தது. சுனாமி நிவாரணம் என்ற பெயரில் உலகத்தை ஆக்கிரமிக்க, அமெரிக்கா தனது தலைமையில் ஐ.நா.வுக்கு போட்டியாகவே நான்கு நாடுகளைக் கொண்ட குழுவொன்றை அமைத்தது. ஆனால் உலகளவில் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பினால் இது கலைக்கப்பட்டது. உலகை ஆக்கிரமிக்கும் போராட்டம், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் புதிய இணைப்புகளை உருவாக்கி வருகின்றது. சுனாமி நிவாரணத் தலையீடுகள், உண்மையில் தத்தம் நாடுகளின் பொருளாதார நோக்கில் இருந்தே கையாளப்படுகின்றது. இதையே அழகாக தென்னாசிய பங்குச் சந்தை தரகர் ஒருவர் கூறிவிடுகின்றார். ""இனி இந்த நாடுகள் பழைய மாதிரி வாழமுடியாது. நவீனமயத்திற்குள் புகுந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை, இந்தச் சுனாமி இவர்களுக்கு ஏற்படுத்திவிட்டது'' என்றார். இப்படித்தான் சர்வதேச உதவி என்ற பெயரில் நவீன ஆக்கிரமிப்பை உலகமயமாதல் நோக்கில் நடத்தியுள்ளது.
5.8 வடக்கு கிழக்கு நிவாரணம் மீதான புலிகளின் குற்றச்சாட்டுகள்
இவை அழகான சிங்காரிக்கப்பட்ட மோசடிதான். அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது. இதுவே புலிகளின் குறுகிய அரசியலாகி, தமிழ் மக்களை ஏமாற்ற மக்கள் முன் வைக்கப்படுகின்றது. உண்மையில் இதன் மூலம் நிவாரணங்களில் இருந்து புலிகள் சூறையாடும் பங்கை உறுதி செய்வதே, புலிகளின் உள்நோக்கமாகும். பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து, இதைப் புலிகள் ஒருக்காலும் கோரவில்லை. மறுபக்கத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட எல்லாப் பிரதேசத்திலும், அரசு செயலாற்றாத தன்மையில் தான் இருந்தது. அதாவது உலகமயமாதல் என்னும் சர்வதேசக் கட்டமைப்பில், அரசு சுயாதீனமாகச் செயல்படுவதை அனுமதிப்பதில்லை. இது உலகமயமாதலின் உள்ளடக்க விதி. இந்த உலகமயமாதலில் புலிகள் அதிகாரத்துக்கு வந்தாலும், இதுவே அடிப்படை நிபந்தனை. மறுபக்கத்தில் உதவியாகச் சர்வதேச ரீதியாக அறிவிக்கப்பட்டவை எப்போதும் நிதியாக வழங்கப்படுவதில்லை. அறிவிக்கப்பட்டதிலும் மிகக் குறைந்த ஒரு தொகைக்குரிய பொருட்களே எப்போதும் நிதியாக வழங்கப்படுவதில்லை. நீண்டகால நோக்கில் உதவி, பொருட்கள் வடிவில் வந்து சேர்வது பற்றியே திட்டமிடப்படுகின்றது. இவை கூட பல சந்தர்ப்பத்தில் வாக்குறுதிக்கு வெளியில் வழங்கப்படுவதில்லை. புலிகளைப் போல் அரசு மற்றும் ஏகாதிபத்திய உதவிகள் அனைத்தும் வெறும் அறிக்கைகளாகவே பிரகடனம் செய்யப்படுகின்றது என்பதே உண்மை.
புலிகள் புலம்பெயர் நாட்டில் சுனாமியின் பெயரில் சேகரித்த பல நூறு கோடி ரூபா நிதிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவை மக்களுக்கு நிச்சயமாகச் சென்றடையவில்லை என்பது மட்டும் உண்மை. பாதிக்கப்பட்ட மக்களின் துயரமான வாழ்வும், இழப்பினால் தொடரும் ஒப்பாரிகளும், குற்றச்சாட்டுகளும் ஆதாரமாகவே இதை எடுத்துக் காட்டுகின்றது. இந்த நிலையில் புலிகள் குற்றச்சாட்டை அரசை நோக்கி திருப்பிவிடுகின்றனர். ஆனால் அதை ஆதாரப்பூர்வமாக முன்வைப்பதற்கு தயாரற்ற நிலையில் வெற்று அறிக்கைகளால் சாடுகின்றனர். அரசு ஆரம்ப நிவாரணங்களாக அனுப்பப்பட்ட பட்டியலை வெளியிட்டது. இதைப் புலிகள் மறுக்கவில்லை, ஒத்துக் கொள்ளவுமில்லை. அறிக்கை ரீதியான குற்றச்சாட்டுகள் மூலம் ஒரு யுத்தத்தை நடத்த முனைகின்றனர். இதில் கூட மக்கள் நலன் எதுவுமில்லை. புலம்பெயர் நாட்டில் சூறையாடியதை மூட்டை கட்டி வைத்தபடி, மக்களின் பெயரில் நாட்டிலும் சூறையாடவே புலிகள் விரும்புகின்றனர்.
உதாரணத்துக்கு வடமராட்சிப் பகுதியிலுள்ள ஒவ்வொரு பிரதேசச் செயலாளர்களுக்கும் ஆரம்ப சுனாமி நிவாரணத்துக்காக 2.2. கோடி ரூபா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாகனங்களில் மக்களை ஏற்றி இறக்கியதாகக் கணக்குக் காட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 67 லட்சம் ரூபாயினைப் பெற்றுள்ளது. வரணி பகுதியில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களின் நாளாந்தச் செலவெனக் கூறி, நாளொன்றுக்கு 9750 ரூபா படி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பெற்றுள்ளது. குடத்தனை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட (இல. 419ஏ) நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 78 குடும்பங்களுக்கான எட்டு நாள் செலவாக ரூபா 82,000 ரூபாயினையும் புலிகள் பெற்றுள்ளனர். உதவியாக அரசு வழங்கிய நிவாரண நிதி அந்த மக்களின் பெயரால் புலிகளின் கைக்கு மாறிக் கொண்டிருக்கின்றது. இதில் எவ்வளவு தொகை மக்களுக்குச் சென்றது என்பதை, புலிகளைப் புரிந்த ஒவ்வொருவரினதும் சொந்த அறிவே புகட்டிவிடும். நிவாரண நிதியைக் கையாளும் ஒரு கட்டமைப்பைப் புலிகள் பெறத் துடிப்பதன் நோக்கம் தெட்டத் தெளிவாக எதற்கு என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் நிவாரணத்தையே புலிகள் சுருட்டத் தொடங்கியுள்ள நிலையில் புலம்பெயர் சமூகம் என்றுமில்லாத அளவில் வாரி வழங்கிய நிதியை மக்களின் கண்ணிலேயே காட்டப் போவதில்லை என்பது ஒரு எதார்த்த உண்மை.
இதற்காகவே அரசு நிவாரணம் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டைப் புலிகள் வைத்தனர். கிடைத்தது என்ன என்பதையோ, தமிழ்ப் பகுதியை விட சிங்களப் பகுதிக்கு அரசு எப்படி உதவுகின்றது என்ற அடிப்படையான தரவுகள் இன்றி, குற்றச்சாட்டை அள்ளித் தெளித்தனர். ஏன் சுனாமி ஏற்பட்டவுடன் ஜே.வி.பி. சிங்களப் பகுதி மட்டுமின்றி, கிழக்கில் பெருமளவில் ஆரம்ப நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். இதைக் கூட புலிகளால் ஒருக்காலும் செய்ய முடியவில்லை. பணம், பலம், அதிகாரம், நிர்வாகக் கட்டமைப்பு என அனைத்தையும் கொண்ட புலிகள், சொந்த மக்களையே புறக்கணித்தனர். இந்த இடத்தில் ஜே.வி.பி.யின் முன் உதாரணத்தைக் கூட, மக்கள் நலன் சார்ந்து புலிகளால் செய்ய முடியவில்லை. இதைக் கண்டு அரசியல் ரீதியாக வெகுண்டனர். புனர்நிர்மாணத்தையே தடுத்தனர். மாறாக அதைத் தம் கையில் எடுத்தவுடனேயே, அதில் கொள்ளை அடிக்கின்றனர். மக்களுக்காகப் புனர்நிர்மாண வேலையில் உடலால் கூட, மனப்பூர்வமாக செய்ய முன்வரவில்லை. இந்த உண்மையை நாம் புரிந்தேயாக வேண்டும்.
அரசு எதிர்மறையில் புலிகளின் குற்றச்சாட்டுக்குத் தரவுகளை முன்வைத்தது. இதேவேளை யுனிசெஃப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கரல் பெல்லாமி, அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாரபட்சம் எதுவும் காட்டப்படுவதாக, புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமக்குத் தெரிவிக்கவில்லை என்றார். உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றவும், இலங்கை அரசை நிர்பந்திக்கவும் முன்வைக்கும் குற்றச்சாட்டாகவே இவை அமைந்து இருந்தன. அரசு முதல் கட்ட நிவாரணமாக வடக்கு கிழக்கு பகுதிக்கு 40.3 கோடி பெறுமதியான பொருட்களை அனுப்பியதாக அறிவித்தது. அதைப் புலிகளுக்கு எதிராக பிரதேச ரீதியாக சுட்டிக் காட்டியது. புலிகள் இதையிட்டு மௌனம் சாதித்தனர். இந்த வகையில் வழங்கிய ஆரம்ப நிதியினை அட்டவணை 8இல் காணலாம்.
அட்டவணை 8
பகுதி தொகை
அம்பாறை 11 கோடி ரூபா
மட்டக்களப்பு 9.5 கோடி ரூபா
திருகோணமலை 6.5 கோடி ரூபா
கிளிநொச்சி 4.6 கோடி ரூபா
முல்லைத்தீவு 4.5 கோடி ரூபா
யாழ்ப்பாணம் 4.2 கோடி ரூபா
இதில் அதிகம் பாதிப்படையாத கிளிநொச்சிக்கு புலிகளைத் திருப்திப்படுத்தவும் அரசின் சலுகையாகவே நிதி வழங்கப்பட்டது. அரசின் இந்த அறிக்கையைப் புலிகள் மறுக்கவில்லை. அதைபோல் வடக்கு கிழக்கு அரசாங்க அதிகாரிகளும் மறுக்கவில்லை. ஆனால் தொடர் குற்றச்சாட்டைப் புலிகள் தொடர்ந்தனர். தை மாதம் 14ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு 7473.05 மெற்றிக் தொன் (மெட்ரிக் டன்) உணவுப் பொருட்கள் அனுப்பியதாக அறிவித்தனர். இதில் யாழப்பாணத்திற்கு 2058.03 மெற்றிக் தொன், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 588.77 மெற்றிக் தொன், முல்லைத்தீவுக்கு 629.40, மட்டக்களப்புக்கு 1571.12 மெற்றிக் தொன்னும் அனுப்பியதாக அறிவிக்கப்பட்டது. மற்றும் நிவாரண மீட்புக்கு என பல பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றை அட்டவணை 9இல் காணலாம்.
அட்டவணை 9
உழவு இரண்டுசக்கர நீர்இறைக்கும்
மாவட்டம் பிக்கப் இயந்திரம் உழவு இயந்திரம் ஜெனரேட்டர் இயந்திரம்
யாழ்ப்பாணம் — — — 07 —
கிளிநொச்சி 02 05 10 08 25
முல்லைத்தீவு 02 05 10 10 25
திருமலை 02 — — 15 —
மட்டக்களப்பு 03 — — 20 —
அம்பாறை 03 — — 30 —
இப்படி பல பொருட்கள் வழங்கப்பட்டது. இவை இன அடிப்படையில், தமிழருக்கு எதிராக மிகக் குறைவாக வழங்கப்பட்டதாகக் காட்ட ஆதாரபூர்வமாக எந்த அறிக்கையையும் புலிகள் இதுவரை முன்வைக்கவில்லை. சிங்களப் பகுதிக்கு இனவாத அடிப்படையில் தமிழ்ப் பகுதியை விட சிறப்புச் சலுகை வழங்கப்பட்டதாக ஆதாரப்பூர்வமாகப் புலிகளின் புலனாய்வு தரவுகள் எதுவும் முன்வைக்கவில்லை. இதைப் புலிப் பினாமிகள் கூட முன்வைக்கவில்லை. இதில் முஸ்லீம் மக்கள் பற்றி இருட்டடிப்பில் தமிழ் மற்றும் சிங்கள தரப்பு திட்டமிட்டே கூடிக் குலாவினர். இலங்கை என்ற கட்டமைப்பில் தமிழர் பிரதேசம் யுத்தப் பிரதேசமாக இருப்பதால், இனவாத அரசு இயந்திரத்தின் பொதுவான தடை நிவாரணத்தில் பல கெடுபிடிகளை இயல்பாகக் கொண்டிருக்கும். இதை மேலும் கடுமையாக்கும் வகையில், நிவாரணத்தின் பெயரில் புலிகளுக்குத் தேவையான இராணுவ உபகரணங்கள் கூட நாட்டினுள் தரையிறங்கிக் கொண்டிருந்தது. இது கெடுபிடியை மேலும் அதிகமாகியது. இதே நிலைமை அரசு அல்லாத அன்னிய நிவாரணங்கள் கூட, தமிழ்ப் பிரதேசத்துக்குச் செல்வதில் பொதுவான ஒரு அன்னியமாதல் இருந்தது. பொதுவாகக் காணப்பட்ட கெடுபிடிகளைத் தாண்டி, திட்டமிட்ட நிவாரணப் புறக்கணிப்பு நடந்ததாக ஆதாரப்பூர்வமாக முன்வைக்க முடியாத புலிகளின் அரசியல், திட்டவட்டமாக உள்நோக்கம் கொண்டவை. தமிழ் மக்களை ஏமாற்றிச் சூறையாடுவது இதன் சாராம்சமாகும். இலங்கை அரசு சிங்கள இனவாத அரசு என்பதால் இதன் அடிப்படையில் செயல்படும் என்பது உண்மை. இந்த பொது உண்மை மட்டும், வழங்கும் நிவாரணத்தை இனவாதமாக வழங்குவதாகக் காட்டப் போதுமானதல்ல. மாறாகத் தரவுகளை ஒருங்கிணைத்து அரசை அம்பலப்படுத்த புலிகளால் முடியவில்லை. இரண்டு திருடர்களும் மக்களைச் சொல்லி கொள்ளையடிக்கும் போது, கொள்ளையடிப்பதே நோக்கமாக இருக்கும் போது, உண்மைகள் புதைக்கப்பட்டுவிடுகின்றன.
இக்கட்டுரைக்கான புள்ளிவிபரத் தரவுகளை வழங்கியவை
1. வீரகேசரி
2. தினக்குரல்
3. பரீசியன் பிரெஞ்சுப் பத்திரிகை
4. பிகரோ பிரஞ்சுப் பத்திரிகை
5. புதினம் இணையத்தளம்
6. தேனீ இணையத்தளம்
7. நிதர்சனம் இணையதளம்
8. ஈ.பி.டி.பி. இணையத்தளம்.
9. THE SUNDAY TIMES
11.03.2005