Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _1.jpgதெ ன்கிழக்காசியாவில் உருவாகிய சுனாமி என்ற கடற்கோள், பல பத்தாயிரம் மக்களை உயிருடன் இழுத்துச் சென்றுள்ளது. மனித உழைப்பால் உருவான மனித நாகரீகம் இடிபாடுகளாகிவிட்டது. நிலத்தையும் கடலையும் பிரிக்கும் எல்லைகள் பிணக் குவியலாக மாறிவிட்டது. சேறும் சகதியுமாகிப் போன பூமியின் ஒரு பகுதியில், புதையுண்ட சடலங்கள் பூமியூடாக எட்டிப் பார்க்கின்றன. மனிதக் கண்கள் என்றுமே கண்டறியாத இயற்கை அழிவாக எம்முன் இவை நிற்கின்றன. இந்த நிலையில் சிதைந்து போன இயற்கையை, மனித ஆற்றல் ஈடுகொடுத்து மீட்க முடியாது திணறும் நிலைமையை இந்தச் சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

நவீனத் தொழில் நுட்பங்கள் முதல் பலமான அரசு இயந்திரங்கள் வரை தமது கையாலாகாத்தனத்தையே நிரூபிக்கின்றன. நவீன தொழில் நுட்பங்களும், பலமான அரசு இயந்திரங்களும், மனித உழைப்பைச் சுரண்டும் எல்லைக்குள் செயற்படுவதால், இந்த இயற்கை அனர்த்தங்களை (பேரழிவுகளை) எதிர்கொள்ளும் ஆற்றலையே இழந்துவிடுகின்றன. மீண்டும் மக்கள்தான் இந்த இயற்கையை எதிர்கொண்டு, இடிபாடுகளை அகற்றுவது முதல் இறந்த உடல்களை மீட்பது வரை அனைத்திற்காகவும் களத்தில் இறங்கினர். நிவாரணங்களைக் கூட அந்த மக்கள்தான் வாரிவாரி வழங்கினர். அதிகார இயந்திரங்களின் செயலற்ற தன்மையை எதிர்த்து, மக்கள் தமது சொந்த ஆற்றலையும் உழைப்பையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் சமூக உணர்வுடன் வழங்கினர். சமூகப் போக்குக்கு எதிரான தனிமனித நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பில், அரசுகள் சமூகத்துக்கு எதிராகவே உள்ளன. மக்கள் கூட்டம் இயற்கையால் அழிகின்ற போது, அரசுகள் அவற்றை வேடிக்கை பார்க்கவும், அவைபற்றி அறிக்கை விடவுமே முனைகின்றன.


தனிமனிதவாதங்களால் மலடுதட்டிப் போன சமூகத்தில், மக்கள் தமது சொந்த உழைப்பால் மீண்டும் சமூக உணர்வுடன் களத்தில் இறங்கினர். உலகமயமாதல் அமைப்பில் சிதைந்துபோய்க் கொண்டிருக்கும் சொந்த ஆற்றலைக் கொண்டு, தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்த மக்களே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எந்தத் திட்டமிடலுமின்றி தமது அறிவுக்கெட்டிய எல்லைக்குள், வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையிலான ஒரு போராட்டத்தையே சமூக உணர்வுடன் நடத்தினர், நடத்துகின்றனர். அதிகாரத்தையும், செல்வத்தையும் மலைபோல் குவித்து வைத்துள்ளவர்கள், இறந்து போன ஏழை மக்களையிட்டோ, உயிர் தப்பிய வக்கற்றவர்களையிட்டோ, பெரும் செல்வத்தைப் பெற்று தராத இந்தப் பிரதேசங்களையிட்டோ அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் சமூக உணர்வுடன் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு முன்னால் நின்று இவர்கள் தொலைக்காட்சிக்கு அறிக்கை கொடுக்கின்றனர். அதேநேரம் இந்தச் சமூக அவலத்தின் மேல் கொள்ளையடிக்கவும், ஆக்கிரமிப்புகளை நடத்தவுமே, இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் களமிறங்குகின்றனர். அதிகாரவர்க்கம் இன மொழி வேறுபாடுகள் இன்றி உலகெங்கும் இந்த ஒரேயொரு நோக்கத்துடன் ஓநாய்களாக அலைகின்றது. இதில் விடுதலைப்புலிகள் முதல் அமெரிக்கா வரை இந்த நோக்கில்தான், இந்த மனித அவலத்தைப் பயன்படுத்துகின்றனர். மக்களைப் பற்றி எந்தவிதமான சமூக அக்கறையும் இவர்களுக்குத் துளியளவும் கிடையாது.


இந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரையிலான நாடுகள், இலங்கை மேல் விசேட கவனத்தைத் திருப்பியுள்ளனர். அதிக இழப்பைக் கொண்ட இந்தோனேசியாவைக் கூட, இலங்கை அளவுக்கு உலகம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இந்தியக் கடற்படைகள், அமெரிக்கக் கடற்படைகள் உள்ளடங்கிய இராணுவங்கள் இலங்கையில் இறங்கியுள்ளன. ஜெர்மனி உளவுத்துறையுடன் கூடிய உதவிப் படையை இறக்கியுள்ளது. இலங்கை மீதான ஆக்கிரமிப்பு, மனிதாபிமான உதவி என்ற பெயரிலும் மீட்பு நடவடிக்கை என்ற பெயரிலும் மறுநிர்மாணம் என்ற பெயரிலும் தொடங்கிவிட்டது. அமெரிக்கா இதைத் தாண்டி குறுகிய மற்றும் நீண்ட கால மீட்பு பணிக்காகவே வந்துள்ளதாக அறிவித்துள்ளது. முன்பு அமைதிப்படை என்ற பெயரில் களமிறங்கிய இந்தியா, இலங்கையில் நடத்திய ஆக்கிரமிப்பு என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது எம் கண் முன்னால் நிற்கின்றது. இன்று மனிதாபிமான உதவி, மீட்பு, மறுநிர்மாணம் என்று பலவண்ணப் பூச்சுகளுடன் தம்மை மூடிமறைத்தபடி ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டனர். இந்த மீட்பு மற்றும் புனர் நிர்மாணத்தை இந்த ஆக்கிரமிப்பாளர்கள், தமது சொந்த நலன்கள் இலங்கையில் பூர்த்தியாகும் வரை, பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக நீடித்த காலத்துக்கு நீட்டி இலங்கையில் படைகளை வைத்திருப்பார்கள். இந்த ஆக்கிரமிப்புகளையிட்டு இலங்கையில் எந்த ஒரு கண்டனத்தையும், எதிர்ப்பையும் கூட யாரும் இதுவரை தெரிவிக்கவில்லை.


இந்த நிலையில் ஏகாதிபத்திய நிதியுடன், அவர்களின் கொள்ளை வழிகாட்டுலுக்குட்பட்டு இயங்கும் அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் பல, மனிதாபிமான உதவி, மீட்பு, புனர்நிர்மாணம் என்ற பல வேஷங்களுடன் முழுமூச்சாகவே இறங்கியுள்ளனர். எங்கும் அன்னியரும், அன்னிய கைக்கூலிகளும், அன்னிய நிதியும் சேர்ந்து, ஒரு தேசத்தின் தலைவிதியை என்றுமில்லாத ஒரு அடிமை நிலைக்கு நகர்த்தியுள்ளனர். இந்த நிலையில் தேசத்தின் "தேசிய' தலைவர்கள் இனம் மொழி மதம் கடந்தபடி அன்னியரின் வருகைக்காகவும், அவர்களிடம் கையேந்தி பிச்சை கேட்கின்றனர். விசுவாசமாகவே ஊளையிட்டு வாலாட்டிக் குலைக்கின்றனர்.


மனிதக் கதறல்கள், மனித ஓலங்கள் எல்லாம் எதிர்காலத் தலைமுறையின் அடிமை விலங்காகவே மாற்றப்படுகின்றது. இயற்கையால் இழந்து போன மனித இழப்பை விடவும், அன்னியரின் தலையீடே மிகப் பெரிய சமூகச் சிதைவையும், மனித இழப்பையும் ஏற்படுத்த உள்ளது. நடந்து முடிந்த இயற்கையான கடற்கோளைவிடவும், இந்த அன்னியத் தலையீடுகள் இலங்கை மக்களை முற்றாக மூழ்கடிக்க உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் உருவாக்கவுள்ள இந்தச் செயற்கையான அனர்த்தத்தை (பேரழிவை) இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகள் முதல் போராடும் இயக்கங்கள் வரை ஒரே விதமாக கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். இதை முன்கூட்டி அறியும் ஆற்றல் உள்ள நாங்கள், இந்த அபாய எச்சரிக்கையை விடுவது வரலாற்றின் கடமையாகி விடுகின்றது.


மனிதத் துயரங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியங்கள் ஒருபுறம் இலங்கையை ஆக்கிரமித்துள்ளது என்றால், மறுபுறம் இனங்களைத் தேசியத்தின் பெயரில் ஆழமாகப் பிளந்து பணத்தைத் திரட்டுகின்றனர். பிணங்களைக் காட்சிப்படுத்தி, மனிதனின் அடிப்படையான சமூக உணர்வுகளை உணர்ச்சிமயமாக்கிய மலட்டுத்தனத்தில், பல பத்து கோடி பணத்தைத் திரட்டிக் கொண்டனர். புலிகளின் பினாமி அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாடுகள் எங்கும், பிணங்களைக் காட்டி கோடி கோடியாகப் பணம் திரட்டியது. தாம் மட்டும்தான் புனர்வாழ்வு செய்ய கடவுளால் படைக்கப்பட்டவர்களாகவும், மற்றவர்கள் யாரும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளக் கூடாது என்று மறைமுக மற்றும் நேரடி எச்சரிக்கைகள் ஊடாகவே பணத்தைத் திரட்டிக் கொண்டனர். தொலைக்காட்சிகளில் பிணங்களைக் காட்சிப்படுத்தியதன் மூலம் அதையே விளம்பரமாக்கி, பணத்தைத் தரும்படி மீண்டும் மீண்டும் கோரப்பட்டது. அதாவது இந்தியாவில் அனாதைப் பிணங்களைக் காட்டி புதைக்கப் பணம் கேட்கும் பொறுக்கிகள் போல், தொலைக்காட்சியில் பிணத்தைக் காட்டி கோடிகோடியாகவே பணம் திரட்டினர்.


பணத்தைத் தருவதன் மூலம், பணம் கொடுத்தவன் தனது சோகத்தைத் தீர்க்க முடியும் என்ற உளவியல் சிதைவை உருவாக்கினர். பணம் கொடுப்பதற்கு அப்பால் சமூகக் கடமை எதுவும் உனக்கு கிடையாது என்ற மலட்டு உணர்வை உருவாக்கினர். இயற்கை மக்களுக்கு ஏற்படுத்திய துயரத்தில் பங்கு கொண்ட மக்கள், தமது சொந்த உழைப்பில் ஒரு பகுதியைப் பணமாகக் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாம் கொடுத்த பணம் போய் சேர்ந்ததா என்பதைக் கண்காணிக்கும் உரிமை எதுவும், பணம் கொடுத்த மக்களுக்குக் கிடையாது. தாம் கொடுத்த பணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படிப் பகிரப்பட்டது என்று கேட்கும் உரிமையும் கிடையாது. ஏன் தமிழ் மக்கள் எவ்வளவு புனர்வாழ்வு நிதியை வழங்கினர் என்று கேட்கும் உரிமையும் கிடையாது. கடந்த காலத்தில் புலிகளின் வரலாற்றில் மக்கள் கொடுத்த பல பத்து கோடி பணத்துக்கு எது நடந்ததோ, அதுவே இன்றும் நடக்கின்றது.


இவை பற்றி கேள்வி கேட்காது செம்மறி ஆடுகள் போல் பணத்தைத் தா என்பதே, புனர்வாழ்வு நிவாரணத்தின் அடிப்படை கோட்பாடாகவே அரங்கேறியது. அதாவது உனது கடின உழைப்பால் உருவான பணத்தை மட்டும் தந்துவிடு என்பது புலித் தத்துவம். மற்றபடி செம்மறியாடுகளாக எதையும் நிமர்ந்து பார்க்காது, மந்தைகள் போல் மேயுங்கள் என்பதையே, தமது அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் உணர்வாக்கியுள்ளனர். பணத்தைத் தருவதன் மூலம் துயரத்தைப் போக்கிக் கொள் என்ற எல்லைக்குள், மனித அவலம் மலினப்படுத்தப்பட்டது. பணம் தராதவனும், தம்மிடம் பணம் தராதவனும் ஒரு தமிழ்த் துரோகியாக முத்திரை குத்தப்பட்டான். தம்மிடம் பணத்தைத் தராது சுயமாகப் பணத்தைத் திரட்டி செயல்படுபவர்கள் எல்லாம் அதியுயர்ந்த தேசத்துரோகிகள் ஆவர். அதை நேரடியாக அந்த மக்களுக்கு எடுத்துச் செல்வது அதியுயர்ந்த தேச துரோகமாகும். புனர்வாழ்வு நிதிகள் நேரடியாக அல்ல, அவை ஆயுதங்களாகப் போகவேண்டும் என்பது, புலிப் பினாமிகளான புனர் வாழ்வுக் கழகத்தின் நடைமுறை மற்றும் கோட்பாடாகும். தமக்கு வெளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்பவர்களுக்கு எதிராக, புலிப் பினாமிய இணையத் தளங்கள் எச்சரிக்கைகள் கூட விடுத்து இருந்தன. இதைத் தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் செய்தியாக்கின.


உண்மையில் 2001இல் 20,000 மக்களைப் பலி கொண்ட குஜராத் நிலநடுக்கத்தின்போது இந்து பாசிஸ்ட்டுகளான சிவசேனை எதைச் செய்ததோ, அதையே புலிகள் செய்கின்றனர். சிவசேனை அந்த மக்களுக்கு கிடைத்த நிவாரணங்கள் அனைத்தையும் பலாத்காரமாகக் கைப்பற்றியது மட்டுமின்றி, சிவசேனைக்கு வெளியில் செய்யப்பட்ட நிவாரணங்களையும் பறிமுதல் செய்து தனதாக்கியது. நிவாரணத்தின் ஒரு பகுதியை இந்துக்களுக்கு மட்டும் வழங்கியதுடன், முஸ்லீம் மக்களுக்குக் கிடைப்பதை, முற்றாகத் தடுத்தனர். பெரும் நிதியை இந்த நிவாரணங்கள் மூலம் சுருட்டிக் கொண்ட சிவசேனை, இந்தப் பெரும் நிதியைக் கொண்டே 2004ஆம் ஆண்டில் முஸ்லீம் மக்கள் மீதான இந்துப் பாசிசத்தைக் கட்டவிழ்த்து 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்களைக் கொன்றனர். இவை இன்று அப்பட்டமாக அம்பலமாகி வருகின்றது. இதுவே தமிழ் மக்கள் வழங்கிய நிவாரண நிதிக்கு நிகழும். இதற்கு வெளியில் யாரும் பூதக்கண்ணாடி கொண்டு வெளிச்சம் காட்ட முடியாது. இந்த எல்லைக்குள் தான் புலிகளின் நிதி சேகரிப்பு நடைபெற்றது.


இதற்குச் சகல தகவல் தொடர்பு வழிகளையும் பயன்படுத்தினர். புலிகளின் நேரடி பினாமி தொலைக்காட்சிக்கு வெளியில் இயங்கிய தொலைக்காட்சிகளுக்குக் கூட, மறைமுகமான நிர்ப்பந்தத்தைப் புலிகள் கொடுத்தனர். உதவி அனைத்தையும் தம்மிடம் வழங்கக் கோரும் நிர்ப்பந்தத்தை அறிவித்தல்கள் மூலம் ஏற்படுத்தினர். மனித அவலத்தை, மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் வக்கிரமாக்கி அதை விளம்பர நிகழ்ச்சியாக்கிக் கொண்டிருந்த போது, உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் வழங்குங்கள் என்று வலிந்து கூறுமளவுக்கு நிகழ்ச்சிகள் ஒரு செயற்கை தன்மையுடன் ஒளிபரப்பாகின. புலிகள் என்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக வலிந்து கூறப்பட்டது. இந்த உதவும் செய்திகளின் போது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புனர்வாழ்வுக் கழகம் உதவுவதாகச் செய்தியாளர்கள் அங்கு செல்லாத நிலையிலும் கூறிய சம்பவங்கள் ஒரு திணிப்பாகவே அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அதாவது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற புலிகள், தமிழ் மக்களுக்கு உதவுவதாகக் கூறும் வார்த்தைகள் வக்கிரமான காட்சிகள் மீதான ஒரு ஆக்கிரமிப்பாகவே இருந்தது. அதாவது இதைக் கூறுவதற்காகவே காட்சிகள் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. இதன் மொத்த நோக்கமே தமிழ் மக்களின் மந்தைத்தனத்தை, பணமாக்குவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தது.


அமெரிக்க ஏகாதிபத்தியப் பாணியில் பொய்ப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு புலிகள் பிரச்சாரத்தைக் கட்டமைத்தனர். கட்டமைக்கின்றனர். உலக மக்களை அடிமைப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கேடுகெட்ட வக்கிரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது போல், புலிகள் தமிழ் மக்கள் மேல் தமது சொந்த வக்கிரத்தை உருவாக்கினர். பிணங்களை விளம்பரப்படுத்தி பணத்தைத் திரட்டினர். இந்த வக்கிரமான விளம்பரத்தின் போது, வாழும் உயிர்களின் உளவியல் சிக்கல்களை உருவாக்கக் கூடிய காட்சிகளைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாகவே ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிப் படிமங்கள் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர்களையும், அவர்களின் சிறு குழந்தைகளையும் எதிர்காலத்தில் பல உளவியல் நோய்க்கு இட்டுச் செல்லும் அபாயத்தை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை. பிணக் குவியல்களும், பிணங்களும் ஒரு செய்தி என்ற கட்டமைப்பைத் தாண்டி, அதை அநாகரிகமாக விளம்பரமாக்கி பல மணி நேரம் தொடர்ச்சியாக சில நாட்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நலிந்து பல உளவியல் நோய்க்குள் சிக்கியுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம், புதிதாகத் தீர்க்க முடியாத பல உளவியல் நோய்கள் உள்ளாகும் அளவுக்கும், அவர்களின் குழந்தைகளுக்குப் பைத்தியத்தை உருவாக்கும் அளவுக்கு ஒரு உளவியல் யுத்தத்தை நடத்தியே பணத்தைத் திரட்டினர். இந்தக் காட்சிகள் எல்லாம் மனிதத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள நடத்தப்பட்டவையல்ல. பணம் திரட்டும் ஒரேயொரு நோக்கில் மட்டுமே நடத்தப்பட்டவை.


இப்படி திரட்டப்பட்ட பல பத்துக் கோடிப் பணத்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி கொடுப்பார்கள் என்ற எந்தத் திட்டத்தையும் யாரும் எதிர்காலத்தில் பெறமுடியாது. அதாவது தாம் கொடுத்த பணத்தைக் கண்காணிக்கும் உரிமை கொடுத்த மக்களுக்குக் கிடையாது. பணம் கொடுத்தவர்கள் பலர், இந்தப் பணம் ஆயுதங்களாகவே செல்லும் என்ற அதிருப்தியுணர்வுடன் தான், தமக்கு வேறு மார்க்கம் இன்றி கொடுத்ததைச் சொல்லி புலம்புவதைக் காண்கின்றோம். புலிகள் ஒன்றும் மக்களுக்காக இயங்கும் மக்கள் இயக்கம் அல்ல. கரையோரங்களில் கஞ்சிக்கே வழியற்று வாழ்கின்ற இந்த மக்களையிட்டு என்றுமே அக்கறைப்பட்டது கிடையாது.


முல்லைக்கரைகளில் வாழ்ந்த இந்த மக்களுக்கு 1995இன் பின்பாக அரசு வழங்கிய 25,000 ரூபா நிவாரணத்தைக் கொண்டே, பஞ்சம் பிழைத்து வாழ்ந்த வாழ்வை சூசையே தனது சொந்தப் பேட்டியில் ஒப்புக் கொள்கின்றார். அரசுதான் அங்கு உதவி செய்து இருந்தது. இந்த மக்களின் அவலத்தை வக்கிரமாகப் படமாக்கி காசு பண்ணியவர்களும் சரி, இதை அரசுக்கு எதிராக முன்னிறுத்தி அரசியல் விபச்சாரம் செய்த சக்திகளும் சரி என்றுமே இந்த ஏழை மக்களையிட்டுக் கவலைப்பட்டது கிடையாது. ஓட்டைகள் விழும் ஓலைக் கீற்றில், மாற்று உடுப்புகளின்றி வாழ்ந்த இந்த ஏழைகளின் வாழ்வை எந்தத் "தேசியவாதிகளும்' கண்ணெடுத்து பார்த்ததில்லை. இந்த ஏழைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தையே தேசியமாகவும், அதையே வாழ்வாகவும் கொள்கையாகவும் கொண்ட ஒரு பொருளாதாரக் கட்டுமானத்தையே புலித் தேசியம் பீற்றுகின்றது. புலிகளின் பொருளாதாரக் கொள்கை மக்களின் பொருளாதார வாழ்வையிட்டு எந்தச் சமூக அக்கறையையும் கொண்டிருந்ததில்லை. புலிகளின் பொருளாதாரக் கொள்கை அவர்களின் வரலாறு முழுக்க, மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மக்களின் ஏழ்மையும், அவர்களின் கூலி வாழ்வும் புலிகளின் முதலீடுகளுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த இயற்கை அனர்த்தங்களுக்கு (பேரழிவுகளுக்கு) முன்பு இந்த மக்களையிட்டு, அவர்களின் சமூகப் பொருளாதார வாழ்வையிட்டு அக்கறையற்ற புலிகளின் அரசியல் கொள்கை, பல பத்து கோடி நிதிகளை அந்த மக்களுக்குக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, புலிகளின் முதலீடும், புலிகளின் தனிப்பட்ட முதலீடும் பெருகவே வழிவகுக்கும். உண்மையில் இன்று உயிர் தப்பியவர்கள் புலிகளிடம் கூலிக்கு வேலை செய்ய முடியும். இந்த மக்களின் சுய உற்பத்திகளை அழித்துவந்த புலிகளுக்கு, இயற்கை கொடையாக அதை வேகமாக அழித்துக் கொடுத்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் ஈடேறவிடாது புலிகளின் முதலீட்டில் கூலிகளை உருவாக்கும் வல்லமை வாய்ந்த நிதியாதாரங்களை, பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் அவர்களுக்கு எதிரா கவே திரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு என பரந்துபட்ட மக்கள் வாரி வழங்கிய நிதி, அவர்களுக்கு எதிராகவே உற்பத்தித் துறையில் செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது. இது உயிர் தப்பியவர்கள் மேல் உருவாகும் மற்றொரு சுனாமிதான்.


இதைவிட சேர்க்கப்பட்ட புனர் வாழ்வு நிதியின் பெரும் பகுதி, மீண்டும் ஏகாதிபத்திய ஆயுதச் சந்தையில் புதைந்து போவதை யாரும் தடுக்க முடியாது. மிகுதி பெரும் சொந்த முதலீடாகவே மாறும். இதை நாம் நடைமுறையில் புலிகளின் பல முதலீடுகளில் என்ன நடக்கின்றது என்பதை வைத்துக் காண முடியும். இதற்கு மாற்று விளக்கம் யாராலும் நடைமுறையில் காட்ட முடியாது. இவற்றைக் கடந்தகாலத்தில் புலிகளின் செயல்பாடுகள் அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகின்றன. இந்தக் கடற்கோள் ஏற்படுவதற்கு முன்பு மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டி, சேர்க்கப்பட்ட நிதி, அந்த மக்களுக்குச் சென்றதை எந்தக் கொம்பனாலும் காட்ட முடியாது. இதற்கு ஒரு துப்பாக்கி குண்டால்தான் பதில் தரமுடியும். இதுதான் உண்மை. இதற்கு வெளியில் உண்மை கிடையாது.


உண்மைகளைப் புதைகுழியில் புதைத்தபடியே தான், புலிகள் சிறீலங்கா அரசுக்கு எதிராக உடனடியாகவே குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கின்றனர். இவையெல்லாம் ஒருதலைப் பட்சமானவை. சிறீலங்கா அரசு ஒரு சிங்கள இனவெறி இனவாத அரசாக இருப்பதும், தமிழ் மக்களை விட சிங்கள மக்களுக்கு அதிக சலுகைகளையும், முதன்மையான உதவிகளையும் வழங்குகிறது என்பதும் உண்மைதான். அப்படித்தான் இந்த இனவெறி அரசு இயங்குகின்றது. ஆனால் புலிகள் கூறுவது போல் அல்ல. புலிகள் தாம் தம்மளவில் மக்களுக்கு எதையும் செய்ய முடியாத நிலையில், இதை எதிரி மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தமது சொந்தக் கையாலாகாத்தனத்தை மூடிமறைக்கின்றனர். சொந்த மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கிழமை கடந்துபோன நிலையிலும் அந்த மக்களைப் புலிகளின் தலைவர் சென்று பார்க்கவில்லை. இது ஒரு இனம் தெரியாத புகைச்சலாக, எரிச்சலாகக் குசுகுசுக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவரின் பெயரால் வந்த அறிக்கை 30 கோடி ரூபாவை நிவாரணமாக அறிவித்துள்ள நிலையில், அவை மக்களுக்குச் சென்றதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. தலைவரின் பெயரில் விடப்பட்ட அறிக்கை, இனம் கடந்து, மொழி கடந்து தமிழ் சிங்களம் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் புலிகள் கட்டமைப்பு புலித் தலைவரின் அறிக்கைக்கு மாறாக, சிங்கள மக்களுக்கு எதிரான பிளவை அகலப்படுத்தும் தீவிர தமிழ் இனவாதப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தலைவரின் அறிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள உண்மை, 30 கோடி நிதிக்கு (இதுவும் மக்களின் நிதிதான். இந்த நிதி இருந்த காலத்தில்தான், வன்னியில் எலும்பும் தோலுமாக மக்கள் வாழ்வைப் படமாக்கி முன்பு காசு சேர்த்தனர்). மட்டும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் புலிகளின் நிவாரணம் எங்கே எப்படி மக்களுக்குச் சென்றுள்ளது.


அறிவிழந்த உணர்ச்சிவசப்பட்ட சில முட்டாள்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மருத்துவம் மற்றும் உணவு விநியோகங்களை எடுத்துக்காட்டுகின்றனர். இது அந்தப் பிரதேசத்தை ஆளும் புலிகளின் கடமை. இந்த இடத்தில் புலிகள் அல்லாத யார் இருந்திருந்தாலும் இதைச் செய்திருப்பார்கள். உலகெங்கும் இது நடந்தது. உண்மையில் இந்தக் கட்டமைப்பிலும் அணிதிரட்டப்படாத மக்களின் உதவியைத்தான், புலிகளால் எடுத்து மீளக் கொடுக்கப்பட்டது. புலிகள் அல்லாத தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் இதைச் செய்தது. இராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. அதற்காக இராணுவத்துக்கு நிதியை வழங்கிவிட முடியுமா? இது போல்தான் புலிகளும்.


2.1 மக்களுக்காக வாழ்பவர்கள் மட்டும்தான், புனர்வாழ்வைக் கூடியளவுக்கு நேர்மையுடன் செயல்படுத்துவார்கள் அல்லவா!


இந்த நிலையில் ஆரம்ப நாட்களில் அரசின் நிவாரணங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பது, உண்மைதான். ஆனால் இதைப் புலிகள் தமிழ் மக்களுக்கு மட்டும் அரசு இப்படி செய்கின்றது என்று ஒருதலைப்பட்சமாகக் குற்றம் சாட்டிய போது, உண்மை வேறொன்றாக இருந்தது. அரசு சிங்கள மக்களுக்கும் கூட உதவி செய்யவில்லை என்பதைப் பூசி மெழுகிவிடுகின்றனர். சிங்களப் பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்கள் அரசின் உதவி எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியதை, தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. இது இந்தியா முதல் அனைத்து நாடுகளினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் குற்றச்சாட்டாக முன் வைத்தபோது அதில் நியாயம் இருந்தது.


ஆனால் புலிகள் தமிழ் மக்களுக்கு மட்டும் உதவி செய்யவில்லை என்று இலங்கை அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றி அதிக பணம் கறக்கும் உத்தியை அடிப்படையாகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை விட, பாதிக்கப்படாத மக்களை ஏமாற்றி பணம் கறப்பதே, இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. அதாவது பாதிக்கப் பட்ட மக்களின் பெயரில், தமக்குப் பணம் சேர்க்க இதைப் பயன்படுத்திக் கொண்டனர். இதன்போது தமிழ் இனவாதம் என்றுமில்லாத உச்சத்தை அடைந்தது, மற்றொரு பக்கத்தில் புலிகளின் பணம் சேர்க்கும் உத்தி, சிங்கள மக்களுக்கு அரசு உதவி செய்வதாகக் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் முதுகில் குத்தினர். அரசுகளின் கையாலாகாத்தனத்தையும், அரசின் செயலற்ற தன்மையையும், அது சார்ந்த உண்மைகளையும் மூடி மறைப்பதன் மூலம், தமிழ் இனவாதத்தையே விரிவாக்கி தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளனர்.


உலகமயமாதலில் நவீன காலனியக் கைக்கூலிகளாகச் செயல்படும் தேசிய அரசுகள் மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் உடனடியாக நேரடியாக வழங்க முடியாது. எந்த நிவாரணமும் உலகவங்கியின் அனுமதியுடன் தான் வழங்க முடியும். இது இலங்கை இந்தியா என்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். உலகமயமாதலில் மனித அழிவுகளின்போது நிவாரணத்தை வழங்க சிறப்பு வடிவங்களை உருவாக்கியுள்ளனர். ஏகாதிபத்திய நிதியாதாரத்தில், அவர்களின் கைக்கூலிகளாகச் செயல்படும் தன்னார்வ அரசு சாராத குழுக்கள் தான் நிவாரணத்தை வழங்க முடியும். இது உலகமயமாதலின் அடிப்படையான விதிகளில் ஒன்று. இன்று உலகளவில் இப்படி இயங்கும் பல தன்னார்வக் குழுக்களின் வரவு செலவுகள், பல தேசங்களின் தேசிய வருவாயைவிடவும் அதிகமாகும். நிவாரணத்தை இடைத் தரகர்கள் இன்றி தமது விசுவாசிகள் மூலம் குறிப்பாக கிடைக்கப் பண்ணுவதன் மூலம், அதிக லாபத்தை மூலதனம் சம்பாதிக்கின்றது. அத்துடன் மக்கள் மேல் ஏகாதிபத்திய அரசியல் பொருளாதாரச் செல்வாக்கையும் செலுத்த முடிகின்றது. இந்த நிலையில் அரசுகள் சுரண்டலைப் பாதுகாக்கும் ஒரு இயந்திரத்தைக் கொண்ட ஒரு நிறுவனம் மட்டும்தான். நீண்டகால நிவாரணத்தை உலக வங்கியின் அனுமதியுடன்தான், அரசுகள் நீண்ட இடைவெளியில் வழங்க முடியும். இது இன்றைய அரசுகள் பற்றியதும், உலகமயமாதலில் பொதுவான ஒரு நடைமுறையாகும். இந்த இடத்தில் அரசுகள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி நிறுவனங்களே.


இந்தக் கட்டுப்பாடுகள் எதுவுமற்ற புலிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றால் எதுவுமில்லை. அரசு போல் தான், இவர்கள் தலைமையின் உத்தரவுகளுக்குக் காத்திருந்தனர். பரந்தமக்கள் கூட்டமும், பொது நிறுவனங்களும், தன்னார்வக் குழுக்களும் இணைந்தே ஆரம்ப மீட்புகள் முதல் ஆரம்ப நிவாரணங்களைச் செய்தனர். இவர்களுடன் அடிமட்ட புலிகளும் கைகோர்த்து நின்றனர். உண்மையில் இதுபற்றி புலித் தலைவர்களின் முதலாவது அறிக்கை வெளிவந்த காலதாமதத்தைக் கொண்டே, இதைக் கவனத்தில் எடுக்க முடியும். இதேபோல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ராணுவம் செயல்பட்டது. பின்னால் புலிகள் செய்ததெல்லாம், பொதுமக்களின் தன்னெழுச்சியான செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி அவற்றைத் தாம் செய்வதாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினர். நிவாரணங்களைக் கைப்பற்றி தாம் கொடுப்பதாகக் காட்டுவதே நிகழ்கின்றது. இந்தக் கைப்பற்றல் என்பது படிப்படியாகச் சொந்த இனத்தைக் கடந்து வளர்ச்சியுற்றதுடன், மற்றைய இனங்கள் மேலாதானதாகவும் மாறியது. இதுவே பிரதான முரண்பாடுகளாகப் புலி சார்பு, புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் ஒன்றையொன்று குற்றம் சாட்டி செய்தியாக்கின. மக்களுக்கு யார் கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதும், அதைக் கைப்பற்றுவதும் வன்முறையாகவே நிகழ்கின்றது. இங்கு புலிகள் தாம் கொடுப்பதைப் பறித்ததாகக் கூறவில்லை. மாறாக மற்றவர்கள் கொடுப்பதைச் சிங்களவர்கள் பறிப்பதாகக் கூறுவது, புலிகள் கொடுக்கவில்லை என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது. இந்தளவுக்கும் அதிக நிவாரணங்களை வெளியில் இருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சிங்கள மக்கள் கொண்டு சென்றுள்ளனர். இங்கு அரசு அல்ல.


குறிப்பாகத் தமிழர்கள் யாரும் கண்டு கொள்ள மறுக்கும் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குச் சிங்கள முஸ்லீம் மக்களின் உதவிதான், குறைந்தபட்சமான அடிப்படையான உதவியாக இருந்தது. இதேபோல் திருகோணமலைக்கும், இந்த உதவி தங்குதடையற்ற வகையில் சென்றது. இதேநேரம் ஐரோப்பாவில் கோடிக்கணக்கான பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. பல கிராமங்களுக்கு யாரும் செல்லாத ஒரு நிலையில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். இந்த உண்மைகள் திட்டமிட்டே மூடிமறைக்கப்படுகின்றது. இதேநேரம் தனிப்பட்ட நபர்களினதும், பொது அமைப்புகளினதும் விநியோகங்கள் படிப்படியாக முற்றாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதை மறுவிநியோகம் செய்யப்படுவதுமாகவே புலிகளின் கையோங்கி வருகின்றது. இவற்றைத் தனிப்பட்ட பல சம்பவங்கள் செய்தியாக்கி வருகின்றன. தமிழ் மீடியாக்கள் இவற்றைச் செய்தியாக்க கடும் தடைகளும், நிர்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மாறாக இனவாத நோக்கில் மட்டும், மற்ற இனங்கள் மீதான குற்றமாகத் தமிழ் மீடியாக்கள் புனைகின்றன. பல சந்தர்ப்பங்களில் இதற்கு ஆதாரமே இருப்பதில்லை. தமிழ் இனவெறியைக் கக்கும் ஒரு எல்லைக்குள் மட்டும் நிகழ்ச்சிகளைப் பூதக்கண்ணாடி கொண்டு தேடி, அதையே பெரிதாகக் காட்டிவிடுகின்றனர். இதன் மூலம் இனவாதத்தை இந்த இயற்கை அனார்த்தத்தின் பேரழிவின் ஊடாக, மேலும் அகலப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த நிவாரண விநியோகத்தில் நடத்தும் இன ரீதியான இழுபறியான வலிந்த பிரச்சாரம், மூன்றாவது தரப்பின் (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்) தலையீட்டைத் தன்னிச்சையாக நடத்தும் நிலைக்கு ஏதுவாக மாறிவருகின்றது.


இவையெல்லாம் புலித் தலைவரின் அறிக்கைக்குப் புறம்பாக உள்ளது. இந்த அறிக்கை பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தில் பங்கு கொள்வதாகக் கூறிச் செல்கின்றது.ஆனால், சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஊடாகவே சகல தமிழ்ச் செய்தி மீடியாக்களும் விளம்பரப் பிரச்சாரத்தைச் செய்வதுடன், என்றுமில்லாத ஒரு இனப்பிளவை அகலமாக்கியுள்ளனர். அதாவது யுத்தம் நடந்தபோது ஏற்பட்ட இனப் பிளவைவிட இன்று தமிழ் மீடியாக்களின் குறுகிய பிரச்சாரத்தில் ஏற்பட்ட இனப்பிளவு அகலமானது. பாதிக்கப்பட்ட மக்களிடையே இந்தப் இனப் பிளவு குறைந்துள்ள நிலையில், இதற்கு உதவிய தமிழ் மக்களிடையே பிளவுக்கான இனஉணர்வுகள் சார்ந்த அடிப்படைகள் வெட்கம் கெட்ட முறையில் அகலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய சிங்கள, முஸ்லீம் மக்களிடையே நேச உறவுகள் நெருங்கிக் காணப்படுகின்றது.


பிணத்தை விளம்பரம் செய்து, சிங்கள மக்களைக் கேவலப்படுத்தி பணம் சேர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான தமிழ்த் தேசிய வியாபாரம் சர்வதேச புதிய தலையீடுகளால் நடுச்சந்திக்கு வந்துள்ளது. ஏன் புலம்பெயர் நாடுகளில் கோடிக்கணக்கில் சேகரிக்கப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செல்வதை ஏகாதிபத்தியம் கண்காணிக்கவும், அப்படி பணம் செல்வது உறுதிபடுத்தப்படாவிட்டால் அவற்றைப் பறிமுதல் செய்யும் நிலைமைக்கு இலங்கையில் சர்வதேசத் தலையீடுகள் உருவாகியுள்ளது.


இந்த நிலையில் இனவிரோத குறுந்தேசிய உணர்வுகளைப் பயன்படுத்தி நிதியைத் திரட்டியபோது, இந்தக் குறுந்தேசிய இன உணர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பல அடிப்படையான பிரச்சாரங்களுக்கு, கையாண்ட கூற்றுகள் அடிப்படையற்றதும் ஆதாரங்களற்றதுமாகக் காணப்படுகின்றது. மறுபக்கத்தில் புலித்தலைவரின் அறிக்கைகள் தமது சொந்த இழப்பு மீது கூட ஒன்றுக்கொன்று முரணானதாக வெளியிடப்படுகின்றது. முரண்பாட்டின் வடிவமாகவே நிகழ்ச்சிகள் முன்வைக்கப்பட்டது. செய்திகள் அடிப்படையும் ஆதாரமுமற்ற ஒன்றாகவே எப்போதும் முன்வைக்கப்பட்டது. கடற்கோள் நிகழ்ந்த அன்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, தமிழ் மீடியாக்கள் மட்டக்களப்பு மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கருதிக் கொண்டிருந்தன. இதன்போது தீபம் தொலைக்காட்சி மட்டக்களப்பு பாதிப்பைக் கூறியதுடன், தமிழர்களின் இழப்பையிட்டு ஜே.வி.பி. சிரித்து கொண்டாடுவதாகப் புலிப் பினாமியாகவே செய்தி தயாரித்து வெளியிட்டது. உண்மையில் அக்கணம் ஜே.வி.பி.யின் கோட்டைகளாக விளங்கிய பிரதேசங்களில், பல ஆயிரம் மக்கள் நீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். செய்திப் புனைவுகள், கற்பனைக்கு எட்டாத இனவாதத்துடன் முன்வைக்கப்பட்டது. மனித இழப்பைவிடவும் புலிப் பினாமியத்துக்கும் புலிக்கும் இசைவாகச் செய்திகளைத் திரித்துத் தருவது உச்சத்தையே எட்டியது.


இந்தப் புனைவு விளம்பரச் செய்திகளில் மற்றொரு உண்மையை நாம் காணமுடியும். இந்தச் செய்திகள் முல்லைத்தீவை நோக்கி திடீரென நகர்ந்தது. முல்லைத்தீவே அதிக இழப்பைச் சந்தித்ததாகக் காட்ட முனைந்த நிகழ்வு முன்னிலைக்கு வந்தது. இதில் பி.பி.சி. தமிழ்ச் செய்தி தொகுப்பாளராகவும், பவ்வியமாகப் புலிப் பினாமியாகவும் புலம்பும் ஆனந்தி அம்மாவும் தாளம் போடத் தொடங்கினர். முல்லைத்தீவு இழப்பைப் பெரிதாகக் காட்டும் விளம்பரம், நிதி சேகரிப்பின் மையமான கோஷமாகியது, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகள், தமிழ் மீடியாக்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. புலிகள் அல்லாத உதவிகள் இருட்டடிப்பு செய்து, தமிழ்க் குறுந்தேசிய உணர்வுக்குச் செங்கல் இட்டனர். குறிப்பாக அம்பாறை இழப்பைக் குறைவாகச் சித்தரிக்க முனைந்தனர். அம்பாறையில் அதிக இழப்பு என்று கூறியவர்களைப் பொய்யர்களாகச் சேறு பூசினர். திடீரென யாழ்ப்பாணமும், முல்லைத்தீவும் செய்தியில் முதன்மை நிகழ்ச்சிநிரலாகியது. தமிழ் மக்களின் இழப்பு அதிகம் என்று கூறுவதன் மூலம் பணத்தை உலகளவில் அதிகம் கறக்க முடியும் என்ற புலிகளின் தத்துவத்தைத் தமிழ் மீடியாக்கள் பயன்படுத்திக் கொண்டன. அதுவும் முல்லைத்தீவில் அதிக இழப்பும், அடுத்து யாழ்ப்பாணம் அதிக இழப்பாகவும் சித்தரிக்கும் போக்கு முன்னிலைக்கு வந்தது. இதன்போதே நிதி சேகரிப்பு உச்சத்தை அடைந்தது. ஆனால் இழப்பு அம்பாறையில் மிகப் பெரிதான ஒன்றாக இருந்தது. இலங்கையில் உயிர் இழந்தோரில் அரைவாசி பேர் அம்பாறையைச் சேர்ந்தவர்கள். அதிக அகதிகள் அங்கு உருவாகியுள்ள நிலைமையை முற்றாகத் தமிழ் மக்களின் மத்தியில் திட்டமிட்டு மறைத்தனர். இந்த நிலையில் எந்த நிவாரணமும் அங்கு செல்லவில்லை. பிணங்கள் குவியல் குவியலாக ஏற்றப்பட்டுப் புதைக்கப்பட்ட நிலையில், அம்பாறையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட அமைப்புகள் பிணங்களைப் புதைக்க வந்து உதவும்படி ஒரு வேண்டுகோளை அனைத்து மக்களிடமும் பகிரங்கமாக விடுத்தனர். இதன்போது கூட தமிழ் மீடியாக்கள் அம்பாறை இழப்பையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக அதை மூடிமறைத்தன.


மாறாகப் புலிப் பினாமிய இணையத்தளங்கள் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் மீது சேற்றை வாரி வீசின. முஸ்லீம் மக்களின் இழப்பை மிகைப்படுத்துவதாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகவும் தூற்றின. இதைத் தமிழ் மீடியாக்கள் செய்தியாக்கின. குறிப்பாக தீபம் தொலைக்காட்சி ஊடாக அனஸ் என்ற செய்தியாளர் அம்பாறை இழப்பைக் கொண்டு வந்தபோது, புலிகளின் இணையத்தளமான நிதர்சனம் அனஸ்சை தவறான தகவல் தருபவராக, விபரித்து ஒரு தேசத்துரோகியாகவே காட்ட முனைந்தது. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தின் இழப்பை மறைத்து, தமிழ் மக்களின் முட்டாள்த் தனத்தின் மீது பணத்தைக் குவித்துக் கொண்டனர். அம்பாறையில் இழப்பு பற்றி முழுமையான புள்ளிவிபரங்கள் வெளிவராவிட்டாலும் பெருமளவில் முஸ்லீம் மக்கள் இழப்பு இலங்கை அளவில் கணிசமானது. தமிழ் மக்கள் அளவுக்கு முஸ்லீம் மக்களின் இழப்பு சமமானது. கிடைத்துள்ள புள்ளிவிபர அடிப்படையில் அதிக இழப்பைச் சிங்கள இனம் சந்தித்துள்ளது.


இந்த நிலையில் வெளிநாட்டு உதவிகளைக் கொள்ளையிட, முஸ்லீம் மக்கள் பற்றி புலிகளுக்குத் திடீர் கருசணை ஏற்பட்டது. இரண்டு லட்சம் ரூபா என்ற அற்பத் தொகையைக் கொடுக்கும் அறிவிப்பு வெளியிட்டதுடன், அவர்களைத் தமிழ் மக்களாகக் காட்டுவதும் தொடங்கியுள்ளது. கடந்தகால மனக்கசப்பான சம்பவங்களை மறப்போம் வாருங்கள் என்று புலம்பத் தொடங்கியுள்ளனர். கிடைக்கும் நிவாரணத்தை பங்கு போடுவதற்கு முஸ்லீம்களைத் தமிழ் மக்களாகக் காட்டுவது அதிகரித்துள்ளது. சிங்களவர்களை விட தமிழரின் இழப்பு அதிகம் என்று காட்டுவது உண்மையில் வெளிநாட்டு உதவியைப் பங்கிடுவதில் புலிகளுக்குத் தணியாதத் தாகமாகி விடுகின்றது.


உண்மையில், தமிழ் மக்கள் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களைவிட அதிகம் இறந்து இருந்தால் நல்லது என்ற நிலைப்பாட்டைப் புலிகள் தங்களின் வெளிப்படுத்தல் ஊடாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழருக்கே அதிக இழப்பு என்று இதனடிப்படையில் காட்டமுனைந்தனர். அதிகம் தமிழ் மக்கள் இறந்து இருந்தால், அதில் அதிக லாபத்தை அடைய முடிந்திருக்கும் என்ற புலிகள் நிலைப்பாடு அவர்களின் வெளிப்படுத்தல்களில் பிரதிபலித்தது. இதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக பணத்தைத் திரட்டவும், உலக உதவிகளை அதிகம் பெறவும், அதிக இழப்புக்காக ஏங்கியதைத் தொலைக்காட்சிகள் மற்றும் செய்திகள் அப்பட்டமாகப் பிரதிபலித்து நின்றன. உலகளாவிய பல நாடுகளின் இழப்பைக் குறுகிய தமிழின இழப்பாகக் காட்டமுனைந்தனர். மேற்கு நாட்டு அரசியல்வாதிகளையும், பிரமுகர்களையும் ஏமாற்றி பணம் திரட்டினர். திரட்ட முனைப்பு கொண்டனர். மேற்கு மக்களை ஏமாற்றி எல்லா இழப்பும் தமக்காகக் காட்டி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி பணம் திரட்டினர். இலங்கையின் மொத்த இழப்பையும் காட்டி, தமது குறுகிய நலன்களுக்கு மேற்கு மக்களின் பணத்தைத் திரட்டினர். பிணங்களை விளம்பரமாக்கி சந்தைப்படுத்திய ஒரேயொரு தேசியம், தமிழ்தேசியம் மட்டும் தான் என்ற வரலாற்றை நவீன காலத்தில் பதிவு செய்துள்ளனர்.


02.01.2005