Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _4.jpgசமாதானம் அமைதி என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில், புலிகள் ஏகாதிபத்திய கைகூலியாகி சோரம் போயுள்ளனர். இந்தநிலையில் ஏகாதிபத்தியம் போடும்; எலும்புகளை சுவைக்கும் யாழ் மையவாதத்துக்கு எதிரான நாய்ச் சண்டையில், பங்காளிகள் தமது பங்கைக் கோருகின்றனர். இது யாழ்-கிழக்கு என்று புலித் தலைமைகளுக்கு இடையிலான பிளவாகி, அதுவே ஒருபுறம் தூற்றலாகி மோதலை நோக்கி நகருகின்றது.


 தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கமல்ல என்பதை, வரலாறு மீண்டும் ஒருமுறை நிதர்சனமாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் பார்ப்பனிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உயர்சாதி இயக்கமே. யாழ்ப்பிரதேச மையவாதத்தை அடிப்படைச் சித்தாந்தமாகக் கொண்ட, ஒரு பிதேசவாத இயக்கமே. ஆணாதிக்கத்தை சித்தாந்தமாகக் கொண்ட ஒரு ஆண்கள் இயக்கமே. இவற்றை எல்லாம் அடிப்படையான சித்தாந்தமாகக் கொண்ட, ஒரு குறுந்தேசிய இனவாதஇயக்கமே. இதன் தலைமை தனிமனித அதிகாரத்தை முன்னிலைப்படுத்தும், ஒரு பாசிசஇயக்கமே. 


 அண்மையில் பிரபாகரனின் யாழ்மையவாதத் தலைமைக்கு எதிராக, கிழக்கை முன்னிலைப்படுத்தி கருணா ஏற்படுத்தியப் பிளவு, வரலாற்றில் மீள ஒருமுறை புலிகள் யார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி பறைசாற்றி நிற்கின்றது. புலிகளுக்கு சாதாரண குறைந்தபட்ச ஜனநாயகப+ர்வமான அரசியலே தெரியாது என்பதை அம்பலம் செய்து நிற்கின்றனர். துப்பாக்கி மூலம் பேசும் பாசிசத்தை சார்ந்து, தனிமனித பிரபாகரனின் சர்வாதிகார முடிவுகளையே தேசியமாகவும் துரோகமாகவும் வரையறை செய்கின்ற கைக்கூலித்தனத்தை அரங்கேற்றுவதையே மீண்டும் அம்பலப்படுத்தி நிற்கின்றது. 


 சமாதானம் அமைதி என்று நீடித்த இழுபறியான தீர்வுகள் அற்ற பேச்சுவார்த்தை, நிரந்தரமானத் தீர்வை இரண்டையும் இரு தரப்பினரும் எதிர்த்து வந்தனர். மாறாக மீண்டும் யுத்தத்தை நோக்கிச் செல்லவும், இடையில் பொருளாதார நலன்களை அடையவுமே விரும்பினர். இது இருதரப்பு கொள்ளைகாரருக்கும் லாபம்தரும் ஒரு தொழிலாக இருந்தது. இந்த இழுபறியான பேச்சுவார்த்தையில், ஏகாதிபத்தியத்தின் தலையிடும், அவர்களின் நலனும் ஒன்றாகவே இருந்தது. இது மீண்டும் யுத்தத்துக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. ஏகாதிபத்தியம் வீசிய எலும்புக்கான பேரங்களில் அங்கும் இங்குமாக பேச்சுவார்த்தை அலைபாய்ந்தது. கிடைத்த எலும்புகளை சுவைப்பதில் ஏற்பட்ட மோதல்கள், அதை சுவைக்கும் கனவுகள் இலங்கையின் எல்லா அமைப்புகளையும், அரசியல் இயக்கங்களையும் பிளந்து நிற்கின்றது, பிளவை நோக்கி நகர்கின்றது. ஸ்திரமான அரசியல் நிலைமை, எலும்புக்கான சண்டையால், சிதைந்து நிற்கின்றது. புலிகளும் இதில் இருந்து தப்பிவிடவில்லை.


 கருணா-பிரபா மோதல் என்பது குழு மோதலாகி பிரதேச மோதலாகிவிட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகிவிட்டது. புலிகளுக்கு இடையில் மோதல் தணிந்தாலும் சமூகத்துக்கிடையேயான மோதல் முதன்மையாகியுள்ளது. யாழ் புலித்தலைமை (கருணா கூறுவது போல், இது ஒன்றும் வன்னித் தலைமையல்ல), தமது பிரதேசரீதியான சமூக ஒடுக்குமுறையைத் தொடர சபதம் எற்றதன் விளைவு, ஆயுதம் ஏந்திய மோதலை நோக்கி நகர்த்தியுள்ளது. தனிப்பட்ட காழ்ப்புகளை குறுகியப் பிரதேச உணர்வுடன் விதைக்கின்றனர். கருணா என்ற தனிமனிதன் சார்ந்த பிரச்சனையாக இதை தூற்றுவதன் மூலம், கடந்த வரலாற்றில் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் வன்னிக்கு இழைத்த அநீதிகளை நியாயப்படுத்துகின்றனர். அதைத் தொடரவும் தயாராக இருப்பதை, தமது சொந்த நடத்தைகள் மூலம் காட்டிவருகின்றனர்.


 யாழ் புலித்தலைமை எடுத்த பிரதேசவாத தொடர்முடிவுகள், பிரதேசவாத உணர்வை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் பிளவு இரண்டு பிரதேசத்துக்கிடையேயான நிரந்தரமான பிளவாகிவிட்டது. காலங்காலமாக இருந்த பிரதேசவாத உணர்வு, சமூகத்தின் மேல் மட்டத்துக்கு வந்துள்ளது. இங்கு பொதுவாகவே கருணா குழு மீதே பிரதேசவாத முத்திரையைக் குத்தி, கண்மூடித்தனமான பிரதேசவாதத் தூற்றலைச் செய்கின்றனர். யாழ்குடாவில் இருந்து புலம்பெயர் சமூகம் வரை வடக்குக்கு ஆதரவான வகையில், கிழக்கைத் தூற்றுவது அரங்கேறுகின்றது. தமிழ் மீடியாவும் அதைச் சுற்றிய சமூகமும் கிழக்கு தமிழ்மக்கள் பற்றி, யாழ் சாதியமொழியால் தூற்றுவது அரங்கேறுகின்றது., ஒரு தலைப்பட்சமாக கிழக்குக்கு எதிராக விதைக்கும் விதைகள், பிரதேசவாத பிளவை அகலமாக்கி, அந்தப் பிளவை நிரந்தரமாக்கி வருகின்றது. கருணாவும் அவர் தலைமையிலான புலித் தலைமை இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி, வடக்கு கிழக்கு பிளவு நிரந்தரமாகிவிட்டது. அதை வடக்கு சார்ந்த யாழ் புலித்தலைமை, தன்னாலான அளவில் மேலும் அகலமாக்கி வருகின்றது.


 விடுதலைப்புலிகள் இயக்கம் யாழ் மையவாதக் கண்ணோட்டம் கொண்ட ஒரு பிரதேசவாத தேசிய இயக்கமாக இருந்ததால், கருணா தனது சொந்தக்குழு நலன் சார்ந்து பிரதேசவாதத்தைத் தனக்கு சாதகமாக்கி கொண்டான். உண்மையில் பிரபா குழுவுக்கும் சரி, கருணா குழுவுக்கும் சரி மக்களின் நலன்கள் பற்றிய எந்தவிதமான சமூக அக்கறையும் கிடையாது. இவர்கள்  ஒன்றாக இருந்தபோது என்ன அரசியலை வைத்து இருந்தனரோ, அதையே இப்போதும் இருவரும் பிரிந்த பிறகும் ஆணையில் வைத்துள்ளனர்.


 இந்த நிலைமையில் தலைமைக்குள் ஏற்பட்ட அதிருப்தி, நிர்வாக அலகுகளின் அதிகாரத்துக்கு எதிரானதாகவே உருவாகியது. நிதி முதல் அனைத்தும் முப்பது விசேட யாழ்மையவாத அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டு யாழ் தலைமையை நோக்கிச்சென்றது. பிரதேச தளபதிகள் வெறும் பொம்மை இராணுவ அதிகாரிகளாக இருந்தனர். வன்னியில் யாழ் தலைமையின் ஆடம்பரமான வாழ்வை கண்ணுற்ற கிழக்குத் தலைமையின் அதிருப்தி, போராட்டம் இப்படிச் சீரழிகின்றது என்ற உணர்வில் இருந்து ஏற்பட்டதல்ல, மாறாக இதில் தமது பங்கு என்ன என்ற கேள்வியை உருவாக்கிவிடுகின்றது. கிழக்கின் நீதி மற்றும் பொலிஸ், உளவு, நிதி, புனர்வாழ்வு என்ற எண்ணற அமைப்புகள் அனைத்தும் நேரடியாக யாழ் தலைமையின் கீழ் இருந்தன. உயர் அதிகாரிகள் முதல் கீழ் அதிகாரிகள் வரை வடக்கு பிரதிநிதிகளால்; கட்டுப்படுத்தப்பட்டனர். 30 அதிகார அமைப்பையும்;, கிழக்குப் படையணிகள் பாதுகாக்கும் கடமையைத் தவிர, வேறு எதையும் செய்யமுடியாத கூலிப்படைகளாகவே இருந்தன. இதன் தளபதியாக கருணா இருந்தான். அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் சிறப்புத் தளபதிகள் உருவாக்கப்பட்டனர். இந்த முப்பது அதிகார மையங்களை பாதுகாக்க யாழ்தலைமையானது, கருணாவின் தலைமையிலான படையை அங்குமிங்கும் விசிறியடிப்பதும் அவர்களை பலியிடுவதும் அன்றாட நிகழ்வாக இருந்தது.


 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு, ஜனநாயகம் பற்றிய பிரச்சனையை மீண்டும் முன்னிலைக்;குக் கொண்டு வந்ததுள்ளது. எல்லாவற்றையும் இராணுவவாதம் மூலமும், படுகொலை அரசியல் மூலமும் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் அரசியல் என்பது, மக்களை யார் அடக்கியாள்வது என்ற எல்லைக்குள் நின்று கொண்டு தான் தம்மையும், இதில் பிரபா - கருணாவின் தலைமைகள் தமது ஜனநாயகத்தையும் பற்றி நியாயப்படுத்துகின்றது. ஒன்றையொன்று மிஞ்ச முடியாத நிலையை அடைந்துள்ளது. புலிகளுக்குள்ளான பல பத்துப் பிளவுகளை எப்போதும் அரசியல் படுகொலை மூலம், நியாயப்படுத்தி நடத்திய (அதாவது பாசிச வழிகளில்) அரசியல், இன்று தலைவிரிக்கோலமாகி நிற்கின்றது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான தேசியக் கோரிக்கைகள் அனைத்தும் பந்தாடப்படுகின்றது.


 உண்மையில் இந்தப் பிளவின் அடிப்படை என்ன? அமைதி சமாதானம் என்ற பெயரில் நடத்திய அரங்கேற்றங்களின் போது, வடக்கு–கிழக்கு தலைமை கூட்டாகவே ஏகாதிபத்திய கால்களில் வீழ்ந்தனர். ஏகாதிபத்தியப் பொருளாதார நலனுக்கு இசைந்து செல்வதன் மூலம், தேசியத்தை கட்டமைப்பது பற்றி நனவுபூர்வமாகவே சிந்தித்தனர். இவ்வாறாக புலிகள், ஏகாதிபத்தியப் பொருளாதார ஊடுருவலின் தரகராகி, கைக்கூலியாகி தேசத்தின் அனைத்து சமூகப் பண்பியலையும் அழித்து செரித்து நிற்கின்றனர். உதாரணமாக புலிகள் தனித்தரப்பாக தமிழ்ப் பகுதிகளில் கொக்கோகோலா ஏக விற்பனைப் பிரதிநிதியாகியுள்ளனர்.  அதையடுத்து மாசிமாதம் வன்னியில் புலிகள் நடத்திய தேசிய விளையாட்டுப் போட்டியில், தமது தேசிய கொடிக்குப் பின்னால் பிரம்மாண்டமான கொக்கோகோலா விளம்பரத்தை அமைத்தனர். பார்க்க 21.2.2004 தினக்குரல் பத்திரிகையில்) இதன் மூலம் புலிகள் தேசிய பானம் கொக்கோகோலாவாகியது. உண்மையில் யார் துரோகி, யார் கைக்கூலி, யாரிடம் கைக்கூலி பெற்றார்கள் என்ற விடையத்தை ஏகாதிபத்தியப் பன்னாட்டு முதலிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும். எப்படி ஏகாதிபத்தியத்துக்கு சோரம் போயுள்ளனர் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஒரு நீண்டப் பட்டியலேயுண்டு. 


 இதற்கும், இந்த பிளவுக்கும் இடையில் என்ன உறவு? பன்னாட்டு மூலதனமும், அதை பாதுகாக்கும் ஏகாதிபத்திய அமைப்பும் தமது கைக்கூலிகளுக்கும் தரகர்களுக்கும் எறியும் எச்சில் பணத்தை எப்படிப் பகிர்வது என்பதில் ஏற்பட்ட நாய்ச்சண்டையே, புலிக்குள்ளான பிளவாகியது. தேசிய மக்களின் வாழ்வையும், தேசியப் பொருளாதாரத்தையும் பாதுக்காக்கும் அடிப்படையில் இந்தப் பிளவு ஏற்படவில்லை. ஏகாதிபத்தியம் கொள்ளையடிக்கவும், சூறையாடவும் அனுமதிக்கும் கைக்கூலிகளுக்கு, போடும் எச்சில் காசுக்கான ஒரு ரவுடிச் சண்டையே அரசியலாகியுள்ளது. இதை நியாயப்படுத்த சமூகத்தில் நிலவிய யாழ்பிரதேசவாத உணர்வுக்கு எதிரான உணர்வை, முன்னிலைக்கு கொண்டுவந்துள்ளது. பிரதேசவாதம் சார்ந்து ஏகாதிபத்தியம் எறியும் எலும்புகளை சுவைக்கவும், அது சார்ந்து சமூக அதிகாரத்தை நுகரும் வேட்கையில் இருந்தும் பிளவு ஆழமாகிவிட்டது. பிளவுக்கான மூலம் (அடிப்படை) இந்த ஏகாதிபத்திய பணம் தான். புலிகளின் யாழ்பிரதேசவாதக் கண்ணோட்டத்தை எதிர்த்து, கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கையை முன்னிலைப்படுத்தவில்லை. மாறாக சொந்தக் குழுவின் நலனை கருணா குழு முன்னிலைக்குக் கொண்டுவந்தது.


 காலங்காலமாகவே யாழ்பிரதேச ஆதிக்க நலன்கள், கிழக்கு மற்றும் வன்னி மக்கள் மீதான அதிகாரத்தைக் கொண்டது. அரசு பதவிகள் முதல் ஆசிரியர்கள் வரை யாழ் மேட்டுக்குடிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. அந்த மக்களை இழிவான, தாழ்ந்த சாதிக்கு நிகரான அடிப்படையில், கொண்ட பொருளாதாரப் பண்பாட்டு, கலாச்சார உறவு கட்டமைக்கப்பட்டு இருந்தது. இந்த விடையத்தை தேசிய விடுதலைப் போராட்டம் களைந்துவிடவில்லை. மாறாக அதை ஆணையில் வைத்து, தமிழ்மக்களின் ஒற்றுமை என்ற பெயரில் அந்த மக்கள் மேலான அதிகாரத்தை தொடர்ந்து பாதுகாத்தனர். தமிழ்அரசியல் கட்சிகள் முதல் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் வரை எவரும், இந்தப் பிரதேசவாத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடவில்லை. கடந்த விடுதலைப் போராட்டங்களின் போதும் சரி, துரோகியாக்கி அழித்த போதும் சரி, கிழக்கு மக்களின் உயிரிழப்பு ஒப்பிட்டு அளவில் அதிகமானதாகும். இதைவிட பொதுவாக மக்களின் உயிரிழப்பு என்பது மிக அதிகமானதாகும்;. நிரந்தரமான எல்லை மோதல்களை உருவாக்கியதன் மூலம், இந்த மக்கள் சந்தித்த கொடுமை சொல்லிமாளாது. எல்லையோர மக்களின் மேலான புலிகளின் குறுந்தேசியப் படுகொலைகள், கிழக்குத் தமிழ் மக்கள் மேலான மற்றொரு சமூக வேலியாகியது.


 இப்படி கிழக்குமக்களின் வாழ்வியல் துயரங்கள் மேல், அவர்களின் சமூக பொருளாதார நலன்களைச் சாராத வகையில், புலிகளின் குறுந்தேசியப் போராட்டம் கட்டமைக்கப்பட்டது. யாழ் குடாநாட்டில் இருந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டம், மண்ணின் இயல்புத் தன்மைக்கு விரோதமானதாக இருந்தது. இவற்றின் அடிப்படையில் கருணாகுழு இதை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக எலும்பைப் பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறே, இந்தப் பிரதேச ஒடுக்குமுறையைத் தனதாக்கிக்கொண்டது. இந்த நிலையில் கிழக்கை மையமாக வைத்து பிரிந்த குழு, முன்வைத்த கோரிக்கைக்குப் பிரதேசவாத இயக்கமான புலிகளால் இன்றுவரை  பதிளிக்க முடியாது போயுள்ளது. யாழ் பிரதேசவாத புலியின் தலைமைக்கு எதிரான, கிழக்கு பிரதேசவாதம் சார்ந்த குழு, சொந்த, குறுகிய பிரதேசவாதம் சார்ந்து தம்மைத்தாம் தற்காத்துக் கொள்கின்றனர்.


 ஒரு சமூக இயக்கம் என்பது அரசியலானது. இது இராணுவ ரீதியானதும், தனிமனித நலன் சார்ந்தவையல்ல. பிரபாகரன் என்ற தனிமனிதனை முன்னிறுத்தி புலிகள் கட்டமைக்கும் தேசியம், அடிப்படையில் குறுந்தேசிய உணர்வைக் கடந்து தனிமனித சர்வாதிகார வக்கிரத்தைப் பாசிசமாக்கி அதையே அரசியலாக்கின்றது. இது சமூகப் பிரச்சனைகளை, குறுகிய எல்லைக்குள் தனிமனிதனுக்கு எதிரானதாகக் காட்டி, ஒட்டுமொத்த சமூகம் மீதான அடக்குமுறையை பாசிச வழிகளில் கட்டமைக்கின்றது. மோதல்கள் பிரதேசவாதம் சார்ந்து வெடித்துள்ள நிலையில், புலியின் யாழ் (பிரபா) தலைமைக்கு எதிரான எதிர்கோஷ்டி அரசியலும் தனிமனிதன் என்ற எல்லைக்குள் சிதைந்து நிற்கின்றது.


 கருணா என்ற தனிமனிதனை முன்னிலைப்படுத்தியே குறுகியப் பிரதேசவாதம் வக்கரிக்கின்றது. ஜனநாயகக் கோரிக்கைகளை மக்கள் நலனில் இருந்து முன்வைத்த போராட்டங்கள் என்பது கிழக்கில் நடக்கவில்லை. மாறாக கருணா என்ற தனிமனித சர்வாதிகாரியை முதன்மைப்படுத்திய, குறுகிய குழுநலன் சார்ந்த கோரிக்கைக்குள் கிழக்குமக்கள் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர். புலிகள் என்ற இயக்கத்தின் அதிகாரத்தில் பங்கு கேட்கும் கிழக்குப்புலிகள், புலிகளின் வாலாக இருந்து எலும்புகளைப் பார்த்து வாலாட்டவே விரும்புகின்றனர். இதற்கு மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கை நிலையைச் சொல்லி, மாவீராக காத்திருக்கும் ஆயுதம் ஏந்தியோரை தம்பக்கம் அணி திரட்டுகின்றனர். மாவீரர் பற்றிய அக்கறை ஒட்டு மொத்த புலித்தலைமைக்கும் கிடையாது. 2003-இல் மாவீரர் குடும்பத்துக்கு பெருமையாக பிரபாகரன் ஒதுக்கிய மொத்த தொகை, வெறுமனே 50 லட்சம் ரூபாதான். தலா 300 ரூபா வீதமே ஒதுக்க முடிந்தது. இது இலங்கையில் ஒரு விவசாயக் கூலியின் ஒரு நாள் கூலி. கோடி கோடியாக பணத்தைச் சூறையாடும்; புலிகள், அதை மாவீரர் குடும்பத்துக்கு என வீணாக்க விரும்பவில்லை.


 மாவீரர் குடும்பங்கள் என்பவை பெருமளவில் ஒருநேர உணவைக் கூட உண்ண வழியற்ற ஏழை விவசாயிகள்;. புலிகளின் அரசியல், ஏழை விவசாயிகளை பட்டினிப் போட்டுச் சுரண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதார நலனுடன் இணங்கிப் போவதாகும். ~~கொக்கோகோலாவை ஒருகையிலும், கைத்தொலைபேசியை மறுகையிலும்|| கொண்ட ஆடம்பரமும் சொகுசும் நிறைந்த வாழ்க்கையை காணமுடியும். மாவீரர் குடும்பத்;துக்கு கஞ்சித் தண்ணீர் கூடக் கிடையாது. இது தான் புலிகளின் சந்தேகமற்ற தமிழ் தேசியம். மாவீரர் மீதான அக்கறை அனைத்தும் போலியானது. இந்த நிலையில் கிழக்கு விவசாய மக்களின் அடிப்படை பிரச்சனையை இட்டு, எந்தவிதமான சமூக அக்கறையும் கிழக்கு புலிகளுக்கு கிடையாது. அதாவது கிழக்கு ஏழை விவசாயிகளின் சமூகப் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சார்ந்த, எந்தவிதமான தேசிய உணர்வுகளையும் கிழக்குத் தலைமை முன்னெடுக்கவில்லை. அவற்றை ஒடுக்குவது தொடருகின்றது. ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி பிச்சையெடுக்கவும், அவர்களின் கூலிப்படையாக செயல்படவும் தயாரான எல்லைக்குள், கிழக்கைச் சூறையாடும் உரிமையைத் தனியாக யாழ் புலித்தலைமையிடம் கோருகின்றனர் அவ்வளவே. இதைத் தரமுடியாது என்பது, யாழ் புலித்தலைமையின் தெளிவான முடிவாகிவிட்டது.


 யாழ் புலித்தலமை தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்மக்களை அடக்கியாள்வதில் வரலாற்று ரீதியான உரிமையைத் தக்கவைக்க முனைகின்றது. சமூகத்தில் காணப்படும் ஆணாதிக்கம், உயர்சாதிய ஆதிக்கம், பிரதேசரீதியான ஆதிக்கம், பிரதேசத்துக்குள்ளும் உள்ளான ஆதிக்கம் இவைகளைத் தக்க வைப்பதில் ஏகப் பிரதிநிதித்துவக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்துகின்றனர். இது மக்களின் ஜனநாயக உரிமைகளை சிதைக்கின்றது. தமது சொந்த வர்க்க நலன்களை தக்கவைக்க உற்பத்தி முதல் விற்பனை வரை, எல்லாச் சங்லித்தொடரிலும் வரி என்ற பெயரில் சூறையாடலைச் செய்கின்றனர். அண்மைக்காலமாக தாமே ஒரேயொரு ஏகபோகத் தரகு முதலாளியாக மாறி வருகின்றனர். கொக்கோகோலா முதல் கோதுமை மாவு வரை அனைத்திற்கும் ஏகபோக விநியோகஸ்தராகியுள்ளனர். பெரும் நிதித்திரட்டல் மூலம் சொத்துக் குவிப்ப+டாக பெரும் தரகுமுதலாளிகளாக தனிப்பட்ட நபர்கள் உருவாகிவருகின்றனர். ஆடம்பரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் தலைமை தன்னைத்தான் நிலைநிறுத்தி வருகின்றது. தம்மைச் சுற்றி உள்ள ஆயுதம் ஏந்திய விசுவாசிகளுக்கு, சில சலுகைகளை வழங்குவதன் மூலம்;, தம்மைத்தாம் பாதுகாக்க முனைகின்றனர்.


 நாட்டில் வாழும் மக்களின், உழைப்பு, அறிவு, அனுபவம் புறக்கணிக்கப்பட்டு, வெளிநாட்டவனின் தேவைக்கும் நோக்கத்துக்கும் இசைவாகத் திட்டங்கள் போடப்படுகின்றன. இனடிப்படையில் சொந்த அமைப்புகளையே பிளக்கின்றனர். வெளிநாட்டுப் பொருட்கள் மீதான மோகம் வெம்பி வெதும்புகின்றது. மக்களின் அடிப்படைத் தேவை புறக்கணிக்கப்பட்டு, ஆடம்பரமான கவர்ச்சிகரமான நவீனங்களால் தேசம் கற்பழிக்கப்படுகின்றது. புலிகளின் தமிழ் தேசியமோ, வெளிநாட்டு மோகம் அதிகரிக்க, வெளிநாட்டவனின் கால்களை நக்குவதும் துரோகம் செய்வதும் தேசியமாக நவீன விளக்கம் பெறுகின்றது. உண்மையில் தமிழ்தேசியம் மட்டுமல்ல தேசியப் பொருளாதாரமும் அழிந்து சிதைகின்றது. இதனால் யார் லாபம் அடைகின்றனர்? மக்களா!? அல்லது ஏகாதிபத்தியமா!? ஏகாதிபத்திய எலும்பை நக்கும் புல்லுருவிக் கூட்டமா!?


பி.இரயாகரன்
14.3.2004