book _4.jpgஇந்த அதிகாரப் போட்டிக்கான அடிப்படை என்ன? எதிர்காலத்தில் இலங்கையில் ஏகாதிபத்தியம் உருவாக்கும் அமைதித் தீர்வில் அல்லது யுத்தத்தில் தம்முடன் முரண்பட்ட பிரிவுகளை ஒழித்துக்கட்டும் ஒரு வடிவமாகவே இந்த நாடகம் அரங்கேறுகின்றது. புலிகள் துப்பாக்கி முனையில் நடத்திய அழித்தொழிப்பு அரசியல், கொஞ்சம் மாறுபட்ட நிலையில் ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளில் அடாத்தாகவே நடத்தப்படுகின்றது. சந்திரிக்கா அம்மையார் வழியில் இது அரங்கேறுகின்றது. எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டல் மூலம்,

 ஆயுதங்களின் துணையுடன், குண்டர் பலத்துடன் மற்றும் நக்கிப் பிழைக்கும் பினாமியத்தின் துணையுடன் அனைத்தையும் ஒருங்கிணைத்த வகையில் இந்த அதிகாரப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வருகின்றனர். கூட்டணிக்குள் நக்கி பிழைக்கும் புலியின் பினாமியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை, அகற்றும் முயற்சியில் புலிகள் நடத்தும் போராட்டம் தான் கூட்டணிக்குள்ளான அதிகாரப் போட்டி. அதாவது புலிகளுடன் கூடி நக்கிப் பிழைக்கும் பினாமிகளுக்கும், அதை மறுக்கும் குழுவுக்கும் இடையில் இந்த அதிகாரப் போட்டி நடக்கின்றது. ஆனந்தசங்கரியின் தலைமையிலான ஒவ்வொரு எதிர்விளைவையும், எப்படி ஒழித்துக் கட்டுவது என்பது ஈறாக புலிகளே அனைத்தையும் வழிநடத்துகின்றனர்.


 புலிகளின் பினாமிகளுடன் உடன்பட மறுக்கும் ஆனந்தசங்கரியின் தலைமையிலான குழுவும், புலிகளின் பினாமிகளைப் போல் மக்களுக்கு எதிரானவர்கள் தான்;. மக்களை இட்டு அன்றைய கூட்டணிக்கும் சரி, இன்றைய பினாமிய மற்றும் அதற்கு எதிரான குழுவுக்கும் எந்த சமூக அக்கறையும் கிடையாது. மக்களை ஒடுக்கவும், அவர்களை ஏமாற்றி அரசியலில் நக்கிப் பிழைக்கும்; கும்பலாகவே எப்போதும் இருந்துள்ளது. தமிழ் தேசியத்தைக் குறுந்தேசிய உணர்வாக மாற்றி, அதில் குளிர் காய்ந்தவர்களின் நீட்சியில் தான் இந்த இயக்கங்கள் உருவானது. புலிகள் இதற்கு விதிவிலக்கற்ற சிறந்த அரசியல் வாரிசாக உருவானவர்கள்.


 தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை பற்றி புலிகளும் சரி, கூட்டணியும் சரி என்றும் அக்கறை கொண்டது கிடையாது. மக்களின் தேசிய உணர்ச்சி வேறு, இவர்களிடம் இருப்பது வேறு ஒன்றாக இருக்கின்றது. மக்களின் தேசிய உணர்வை மிகக் குறுகிய நலன் சார்ந்த அரசியலுக்குள் கட்டமைத்ததன் மூலம், மக்களுக்கு எதிரான ஒரு வர்க்க நலன் சார்ந்து நின்று மக்களை ஒடுக்கும் வகையில், அரசியல் ரீதியாக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் லும்பனாக நீடிக்கின்றனர்.


 ஆனந்தசங்கரி கும்பலை மக்களுக்கு எதிரானதாகக் காட்டுவதன் மூலம், புலிகள் உள்ளிட்ட பினாமிகள் தம்மைத் தாம் தூய்மையானவர்களாக காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைப்பதன் மூலம், தமிழ் மக்களை அன்னிய ஏகாதிபத்தியத்துக்குத் தாரை வார்க்கின்றனர். ஆனந்தசங்கரியின் தலைமையிலான கும்பலை இந்தியக் கைக் கூலியாகவும், ஏகாதிபத்திய எடுபிடியாகவும் காட்டித் தம்மைத் தாம் மூடிமறைக்கின்றனர். ஆனந்தசங்கரி தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராக செயல்படுவதாகக் காட்டி அரசியல் செய்ய புறப்பட்டுள்ள புலிகள் உட்பட்ட பினாமிய கும்பல், அவர்களிடம் இருந்து வேறுபட்ட ரீதியில் மக்களுக்காக எதைத்தான் மாற்றாக வைக்கின்றனர்? இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை பாய் விரித்து தேசியம் பேசும் இவர்கள், உலகமயமாதல் கொள்கைக்கு இரு கரம் கொடுத்து வரவேற்கின்றனர். மக்களின் தேசிய அடிப்படையிலான தேசியப் பொருளாதாரத்தை அழித்து ஒழிக்கின்றனர். தேசிய மக்களின் வாழ்வும் அது சார்ந்த உழைப்பை இட்டு அலட்டிக் கொள்ளாத, உழைக்கும் மக்களை ஒடுக்குகின்ற இந்தக் கும்பல் தான் ஆனந்தசங்கரியின் தலைமையிலான கும்பலைத் துரோகி என்கின்றது.


 ஆனந்தசங்கரிக்கு எதிரான கும்பல் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசினதும்;, இந்திய அரசினதும் கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் தான். இன்று நக்கிப்பிழைக்கும் பிழைப்புவாதப் பினாமியத்தில், புலிகளின் கைக்கூலியாகி தேசியவாதியானார்கள். இதற்காகத் தம்முடன் இருந்த ஒரு பகுதியினரைத் துரோகியாக்கி, தம்மைத் தாம் தூய்மையாக்கும் பினாமிய அரசியல் பாதுகாப்பில், ஜனநாயகத்தை மீண்டும் ஆழமாகக் குழி தோண்டி புதைக்கும் பாதையில் முன்னேறுகின்றனர். கடந்த காலத்தில் துப்பாக்கி முனையில் கொன்று போட்டுச் சாதித்தவைகளை, இன்று அதன் துணையுடன் அரசியல் வடிவங்கள் மூலம் சாதிக்க முனைகின்றனர். மிரட்டும் சமூக அமைப்பில், ஒரு தலைபட்சமான விவாதத் தளத்தில் இதை நடத்துகின்றனர். இதன் கதி சர்வதேசத் தலையீட்டுடன், அங்கும் இங்கும் அலை பாயும் தன்மை கொண்டதாக உயிருள்ளதாகவே நீடிக்கின்றது.