09232021வி
Last updateசெ, 07 செப் 2021 8pm

வக்கரித்த அரசியலும், ஏகப்பிரதிநிதிக் கோட்பாடும்

book _4.jpgபுலிகள் தம்மைத் தாம் ஏகப்பிரதிநிதியாக்க, இயக்கம் தொடங்கியது முதலே தணியாத தாகமாகக் கொண்டே அலைகின்றனர். படுகொலை அரசியல் மூலம் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக இருக்க, கடந்த 25 வருடமாக எடுத்த எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. அவை அனைத்தும் தோல்வி மேல் தோல்வியாகவே முடிந்தது. சில ஆயிரம் பேரைப் படுகொலை செய்த இரத்த வேள்வியால் கூட, ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாட்டு அரசியல் தோல்வியேபெற்றது. மாறாக இதற்கு எதிரான குழுக்கள், கட்சிகள் இரத்த வேள்வியின் தொடர்ச்சியிலும் பிறப்பெடுத்தது. எதிரி இதைத் தனக்குச் சாதகமாக்கி தனக்கான குழுக்களை உருவாக்கும் கொள்கைக்கு, புலிகளது ஏகப்பிரநிதித்துவ அழித்தொழிப்புக் கொள்கை உதவத் தொடங்கியது. தொடர் படுகொலைகள் மூலம் ஒழித்துக்கட்டும் இராணுவ அரசியல், படுதோல்வி அடைந்ததைத் தவிர எதையும் சாதிக்கவில்லை. இதை உலகளவில் உள்ள மக்களின் அனைத்து எதிரிகளும் பயன்படுத்திக் கொண்டனர், கொள்கின்றனர். தமிழ் மக்களை அடக்கியொடுக்கக் கூடிய எந்த ஒரு நிலையிலும், ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுக் குழுக்களைப் புலிகள் ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாக உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

 இந்த நிலையில் அமைதி, சமாதானம் என்று வேடம் கட்டி, மேடையில் அமைதி வழி ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாடு ஆட்டம் போடும் அரசியலைத் தவிர, வேறு எதுவுமற்ற வெற்றுவேட்டுத்தனம் அரங்கேறுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையை வெறும் ஏகப்பிரதிநித்துவம் என்ற எல்லைக்குள் மலினப்படுத்தியதையே தேசிய அரசியலாக அரங்கேற்றுகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்ட குழு மோதல் அரசியலை கோட்பாடாக்கி, தமிழ் மக்களை வம்பளக்க வைத்துள்ளனர். உண்மையில் இராணுவ ரீதியாக முன்பு பலதரம் சுட்டுப் படுகொலை செய்து அழித்த போதும் அழியாது தளைத்த குழுக்களை, புதிய பாணியில் அழிக்கும் முயற்சி ஒன்றை தொடங்கியதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. புலிகள் தமது ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாட்டுக்கு இசைவாக, ஒட்டுமொத்தக் குழுக்களையே பம்பரமாக்க எடுத்த முயற்சிகள் மீண்டும் படுதோல்விகளை சந்தித்து வருகின்றது. துரோகக் குழுக்களின் தலைமையை சமாதானமாகப் பேச அழைத்து, மிரட்டுவதன் மூலம் பினாமியாக்கியப் புலிகள், அவர்களைப் படிப்படியாக வெறும் பம்பரமாக்கினார்கள். அப்படி பினாமியான கும்பல் கூட சொந்தமாக எதையும் சொல்லவும், செய்யவும் வக்கற்று புலிகள் உருட்டி விளையாடும் பொம்மை பம்பரமான நிலையில், அவர்களது சொந்தக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் உதித்து எழுந்தன.


 இந்த மோதலானது, புலிகளால் நிகழ்த்தப்படும் தமக்கு எதிரான அனைத்தையும் கூட அப்பட்டமாகவே நியாயப்படுத்தும் அளவுக்குக் கூடச் சென்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும், புலிகளின்; பம்பரப் பொம்மையாகிய ரவிராஜ் தினமுரசு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ~~நாங்கள் புலிகளால் ஆட்டுவிக்கும் பொம்மைகள் அல்ல|| என்றார். அவர் மேலும் தனது பேட்டியில் ~~தமிழர் விடுதலைக் கூட்டணியில் சிலர் கொல்லப்பட்டது தேவையின் நிமித்தம் நடந்தது|| என்றார். இப்படி தன்னிலை விளக்கம் அளித்தது. புலிகளுக்கு ஏற்றத் தோலாகினார். இவை பல முரண்பாடுகளை உருவாக்கியது. இதே போல் ரெலோவின் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் இனம் காணப்பட்டு சுடப்பட்டனர். இப்படி ஒரு சில கொலைகள் இந்த கூட்டமைப்புக்குள் நிறைவேற்றப்பட்டது. அடிமைப்படுத்திய சிறுமைப்படுத்திய நிகழ்ச்சி முன்னிலைக்கு வராவிட்டாலும், இவை புகைந்து வருவதைத் தடுக்க முடியவில்லை. இக் குழுக்கள் பம்பரப் பொம்மையாகிய நிலையில், புலிகளை ஏகப்பிரதிநிதிகள்; என்று கிளிப்பிள்ளை போல் சொல்லும் நிலை உருவாகியது. இப்படிச் சொல்ல வைப்பதன் மூலம் உண்மையில் இவர்கள் (புலிகள்) ஏகப்பிரதிநிதிகள் அல்ல என்ற விடையத்தை, ஒப்புக் கொள்வதை அங்கீகரிக்கின்றது. அதாவது உண்மையிலேயே ஏகப்பிரதிநிதியாக இருக்கும் போது அதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. மாறாக அதைச் சொல்லும் போது எதார்த்தம் அதற்கு எதிராக இருப்பதை பட்டவர்த்தனமாக மெய்ப்பிக்கின்றது. இதன் மூலம் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல என்ற கருத்தும் பிரிவும் (அமைப்பு) மேலும் ஆழமாகப் பலமாகி வருகின்றது.

 
 உண்மையில் புலிகளின் எதிரிகளைப் பலமாக்கும் கட்சி சுத்திகரிப்பையே புலிகளின் அரசியல் வெளியில் இருந்து இலகுவாக செய்துள்ளது. புலிகளுடன் சோரம்; போகக் கூடிய பிரிவு தனிமைப்பட்டுச் சிதையும் அதே தளத்தில், உறுதியான பிரிவு மேலும் தன்னைப் பலப்படுத்தியதற்கு அப்பால், இந்த ஏகப்பிரதிநிதித்துவம் என்ற வாதம் மேலும் புலிகளை பலவீனமாக்கியுள்ளது.


 முன்னிலைக்கு வந்த ஆனந்தசங்கரியின் போராட்டம் இந்த வகையிலானதே. ஆனந்தசங்கரிக்கு எதிராக நேரடியாக ஆதாரமாக எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாத நிலையில், ஒரு ஜனநாயக விரோத ஆடுகளம் உருவாக்கப்பட்டது. புலிகளை ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வகையில், ஆனந்தசங்கரிக்கு எதிரான நடவடிக்கைகள் மிரட்டல்கள் ஜனநாயகத்தின் எல்லாவிதமான கபடங்களையும் கடந்ததாக அமைந்தது. மிரட்டல் ஆணையில் வைக்கப்பட்டு சரணடையக் கோரும் எல்லையில்லாத  புலிகளின் முயற்சி, உண்மையில் கூட்டணியில் இருந்த புலிகளுக்கு எதிரானக் குழுவைப் பலப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புலிகள் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக தனக்கு சவால் விடக்கூடிய குழுவைப் பலப்படுத்தினர். இந்த அரசியல் நிகழ்ச்சியைக் கடந்து எதையும் புலிகள் சாதிக்கவில்லை.


 இந்தளவுக்கு ஆனந்தசங்கரி புலிகளுடன் வரையறுக்கப்பட்ட எவ்லைக்குள் இணங்கிப் போகத் தயாராகவே இருந்தவர். புலிகளின் அனைத்து மனித விரோத தன்மையையும் அங்கீகரித்து சென்றவர். அதை இன்றும் தொடர்ந்தும் பாதுகாப்பவர். ஆனால் புலிகளுடன் கரைந்து செல்ல மறுத்தார். வெறும் பொம்மையாக, புலிகள் விளையாடும் பம்பரமாக இருக்க மறுத்தார். இந்த முரண்பாடு மேலும் ஆழமாக, அதற்குள் இருந்த பிழைப்புவாதக் கும்பல் ஆனந்தசங்கரியை ஓரங்கட்டி அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தனர். ஆனால் நிலைமை தலைகீழாகி உள்ளது. வரலாற்றில் இந்தப் பொம்மைகள் விலாசமற்று போகும் நிலைக்குத் தம்மைத் தாம் தரம் தாழ்த்தினர். பொம்மை பம்பரங்கள் எப்போதும் குப்;பையில் தூக்கி வீசப்படும் ஒரு எல்லையில் தான் உயிர்வாழ்கின்றன என்ற உண்மை, இலங்கை அரசியலில் களம் கண்டுள்ளது.


 ஆனந்தசங்கரியைத் தனிமைப்படுத்தி, ஒழித்துக்கட்டும் ஒரு முயற்சியை உள்ளிருந்தே எடுத்துக் கொண்டிருந்த ஒரு நிலையில், யாழ் பொதுசன நூல் நிலையத் திறப்புவிழா பற்றிய அரங்கேற்றம் ஒன்று நடைபெற்றது. ஆனந்தசங்கரியின் குழுவைத் தனிமைப்படுத்தி இல்லாது ஒழிக்கவும், சாதிய ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும், ஒருங்கே ஒருங்கிணைந்து இந்தத் திறப்பு விழாவுக்கு எதிராகப் பினாமிப் பெயர்களில் பலரைப் புலிகள் களத்தில் இறக்கினர். கூட்டணியில் இருந்த சாதி வெறியர்களை உசுப்பி அவர்களைப் பிரித்து தம் பக்கம் சேர்த்த புலிகள், ஆனந்தசங்கரியை ஒழித்துக்கட்ட எடுத்த முயற்சிக்கு மக்களின் ஆதரவைத் திரட்ட முடியவில்லை. பினாமிப் பெயரில் உருவான குழுக்களின் முயற்சிகள் தோற்றுப் போன நிலையில், புலிகளே நேரடியாகவே வந்து அறைக்குள் வைத்து மிரட்டியதன் மூலம், இந்த திறப்புவிழா முடிவுக்கு வந்தது.


 உண்மையில் ஆனந்தசங்கரியும் அவர் குழுவும் அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திறப்புவிழாவில் ஈடுபட்டன. அதைத் தடுத்த புலிகளும் அதையே செய்தனர். மக்களின் நலன் என்பது எந்த விதத்திலும் இருதரப்பிலும் இருக்கவில்லை. இழுபறியான நிலையில் முடிந்து போன நிலையில், நூல் நிலையம் ஒரு வருடமாக திறக்கப்படவில்லை. அதை உத்தியோகப+ர்வமாகத் திறக்காமல், மக்கள் பாவனைக்கு திறந்து விட முடிவெடுத்துள்ளதாக அறியவருகின்றது. உண்மையில் அறிவியல் ப+ர்வமாக கையாளத் தவறிய போது, குழு நலனும் சாதி அரசியலும் மீண்டும் யாழ் போராட்டமாகியது. வக்கரித்துப் போன அரசியல் மலட்டுத்தனமானது, ஜனநாயக விரோத நடைமுறைகள் மூலம் மீண்டும் அரங்கேறியது. புலிகளுக்கு எதிரான பிரிவு இந்த வக்கற்ற ஜனநாயக விரோதப் போக்கை மிகத் திறமையாக பயன்படுத்தி, தம்மை மேலும் ஒரு தனித்துவமான அணியாகப் பலப்படுத்திக் கொண்டது. உண்மையில் புலிகள் இதன் மூலம் எதைச் சாதித்தனர் என்றால் எதுவுமில்லை. ஆனால் உலகளவில் தனிமைப்படுவது அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் எதிரிகளுக்குப் புதிய ஒரு பலமான குழுவை உருவாக்கி கொடுத்துள்ளனர். தமிழ் மக்களின் இழப்பு ஆழமானதாகச் சிதைந்து செல்வதைத் தாண்டி, எதுவும் தமிழ் மக்கள் பெறவில்லை.