புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் கையெழுத்திட்ட நிலையில், அதை அவர்கள் கடைப்பிடிப்பதில் உள்ள நேர்மை வழமை போல் சந்திக்கு வருகின்றது. இதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை வலிய உருவாக்கியதுடன், அதை சொந்தக் கழுத்தில் கைவைக்கும் அளவுக்கு பலதடவை உலக ஏகாதிபத்தியங்களை இலங்கைப் பிரச்சினையில் தலையிட வைத்தன. வழமை போல் மக்களின் பெயரால், இனம் தெரியாத நபர்களின் பெயரால், முகவரியற்ற அமைப்புகளின் பெயரால், மூன்றாவது குழுவின் பெயரால் பல நூறு சம்பவங்கள் நடத்தினர். மோதல்கள்;, படுகொலைகள் என்று தொடரும் ஒவ்வொரு முரண்பாடும், புலிகளால் யுத்தத்திலிருந்து மீண்டு விட விரும்பும் முடிவுக்கு சென்று விட முடியவில்லை. மாறாக யுத்தத்துக்குள், மீண்டு விட முடியாத புதைகுழியில் புதைந்து செல்வதையே ஆழமாக்கியது.
ஒரு உடன்பாட்டின்; மேல் கையெழுத்திடல் என்பது சொந்த முடிவுக்கு அமைய இருப்பதால், அதை உயர்ந்தபட்சம் பாதுகாப்பது அவசியமானது. அதை நேர்மையாக கையாள்வது அதைவிட முக்கியமானது. எப்போதும் வெளிப்படையானதாகவும், மக்களை ஒவ்வொரு நிலைப்பாட்டின் மீதும் அணிதிரட்டுவதும் அவசியமானது. ஆனால் புலிகள் முஸ்லிம் சமூகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தமும் சரி, தமிழ் மக்கள் சார்பாக தங்கள் செய்த ஒப்பந்தத்தையும் சரி, நேர்மையாகக் கடைப்பிடிப்பதில் இருந்து விலகியே சென்றுள்ளனர். எப்போதும் சொந்தக் கையெழுத்துகளை முதலில் மீறிச் செல்வது புலிகளின் அகராதியாகியுள்ளது. சிங்கள இனவாதிகள் கடந்த 55 வருடங்களில் தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட பல ஒப்பந்தங்களை கிழித்து எறிந்தார்கள்;;. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைச் செயலில் காட்டி வருகின்றனர். மக்களின் நலனில் இருந்து செய்து கொள்ளப்பாடத எந்த ஒப்பந்தத்தினதும் கதி, இப்படித் தான் இருக்கும் என்பதை வரலாறுகள் மீண்டும் பளிச்சென்று நிறுவுகின்றன.
பொதுவாகவே இந்த ஒப்பந்தத்தை மக்களின் நடைமுறை வாழ்வுடன், அவர்களின் பிரச்சனைகளை உள்ளடக்கிய வகையில் புலிகள் செய்யவில்லை. தாம், தமது குழு என்ற அடிப்படை கண்ணோட்டத்தில் இருந்தே இந்த ஒப்பந்தத்தைக்; கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் தன்னைச் சுற்றி மக்களின் சில கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டது. தனது நலன் சார்ந்து எதிர் தரப்பினரை எதிர்கொள்ள, மக்களைப் பற்றிய ஆங்காங்கே குறிப்புகளை உள்ளடக்கினர். இந்த ஒப்பந்தம் புலிகளை விலங்கிட ஏகாதிபத்தியத்துக்கு வாய்ப்பான ஒன்றாகியது. ஒப்பந்தம் மக்கள் நலன் சார்ந்து இருக்காத எல்லா நிலையிலும், ஒப்பந்தம் குறுகிய நலன் சார்ந்ததாக இருக்கும் போதும், ஒப்பந்த மீறல் என்பது அடிப்படையான செய்தியாகின்றது. சிங்கள இனவாத அரசும், முஸ்லீம் மக்களும் புலிகள் அளவுக்கு ஒப்பந்த மீறல்களைச் செய்யவில்லை. அப்படிச் செய்த ஒவ்வொன்றும் உதிரியான நிறுவனமயப்படாதவையாகவே இருந்தன. ஆனால் புலிகளின் மீறல்கள் அனைத்தும் திட்டமிட்ட நிறுவனமயமானவையாகவே இருந்தது.
இந்த நிறுவன ரீதியான மீறல் முதலில் சொந்த மக்களுக்கு எதிரான மீறலாகவே தொடங்குகின்றது. தமது குறுகிய நலனைச் சுற்றி செய்து கொண்ட ஒப்பந்தம் மக்களின் வாழ்வியலைப் பகடைக்காயாக்கி, அதை இலகுவாகவே தூக்கியெறிவதை சாத்தியமாகின்றது. மக்களை வெறும் எடுபிடிகளாக, அவர்கள் உணர்வுகளை மிதிப்பதாக அமைகின்றது. சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களுக்கு எதை மறுக்கின்றனரோ அதையே, புலிகளும் தமிழ் மக்களுக்கு மறுக்;கின்றனர்.
வடக்கு கிழக்கில் அமைதி சமாதானத்தின் பெயரில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த மீறல்கள், அன்றாட நிகழ்வாகி உள்ளது. இது அவர்களாகவே செய்து கொண்ட உடன்பாடுகளை மீறுகின்றது. இது ஆள் கடத்தல்கள், படுகொலைகள், பொருட்களை கொள்ளையிடுதல், வரி அறவிடுதல், கட்டாய ஆள் சேர்ப்பு, சிறுவர்களை கட்டாயப்படுத்தி கடத்துவதும் அவர்களை ஏமாற்றி இணைப்பது, ஜனநாயக செயல்பாடுகள் அனைத்தையும் முடமாக்குவது, மக்களின் வாழ்வியல் மீதான கடுமையான பீதியையும் மிரட்டலையும் ஆணையில் வைத்திருப்பது, ஆயுதங்களைக் கடத்திச் செல்வது, இராணுவ நலன் சார்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்துவது என்ற விரிந்த தளத்தில் இந்த மீறல்கள் தொடருகின்றது. இவை பெரும்பாலும் எதிரிக்கு எதிராக அல்லாது, மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக யுத்தநிறுத்த மீறல் பல முன்னிலைக்கு வருகின்றது. இவை அனைத்தும் பெரும்பாலும் மக்களின் வாழ்வியல் மீதானதாக இருக்கின்றது. மக்களைத் தமது குறுகியத் தேவைக்கு பயன்படுத்தும் கண்ணோட்டமே கையாளப்படுகின்றது. உணர்வற்ற மந்தைகளாக தலையாட்டக் கோருகின்றனர். புலிகளின் தலைவர்களில் ஒருவரான பாலசிங்கம் வடக்கில் நிகழ்த்திய உரை ஒன்றில் ~~..யாழ்ப்பாண புத்திஜீவிகளான நடுத்தர வர்க்கத்தவரான நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அங்கிருந்துதான் அதிக விமர்சனம் வருகின்றது|| என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கை மீதான விமர்சனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், தமது அடிப்படையற்ற விதண்டாவாத விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ளக் கோருகின்றார். அதிக விமர்சனங்கள் வருவதைப் புலிகள் விரும்பாதத் தன்மையை நேரடியாகவே வெளிப்படுத்திவிடுகின்றார். விமர்சனம் செய்யாத ஒரு அடிமை மந்தைச் சமூகமாகத் தமிழ் மக்கள் இருப்பதையே விரும்புகின்றனர். இதையே புலிகள் வடக்கு கிழக்கில் மட்டும் இன்றி, கொழும்பிலும் புலம்பெயர் நாடுகளிலும் தொடர்ச்சியாக ஆணையில் வைக்கின்றனர். இதை மீறுகின்ற போது உயர்ந்தபட்ச நடவடிக்கை படுகொலையாக உள்ளது. எங்கும் எதிலும் மிரட்டி அடிபணிய வைக்கப்படுகின்றனர். உண்மையில் புலிகள் வடக்கு கிழக்கில் பெரும் நிதிகளுடன் நிறுவி கட்டமைத்துள்ள நீதிமன்றங்களும், பொலிஸ் நிலையங்களும் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அடக்குமுறைக் கருவிகளாகவே உள்ளது. புலிகள் கட்டமைக்கும் அதிகார கட்டமைப்பில், இது மட்டும்தான் அவர்களின் ஒரே குறிக்கோளாகி இலட்சியமாகின்றது.
இதைப் பெருமைபட பீற்றிய புலிகளின் தலைவர்களில் ஒருவர், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அதாவது ஆறு மாவட்டங்களில் நீதிமன்றங்கள் உள்;ளன என்கின்றார். இரண்டு மேல் நீதிமன்றங்களும் உண்டு என்கிறார். ஒரு சிறப்பு மேல் முறையீட்டு நீதி மன்றமும் உண்டு என்றார். மொத்தமாக 24 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். அவற்றில் 19 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுவிட்டன என்றார். இவற்றில் 750 வழக்குகள் மேன்முறையீடு செய்யப்பட்டன என்றார். அவற்றில் 500 தீர்க்கப்பட்டுவிட்டன என்றார். சிறப்பு நீதிமன்றத்தில் 50 வரையான வழக்குகள் இதுவரை காலமும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். இவையாவற்றிலும் திருப்தி இல்லாவிட்டால் இறுதியாகத் தலைவருக்கு மனுச் செய்ய முடியும் என்றார். இப்படித் தமது கட்டுப்பாட்டு பிரதேச நீதி பற்றி கூறும் இவர்கள், தமிழ்ப் பகுதியில் நீதிமன்றங்களை நிறுவும் உரிமையைக் கோருகின்றனர். பொலிஸ் நிலையங்களை அமைக்கும் உரிமையைக் கோருகின்றான். மக்களின் வாழ்வியல் மற்றும் சமூக நலத்திட்டங்கள் எதையும் பெருமையுடன் முன்வைக்க முடியாத புலிகள், அடக்குமுறை நிறுவனங்களை பெரும் செலவுகளில் அமைக்கின்றனர். புலிகளின் நீதி நிர்வாகம் உள்ள வன்னியே இன்று, இலங்கையில் ஆகக் கூடுதலாக சிகரட்டை புகைக்கும் ஒரு பிரதேசமாகியுள்ளது. அதிக வறுமையை அனுபவிக்கும் ஒரு பிரதேசத்தில், தினசரியாக சராசரி இரண்டு லட்சம் சிகரட்டுகள் இப்பகுதியில் விற்பனையாவதை வர்த்தகப் புள்ளிவிபரங்கள் அம்பலமாக்கியுள்ளது. மிகக் குறைந்த சனத்தொகை கொண்ட ஒரு பிரதேசத்தில் இந்த நிலைமை என்பது, புலிகளின் அரசியல் கண்ணோட்டத்தினால் ஏற்படுகின்றது. உண்மையில் இளைஞர் சமூகம் என்பது, புலிகளின் ஒட்டு மொத்த வக்கிரத்தில் சீரழிகின்றது.
புலிகளின் நீதி மற்றும் நிர்வாகங்களின் நேர்மைக்கு வெளியில், புலிகளின் அன்றாட மனித உரிமை மீறலுக்கு எதிராக வழக்காட முடியாது. புலிகளால் கையாளப்படும் அன்றாட மக்கள் விரோத நடவடிக்கையை இந்த நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது. புலிகள் அன்றாடம் செய்யும் படுகொலைகள், சித்திரவதைகள் எதற்கும் நீதியைப் பெறமுடியாது. புலிகளின் ஆள்கடத்தல், வரிஅறவிடல் என்று பல நூறு விடயங்களுக்கு நீதி கேட்டு நாம் சென்று விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. நீதி பற்றி, சட்ட ஒழுங்கு பற்றி இவர்கள் கொக்கரிப்பதில் எந்தவிதமான, அர்த்தமும் இருப்பதில்லை. புலிகளுக்குச் சார்பான வழக்குகள் மேல் இருந்து ஒரு தலைப்பட்சமாகவே எப்போதும் கையாளப்படுகின்றது. மாவீரர் குடும்பம், புலிக் குடும்பங்கள், உறவினர்கள் ஆகியோர் நீதியை வளைக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். வடக்கு கிழக்கில் இந்த நீதியைப் பற்றியே பேச முடியாது. ஏன் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்ததுக்கு அமைய, நீதி மன்றத்தில் முறையிட்டு நீதியைக் கூடப் பெற முடியாது. மனிதனின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தைப் பற்றி பேசாத நீதிமன்றங்கள், உண்மையில் பாசிச கட்டமைப்பாலானவை.
பாலசிங்கம் தனது கூற்று ஒன்றில் ~~.. தமிழர் தாயகத்தில் அரசியல் பணியில் ஈடுபடும் உரிமை உண்டு என்பதை நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம்|| என்று கூறிய போது, இதன் உண்மைத்தன்மை என்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்த வார்த்தைகள் அரசியல் அர்த்தம் அற்றவை என்பதை, யாவரும் எதார்த்;தத்தில் காணமுடியும். மனிதனின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை அரசியல் அமைப்பில் உள்ளடக்காத ஒரு பூமியில், இவை எல்லாம் பாசிசத்தின் வக்கிரமாகவே வெளிப்படுகின்றது. புலிகள் அல்லாத யாரும், புலிகளின் பினாமிகள் அல்லாத யாரும் சட்டபூர்வமாக அரசியலில் ஈடுபட முடியாது. ஏன் வாயே திறக்க முடியாது. இந்த உரிமையை அவர்களின் சட்டக்கோர்வை அங்கீகரிக்கவில்லை. இதன் அடிப்படையில் முறையிடக் கூட இடமில்லாத சூழலில், உலகை ஏமாற்ற ஒரு அறிக்கை அவசியமாகின்றது. 2004 தேர்தலில் மற்றயை கட்சிகள் தேர்தலில் நிற்கவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடமுடியும் என்ற புலிகளின் விளக்கம் அர்த்தமற்றவை, போலியானவை. ஆனால் எல்லாவிதமான சமூக எதார்த்தமும் இதற்கு நேரிடையாகவும் வக்கிரமாகவும் உள்ளது. ஜனநாயகம் பற்றி புலிகள் கொண்டுள்ள நிலைப்பாடு அரசியல் வழிப்பட்டவை அல்ல. மாறாக சொந்தக் குழு மற்றும் தலைவர் பிரபாகரனின் குறுகிய நலன் சார்ந்தது. இதனால் அரசியலில் ஈடுபடும் உரிமையை மட்டுமல்ல, சாதாரண மனிதனின் சிந்தனை உரிமையைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது. இது அவர்களின் தலைவர் கையெழுத்திட்ட புரிந்துணர்வைக் கூட ஏற்க மறுக்கின்றது என்பதே உண்மை.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்பாக 31.12.2002 வரையிலான காலத்தில் மட்டக்களப்பில் மட்டும் 47 பேர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இதற்காக தமிழ் மக்களின் நலன் தொடர்பாக புலம்பும் எந்தத் தலைவரும் இதற்குக் குரல் கொடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த நிறுத்த மீறலாக, புலிகள் கூட இதை அடையாளம் காணக் கூடவில்லை. உண்மையில் இந்தக் கடத்தலை தமிழ்த் தேசியவாதிகளும், பினாமிகளும், ஜனநாயகத்தின் தூண்களும் அங்கீகரித்தனர். தமிழ் மீடியாவில் பக்கம் பக்கமாக ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் செம்மல்கள் இதை அறியாது இருந்த படிதான் எப்போதும் ஆய்வு செய்தனர்.
கடத்தப்பட்டவர்களில் எட்டுப் பேர் துரோகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தமிழ்த் தேசியவாதிகளுடன் கருத்து ரீதியாக முரண்பட்டவர்கள். இவை குறைந்தபட்சப் பதிவுக்கு வந்தவை மட்டுமே. 2003 இல் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 அரசியல் ரீதியான கொலைகள் நடந்தன. கொல்லப்பட்டவர்களில்; 5 முஸ்லீம்கள் அடங்குவர். 38 பேர் வெட்டு காயங்கள் மற்றும் சூட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 18 முஸ்லீம்கள் அடங்குவர். 139 ஆள் கடத்தல்கள் நடத்தன. இதில் 16 பேர் முஸ்லீம்களாவர். அரசியல் கொலை, கடத்தல் மற்றும் காணாமல் போதலுக்கும் புலிகள் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அறிக்கையை வெளியிடுகின்றனர். பொருட்கள் மேலான அரசியல் வன்முறை தனியாக உண்டு. தொடரும் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்துப் புலிகள் எதுவுமே செய்யவில்லை. இதையே கிளிப்பிள்ளை போல் பினாமிகளும், பினாமிக் கட்சிகளும் கடைப்பிடிக்கின்றன.
ஒரு சில தவிர, இவை அனைத்தும், இந்த மனிதவிரோத நடவடிக்கைக்கும் புலிகளுக்கும் உள்ள தொடர்பை எதார்த்தமாகவே நிர்வணமாக்கின்றது. தமிழ்த் தேசிய போராட்ட வரலாற்றில் இது போன்ற கடத்தல்கள், கொலைகள் பல ஆயிரமாகும். ஆனால் முடிவேயற்ற இந்த சமூக விரோதத் தன்மையானது அரசியல் ரீதியாக புலிகளின் வங்குரோதம் மேலும் அம்பலப்படும் போது, மேலும் அதிகரித்துச் செல்வது எதார்த்தமாகின்றது. கடுமையான சர்வதேச அழுத்தங்களை கடந்து, இவ் வன்முறை அரங்கேறுகின்றது என்றால், அழுத்தங்களும் நெருக்கடிகளுமற்ற நிலையில் இது எல்லையற்றதாகிவிடும்.
இந்த வன்முறைகள் அவசியமானவையா? அரசியல் ரீதியாக முரண்பாடுகளை கையாளத் தவறுகின்ற போது, படுகொலை அரசியல் தமிழ் தேசிய அரசியலாகி விடுகின்றது. புலிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் இராணுவ ரீதியாக மட்டும் சிந்திக்கத் தொடங்குவதில் இருந்து, இப்படுகொலை அரசியல் வக்கிரமாகின்றது. அரசியல் ரீதியாக அடிப்படை அறிவு கூட அற்ற ஒரு நிலையில், துப்பாக்கி முனையில் அனைத்தையும் அடக்கியொடுக்கு கின்றனர். இதனால் உண்மையில் புலிகள் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை வென்று விடுவதில்லை. மேலும் ஆழமாக அன்னியமாகின்றனர். இந்தப் படுகொலை அரசியலில் உண்மையில் லாபம் அடைவது யார்? மறைமுகமாக ஏகாதிபத்தியம் மட்டும் தான். அன்னியனின் நேரடித் தலையீட்டுக்கான அடிப்படையை இது வழங்கிவிடும் நிலைக்கு, படுகொலை அரசியல் வளம் சேர்த்து விடுகின்றது. உண்மையில் துரோகக் குழுக்களின் உறுப்பினர்களைக் கூட வென்று எடுக்கும் அரசியல் வழிமுறை அவசியமானது, நிபந்தனையானது. இந்த அவல நிலைக்கு அவர்களை தள்ளிச் சென்ற பொறுப்பு புலிகளுடையதே ஒழிய அவர்களுடையது அல்ல. அன்றாடம் தொடரும் மக்கள் விரோத நடத்தைகளே புலிகளின் அரசியலாகி, அதை தொடரும் வரை, புலிகளுக்கு எதிரான அணி பெருகிச் செல்வது தவிர்க்க முடியாது. இதற்குப் படுகொலைகளால் தீர்வு காணமுடியாது. இது உள்ளடக்கத்தில் புலிகளின் அழிவுக்கே, ஏதோ ஒரு விதத்தில் துணைபுரிவதாக மாறிவிடுகின்றது.
உண்மையில் இந்த மனித விரோத நடவடிக்கைகள் பன்மையானதாக உள்ளது. 2002 ம் ஆண்டு தைமாதம் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு தனது அறிக்கையை ஒன்றை வெளியிட்டது. புலிகளுக்கு எதிராகக் கிடைத்த யுத்த நிறுத்த மீறல் சார்ந்த 600 முறைப்பாட்டில், 300-க்கும் மேற்பட்டவை யுத்த நிறுத்த மீறலாக குறிப்பிட்டுள்ளது. உண்மையில் இது மிகக் குறைந்த தொகையே. பல சந்தர்ப்பங்களில் இவை முறைப்பாட்டுக்கே வருவதில்லை. முறைப்பாட்டு நிலையங்களில் செயல்படுபவர்கள், கணிசமான பகுதி புலிகளின் கைக்கூலிகளாகி அவர்களின் கையாட்களாக மாறிவிட்ட நிலையில், எழுத்து மூலமான பல குற்றச்சாட்டுகள் அப்படியே புலிகளிடம் கையளிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் கூட உண்டு. அன்று இரவே புலிகள் அக்கையெழுத்து முறைப் பாட்டுடன் நேரடியாக முறைப்பாடு கொடுத்தவர் வீட்டுக்கு வந்து, மிரட்டிய சம்பவங்களும் உண்டு. யுத்த நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகள் உண்மையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்று அடைவதில்லை. பல தடைகளைத் தாண்டி இது சென்று அடைகின்றது என்றால், அதை உறுதி செய்ய முடியாத அவலநிலை தொடருகின்றது. அப்படி உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே, மிகப் பிரமாண்டமானதாக இருப்பது அம்பலமாகின்றது. உண்மையில் ஒரு பயங்கரமான நிலைமையே வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது. பீதியும், அச்சமும் கலந்த உணர்வு மொத்தச் சமூகத்தையே அதிரவைத்துள்ளது. இயல்பு வாழ்வு என்பது சிறிலங்கா இனவாத அரசால் மட்டுமல்ல, புலிகளாலும் கூட அனுமதிக்கப்படவில்லை. இரத்தத்தை உறைய வைக்கும் வக்கிரமான படுகொலைகள், திட்டமிட்டே ஒரு சமூக மிரட்டலாகவே அரங்கேற்றப் படுகின்றது. புலிகளுடன் முரண்படும் சிறிய அற்ப காரணங்களுக்குக் கூட, ஈவிரக்கமற்ற அணுகுமுறையே புலிப்பண்பாடாக உள்ளது.
மட்டக்களப்பு யுத்தநிறுத்தக் கண்காணிப்பு குழுத் தலைவர் தனது அறிக்கை ஒன்றில் யுத்த நிறுத்தத்தின் பின்பாக மட்டக்களப்பில் 1.2.2003 வரையிலான காலத்தில் 276 சிறுவர்கள் புலிகளால் கடத்தப்பட்ட முறைப்பாட்டை உறுதி செய்தார். யுனிசெவ் நிறுவனத்தின் புள்ளிவிபரப்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தாங்களே முன்வந்த செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி;ய புலிகள், 1722 சிறுவர்களை இணைத்துள்ளனர் என்று தெரிவிக்கின்றது. இவர்களில் 470 பேர் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மிகுதியான 1252 சிறுவர்களும் சிறுமிகளும் விடுவிக்கப்படவில்லை. இவை அனைத்தும் முறைப்பாடு செய்யப்பட்டவை மட்டும்தான். மறு தளத்தில் முறைப்பாட்டைத் தடுக்க மிரட்டல் முதல் மீள ஒப்படைப்பு பற்றிப் பல வர்ண வார்த்தை ஜாலங்கள்; மூலம் கட்டுப்படுத்துகின்றனர். கிடைக்கும் முறைப்பாடுகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்தே கிடைக்கின்றன.
இதில் இருந்து தப்பிக்க, பாலசிங்கம் ''வறுமை மற்றும் பல்வேறு கஷ்டங்கள் காரணமாக எமது அலுவலகத்தை நாடிவரும் இளைஞர்களில் அவர்கள் வயது குறைந்தவர்களாயின் அவர்களை பெற்றோரிடம் மீள ஒப்படைத்து வருகின்றோம். ஆனால், சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது உண்மை. அதற்காக சில பிரதேசப் பொறுப்பாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். 18 வயதிலும் குறைந்த சிறுவர்களை இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என தலைவர் பிரபாகரன் அனைத்துத் தளபதிகளுக்கும் இறுக்கமான உத்தரவொன்றை விடுத்துள்ளார்." எனக் கூறுகிறார். இப்படி நேர்மையற்ற ஒரு கூற்றின் மூலம் இதை மூடி மறைக்கும் சித்து விளையாட்டில் இறங்கினார். தமது இயக்கம் மிக உறுதியான கட்டமைப்பைக் கொண்டது எனவும், தலைவர் பிரபாகரனின் உத்தரவுகளைப் பிசகாது கடை பிடிப்பதாக பீற்றும் புலிகளின் நடத்தை பற்றிய முரணான கூற்று, புலிகளின் நேர்மையைச் சந்திக்குக் கொண்டு வந்து நிறுத்தியது.
இதைவிடக் கேவலமாக குழந்தைகளின் வயதை உயர்த்திக் காட்டும் பொய்யான பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை புலிகளே தயாரித்து சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளனர். பெற்றோர் அவற்றைக் (உண்மையான சான்றிதழை) கொடுப்பதை மிரட்டித் தடுக்கின்றனர். ஒரு மோசடியான அரசியல் அணுகுமுறை ஊடாகவே, உலகை ஏமாற்றிவிட முடியும் என நம்புகின்றனர். ஆனால் ஏகாதிபத்தியங்கள் புலிகளை தனிமைப்படுத்தும் வகையில், குற்றச்சாட்டின் தன்மையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த வகையில் தெளிவான கொள்கையைக் கையாளுகின்றனர். புலிகள் தமக்குத் தாமே வலையை விரித்துவிட்டு சித்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனை விளையாட்டை நடத்திவிட முடியும் என்ற புலிகளின் அரசியல் நிலைப்பாடு, அவர்களின் இருப்புக்கே ஆட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது. வலிந்து இழுத்த அன்னியத் தலையீடுகள் மற்றும் தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கையால் தமக்கு மேலாக ஒரு கத்தியைத் தொங்கவிட்டுள்ளனர். இந்த நிலையில் இருந்து மீள நேர்மையான அணுகுமுறையே புலிகளின் உடனடித் தேவையாகும். ஆனால் இதற்கு மாறாக மேலும் ஆழமாக சேற்றில் புதைந்து வருகின்றனர் புலிகள்.
மறுபக்கத்தில் புலிகளின் கட்டாய ஆள்சேர்ப்பு மற்றும் மக்கள் விரோத நடவடிக்கையால் அதிருப்தியுற்ற புலி உறுப்பினர்கள் தப்பி வருவது அதிகரிக்கின்றது. 30.10.2003 வரையிலான காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களில், சுமார் 121 பேர் சிங்கள படையினரிடம் வந்து சரணடைந்துள்ளனர். இவர்களில் 98 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள் ஆவர். ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் கதி இப்படிதான் இருக்க முடியுமா? தப்பியோடுவதைத் தடுக்க ஆண்களையும்;, பெண்களையும் பயிற்சி முகாம்களில் நிர்வாணமாகவே அடைத்து வைத்திருக்கின்றனர். இதனால் கூட தப்பி ஓடுவதைத் தடுத்து விடமுடியவில்லை என்ற உண்மையைத் தப்பித்து வருதல் பறை சாற்றுகின்றது. தப்பித்து ஒடி சிங்களப் படையிடம் சரணடைதல் என்ற போக்குக்கு வெளியில், தப்பித்தல் பல வழிகளிலும் நடக்கின்றது. தப்பியோடுவது, படையிடம் சரணடைவது அன்றாட நிகழ்ச்சியாகியுள்ளது. கடுமையான கண்காணிப்பு, தப்பியோடியவர்களை மீளப்பிடித்து பகிரங்கமாகச் சுட்டு பீதியை ஏற்படுத்துவது என்று பல வழிகளில் இதைத் தடுக்க முனைகின்றனர். இப்படித் தப்பி ஓடியவர்கள் பிடிபடும் நிலையேற்பட்ட போது, சயனைடு குப்பியை கடித்து தற்கொலை செய்த சம்பவங்கள், தற்கொலை செய்ய முயன்ற சம்வங்கள் நடந்துள்ளன. இயக்கத்தின் உள்ளான ஜனநாயகம் அச்சம் மூட்டுவனவாக உள்ளது. இயக்கத்தை விட்டுவிலக விரும்பின் சில நிபந்தனைகள் உண்டு. அதை நேரடியாகவே உறுப்பினருக்கு மறுக்கின்றனர். மேலும் நிபந்தனைகளை கடுமை யாக்கியுள்ளனர். அதில் உள்ள தண்டனைக் காலத்தை நீடித்ததன் மூலம், வெளியேறுவதைத் தடுக்க முனைகின்றனர். இருந்த போதும் இந்தப் பிரச்சனை ஒரு பூதமாகி நிற்கின்றது. பல சந்தர்ப்பத்தில் இதை யாழ் மக்களிடம் காணப்படும் உயர்வர்க்க மனப்பான்மையுடன் தொடர்புபடுத்தி கொச்சைப் படுத்திவிடுகின்றனர். உறவினர்கள், வெளிநாட்டில் வாழ்பவர்கள் ஆசை காட்டியே, புலி உறுப்பினர்களை இயக்கத்தை விட்டு ஓட வைப்பதாக மேடைகளில் குற்றம் சாட்டுகின்றனர். தமது நேரடி கண்காணிப்புக்கு வெளியில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரையும், சிறப்புக் கண்காணிப்புக்கு உள்ளாக்கின்றனர். அந்தச் சிறப்புக் கண்காணிப்பாளர்களை கண்காணிக்க என்று ஒரு தொடர் கண்காணிப்பு முறை மூலம் உறுப்பினர்கள் தப்பி ஓடுவதை தடுக்க முனைகின்றனர்.
உண்மையில் இவைகள் மூலம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது. போராட்டத்தின் நியாயத் தன்மையை முன்வைப்பதும், அதை நேர்மையாக ஜனநாயகப் பூர்வமாகக் கடைப்பிடிப்பதும் அவசியமானது. மொத்தச் சமூகத்தையும் ஜனநாயக ப+ர்வமாக அணுகுவதும், ஜனநாயகத்தை உறுப்பினர் உறவில் கையாள்வதன் மூலம் மட்டும் தான் இதைத் தடுக்க முடியும். இப்படி இல்லாத பட்சத்தில் யுத்தத்தை ஆணையில் வைத்து, இராணுவப்பாணியில் யுத்த முனையை உருவாக்கி; துப்பாக்கியை முதுகுக்குப் பின்னால் நீட்டி உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டும்;. உண்மையில் உறுப்பினர் உறவுகளில் கூட ஜனநாயகத்தைக் கையாள முடியாதவர்கள், மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்த நிலையில் பல நெருக்கடிக்குரிய நிலைப்பாடுகளை கையாளும் போது, தர்க்க ரீதியாகக் கூட நியாயப்படுத்த முடியாத ஒன்றாகி விடுகின்றது.