Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிழக்கில் திட்டமிட்ட வகையில் நடைபெறும் கற்பழிப்புகளோ அரசியல் ரீதியானவை. இதை மூடி மறைப்பது கூட, அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இலங்கையில் நடைபெறும் பொதுவான கற்பழிப்புக்களை விட, இது வேறுபட்டவை. இந்தக் குற்றம் நிகழ்கின்ற ஒரு பொதுச் சூழலில் தான், ஆசிய மனித உரிமை அமைப்பின் செய்தி வருகின்றது. குறித்த ஒரு சம்பவம் மீது, கவனத்துக்குரிய ஒரு செய்தியை வெளியிட்டது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி எதிர்வாதங்கள், இது போன்ற உண்மைகளை குழிதோண்டி புதைக்கும் மிக இழிவான அரசியல் செயலாகும். 

 

 

இது போன்றவை நடைபெறவில்லை என்று சொல்ல, கிழக்கு பாசிசத்தை ஆதரிக்கும் பேரினவாத எடுபிடியான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முனைந்தார். அவர் எடுத்த அக்கறை, மக்களின் பாலானதல்ல. அரச படையை பாதுகாக்கவும், அரசின் கூலிக்கும்பலாக இயங்கும் கிழக்கு குண்டர்களின் நலனை பாதுகாக்கவும்; தான், இப்படிக் குத்தி முனங்குகின்றார். 

 

எதார்த்த உண்மையை நேர்மையாக அணுகுவதற்கு, இவர்களிடம் எந்த மக்கள் அரசியலும் இருப்பதில்லை. மாறாக மக்கள் விரோத பாசிச கூலிகளுக்கு மாரடிக்கின்றனர். கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுப்பதற்கு பதில், அரச எடுபிடிகளைச் சார்ந்து கிழக்கு குண்டர்களுக்காக புலம்புகின்றனர். இதனால் அங்கு எதுவும் நடப்பதில்லை என்று கதை சொல்லுகின்றனர்.

 

அரசியல் ரீதியாகவே கிரிமினல் மயப்படுத்தப்பட்ட அமைப்புகளும்;, சாட்சிகளை இல்லாத வகையில் அழிக்கின்ற உதிரிக் கும்பல்களும், மக்களை அடக்கியாளும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு தான், மனிதத்தை வேட்டையாடுகின்றனர். இந்த பூமியில் தான், உண்மைகளை சுதந்திரமாக தேடுகின்றனராம்;. நம்புங்கள். இப்படி சொல்பவர்கள், மக்களை கேனயனாகவே கருதுகின்றனர். அங்கு ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாம் தங்குதடையின்றி இயங்குகின்றதாம். மக்கள் சுதந்திரமாக குற்றவாளிகளை நோக்கி இயங்குவதாக புனைவது, கிழக்கு பாசிட்டுகளின் கைவந்த கலையாகின்றது.

 

'ஜனநாயக" ரீதியாக திட்டமிட்டே தெரிவு செய்து வைக்கப்பட்ட ஒரு கூலி குண்டர்படைத் தலைவன் தான், அந்த மக்களை ஆளும் முதலமைச்சர். இந்த 'ஜனநாயகத்தில்" மக்களுக்கு சட்டம், நீதி என எதுவும் அங்கு கிடையாது. அண்மைய உதாரணங்களையே பாருங்கள். அப்பாவி முஸ்லிம் மக்கள் மேலான அரச கூலிப்படையான பிள்ளையானின்; குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்த 'ஜனநாயகம்" வழங்கிய தீர்வு தான் என்ன? சொல்லுங்கள். கிழக்கின் ஜனநாயகம், அதன் சட்டமும் இந்த குற்றத்தை எப்படித் தண்டித்தது? கிழக்கு மக்களில் அக்கறை கொண்டவர்கள் என்று கூறுகின்றவன் எவன், இந்த குற்றத்துக்கு அவன் நம்பும் ஜனநாயகத்தில் எல்லையில் தன்னும் நீதி கோரினான்?  எவன் எப்படி  குரல் கொடுத்தான்? சொல்லுங்கள்?

 

அங்கு படுகொலை, கடத்தல், வன்முறை, சொத்துகளை அழித்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் நடமாடுதல், மக்களை கண்காணிக்கும் தடைகளை ஏற்படுத்துதல் என பலவாறாய் விடையங்கள், இந்த குற்றத்தின் பின் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டது. யாரால், எப்படி, எந்த வகையில் இது மக்களுக்கு எதிராக உள்ளது என்பது வெளிப்படையானது. மக்களுக்கு தெரிந்த உண்மைக்கு வெளியில், வெறும் சாட்சியங்களில்  உண்மை கிடையாது. இந்த உண்மை எந்த 'ஜனநாயக" நீதி விசாரணைக்கும் உள்ளாகவில்லை.

 

இதைச் செய்யும் குற்றவாளிகள், மிகச் சுதந்திரமாக இதைச் செய்தபடி, இதைச் செய்யும்  அதிகாரத்தைக் கொண்டபடி நடமாடுவது தான் 'ஜனநாயக"மாக உள்ளது. இப்படி ஒரு சூனியமான பிரதேசத்தில் தான், உயிருள்ள மக்கள் வாழ்கின்றனர். இந்தக் குண்டர்கள், அப்பாவி முஸ்லீம் மக்கள் மேல் நடத்திய மிலேச்சத்தனமான நடத்தைகளை, எந்த 'ஜனநாயகம்" கேள்விக்குள்ளாக்கியது. எந்த சட்டம் தண்டித்தது, எந்த நீதி இங்கு நீதி வழங்கியது. இப்படிப்பட்ட பாசிச சூழலை 'ஜனநாயகம்" என்கின்றனர். இங்கு கொலைகாரர்களும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இந்தக் குண்டர்கள் சுதந்திரமாக நடமாடும் வரை, மக்கள் எப்படி உண்மையாக இருக்க முடியும். 

 

இந்தச் சூழலில் இருந்து உண்மையான தகவல்கள் எப்படி வெளிவரும். புலம்பெயர் நாட்டிலே புலிக்கு அஞ்சி வாழும் சாதாரண மக்களையே பாருங்கள். இப்படியிருக்க வன்னியில், கிழக்கில், இலங்கையில் இருந்து உண்மைகள் எப்படித் தான் வெளிவரும்;. பொய் உண்மை வேஷம் போட, உண்மை கசிந்தும் வதந்தியாகவும் வெளிவருகின்றது. உண்மை இப்படித் தான் வாழ்கின்றது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பெறலாம் என்ற மேற்கத்தைய பூர்சுவா வகையறாக்களின் அற்பத்தமான சிந்தனைமுறையாகும்;  உண்மைகள் தொலைபேசி மூலம் பெறும் தகவல், பத்திரிகைகள் மூலம் வெளிவருவதில்லை. மாறாக மக்களின் உரையாடலில், அவர்களின் அணுகுமுறைகளின் ஊடாக தேடி இனம் காணவேண்டியுள்ளது. வெளிப்படையான உண்மை பாசிசத்தின் முன் உயிர் வாழமுடியாது.

 

இலங்கை எங்கும் பாசிச சூழல். இதில் பொது உண்மையை மறுப்பது, பாசிசத்துக்கு துணை போவது  தான். மக்கள் உயிருக்கும் அஞ்சி நடுங்குகின்ற சூழலில், பொதுத்தன்மை மீது தான் குற்றவாளிகளை இனம் காணமுடியும். சம்பவத்தின் உண்மை என்பது, பொதுவான சூழலில் இது போன்றவை நிகழ்கின்றதா என்பதை அடிப்படையாக கொண்டு மதிப்பிட வேண்டும். மனிதனுக்கு எதிரான இது போன்ற நடத்தைகளை, அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்வார்களா இல்லையா என்ற அரசியல் அடிப்படையை ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டும். இதற்குள் தான் தனிமனித சம்பவங்களை பகுத்தாயமுடியும்.

 

கிழக்கு பாசிட்டுகளும்;, அரச கூலிக் குழுக்களும் கற்பழிப்புகளை செய்யவில்லை என்று சொல்ல யாருக்குத் தான் தைரியம் உண்டு? சொல்லுங்கள். இது போன்றவற்றை அந்த அரசியல் செய்ய மாட்டாது என்று, யாரால் அதை உறுதியாக அடித்துச் சொல்லமுடியும். சொல்லுங்கள். இதை கிழக்கு பாசிட்டுகள் தம்மை பாதுகாக்க கூறுவது போல், புனைவு என்றே வைத்துக் கொள்வோம்.

 

புனைபவனால் எப்படி இதை மிக இலகுவாக புனையமுடிகின்றது. இது போன்றவற்றை மறுக்க முடியாத வகையில், இது போன்ற அரசியல் நடத்தைகள் தான் புனைபவனுக்கு உதவுகின்றது.  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால், அவர்களை அரசியல் ரீதியாக பாதுகாக்க முடியவில்லை. தனிப்பட்ட சம்பவத்தை அவர்கள் செய்தார்களா, இது உண்மையா என்று, தனது சொந்த அரசியல் சாக்கடையில் இறங்கி தேட முனைகின்றார்.

 

இப்படிச் சம்பவங்களை வெறும் புனைவு என்பது, அரசியல் ரீதியாக, குற்றவாளிகளை பாதுகாப்பது தான். புனைபவனின் அரசியல் நோக்கம் ஒருபுறம், இதை இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மறுதரப்பில் அரசியல் இதை மறுக்கவில்லை. இப்படி உண்மை இருக்க, இதை மறுப்பது கிழக்கு பாசிட்டுகளின் சித்து விளையாட்டாக உள்ளது.  

                 

மறுபக்கத்தில் தேசம் இணைய ஆசிரியர் ஜெயபாலன் ஊடறு ஆசிரியர் ரஞ்சியின் வாதத்தை இதே பாணியில் மறுக்க முனைவதைப் பாருங்கள். 'இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினை மட்டக்களப்பில் கிழக்கில் இலங்கையில் ஆசியாவில் உலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகிறதா? இல்லையா? என்பதல்ல என்பதை கருத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் கட்டுரை எழுதப்படவில்லை." நல்ல அரசியல் வேடிக்கை. அனைத்து தனிமனித  வன்முறையையும் பொதுவானதாக காட்டுகின்ற அரசியல்.

 

சாதாரணமான கற்பழிப்புகள் இதில் இருந்து வேறுபட்டது. அவர்கள் சட்டத்தையும், நீதியையும் கையில் வைத்துக்கொண்டு செய்வதில்லை. அரசியல் அதிகாரத்தையும், சட்டத்தையும், நீதியையும் தனது கையில் வைத்துக்கொண்டு, கிரிமினல் மயமாகிவிட்ட அரசியல் நடத்தைகளை, பொதுவான கற்பழிப்பாக காட்டுவது வக்கிரமான இழிவான சூது அரசியலாகும். கிழக்கின் வன்முறை (உண்மை அல்லது புனைவாக எதுவாக இருந்தாலும்) பொதுச் சூழலை எடுத்துக்காட்டிய ஒரு நிகழ்ச்சி தான்;. இது போன்றவை அங்கு அன்றாடம் நடக்கின்றது. அதை பத்திரிகையாளன் கண்டறியும் கடமை என்று புலம்பும் நீங்கள், அங்கு நடக்கும் மனித அவலங்களை கொண்டு வரவேண்டியது தானே.

 

அதைச் செய்யமுடிவதில்லை என்ற உண்மை பளிச்சென்று உள்ளது. லண்டனில் எத்தனை  சம்பவங்கள், அன்றாடம் அரங்கேறுகின்றது. தொலைபேசி மூலம் பிரமுகருடனான உரையாடல் மூலம், உண்மைகள் ஒரு நாளும் வராது. அளவான தொப்பிகள் தான் பொருத்தமாக வரும். ராஜேஸ்வரியும், ஜெயபாலனும் இதைத்தான் செய்கின்றனர்.

 

இவர்கள் பொது உண்மையை மறுக்கின்றனர். உதாரணமாக இவர்கள் லண்டனில் எதுவும் செய்ய முடியாத, கருணா ஊர் அறிந்த குற்றவாளி. சட்டத்;தின் முன் குற்றவாளிகள் அல்ல. மக்கள் முன் (புலியில் இருந்து பிரிய முன் கூட) அவர்கள் குற்றவாளிகள் தான்.

 

எமது அளவுகோல் வெறும் சட்டமா? அல்லது மக்களின் அவல நிலையா?
வெறும் சடங்குரீதியான சாட்சியங்களா? மக்களின் இழிவான அடிமைத்தனங்களா?


பி.இரயாகரன்
29.05.2008

மற்றொரு தலையங்கத்தில் தொடரும்