கடத்தல், கற்பழிப்பு, கப்பம், கொள்ளை எதுவும் நடப்பதில்லையாம்!!!

பேரினவாதத்தை ஆதரிக்கும், பேரினவாத கூலிக் கும்பலை 'ஜனநாயக”வாதிகளாக காட்டும், பேரினவாத நடத்தைகளை புலி ஒழிப்பாக போற்றும், கிழக்கு பாசிட்டுகள் தான் இப்படிக் கூறுகின்றனர். அரசு மற்றும் கிழக்கு கூலிக்கும்பல் நடவடிக்கைகளை பாதுகாக்க முனைபவர்களிடம், நாம் எப்படி தான் நேர்மையை எதிர்பார்க்க முடியும். கிழக்கு மக்களுக்காக போராட மறுப்பவர்கள் தான் இவர்கள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்” என்று இவர்களால் அழைக்கப்பட்டவர்களின், கிழக்கு மக்களுக்கு எதிரான மனித விரோதத்தை எப்போதாவது எதிர்த்துள்ளனரா? சொல்லுங்கள். இவர்களிடம் நாம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும். 

 

அண்மையில் முஸ்லீம் மக்கள் மேலான பாசிச காட்டுமிராண்டித்தனத்தை இவர்கள்  கண்டித்துள்ளனரா? இப்படிப்பட்டவர்கள் எப்படி நேர்மையானவர்களாக இருக்க முடியும். சொல்லுங்கள். கிழக்கு மக்கள் நலன்பற்றி பேசுகின்ற இணையங்கள் கண்டித்துள்ளனவா?  இதை செய்தவர்களுக்கு எதிராக, 'கிழக்கு மக்கள் நலன் விரும்பிகள்” செய்திகளை கொண்டுவந்தனவா? இல்லை. இப்படிப்பட்ட பொறுக்கிகளில் ஒருவர் தான் ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம். ஆசிய மனித உரிமை வெளியிட்ட அறிக்கையை மறுக்க எடுத்த முயற்சி போல், கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக அரச கூலிப்படை நடத்திய காட்டுமிராண்டித்தனத்தை ஏன் கொண்டு வரவில்லை. ஏன் இரண்டு முஸ்லீங்கள் அரச கூலிப்படையினரால் விடுவிக்கப்படாமலே உள்ளனர். ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம் இந்த நடத்தையை ஆதரித்ததுடன் அதை 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்” நடத்தைகள் என்றவர் தான்.      

 

ஆசிய மனித உரிமை அறிக்கை, பத்திரிகைச் செய்தியின் உண்மை அல்லது பொய் என்பது இன்று அல்ல நேற்றல்ல, நீண்ட காலமாகவே இதுவே  அரசியலாக இருந்துள்ளது. இங்கு உண்மை அல்லது பொய் என்பது, அரச மற்றும் புலியின் பாசிச பயங்கரவாதத்தின் தேவைக்கு உட்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது. நிலைமையின் பொதுத்தன்மையில் இருந்து தான், இதன் உண்மையை பொய்யையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அண்மைய உதாரணத்தைப பாருங்கள். முஸ்லீம் மேலான அரச கூலிப்படையான பிள்ளையான் கும்பல் நடத்திய தாக்குதலைப் பாருங்கள். சட்டவிரோதமாக ஆயுதத்துடன் நடமாடியது உறுதியாகின்றது. சுட்டுக்கொன்ற பாசிச குண்டர்களுக்கு எதிராக எந்த நீதி விசாரணையும் கிடையாது. வன்முறையில் ஈடுபட்ட அந்த கூலிப்படையோ சுதந்திரமாக இயங்குகின்றது. இப்படி சட்டம், பொலிஸ், நீதி விசாரணை, உண்மை என அனைத்தும் பொய்யாக்கப்படுகின்றது. இப்படித் தான் அனைத்தும். இந்தப் பூமியில் துணிச்சலாக, (அதிலும் தமிழர்) தகவல்களை யார் வெளிக் கொண்டுவருவர்.

 

'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்” என்று கூறுகின்றவர்கள், இதைக்கண்டு கொள்ளாமல், தமது பாசிச செயலுக்கு பாதகமானதில் மட்டும் உண்மையை ஆராய்வது என்பது நகைப்புக்குரியது.

 

கடத்தல், கற்பழிப்பு, கப்பம், கொள்ளை எதுவும் அரசாலும், அரச கூலிப்டைகளாலும் நடத்தபடுவதில்லை என்பது, இந்த கிழக்கு பாசிட்டுகளின் அரசியல் நிலையாகும்;.

பி.இரயாகரன்
28.05.2008