அஅம்மா! ஆஆமாம்! இந்த இரண்டெழுத்து வார்த்தைகளுக்கு மேல் ஏன் தமிழ்? எதற்கு தமிழ்? என்று தனது "கான்வென்ட்' கொழுப்பைத் தமிழர்களிடம் காட்டுகிறார், பார்ப்பன பாசிச ஜெயலலிதா.
பா.ம.க. தலைவர் இராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவனும் சேர்ந்து, "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' என்ற தங்கள் கூட்டமைப்பின் சார்பில், 'தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது. அப்படி ஆங்கிலப் பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம்" என்று 'தமிழ் மீட்புத் தொடர் போராட்டங்களுக்கு" பிறகு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டனர்.
உடனே, தொண்டையை கனைத்துக் கொண்டு சிலிர்த்த ஜெயலலிதா, 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை தங்கள் படத்துக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தப் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பதற்கோ இந்தப் பெயரை வைக்கக் கூடாது என்று சொல்வதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்பதற்கு எந்தவிதமான சட்டமும் கிடையாது... அப்படி நிர்பந்தம் செய்ய (தமிழ் பெயர் வைக்க) போராட்டம் நடத்தினால் அதனைத் தமிழக அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது" என்றார்.
குறிப்பாக, எஸ்.ஜே. சூர்யாவின் 'பி.எப்." (பெஸ்ட் பிரண்ட்) மற்றும் கமல்ஹாசனின் "மும்பை எக்ஸ்பிரஸ்' என்ற இரு படங்களின் பெயர்களை (பெயர்களை மட்டும்தான்) தமிழில் மாற்றும் படி ""வேண்டுகோள்'' வைத்ததற்குதான் இப்படித் தாண்டவமாடினார், ஜெயலலிதா.
உடனே தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தி.மு.க.வின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் நடிகர்களுமான சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் ஜெயலலிதாவிற்கு 'பாராட்டு" தெரிவித்து காக்கைகள் போல் கரைந்தனர். 'முதலமைச்சர் தலையிட்டு சரியான(!) முடிவு எடுத்தார்", 'இனி திரையுலகுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அம்மா பார்த்துக் கொள்வார்" என்று குதித்தனர்.
பா.ஜ.க முதல் காங்கிரசு வரை அனைத்து 'தேசிய"க் கட்சிகளும், சினிமாவை விட்டு விடுங்கள், அரசியல் வேறு, கலைவேறு என்று கூறி முட்டுக் கொடுக்கிறார்கள். சினிமா என்ன சமூகத் தொண்டாகவா உள்ளது? தமிழ் மக்களைக் கொள்ளையடிப்பதுதானே நடக்கிறது!
பிற மொழிப் படங்கள், அவை வெளியாகி ஏழு வாரங்களுக்குள் கர்நாடகாவில் திரையிடக் கூடாது என்றுகூறி அங்கே தடை விதித்திருக்கிறார்கள்; மீறினால் அரங்குகளைத் தாக்குகிறார்கள். தமிழில் பெயர் வை என்று கோரினால், இங்கே கலைக்கு உரிமை, ஜனநாயகம் என்று குதிக்கும் 'தேசியவாதி"களும், தமிழ் சினிமாக்காரன்களும் அதுபற்றி வாயைப் பொத்திக் கொண்டு விழிபிதுங்கி நிற்கிறார்களே, ஏன்? தமிழன் என்றால் இளிச்சவாயன், தமிழ் மொழி 'நீஷ பாi"' என்ற திமிர்த்தனம் தானே!
நன்றாக, இந்தக் கோரிக்கையை இன்னொரு தடவை படியுங்கள்! 'தமிழ் படத்திற்கு தமிழ் பெயர் வையுங்கள்!" தமிழனை, தமிழ் பண்பாட்டை, மொழியைச் சீரழிக்கும் தரங்கெட்ட ஆபாச அருவெறுப்புத் தமிழ்ப் படங்களைத் திரையிட விடமாட்டோம் என்று எச்சரிப்பதற்கு பதில், இவை பற்றியெல்லாம் எங்களுக்கு அக்கறை இல்லை; தரங்கெட்ட படம் பற்றி கவலையில்லை, ஆனால் தமிழில் பெயர் வையுங்கள் என்று கெஞ்சும் இந்த தமிழ் குடிதாங்கிகளை, இடிதாங்கிகள் போல் தமிழகம் தாங்கிக் கொண்டிருப்பதுதான் இவ்வளவுக்கும் காரணம்.
ஓட்டுச்சீட்டு அரசியல்தான் மூலதனமே போடாமல் கொள்ளை இலாபம் தரும் தொழில். அதைப்போலத்தான் சினிமா எதிர்ப்பு அரசியலும் செலவே இல்லாமல் பெரும் விளம்பரம் தேடித்தரும் உத்தி எனத் தெரிந்துதான் இராமதாசு திருமாவளவன் கூட்டணி, இந்த எதிர்ப்பில் இறங்கியிருக்கின்றனர்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் நமது கல்வி, பண்பாடு, மொழி, வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றையும் சீரழிக்கும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிராக இங்கு எந்தஒரு ஓட்டுக் கட்சிக்காரனும் சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. அந்த ஆழிப் பேரலையின் அழிவு வேலையைத் தடுப்பதற்கு வக்கற்றவர்கள் தாம், கூரையில் ஏறி நின்று கூவுகிறார்கள்.
'தொடங்கியது... மூன்றாவது மொழிப் போர்!" உடுக்கை அடித்துக் கொண்டு மார்கழி மாத பஜனை கோஷ்டி போல இவர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொண்டு, தேர்தல் முடிவதற்கு முன் ஊரைச் சுற்றிவிட்டு, போய் சட்டமன்றத்தில் அடங்கிவிடுவார்கள் என்று சினிமா கழிசடைகளுக்கு நன்றாகவே தெரியும்! எனவே தான், மாமூலுக்கு கைநீட்டும் போலீசைப் பார்த்து நக்கலடிக்கும் சாராய ரௌடிகள் போல், சினிமா கும்பல் இவர்களைப் பார்த்து நக்கலடிக்கிறது.
சினிமா தலைப்பில் மட்டும்தானா, 'தமிழுக்குப் பாதுகாப்பு" இல்லாமல் இருக்கிறது?
மக்கள் தொடர்பு ஊடகங்களின் மற்ற பிரிவுகளில் தமிழ்ப் பாதுகாப்புக்கு உத்திரவாதம் செய்யப்பட்டுள்ளதா? இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?
'சன் டி.வி." ஏற்கனவே வைத்த பெயர்; அதை இப்போது மாற்றத் தேவையில்லை" என்கிறார்கள்! இப்போது சன் டி.வி.யில் தினமும் பச்சை தமிழ் நிகழ்ச்சிகள்தான் ஒளிபரப்பு ஆகிறதா? பாதிநேரம், நடிகைகளைப் போல தமிழ் மொழியும் அரைநிர்வாணமாக, நீச்சல் உடையில்தானே வருகிறது! ஜுனுன் தமிழ், ஜுராசிக் தமிழ் என்று எத்தனை தமிழை அறிமுகப்படுத்தியிருக்கிறது சன் டி.வி.! ஏன் அதை எதிர்க்க இவர்கள் துணியவில்லை?
இவர்கள் தமிழைப் பாதுகாப்பது உண்மையென்றால், தமிழ் ஊடகங்களின் தலையாய பத்திரிகைகள் என்று வலம் வரும் "குமுதத்தி'லிருந்து "குங்குமம்' வரை "ஆனந்த விகடனி'லிருந்து "ஜூனியர் விகடன்' வரை மற்றும் இக்கும்பல்களின் 'ஜோதிடம்", "ஆலயம்', "சக்தி' போன்ற மூடப்பத்திரிகைகளிலும் கன்னித் தமிழிலா கட்டுரைகள் வருகிறது? "ஜூட்', "ஜில்', "மியாவ்', "ரூட்', "உஷ்', "இச்', "ஜம்', "பிட்ஸ்' என்ற தலைப்பில் இருட்டறை சங்கதிகளை மட்டுமே எழுதும் இந்த எழுத்து விபச்சாரிகளுக்கு எதிராக, ஏன் இவர்கள் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை திருப்பவில்லை?
அவ்வளவு ஏன்? தமிழ் பண்பலை அலைவரிசை என்ற பெயரில் "ரேடியோ மிர்சி'லும் "சூரியன் எப்.எம்.' மிலும் தமிழ் மொழி படும்பாட்டை, தற்குறி தமிழர்களால் கூட சகித்துக் கொள்ள முடியவில்லையே! அதற்கெதிராக எந்த ஒரு ஆர்ப்பாட்ட அறிக்கையும் இவர்கள் அறிவிக்கவில்லையே, ஏன்?
ஏனெனில் இந்த "மக்கள் தொடர்பு' ஊடகங்கள் மூலம்தான் இவர்கள் மாபெரும் அரசியல் தலைவர்களாக மக்களிடம் விற்கப்படுகிறார்கள். அவற்றின் அட்டைப்படங்களில் சினிமா நடிகைகளுக்கு இணையாக, "மேக்கப்'புடன் இவர்களும் சிரிக்கிறார்கள்; அதற்காக அப்பத்திரிகை முதலாளிகளுடன் குலாவுகிறார்கள். பிறகு எப்படி அதை எதிர்ப்பார்கள்?
ஆக, சினிமாவை எதிர்ப்பதோ, தமிழைத் தரங்கெட்ட மொழியாக மாற்றும் ஊடகங்களை எதிர்ப்பதோ இவர்களுடைய நோக்கமல்ல. அவற்றை அவ்வப்போது மிரட்டி அவற்றின் மீது யார் தொடர்ச்சியாக சவாரி செய்வது என்பதுதான் இவர்களுடைய உண்மையான ஏக்கம்.
அ.தி.மு.க., தி.மு.க. என்று ஆளும் கட்சிகளையே சுற்றித் திரியும் சினிமா மற்றும் செய்தி ஊடகங்களை வரம்புடன் மிரட்டி தங்களுக்கும் அதில் விளம்பரம் தேடிக் கொள்ளும் ஒரு மலிவான முயற்சிதான் "தமிழ்ப் பாதுகாப்பு' எச்சரிக்கை!
இராமதாசின் திடீர் தம்பி, தொல். திருமா சொன்னது போல் 'அரசியல் அடிப்படையிலான பிரச்சினைகளை எதிர்க்காமல் அவற்றை எல்லாம் திசைத்திருப்பவே இராமதாசின் எதிர் நடவடிக்கைகள் பயன்பட்டுள்ளன." (தாய்மண், சூலை 2004)
சகல அதிகாரத்தையும் கட்சியையும் ஆட்சியையும் தம் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே சுவைத்துக் கொண்டு, அதை தக்கவைத்துக் கொள்வதற்கும் விரிவுபடுத்துவதற்குமான கருவியாக சாதி, இன, மொழிப் போராட்டங்களை கக்கத்தில் வைத்துக் கொள்வதுதான் இராமதாசின் சாணக்கியம்!
தன்னுடைய மகன் அன்புமணியை அமைச்சராக்கியதைப் பற்றி நடிகர் விஜயகாந்த் கேள்விகேட்டதிலிருந்துதான் சினிமா தமிழைக் காப்பாற்ற அவர் சிலம்பம் சுழற்றினார். தேர்தல் வரை இதையே சூடுபறக்க சுழற்றுவது என்று தம்பி திருமாவளவனையும் சேர்த்துக் கொண்டார். தனியாக சிலம்பம் சுற்றினால் கூட்டம் சேராது என்று அவருக்குத் தெரியும்!
உண்மையில் தமிழையும் தமிழனையும் தமிழ் மண்ணையும் தமிழ் பண்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கம் இவர்களுக்கு இருந்தால் தமிழ்நாடு சீரழிந்ததற்கான காரணத்தை கண்டறிந்து மொத்தமாக தமிழ் மண்ணை மீட்பதுதானே உண்மையான தமிழ்பற்று!
தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தால் தமிழன் வாழ்விழந்து, கல்வியிழந்து, சொந்த மண்ணிழந்து, பண்பாடிழந்து சாரை சாரையாக நகரங்களுக்கு ஓடி சாலையோரங்களில் வாழ்கிறானே, அவனைக் காப்பாற்ற இதுநாள் வரையில் இவர்கள் எந்த போராட்டத்தை நடத்தினார்கள்? இந்தத் தமிழர்கள் மானமுடன் வாழ்ந்தால்தானே அவன் மொழிக்கும் மதிப்பு இருக்கும்! இந்த சாதாரண அரசியல் அறிவு கூட இல்லாத அரசியல் மூளிகளா இவர்கள்! இல்லை, பிழைப்புவாத அரசியல்வாதிகளில் இவர்கள் இலக்கண சுத்தமானவர்கள். எனவே, தங்களுடைய அரசியல் பாதுகாப்பை "தமிழ் பாதுகாப்'பில் தேடிக் கொண்டார்கள்.
பச்சையப்பன்