Language Selection

03_2005.jpgபொறுக்கி அரசியலுடன் கலந்த கிரிமினல் அரசியலானது, தமிழகத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடித்தனமாக வேர்விட்டுப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் ராஜகம்பீரம் என்ற ஊரில், ஊராட்சி மன்றத் தலைவரான சேக் முகமது அடித்துவரும் கொட்டமும் ரவுடித்தனங்களுமே இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.

 

ராஜகம்பீரத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சேக் முகமது. மாநில ஊ.ம. தலைவர்கள் கூட்டமைப்பின் செயலராகவும் இருக்கிறார். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், முன்னாள் ஜமாத் தலைவராவார். இவரது விசுவாசக் கூட்டாளியாக இருப்பவர் ஜலால். இவர் இப்போதைய ஜமாத் தலைவர். ஊர் தாலியறுத்து ஊரை வளைத்து உலையில் போட்டு வருவதில் இவர்கள் 'இரு வல்லவர்கள்".

 

ராஜகம்பீரத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் பூர்வீகச் சொத்துக்களுடன் வசதியாக வாழ்ந்தவர். இவர் இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மாடி வீடொன்றை 1998இல் கட்டினார். இவரது மகன் சேக் முகமது, நகைக்கடை நிறுவும் நோக்கத்துடன் சென்னையிலுள்ள பானு ஜூவல்லர்ஸ் கடையில் தொழில் கற்றுக் கொள்ள வேலை செய்து வந்தார். அவர் தனது கடையில் திருடிவிட்டதாகப் பொய்க் குற்றம் சாட்டிய பானு ஜூவல்லர்ஸ் நகைக்கடை அதிபரான தாஜுதீன், தற்போதைய பெரியகுளம் தொகுதி எம்.பி.யான ஆரூண் தலைமையிலான அடியாட்படையை ராஜகம்பீரத்துக்கு அனுப்பி, ஊ.ம. தலைவர் உதவியுடன் சேக் முகமதுவை சென்னைக்குக் கடத்திச் சென்றார். இவர் பெயரில் வங்கியில் போடப்பட்டிருந்த சேமிப்புத் தொகை ரூ. 2 லட்சமும், வீட்டிலிருந்த சுமார் 15 சவரன் நகைகளும் இக்கும்பலால் பறித்துச் செல்லப்பட்டன. சேக் முகமதுவுக்கு ஊசி போட்டு பைத்தியமாக்கி விட்டனர். இப்போது அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

முகமது இஸ்மாயிலின் வீடும் இக்கும்பலால் பறித்துக் கொள்ளப்பட்டு, நகைக்கடை அதிபரே அந்த வீட்டுக்கான பவர் ஏஜெண்டாக தன்னை நியமித்துக் கொண்டார். இப்போது அந்த வீட்டை ஜமாத் தலைவர் ஜலாலின் தங்கையிடம் நகைக் கடை அதிபர் விற்று விட்டார். இன்று அந்த வீடு தொலைபேசி இணைப்பகத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த அட்டூழியங்கள் அனைத்துக்கும் உடந்தையாக இருந்தவர்கள்தான் மேற்குறிப்பிட்ட இரு வல்லவர்கள்.

 

இதே ஊரைச் சேர்ந்த தலைப்பாகட்டி என்கிற சையது முகமதுவின் வழக்கிலுள்ள நிலத்தை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்த நிலத்தை வளைத்து 'தைக்கால் நகர்" எனப் பெயரிட்டு 'பிளாட்" போட்டு விற்று ரூ. 28 லட்சத்தை விழுங்கி விட்டார், ஊ.ம. தலைவரான சேக் முகமது. இது தவிர, ஊரணி புறம்போக்கு நிலத்தையும் வளைத்து, 'எம்.ஜே. கல்யாணமண்டபம்" என்ற பெயரில் ஒரு திருமணக் கூடத்தைக் கட்டி, அதற்காக உள்நாட்டிலும் மலேசியாவிலும் முசுலீம்களிடம் நிதிவசூல் செய்தும் ஜமாத் வரி போட்டும் பல லட்சங்களை ஏப்பம் விட்டுள்ளார்.

 

தனது வாழ்க்கை ஊ.ம. தலைவர் சேக்முகமதுவால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மனமுடைந்து போன தலைப்பாகட்டி என்கிற சையது முகமது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்றபோது, கைது செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டார். பின்னர், ஊ.ம. தலைவர் சேக் முகமதுவின் அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருந்துவரும் வஃக்பு வாரிய அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு அவர் தன்னந்தனியாக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினார். அவருடன் யாரும் பேசக்கூடாது, வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று ஜமாத் மூலம் கட்டுப்பாடு விதித்த சேக்முகமது ஜலால் கும்பல், கட்டுப்பாட்டை மீறியதற்காகவும் தம்மைப் பற்றி முணுமுணுத்ததற்காகவும் ஏறத்தாழ 50 குடும்பங்களை ஜமாத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளது. இக்குடும்பங்கள், இறந்தவர்களை முசுலீம் இடுகாட்டில் புதைக்க முடியாமல், ரமலான் காலத்தில் நோன்பு கஞ்சி கூட கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

 

சேக் முகமது ஜலால் கும்பலின் அட்டூழியங்களால் வெறுப்புற்றிருந்த மக்கள் ஆதரவோடு 2001இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அன்வர் ராஜா என்ற பட்டதாரி இளைஞர் போட்டியிட்டார். அவரையும் அவரது குடும்பத்தாரையும் ஜமாத் கூட்டத்தில் வைத்து மிரட்டி சேக் முகமது கும்பல் வேட்பு மனுவை திரும்பப் பெற வைத்தது. தனது உயிருக்குப் பாதுகாப்புக் கோரி அன்வர் ராஜா மானாமதுரை போலீசு நிலையத்தில் மனு கொடுத்ததோடு, சேக் முகமதுவின் ஊழல் முறைகேடுகள். அட்டூழியங்களை ஆதாரங்களுடன் திரட்டி போலீசுத்துறை, நீதித்துறை, அதிகார வர்க்கத்திடம் புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க முயற்சித்து வந்தார். ஆத்திரமடைந்த சேக் முகமது தனது அடியாள் படையோடு அன்வர்ராஜா வீட்டைக் காலி செய்து, சாமான்களை அவரது மாமியார் ஊரில் கொண்டு போய் போட்டு அவரை ஊரைவிட்டு வெளியேற்றுவதாகவும் அவருடன் யாரும் பேசக் கூடாது என்றும் எச்சரித்தார்.

 

இக்கொடுஞ்செயலை எதிர்த்து துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்த அன்வர் ராஜாவை கொன்றொழிக்கத் தீர்மானித்த சேக் முகமது, தனது குண்டர்படைத் தலைவர் அழகர்சாமியை ஏவிவிட்டார். இக்குண்டர் படையினர் கடந்த நவம்பர் 21 அன்று நள்ளிரவில் அன்வர் ராஜாவை அடித்து நொறுக்கி சாக்கடையில் வீசியெறிந்துவிட்டு தப்பியோடினர். அந்த வழியாக ரோந்து வந்த போலீசு கண்காணிப்பளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசுப் படையினர் அன்வர் ராஜாவை மீட்டு, அழகர்சாமி தலைமையிலான 8 பேர் கொண்ட ரவுடிக் கும்பலைக் கைது செய்து, அவர்களது வாக்குமூலத்தின்படி கொலைகார சேக் முகமதுவையும் கைது செய்தனர். இப்போது சேக் முகமது நிபந்தனை பிணையில் வெளிவந்து விட்டார்.

 

இப்படி ரவுடித்தனம் செய்யும் சேக் முகமது தி.மு.க. பிரமுகர். அவரை எதிர்த்து நின்று பாதிப்புக்குள்ளான அன்வர்ராஜா அ.தி.மு.க. தொண்டர். ஆனாலும் இவ்விரு கட்சிகளின் மாநில மாவட்டத் தலைமையினர் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளவேயில்லை.

 

தாங்கள் எதிர்க்க முடியாமல் பயந்து கொண்டிருந்த சேக் முகமதுவை எதிர்த்து அன்வர் ராஜா துணிவாகப் போராடுவதைக் கண்டு பகுதிவாழ் மக்கள் உற்சாகமும் நம்பிக்கையும் பெற்றுள்ளனர். அன்வர் ராஜாவைப் போலவே, சேக் முகமதுவால் தனது துண்டு நிலத்தை இழந்து, பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ள நாகராசன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞரும் இந்த ரவுடித் தலைவருக்கு எதிராகப் போராடி வருகிறார். இவர் மீது ஆத்திரம் இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர் என்பதால் சாதி பிரச்சினையாகி விடுமோ என்ற அச்சத்தில், நாகராசன் மீது கைவைக்காமல் சேக் முகமது கும்பல்வேறு வழிகளில் காய் நகர்த்துகிறது.

 

அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்தி வரும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு இலக்கணப் பொருத்தமான உதாரணம்தான் சேக் முகமது தலைமையிலான கும்பல். ஏற்கெனவே அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போயுள்ள இந்த கும்பல், புதிய உத்திகளுடன் தனது ஆதிக்கத்தைத் தொடர எத்தணிக்கிறது. ஆனால், இவ்வட்டாரத்தில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளால் உத்வேகமடைந்துள்ள இக்கிராமத்து இளைஞர்கள், இக்கிரிமினல் கும்பலுக்கு எதிராக அணிதிரளத் தொடங்கிவிட்டனர்.

 

பு.ஜ. செய்தியாளர், மானாமதுரை.