Language Selection

புதிய ஜனநாயகம் 2005

03_2005.jpgசுனாமி பேரலைகளால் தாக்கப்பட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், இன்று சொந்த நாட்டில் அகதிகளாகக் கைவிடப்பட்ட மீனவ மக்களின் துயரத்தைப் பிரதிபலிக்கின்றன. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து உடனடியாக நிவாரணப் பணிகளில் கடமையாற்றிய ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் நிரந்தர மறுவாழ்வுக்கான போராட்டப் பணிகளைத் தொடங்கினர். நிவாரணப் பணிகளில் அரசு காட்டி வரும் அலட்சியம், சோறு துணி கீற்றுக் கொட்டகையுடன் நிவாரணப் பணிகளை நிறுத்திக் கொண்ட வக்கிரம், கடலோர மக்களின் நிரந்தர மறுவாழ்வைப்

 

 புறக்கணித்து விட்டு, கடன் வலையில் சிக்க வைக்கும் நரித்தனம், கடற்கரைப் பகுதிகளிலிருந்து மீனவக் குப்பங்களை வெளியேற்றும் கொடுஞ்செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிவாரண நாடகம் ஆகிய அனைத்தையும் விளக்கி கடலோர மாவட்டங்களில் கடந்த ஜனவரி மத்தியிலிருந்து விரிவான பிரச்சார இயக்கத்தைத் தோழர்கள் மேற்கொண்டனர்.

 

இப்புரட்சிகர அமைப்புகளின் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் கடலோர மக்களின் வாழ்வுரிமைக்கான மாநாடு சென்னை, கடலூர், நாகை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டு ""அன்று கொன்றது சுனாமி; நின்று கொல்கிறது அரசு'' என்ற மைய முழக்கத்துடன் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சுவரெழுத்துகள், தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக வடக்கே சென்னை எண்ணூரிலிருந்து தெற்கே குமரி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வீச்சான இப்பிரச்சாரத்தால் பீதியடைந்த அரசு, கடலோரப் பகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடத்தத் தடைவிதித்தது. போலீசு உளவுத்துறையின் அச்சுறுத்தல்கள், அ.தி.மு.க. காலிகளின் மிரட்டல்கள் ஆகியன தொடர்ந்த போதிலும், கடலோர மக்களின் உற்சாகமான ஆதரவுடன் பிரச்சார இயக்கம் தொடர்ந்தது.

 

பிப்ரவரி 3ஆம் தேதியன்று குமரி மாவட்டத்தில் கோவளம் எனும் கடலோர கிராமத்தில் தெருமுனைக் கூட்டம் வீதி நாடகம் எனத் தோழர்கள் பிரச்சாரம் செய்தபோது, மீனவர்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டி, தோழர்களைப் போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்ட ஒட்டு மொத்த கிராம மக்களும், ""எங்களுக்காக அக்கறையோடு பிரச்சாரம் செய்தவர்களைக் கைதுசெய்ய அனுமதிக்க மாட்டோம். உடனடியாக அவர்களை விடுதலை செய்! இல்லையேல், எங்களையும் கைது செய்!'' என்று போலீசு நிலையத்தை முற்றுகையிட்டனர். பீதியடைந்த போலீசு, உடனடியாகத் தோழர்களை விடுதலை செய்தது. மக்களின் பேராதரவுடன் தெருமுனைக் கூட்டங்களும் வீதி நாடகங்களும் தொடர்ந்தன.

 

சுனாமி அவலத்தின் நடுவே ஆதாயம் தேடக் கிளம்பிய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். கும்பல், நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் வரிசையாக 20 கீற்றுக் கொட்டகைகளை நிறுவி, அதற்கு வியாசர்நகர் என்று பெயர் சூட்டி, தாங்கள் தத்தெடுத்துக் கொண்ட கிராமமாக அறிவித்துக் கொண்டது. கீச்சாங்குப்பத்தில் பிரச்சாரம் செய்த தோழர்களை, இங்கே பிரச்சாரம் செய்யக் கூடாது என்று எச்சரித்தது. இதையறிந்து அங்கு திரண்ட மீனவர்கள் இந்துவெறியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். நிசாந்தி என்ற +2 படிக்கும் மாணவி, 'யாரைக் கேட்டு எங்கள் குப்பத்தின் பெயரை மாற்றினீர்கள்? இது எங்கள் பூமி! நீங்கள் நிவாரண வேலை முடிந்ததும் போய் விடுவீர்கள். ஆனால் இவர்கள் எங்களோடு சேர்ந்து போராட வந்தவர்கள்; எங்கள் சொந்தக்காரர்கள். அவர்களைத் தடுக்க நீங்கள் யார்?" என்று சரமாரியாக கேள்வி கேட்டு இந்துவெறியர்களின் வாலாட்டத்தை நிறுத்தினார். மக்களின் எதிர்ப்பைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல் பம்மிக் கொண்டு பின்வாங்கியது.

 

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பேரழிவுக்குள்ளான சுபஉப்பளவாடி என்ற கிராமத்துக்கு எந்த நிவாரண உதவியையும் அரசு செய்யவில்லை. மாவட்ட அதிகாரிகளுக்கு இப்படி ஒரு கிராமம் இருப்பதுகூட தெரியவில்லை. தோழர்களின் பிரச்சாரமும் பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து நடத்திய சாலை மறியல் போராட்டமும்தான் இப்படியொரு கிராமம் இருப்பதை அதிகார வர்க்கத்துக்கு உணர்த்தியது. அதன் பின்னரே பெயரளவுக்கு அரசின் நிவாரணப் பணிகள் நடந்தன.

 

மாநாடு என்றாலே, ஐயா அழைக்கிறார், அம்மா அழைக்கிறார் என்று பத்தடி நீள சுவரெழுத்துக்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட அதிகாரிகளுக்கு, கடலோர மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் கேட்கும், புரட்சியாளர்களின் சுவர் முழக்கம், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஒவ்வொன்றும் பீதியையூட்டியது; உழைக்கும் மக்களுக்கோ நம்பிக்கையையூட்டியது. கடலோர மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி சோர்வின்றி தொடர்ந்து செய்த பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட பல்வேறு அறிவுத்துறையினரும் மாநாட்டில் பங்கேற்க முன்வந்தனர். பல்வேறு கிராமத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை மாநாட்டில் பகிர்ந்து கொள்ள முன்வந்தனர். பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி இளைஞர்களோ, மாநாட்டு வேலைகளில் கலந்து கொண்டு இரவு பகல் பாராமல் உழைத்தனர்.

 

மாநாட்டுப் பிரச்சாரம் மக்களின் பேராதரவுடன் முன்னேறுவதைக் கண்டு பீதியடைந்த போலீசு மாநாட்டை எப்படியும் நடத்தவிடாமல் தடுக்க முயற்சித்து இறுதியில் தோல்வியைக் கண்டது.

 

சுனாமி தாக்கப்பட்டவுடன் நிவாரண முகாம் அமைக்கும்போதே தடுக்கத் துவங்கிய குமரி மாவட்ட போலீசு அதிகாரிகள், மாநாட்டின் பேரணிக்கும் பொதுக் கூட்டத்திற்கும் இறுதிநாள் வரை அனுமதி கொடுக்கவில்லை. அதிகாரபூர்வமாக எழுதிக் கொடுத்தால் நீதிமன்றம் சென்று விடுவார்கள் என்பதை உணர்ந்த அதிகாரிகள் இன்று வா, நாளை வா என்று அலைக்கழித்தனர். இறுதியாக பேரணிக்கு தடைவிதித்து பொதுக் கூட்டத்திற்கு மட்டும்,பொதுக் கூட்டத் தினத்தன்று மாலை 5.30 மணியளவில் அனுமதி கொடுத்தனர். பொதுக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் பொய் வழக்கைப் போட்டு 8 தோழர்களை கைது செய்துள்ளனர்.

 

கடலூரில் பேரணி பொதுக் கூட்டத்தை நடத்த இறுதிவரை போலீசார் அனுமதிக்கவேயில்லை. கடலூர் தோழர்களோ, மிகப் பெரிய திருமண மண்டபம் ஏற்பாடு செய்து மண்டபத்தின் உள்ளே மாநாட்டையும், மண்டபத்திற்கு வெளியே பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சியையும் நடத்தினர்

 

நாகையில் பேரணிக்கு அனுமதி மறுத்தது போலீசு. மாநாடு முடிந்த மறுநாளே அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்தி எழுதப்பட்ட சுவரெழுத்துக்களை அழித்தது. சென்னையில், பேரணிக்கும் பொதுக் கூட்டத்திற்கும் அனுமதி கொடுத்துவிட்டு மாநாட்டு மண்டபத்தில் பகல் 11 மணிக்கு பேரணி தடை செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். மாநாட்டுக் கமிட்டித் தோழர்கள் போலீசு உயர் அதிகாரிகளைச் சந்தித்து, போராடி இறுதியில் பேரணிக்கு அனுமதி பெற்றனர். மாநாட்டில் பேசவந்த பேராசிரியர்களை மிகவும் நைச்சியமாகப் பேசி மிரட்டியுள்ளது போலீசு உளவுத்துறை. மீனவர்களுக்காக கண்ணீர் வடிப்பதாக கூறும் அரசு, அவர்களின் துயரக் குரல் கூட வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்ததையே மேற்கண்ட நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன.

 

ஒரு சில தொண்டு நிறுவனங்கள் உதவிப் பொருட்கள் கொடுப்பதாகவும், அரசின் உதவி பெற டோக்கன் கொடுப்பதாகவும் கூறி மாநாடு நடக்கும் பகுதிகளில் பிரச்சாரம் செய்து, மாநாட்டில் வட்டார பகுதி கடலோர மக்களைக் கலந்து கொள்ள விடாமல் மறைமுகமாக தடை செய்தது அரசின் உளவுத்துறை.

 

நிவாரணப் பணத்தைக் கொள்ளையடித்த அதிகாரிகள், பங்கு போட்டுக் கொண்ட உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களுக்குக் கிடைத்த பொருட்களைச் சூறையாடிய ""தாதா''க்கள் போன்ற மக்கள் விரோத சக்திகளை தவிர, மற்றவர்கள் அனைவரும், புரட்சிகர அமைப்புகள் நடத்திய மாநாட்டிற்கு தம்மால் இயன்றவரை உதவிகள் செய்தனர்.

 

மக்களின் பேராதரவுடன் 5.2.05 அன்று நாகர்கோயிலிலும், 6.2.05 அன்று சென்னையிலும், 7.2.05 அன்று கடலூரிலும், 12.2.05 அன்று நாகப்பட்டினத்திலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் கடலோர மக்களின் வாழ்வுரிமைக்கான மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. சுனாமி பேரழிவால் பரிதவிக்கும் அவலத்தையும், அரசின் அலட்சியத்தையும், போராட வேண்டிய அவசியத்தையும் விளக்கும் வகையில் இம்மாநாடுகளில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி, பார்வையாளர்களுக்கு ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் போராட்ட உணர்வூட்டுவதாக அமைந்தது.

 

அனைத்து மாநாடுகளிலும் சுனாமி பேரழிவுகளை நேரில் கண்டவர்களும், அதிலிருந்து மக்களை மீட்ட செயல் வீரர்களும், பேராசிரியர்களும், மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளும், வழக்குரைஞர்களும், பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் பிரதிநிதிகளும், அரசின் அலட்சியத்தையும் நிரந்தர மறுவாழ்வுக்கான கோரிக்கைகளையும் விளக்கி உரையாற்றினர்.

 

அனைவரும் ஒரே குரலில், அரசின் அலட்சியமே பேரழிவிற்குக் காரணம் என்பதைப் பல கோணங்களில் விளக்கினர். மீனவர்களின் உண்மையான பிரச்சினையை அரசு உணர மறுக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினர். வஞ்சகமாகக் கடலோர மக்களைக் கடற்கரைப் பகுதிகளில் இருந்தே விரட்டிவிட்டு, தங்களின் எஜமானர்களான பன்னாட்டு மீன்பிடி கம்பெனிகளுக்கும் உல்லாச விடுதிகளின் சொந்தக்காரர்களுக்கும் விரைவில் ஏலம் போட்டு விற்க முயற்சிக்கும் அரசின் சதியை அம்பலப்படுத்திக் காட்டினர்.

 

இம்மாநாடுகளில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவினர் நடத்திய ""கொலையாளி'' எனும் அரசிடம் நியாயம் கேட்பதாக அமைந்த நாடகம் பார்வையாளர்களிடம் கண்ணீரை வரவழைத்து அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்திக் காட்டியது; அதன் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் மக்களிடம் போராட்ட உணர்வூட்டியது.

 

நான்கு இடங்களிலும் நடந்த இம்மாநாடுகளின் இறுதியில், இப்பேரழிவுகளுக்குப் பின்னரும் அரசு காட்டி வரும் அலட்சியத்தை அம்பலப்படுத்தியும், கடலோர மக்களின் நிரந்தர மறுவாழ்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்தும் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ""இரக்கமற்ற இந்த அரசிடமும் ஆளும் வர்க்கங்களிடமும் கருணை காட்டுமாறு கெஞ்சிப் பயனில்லை. நமது வாழ்வுரிமையை நிலைநாட்டிக் கொள்ள நாம் போராட வேண்டும்'' என எல்லா தரப்பு உழைக்கும் மக்களையும் இம்மாநாடுகள் அறைகூவி அழைத்தன.

 

இந்த அறைகூவலை அடுத்த சில நாட்களிலேயே கடலோர மக்கள் எதிரொலித்து போராடத் தொடங்கிவிட்டனர். இது இம்மாநாட்டிற்குக் கிடைத்த வெற்றி. இன்று தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கிவிட்ட மக்கள் நாளை புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் திரண்டு போராடும்போது, அது சுனாமியை விட சீற்றத்துடன் எழும் என்பது உறுதி.


- பு.ஜ. செய்தியாளர்கள்