Language Selection

புதிய ஜனநாயகம் 2005

03_2005.jpgஅண்டை நாடான நேபாளத்தில், கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, மன்னர் ஞானேந்திரா தனது அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், பெயரளவுக்கு நீடித்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் தலையைச் சீவி, உயிரைப் பறித்து சவக் குழிக்கு அனுப்பி விட்டார். ஏற்கெனவே, 2001இல் அவசர நிலையை அறிவித்தும் 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தும் பிரதமர் தியோபா தலைமையிலான தற்காலிக பொறுப்பு அரசு தொடங்கி வைத்த சர்வாதிகார சதிராட்டத்தை இப்போது மன்னர் முழுவீச்சில் முழுமைப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கியும், செய்தி ஊடகங்களின் குரல் வளையை நசுக்கியும், மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்தும், காலவரையின்றி அவசரநிலையை அறிவித்தும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் கொக்கரிக்கிறார்.

 

பின்தங்கிய வறுமை நிலையில்உள்ள ஏழை நாடான நேபாளத்தில், மன்னாராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக 1990இல் நடந்த ஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பெயரளவிலான நாடாளுமன்ற ஆட்சிமுறை புகுத்தப்பட்டது. இருப்பினும் வரம்பற்ற அதிகாரம் மன்னரிடமே குவிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கட்சிகளின் பதவிச் சண்டை, கட்சித் தாவல், ஆட்சிக் கலைப்புகளால் கடந்த 14 ஆண்டுகளில் 14 முறை அரசாங்கங்கள் மாறும் அளவுக்கு நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடி, இப்போலி ஜனநாயக ஆட்சி முறையும் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

 

இந்நிலையில், மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கும் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கும் எதிராக விவசாயிகளை அணிதிரட்டி 1996லிருந்து ஆயுதப் போராட்டப் பாதையில் முன்னேறிய மாவோயிஸ்டுகள் எனப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள், நேபாளத்தின் மேற்கு மாவட்டப் பகுதிகளில் மக்கள் அதிகாரத்தை நிறுவி விரிவடைந்தனர்.

 

அரச படைகளின் பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்து, கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் தீண்டாமை உள்ளிட்ட சாதியக் கொடுமைகளையும் ஒழித்து தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று மாவோயிஸ்டுகள் முன்னேறுகின்றனர். அவர்களது செல்வாக்குள்ள பகுதிகளிலிருந்து அரச படைகளும் நிர்வாகமும் பின்வாங்கி தப்பியோடுகின்றன. பீதியடைந்த ஆட்சியாளர்கள், அரச குடும்பத்தில் நடந்த அரண்மனைப் படுகொலைகளுக்குப் பின்னர் 2001இல் 4 மாதங்களுக்குப் போர் நிறுத்தம் அறிவித்து மாவோயிஸ்டுகளுடன் மூன்று சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.

 

'மன்னராட்சி முறையை ஒழித்துக் கட்டு! மாவோயிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து கட்சிகள் அமைப்புகளைக் கொண்ட இடைக்கால அரசை நிறுவு! அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி புதிய மக்களாட்சி முறையை அமை! இப்புதிய ஆட்சியின் மூலம் நிலச்சீர்திருத்தத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டு!" என்ற மையமான கோரிக்கையை மாவோயிஸ்டுகள் இப்பேச்சு வார்த்தைகளில் முன் வைத்தனர். இதை ஏற்க மறுத்த ஆட்சியாளர்கள், மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளைச் சித்தரித்து அரச படைகளைக் கொண்டு நரவேட்டையாடினர்.

 

கடந்த 19 ஆண்டுகளாகத் தொடரும் அரச பயங்கரவாதப் போரில் ஏறத்தாழ 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மாவோயிஸ்டுகளும் கிராமப்புற விவசாயிகளும் ஏறத்தாழ 70 சதவீதத்தினர். கடந்த மூன்றாண்டுகளில் அரச படை சிப்பாய்களின் எண்ணிக்கை 45,000லிருந்து 78,000 பேராக உயர்த்தப்பட்டு மூர்க்கமாகத் தாக்குதலை நடத்தி வருகிறது நேபாள அரசு. இந்தியப் பிற்போக்கு அரசோ, கோடிக்கணக்கில் இராணுவத் தளவாடங்களையும் தொழில்நுட்பச் சாதனங்களையும் கொடுத்து உதவியதோடு, இந்திய இராணுவத் தளபதி பத்பநாபனை நேபாளத்துக்கு அனுப்பி மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கான போர் உத்திகளை வகுத்துக் கொடுத்தது.

 

ஆனாலும், பயங்கரவாதிகளாக நேபாள ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்படும் மாவோயிஸ்டுகளை அரச பயங்கரவாதப் போரின் மூலம் துடைத்தொழிக்க முடியவில்லை. மறுபுறம், ஓட்டுக் கட்சிகள் அனைத்துமே மக்களிடம் செல்வாக்கிழந்து செல்லாக் காசுகளாகிவிட்டன. இக்கட்சிகளால் பெயரளவுக்கான நாடாளுமன்ற ஆட்சிமுறையை நிலைக்கச் செய்ய முடியாத அளவுக்கு நிலைகுலைந்து கிடக்கின்றன. தீவிரமாகிவிட்ட இந்த நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு, மாவோயிச பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரால் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி மீண்டும் வரம்பற்ற அதிகாரத்துடன் மன்னராட்சியினர் கொட்டமடிக்கின்றனர்.

 

நேற்றுவரை மக்கள் விரோத ஜனநாயக விரோத நேபாள அரசுக்கு ஆயுத உதவி உள்ளிட்டு அனைத்தையும் செய்து முட்டுக் கொடுத்து ஆதரித்து வந்த இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் மன்னரது ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து ஜனநாயக நாடகமாடுகின்றன. ஆயுத உதவியை நிறுத்தியும் புதிய மன்னராட்சியை அங்கீகரிக்க மறுத்தும் மீண்டும் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சியை நிறுவுமாறும் எச்சரிக்கின்றன.

 

ஆனால், 'பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரச்சினையில், உலக நாடுகள் இரட்டை நிலைபாடு எடுக்கக் கூடாது. ஈராக்கில் அமெரிக்காவும் காஷ்மீரில் இந்தியாவும் என்ன செய்கிறதோ, அதைத்தான் நேபாளத்திலும் செய்கிறோம்" என்று ஆட்சிக் கவிழ்ப்புக்கு நியாயம் கற்பிக்கும் மன்னராட்சி கும்பல், தமது புதிய ஆட்சிக்கு சீனாவின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் வங்கதேசமும் மன்னராட்சியை அங்கீகரித்து விடுமோ, தனத பிராந்திய மேலாதிக்கத்துக்கு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்ட நேபாளம் கைநழுவிப் போய்விடுமோ என்று இந்தியா பீதியடைந்துள்ளது. நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அறிவித்து நிர்பந்தம் கொடுக்கிறது.

 

ஆனால் மன்னராட்சியோ, இந்தியாவிலுள்ள தனது பாரம்பரிய கூட்டாளிகளான இந்துவெறி பார்ப்பன பாசிச சக்திகளைக் கொண்டும், நேபாள மேட்டுக்குடியினருடன் மணஉறவு கொண்டுள்ள இந்திய முன்னாள் அரச பரம்பரை ஜமீன்தார் பரம்பரையின் வாரிசுகளைக் கொண்டும், நேபாளத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள இந்தியப் பெருமுதலாளிகளைக் கொண்டும் இந்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க முயற்சிக்கிறது.


அமெரிக்க வல்லரசோ, மேற்காசியாவைத் தொடர்ந்து தெற்காசியாவையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தனது போர்த்தந்திர நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளவும் நேபாளத்தை பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ள எத்தணிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரில் அமெரிக்கா தனது படைகளை நேபாளத்தில் குவித்து ஆக்கிரமிக்கவும் வாய்ப்புள்ளது.

 

மேலாதிக்கவாதிகளின் எத்தணிப்புகள் எவ்வாறாயினும் கம்யூனிசப் புரட்சியாளர்களைப் புறக்கணித்துவிட்டு நேபாளத்தில் உண்மையான ஜனநாயகம் மலரவோ, மக்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படவோ ஒருக்காலும் சாத்தியமில்லை. அரச படைகளுக்கு எதிராக அளப்பரிய தியாகத்துடனும் வீரத்துடனும் போரிட்டு வரும் மாவோயிஸ்டுகள் உள்நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக அரங்கிலும் தமது புரட்சிகர போராட்டத்துக்கு பரந்து விரிந்த ஆதரவைத் திரட்ட வேண்டியது அவசியமாகியுள்ளது. மறுபுறம், நேபாள புரட்சியாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவையும் எதிர்த்து தெற்காசிய புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த போராட்டமும் இன்று மிக அவசியமாகியுள்ளது.


பாலன்