பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்த கிழக்கு மக்களின் இன ஒற்றுமையை, தமிழ்தேசியம் தான் பிளந்தது என்று கூறிக்கொண்டு புலியெதிர்ப்பு என்ன அரசியல் நடத்தியது? தமிழ்தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தியதை விட, மிகமோசமாக இன ஒற்றுமையை கிழக்கிசம் சிதைத்தது.

 

தமிழ் தேசியத்தில் இருக்கின்ற ஜனநாயகக் கோரிக்கையை மறுக்கும் ஜனநாயக விரோதிகளில் ஒரு பகுதியினர், அதை மூடிமறைக்க கிழக்கு என்ற கோசத்தை எடுத்தனர். இவர்களோ புலியை விட மிகமோசமான, (கிழக்கு) மக்களின் விரோதிகளாக வெளிவந்துள்ளனர். கிழக்கு மக்கள் மத்தியில் புதிய சமூகப் பிளவை, புலிக்கு நிகராக பேரினவாதத்தின் துணையுடன்  விதைத்துள்ளனர். இதைத்தான் இவர்கள் தமது 'ஜனநாயகம்" என்கின்றனர். மக்களை பிரித்து பிளக்கும் அரசியலை, மக்கள் மத்தியில் விதைப்பதைத்தான் மக்களின் 'ஜனநாயகம்" என்கின்றனர்.  

 

இவர்கள் தமிழ் தேசியத்தின் ஜனநாயக கோரிக்கையையே ஏற்க மறுப்பவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஜனநாயக விரோதிகளாக உள்ளனர். இதனால் இவர்கள் தமிழ் தேசியத்தை தவறாக விளக்கியதுடன், அதன் மேல் குப்பைகளை வாரிக்கொட்டினர். மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக இருந்ததுடன், தேசியத்தை வெறும் புலியாகவே காட்டி இயங்கினர். தமிழ் தேசியத்தை, வடக்கு மக்களின் பிரச்சனையாக திரித்தனர். இதன் மூலம் குறுகிய கிழக்கு மையவாதத்தை உருவாக்கினர்.

 

இப்படி ஒரு இனத்தை பிளந்து குளிர்காய்வதைத் தவிர, இவர்களிடம் வேறு அரசியல் எதுவும் கிடையாது. இப்படி வடக்கு மக்களுக்கு எதிராகவே காறித் துப்பியவர்கள் தான், கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக காறி உமிழத் தொடங்கினர். இதுதான் தமிழ் தேசியத்துக்கு எதிரான, கிழக்கிசத்தின் மொத்த அரசியல் சாரமாகும்.

 

எப்படி புலி தமிழ் தேசியத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் செய்கின்றதோ, அப்படி கிழக்கிசத்தை முன்வைத்து கிழக்கு மக்களுக்கு எதிராகவே அது செயல்படுகின்றது.

 

மொத்தத்தில் இந்த அரசியல், மக்களை அணிதிரட்டி, மக்கள் அதிகாரத்தை பெறுவதையிட்டு அலட்டிக்கொள்வது கிடையாது. சில பொறுக்கிகள் அதிகாரத்தைப் பெறுவதைத் தான்,  தேசியம், கிழக்கிசம் என்று இவர்களால் கொண்டாடப்படுகின்றது.

 

இந்த கிழக்கிசமோ பேரினவாதத்தின் கள்ளக் குழந்தை. அதை அவர்கள் தத்தெடுத்து, அதை 'ஜனநாயக" குழந்தையாக அறிவித்ததுடன், தமது பேரினவாதச் சொத்திலும் பங்கும் கொடுத்தனர். இப்படி பேரினவாதத்துக்கும் புலிக்கும் பிறந்த கள்ளக் குழந்தை தான் கிழக்கிசம் என்பதால், அது இயல்பாகவே கிழக்கு மக்களை பல கூறாக பிரித்தும் பிளந்தும் ஆட்டம் போடுகின்றது. அப்பனை மிஞ்சிய அரசியல் வக்கிரத்தை, கிழக்கிசம் கிழக்கில் புகுத்துகின்றது. மக்களை பிரித்தும் பிளந்தும் ஒருவரை ஒருவர் எதிரியாக்கி, அவர்களை மோதவிடுகின்றது. சமூக வெறுப்பைத் தான், இவர்கள் ஜனநாயகப்படுத்தினர். 

  

இந்த கிழக்கிசக் குழந்தை அப்பனின் பேரினவாதம் பற்றி, தனது 'ஜனநாயக" வாயால் போற்றுகின்றது. அம்மா போல் நடித்தபடி, அம்மாவை மட்டும் தூற்றுகின்றது. 

 

இப்படி பேரினவாதத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் முஸ்லீம் ஒற்றுமைக்கு எதிராகவே களமிறங்கி மோதுகின்றனர். இதுவோ பேரினவாதச் சதிதான். பேரினவாத அரசோ, தமது பேரினவாத அரசியல் எடுபிடிகளாக உள்ளவர்களை பிளந்து, அவர்களையும் மோதவிடுகின்றது. பேரினவாத அரசில் உள்ள தமிழ் முஸ்லீம் குண்டர்களை, கோவணத்துடன் வீதியில் இறக்கியது. அவர்களுக்குள்ளாகவும், எதிராக உள்ளவர்களுடனும் மோத வைக்கின்றது. இதன் மூலம் தமிழ் முஸ்லீம் மக்களின் உறவையே, சுடுகாடாக்கினர்.

 

பேரினவாதம் எரிகின்ற இந்தப் பிரிவிலும் பிளவிலும் குளிர்காய்கின்றது. இப்படி பேரினவாதம் கிழக்கில் தமிழ் தேசிய விரோத உணர்வுடன் கட்டமைக்கின்ற கிழக்கிசம், நீண்டகால இனவழிப்புக்கு ஏற்ற ஒன்றாக வளர்க்கின்றது. கிழக்கில் தமிழ் - முஸ்லீம் ஐக்கியத்துக்கு வேட்டுவைக்கின்றது. இதனடிப்படையில் தான், அரச கூலிக் குழுக்களுக்கு இடையிலான மோதலை தூண்டிவிடுகின்றது.

 

இந்த அடிப்படையில் எலும்பை எறிந்து, தமது நாய்களையே கடிபட வைத்தனர். ஊரில் உள்ள நாய்களை எல்லாம் ஒன்று கூடி, தமக்குள்ளும் மோதத் தொடங்கினர். இந்த நாய்ச் சண்டையில், தமிழ் முஸ்லீம் மக்களை 'ஜனநாயகத்தின்" பெயரில் பிரிந்து நிற்க நிர்ப்பந்தித்தவர்கள், இந்த சூதாட்டத்தில் மக்களை பந்தயம் கட்டி மோதவிட்டனர். தமிழ் - முஸ்லீம் மக்களின் இடையேயான பிளவையும் பிரிவையும், மேலும் ஆழமாக்கினர்.

 

பிட்டைக் கொண்டு தேங்காய்ப்பூவை மூடுவதா, தேங்காய் பூவைக்கொண்டு பிட்டை மூடுவதா என்ற,  பேரினவாதச் சதியில் இறங்கினர். புலித்தேசியத்தில் இருந்து கிழக்கு மக்களை மீட்டதாக கூறிக்கொணடவர்கள் செய்ததெல்லாம், 'ஜனநாயக" கோவணத்துடன் இறங்கி கிழக்கு மக்களை பிரித்ததும் பிளந்ததும் தான். அதே புலியிசத்தை மீண்டும் 'ஜனநாயக" வழியில் விதைத்ததுதான்.

 

எலும்பைப் போட்டு பிளவையும் பிரிவையும் விதைக்க கொடுத்த பேரினவாதம், தனது அறுவடையைத் தொடங்கியுள்ளது. உண்மையில் தமிழ் தேசியத்துக்கு எதிராக காழ்ப்பைக் கொட்டியவர்கள், அதைவிட மோசமான கிழக்கிசத்தை மக்களுக்கு எதிராகவே உருவாக்கினர். தமிழ் தேசியத்தை வெறும் புலியிசமாக காட்டிக்கொண்டு, புலியிசத்தைவிட மோசமான கிழக்கிசத்தை கட்டினர்.

 

உண்மையில் பேரினவாதக் கைக் கூலிகளுக்கு, வேறு என்ன தான் அரசியல் இருக்க முடியும். விளைவு கிழக்கிசத்தை வைத்தவர்கள், அதை குறுகிய கிழக்கு தமிழிசமாக மாற்றினர். இப்படி இனப்பிளவை ஒன்றுக்குள் ஒன்று ஆழமாக்கி, தமிழ் இனத்தின் அழிவை துரிதமாக்கியுள்ளனர்.

 

பேரினவாதிகளுடன் சேர்ந்துள்ள அவர்கள், இதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. தமிழ் முஸ்லீம் மக்களிடயேயான பிளவை, புலிகள் கூட இந்தளவுக்கு வெளிப்படையாக செய்தது கிடையாது. புலிகளோ ஆயுத முனையில் பிளவை விதைத்து, அதை அறுவடை செய்தனர். கிழக்குவாதிகள் அதை ஆயுதம் மற்றும் 'ஜனநாயகத்தின்" பெயரில் விதைத்து, பேரினவாதிகளுக்காக அறுவடை செய்கின்றனர். 

 

மக்களுக்கு கிடைக்கப் போவது எதுவுமில்லை. தமது சொந்த அழிவையும், தம் மீதான புதிய ஒடுக்குமுறைகளையும் தான். மக்கள் இப்படி 'ஜனநாயக" வழியில் ஒடுக்கப்படுவதும், தமக்குள் பிரிவினையையும் பிளவையும் சுமந்தபடி, சிறுமைப்படுவதைத் தான் மக்களின் விடுதலையாக அனைவரும் வழி காட்டமுனைகின்றனர். இதற்கு எதிராக போராடுவது மட்டும் தான், குறைந்தபட்சம் மக்களின் விடுதலைக்கான மாற்று அரசியல் வழியாக எம்முன் உள்ளது.

 

பி.இரயாகரன்
20.05.2008