Mon02172020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

அரசு அலுவலகமா? இந்துக் கோயிலா? நியாயத்தைக் கேட்ட ஊழியருக்குச் சித்திரவதை! சிறை தண்டனை! '

  • PDF

03_2005.jpgஅரசு அலுவலகத்தில் அலுவலக வேலை மட்டுமே பார்க்க வேண்டும்! சாமி படங்களை மாட்டிக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலக நேரத்தில் பூஜை, புனஸ்காரம் என்று புரோகிதர்கள் போல் திரியக்கூடாது" என்று ஒரு அரசு ஊழியர், தனது சக ஊழியர்களை வலியுறுத்துவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

 

'ஆமாம் தவறுதான்! அதுவும் மாபெரும் தவறு!" என்று அவ்வூழியரைச் சித்திரவதை செய்து, சிறை பிடித்தது அரசு எந்திரம்!

 

கோ.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் ஆருத்திராப்பட்டு சிற்றுரைச் சேர்ந்தவர்; தாழ்த்தப்பட்டவர். ஆரணி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் உதவியாளராகப் பணிபுரிகிறார். இதோ, அவரே கூறுகிறார், 'நான் பிப்ரவரி 2004இல் ஆரணி தலைமை அஞ்சலகத்தில் பணிக்குச் சேர்ந்தது முதலே அங்கு ஆங்காங்கே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த இந்துமத சாமி படங்களை அகற்ற வேண்டியும், அவற்றிற்கு அரசு பணத்தை ஊழல் செய்து பணிநேரத்தின் போது நிகழ்த்தப்பட்டு வந்த பூசை யாகங்களை நிறுத்தக் கோரியும் அஞ்சல் துறை அதிகாரிகளுக்குப் புகார் மனு தந்தேன். ஆத்திரங்கொண்ட குறிப்பிட்ட (மேல்சாதி) அஞ்சல் ஊழியர்கள் கூட்டுச் சதி செய்து, அவர்களே சில சாமி படங்களை உடைத்துவிட்டு என் மீது பழி சுமத்தி, நான்தான் உடைத்தேன் என்று அவதூறு குற்றச்சாட்டுகளுடன் என்மீது ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் பொய்ப் புகார் (02.08.2004 அன்று) கொடுத்தனர். உடனே, ஆரணி நகர காவல் ஆய்வாளர் திரு. முரளி என்பவர், என்னை முறையாக விசாரிக்காமல் ஆபாசமாகத் திட்டியும் மிரட்டியும் கைது செய்து காவல்நிலையத்துக்கு இழுத்துச் சென்று, நான் அணிந்திருந்த மேல் சட்டை, முழுக்கால் சட்டை ஆகியவற்றை கழட்டச் சொல்லிவிட்டு, என்னை ஜட்டியுடன் கால்நீட்டி உட்கார வைத்து, என் இரு முன்னங்கால்களின் மீதும் தனது ஷீ கால்களுடன் ஏறி நின்று, லத்தியால் எனது கால் பாதங்களில் பயங்கரமாகத் தாக்கினார். மீண்டும் என்னை எழுந்து நின்று குதிக்கச் சொல்லி, அவ்வாறு நான் குதித்த போது, என் முதுகுப்புறத்திலும், புட்டங்களிலும் பின்னங்கால்களிலும் பயங்கரமாகத் தாக்கினார். பிறகு, 'டேய் பரத் தேவடியாப் பய்யா! நீ கொழுப்பேரியவண்டா, ஸ்டேசன்ல சாமி படம் இருக்குதே, உடைடா பார்ப்போம்" என்று கேவலப்படுத்தினார்.

 

இவ்வாறு மிருகத்தனமாக அவரை இரண்டு நாட்கள் சித்திரவதைச் செய்து, 3.8.04 முதல் 11.11.04 வரை மூன்று மாதத்திற்கும் மேலாக, அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தது, போலீசு.

 

தாழ்த்தப்பட்ட அரசு ஊழியர் கிருஷ்ணமூர்த்தியை அவமானப்படுத்திச் சித்திரவதைச் செய்து, சிறைபிடித்த போலீசு கும்பலையும் அதற்குத் துணை போன துறைசார்ந்த அதிகாரவர்க்க கும்பலையும் அஞ்சலகத் துறையில் இயங்கும் எந்தவொரு தொழிற்சங்கத் தலைமையும் ஏன் தட்டிக் கேட்கவில்லை? அவர், அப்படியே இந்து சாமி படங்களைக் குப்பையில் போட்டிருந்தாலும், அதை உடைத்திருந்தாலும் என்ன தவறு?

 

ஆனால், ஓட்டுச்சீட்டு தொழிற்சங்கத் தலைமைகளோ, 'ஒன்றுமில்லை! இது வெறும் சுண்டல் கொடுக்கும் சமாச்சாரம்" என்று நழுவிக் கொள்கின்றன. இதன் மூலம் பக்தி என்ற பெயரில் சிறுகச் சிறுக அரசு எந்திரத்தின் அடித்தளம் வரை ஊடுருவி விட்டது, பார்ப்பனியம். சட்டத்தை மீறி அரசு அலுவலகத்திற்குள்ளேயே கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, விழா எடுப்பது, இந்து பண்டிகைகள் கொண்டாடுவது என்று அரசு அலுவலகங்களை தினமும் பக்தி பிரசங்கம் நடக்கும் கோயில் பிரகாரங்கள் போல் மாற்றி விட்டனர். பக்திக்கு ஒன்று சேரும் இவர்கள், ""நாங்கள் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் வாங்க மாட்டோம். இனாம் கேட்டு கையேந்த மாட்டோம்'' என்று உறுதிமொழி எடுப்பதற்கு ஒன்று சேருவார்களா? என்று உண்மையிலேயே இறை நம்பிக்கையுள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு அமைதியான வழியில் போராடிய அஞ்சல் உதவியாளர் கிருஷ்ணமூர்த்திக்கு, திரும்பவும் அரசு ஊழியருக்கான அனைத்து உரிமைகளையும் நட்ட ஈடும் வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அவரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரவேண்டும்.

 

அஞ்சல் ஊழியர்கள் மட்டுமல்ல, அனைத்து அரசுத் துறை ஊழியர்களும் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை மக்களிடம் கொண்டு சென்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகத் தண்டிக்கப் போராட வேண்டும்.


பு.ஜ. செய்தியாளர் 

Last Updated on Monday, 19 May 2008 20:21