04_2005.jpgஇந்தியாவின் காடுகளிலுள்ள சிங்கம் புலி நரி ராஜநாகம் முதலான விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து வருவதாக ""அவுட்லுக்'' என்ற ஆங்கில வார ஏடு அண்மையில் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. காடுகளிலுள்ள அரிய விலங்கினங்கள் மட்டுமல்ல; நாட்டிலுள்ள கால்நடைச் செல்வங்களும் படிப்படியாக அழிந்து வருவதோடு இனி இந்திய ஆடுமாடுகளை மிருகக்காட்சி சாலையில்தான் பார்க்க முடியும் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

 

நாட்டு மக்கள் இறைச்சிக்காக ஆடு மாடுகளைக் கொல்வதால் அவை அழிந்து வருகின்றனவா என்றால் இல்லை; அல்லது ஏதாவது கொள்ளைநோய் தாக்கி வருகிறதா என்றால் அதுவும் இல்லை. மாறாக இது கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்திவரும் புதிய பொருளாதாரக் கொள்கையால் உருவான பேரழிவு. உலக வங்கி உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி ஆட்சியாளர்கள் பின்பற்றி வரும் தாராள இறக்குமதிக் கொள்கையால் இந்நாட்டின் கால்ந டைச் செல்வங்கள் அழிக்கப்பட்டு வருவதோடு கால்நடை வளர்ப்புத் தொழிலைச் சார்ந்துள்ள பல கோடி விவசாயக் குடும்பங்களை ஓட்டாண்டிகளாக்கும் சதி வேகமாக நடந்தேறி வருகிறது.

 

கால்நடைச் செல்வத்தில் உலகிலேயே இந்தியா முன்னணியில் உள்ளது. 28 கோடி மாடுகளைக் கொண்டு 8 கோடியே 40 லட்சம் டன் பால் உற்பத்தி செய்து எண்ணிக்கையிலும் உற்பத்தியிலும் இந்திய நாடு முதலிடம் வகிக்கிறது. 46இ830 கோடி ரூபாய் மதிப்புள்ள பால் பொருட்கள் சந்தையை ஈடு செய்வதோடு ஏற்றுமதி செய்யுமளவுக்கும் உற்பத்தி பெருகியுள்ளது.

 

இன்னொருபுறம் வெள்ளாடு மற்றம் செம்மறியாடு வளர்ப்பில் உலகளவில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. 18 கோடி எண்ணிக்கையைக் கொண்ட ஆடு வளர்ப்புத் தொழில் ஆண்டு ஒன்றுக்கு 2400 கோடி ரூபாயை ஈட்டித் தருகிறது.

 

இந்திய விவசாயிகள் ஆடுமாடு வளர்ப்பதென்பது அவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரம். ஏறத்தாழ எட்டு கோடி விவசாயப் பெண்கள் ஓரிரு மாடுகளை வைத்துப் பால் உற்பத்தியில் ஈடுபட்டுத் தமது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களிலுள்ள 70 சதவீத கால்நடைகள் நிலமற்ற கூலிஏழை விவசாயிகளிடமும் நடுத்தர விவசாயிகளிடமும்தான் உள்ளது. கால்நடை சார்ந்த பொருட்கள் இக்கிராமப்புற விவசாயிகளின் ஆண்டு வருமானத்தில் 20 முதல் 70 சதவீதம் வரை பங்களிக்கிறது. இயற்கை பொய்த்துப் போகும்போதும் விவசாய விளைபொருட்களின் விலை சந்தையில் வீழ்ச்சியடையும் போதும் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுத்து காப்பவை இக்கால்நடைகள்தான். கிராமப்புறங்களில் அவசரத் தேவைக்கான வங்கிகளாக இருப்பவை இக்கால்நடைச் செல்வங்கள்தான்.

 

ஆனால் மேலை நாடுகளில் கால்நடை வளர்ப்பு என்பது இயந்திரமயமாக்கப்பட்ட பெருவீதத் தொழிலாகும். அங்கு முதலாளித்துவப் பண்ணையாளர்கள் பல ஆயிரம் மாடுகளைக் கொண்ட பண்ணைகளைக் கொண்டு பால் மற்றும் இறைச்சியை உற்பத்தி செய்து குவிக்கின்றனர். அந்நாடுகளின் அரசுகள் பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் 60 முதல் 100 சதவீதம் வரை மானியம் அளிக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களே இத்தொழிலைக் கட்டுப்படுத்தி இயக்குகின்றன. அவற்றின் இலாபவெறி அராஜகத்தால் மிதமிஞ்சிய பால் மற்றும் இறைச்சி உற்பத்தி அந்நாடுகளில் மலைபோல் குவிந்துள்ளன.

 

உதாரணமாக பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் தமிழகத்தை விட சிறிய நாடான சுவிட்சர்லாந்து ஆண்டொன்றுக்கு 380 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. ஏறத்தாழ 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 475 லிட்டர் (இந்தியாவில் 80 லிட்டர்) பால் கிடைக்கிறது. இது அவர்களின் தேவைக்கு மிதமிஞ்சியதாகும். எனவே சுவிஸ் அரசு பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு பண்ணையும் எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ""கோட்டா'' முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவை மீறாமலிருக்கவும் மிதமிஞ்சிய உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியமும் அளிக்கிறது. இதேபோலத்தான் இதர ஏகாதிபத்திய நாடுகளிலும் நடக்கிறது.

 

மிதமிஞ்சிய உற்பத்தியின் விளைவாக பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு விற்பனையில் தேக்கமும் ஒப்பீட்டளவில் இலாபம் குறைவதும் ஏற்படுவதால் அவை புதிய சந்தைகளைக் கைப்பற்ற வெறியோடு அலைகின்றன. ஏழை நாடுகளை அவற்றின் புதிய சந்தைகளாக மாற்றுவதற்கான சதிகள் பல அரங்குகளிலும் நடக்கின்றன. ஏழை நாடுகளின் சந்தையைக் கைப்பற்றுவதற்கு முக்கியமான தடைகளாக இருப்பவை உள்ளூர் கால்நடை வளர்ப்புத் தொழிலும் இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகளும்தான். இவ்விரண்டு தடைகளையும் தகர்ப்பதன் மூலம்தான் ஏழை நாடுகளின் சந்தையைக் கைப்பற்ற முடியும் என்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் ஏகாதிபத்தியவாதிகளும் வஞ்சக வலைவீசி ஏழை நாடுகளை அடிமைப்படுத்தக் கிளம்பியுள்ளனர்.

 

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி கடந்த 1999ஆம் ஆண்டின் இறுதியில் பா.ஜ.க. ஆட்சியில் பால் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டு 1இ429 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதற்கு முன்னதாகவே ""இன்டர் கார்ப்பரேஷன்'' என்ற பன்னாட்டு தன்னார்வக் குழு கால்நடை வளர்ப்புத் தொழிலைச் சிதைக்க களத்தில் இறங்கியது.

 

இத்தன்னார்வக் குழு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று வருகிறது. 1996ஆம் ஆண்டில் மத்திய கால்நடைத் துறை செயலகத்துடன் கூட்டுச் சேர்ந்து ""தேசிய கால்நடைக் கொள்கை''யை உருவாக்கியது. மேலும் அண்மையில் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களின் கால்நடைக் கொள்கையை உருவாக்குவதில் பிரதான பங்காற்றியது. கொள்கைகளை வகுப்பது மட்டுமின்றி அவற்றைச் செயல்படுத்துவதற்கான முறைகள் வடிவங்களைப் புகுத்துவதிலும் இத்தன்னார்வக் குழு வெற்றி பெற்றது. கால்நடை பராமரிப்புத் துறையின் சேவைகளான மருத்துவம் செயற்கை முறை கருவூட்டல் (சினை ஊசி) மற்றும் நோய் தடுப்பியல் சேவைகளைத் தனியார்மயமாக்குவதும் கால்நடை பராமரிப்புத் துறையின் இதர சேவைகளைக் கட்டண சேவையாக மாற்றுவதுமே இந்தப் புதிய தேசிய கால்நடைக் கொள்கையின் பிரதான அம்சங்களாகும்.

 

இத்தனியார்மயக் கொள்கையால் மிகப் பெரிய அளவில் பெய்ஃப் என்ற தன்னார்வக் குழு ஆதாயமடைந்தது. இத்தன்னார்வக் குழு 2004ஆம் ஆண்டின் இறுதியில் 11 மாநிலங்களில் ஒரு லட்சம் கிராமங்களில் கால்நடைகளுக்குச் செயற்கை முறை கருவூட்டல் சேவையை மத்திய அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளது. இச்சேவைக்காக விவசாயிடமிருந்து ஒவ்வொரு முறையும் சராசரியாக ரூ. 100 வசூலித்து வருகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் இத்தன்னார்வக் குழு மிகப்பெரிய ஏகபோக முதலாளித்துவ நிறுவனமாகப் பரிணமித்து விடும்.

 

இத்தகைய கொழுத்த ஆதாயத்தைக் கண்டு ஜே.கே. குழுமமும் (ரேமண்ட் ஆடை நிறுவனம்) களத்தில் குதித்துள்ளது. இந்நிறுவனம் 7 மாநில அரசாங்கங்களிடமிருந்து செயற்கை முறை கருவூட்டல் சேவையைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. விவசாயிகளிடமிருந்து இதற்காக கட்டணம் வசூலிப்பதோடு மாநில அரசுகளிடமிருந்தும் இச்சேவைக்காக இந்நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இவர்களின் "சேவை'யினால் ஒரு மாடு சினை பிடித்தால் அரசு ரூ. 860 தரவேண்டும்; ஒரு கன்று பிறந்தால் ரூ. 3000 தரவேண்டும். ஆனால் சந்தையில் 6 மாத வயதான ஒரு கன்றுக்குட்டியின் விலை ரூ. 1000 கூட போகாது. இப்படி இந்த "மகத்தான' சேவையினால் மட்டும் கடந்த ஆண்டில் ஆந்திராவின் சித்தூர் அனந்தபூர் மாவட்டங்களில் மட்டும் 2 கோடி ரூபாய் நிகர லாபமாக இந்நிறுவனம் சுருட்டியது. இரண்டு மாவட்டங்களில் மட்டும் ரூ. 2 கோடி இலாபம் எனில் ஆந்திர மாநிலம் முழுவதும் சுருட்டிய இலாபம் எவ்வளவு கோடி? ஆந்திரா மட்டுமின்றி 7 மாநிலங்களில் விழுங்கியது எத்தனை கோடி? ப. சிதம்பரத்துக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்! குறைந்தபட்ச மதிப்பீட்டின்படி ரூ. 1400 கோடிக்கு மேல் ஜே.கே. நிறுவனம் சுருட்டியிருக்கும்!

 

இன்னொரு புறம் ஏகாதிபத்தியங்களிடமிருந்து எச்சில் காசு பெற்றுக் கொண்டு ""சூழலியல்வாதிகள்'' என்கிற பெயரில் பல்வேறு தன்னார்வக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை வனப்பாதுகாப்புத் துறையுடன் கைகோர்த்துக் கொண்டு ""புதிய வனப் பாதுகாப்புக் கொள்கை''யைத் திணித்து வருகின்றன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் இச்சூழலியவாதக் குழுக்கள் ""மேய்ச்சல் கொள்கை''யை உருவாக்கிச் செயல்படுத்தின. காடுகளில் கால்நடைகளை மேயவிடக் கூடாது; வெள்ளாடுகள் குருத்து இலைகளைத் தின்று காடுகளின் நீடித்த தன்மையை அழிக்கின்றன என்பதுதான் இக்கொள்கையின் பிரதான அம்சம். இதன் விளைவாக மலைவாழ் வனவாழ் மக்கள் இனி வெள்ளாடுகளை வளர்க்க முடியாது. இயற்கை வளத்தின் மீதான அவர்களின் உரிமையும் வாழ்வுக்கான ஆதாரமும் பறிக்கப்படும். விவசாயிகளது உடலின் நீட்டிப்பாக உள்ள கால்நடைச் செல்வங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்.

 

இவை ஒருபுறமிருக்க புவிப்பரப்பு கூடுதலாக வெப்பமடைவதற்கு மீத்தேன் வாயுவும் ஒரு காரணமாகும். ஏகாதிபத்திய நாடுகளின் இயந்திரமயமாக்கப்பட்ட கால்நடைப் பண்ணைகளிலிருந்துதான் அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறுகிறது. சுற்றுச்சூழலை நஞ்சாக்கி வரும் ஏகாதிபத்தியவாதிகள் இக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவும் திசை திருப்பவும் தமது கைக்கூலி விஞ்ஞானிகளைக் கொண்டு புதிய சதிகளில் இறங்கியுள்ளனர். ""இந்தியாவில் அளவுக்கதிகமாக அசைபோடும் கால்நடைகள் உள்ளன. இவை நார்ச்சத்து நிறைந்த வைக்கோல் புல் சோளத்தட்டு முதலான தீவனங்களைக் கொண்டு வளர்கின்றன. எனவே இந்தியக் கால்நடைகள்தான் அதிகஅளவில் மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன. அவைதாம் புவிபரப்பின் வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். ஆகையால் இந்தியக் கால்நடைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று கைக்கூலி இந்திய விஞ்ஞானிகள் சிலர் வாதிட்டு வருகின்றனர். அமெரிக்கா சொன்னால் அது வேதவாக்கு! அதன்படி வருங்காலத்தில் இந்திய ஆட்சியாளர்கள் மீத்தேன் வாயுப் பெருக்கத்தைக் குறைப்பது என்ற பெயரில் இந்தியக் கால்நடைகளைக் குறைக்க முயலுவார்கள்!

 

எல்லாவற்றுக்கும் மேலாக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து பால் பொருட்கள் வெள்ளமெனப் பாய்கின்றன. டென்மார்க் நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து கடந்த 2002ஆம் ஆண்டில் மட்டும் 17000 டன் பால்பவுடரும் 12000 டன் நெய்யும் இறக்குமதியாகியுள்ளது. இந்திய அரசின் அன்னிய வணிக இயக்குநரகத்தின் (ஜூன் 2004) அறிக்கையின் படி 200203 ஆம் ஆண்டில் ரூ. 688 கோடியாக இருந்த பால் சார்ந்த பொருட்களின் இறக்குமதி மதிப்பு 200304 ஆம் ஆண்டில் ரூ. 10இ000 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவும் போதாதென்று முந்தைய பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்போது சலுகை இறக்குமதி தீர்வையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10இ000 டன் பால்பவுடர் இறக்குமதி வரம்பை 15 மடங்கு (1இ50இ000 டன்) உயர்த்தியது.

 

நியூசிலாந்திலிருந்து வந்திறங்கும் ஒரு கிலோ நெய்யின் விலை ரூ. 64.54. சுவிஸ் நாட்டின் நெஸ்லே பிரான்சைச் சேர்ந்த சோடியால் பான்கிரைன் லேக்டாலிஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஷ்ரெய்பர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஃபான்டெரா முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் ஒரு கிலோ பால் பவுடரை ரூ.30 முதல் ரூ.50 வரை கொண்டு வந்து கொட்டுகின்றன. இந்தப் பால்பவுடரைக் கொண்டு பலதரப்பட்ட விளம்பர வித்தைகளுடன் பல வண்ண பாலிதீன் பாக்கெட்டுகளில் ஆரோக்யா ஹெரிடேஜ் கோமாதா திருமலா தூத் எனப் பல பெயர்களில் இந்தியத் தரகு முதலாளிகள் பால் விற்பனையை பெருநகரங்களில் விரிவுபடுத்தி வருகின்றனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் பால் நகரப்புற சந்தையில் ஏறத்தாழ 65மூ ஆக இருந்த நிலைமை போய் இன்று பாதிக்கும் கீழாக வீழ்ந்ததற்கு முக்கியக் காரணம் இறக்குமதியாகும் பால்பவுடர்தான்!

 

ஏகாதிபத்திய நாடுகளில் பால் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவு மானியங்கள் வழங்கப்படுவதால் அந்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் விலை மலிவாக இருக்கின்றன. இந்தியாவிலோ பால் உற்பத்திக்கு அரசாங்கம் மானியம் தருவதில்லை. சிறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் ""மாட்டு லோன்'' வாங்கவே படாதபாடு படவேண்டியுள்ளது. இந்நிலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து கட்டுப்பாடின்றி பால் பொருட்கள் இறக்குமதியானால் அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலையில் பால் பொருட்களை இந்திய சிறு விவசாயிகளால் விற்பனை செய்ய இயலாது. கால்நடை வளர்ப்புத் தொழில் அதிக முதலீடுகளைக் கோருவதாலும் தீவனப் பொருட்களின் விலையேற்றத்தாலும் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ரூ. 6.50 முதல் ரூ. 10.75 வரை தேவைப்படுகிறது. ஆனால் இந்த அடக்கவிலைக்கேகூட விவசாயிகளால் பாலை விற்க முடியாமல் நட்டப்பட்டுப் போண்டியாகி வருகிறார்கள். ஒரு கிலோ ரூ.100 120 என்றிருந்த உள்நாட்டு நெய்யின் விலை இன்று ரூ. 85 102 என்று வீழ்ச்சியடைந்து விட்டது.

 

ஒருபுறம் கால்நடை இனப்பெருக்கச் "சேவை'யில் தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சுரண்டல்; மறுபுறம் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் மேய்ச்சல் நிலங்களில் விவசாயிகளின் உரிமை பறிப்பு; இன்னொருபுறம் கணிசமாக கால்நடைத் தீவனங்களின் விலையேற்றம்; எல்லாவற்றுக்கும் மேலாக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவு விலையில் வெள்ளமெனப் பாயும் பால் பொருட்கள். இத்தகைய தொடர் தாக்குதல்களால் இந்தியக் கால்நடை வளர்ப்புத் தொழில் படிப்படியாக நசுக்கப்பட்டு வருகிறது.

 

இனி ஆடுமாடு வளர்ப்பதும் பால் உற்பத்தியில் ஈடுபடுவதும் யானையைக் கட்டி தீனி போடும் கதையாக கிராமப்புற மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடும். போண்டியாகும் விவசாயிகள் படிப்படியாக ஆடுமாடுகளை விற்றுவிடுவார்கள்; பால் உற்பத்தியில் ஈடுபடவும் முன்வரமாட்டார்கள். இதன் விளைவாக பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்; அதற்கேற்ப ஏகாதிபத்திய நாடுகளும் பால் விலையை உயர்த்தும். இந்தியாவில் சுயசார்புடன் பால் உற்பத்தியே இல்லாமல் போய் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பாலை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விடும். பாலைக் கொண்டே ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்திய நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தி கொள்ளையடித்துச் செல்லும். இத்தகைய வழிமுறைகளின் மூலம்தான் ""நெஸ்லே'' என்ற பன்னாட்டு நிறுவனம் அண்டை நாடான இலங்கையில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 

இந்நிலையில் பால் கால்நடைகள் விவசாயம் கைத்தொழில் என அனைத்தையும் நாசமாக்கி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வேட்டைக்கும் கொள்ளைக்கும் ஆதிக்கத்துக்கும் தாராள அனுமதியளிக்கும் ஆட்சியாளர்களின் தனியார்மய தாராளமயக் கொள்கையை இனியும் சகித்துக் கொள்ளப் போகிறோமா? கால்நடைச் செல்வங்கள் மிகுந்த விவசாய நாடான இந்தியாவைப் பாலுக்கும் உணவுக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளிடம் கையேந்த வைக்கும் தன்னார்வக் குழுக்களின் சதிச் செயலை நாட்டை அடிமைப்படுத்தும் துரோகத்தனத்தை இனியும் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது ""அர்ஜூன் அம்மா யாரு?'' ""4.5மூ கொழுப்பு சத்துள்ள பால்தான் உண்மையான பால்'' என்ற விளம்பரங்களில் மயங்கி இறக்குமதியாகும் பால் பவுடரைக் கொண்டு பலவண்ண பாலிதீன் பைகளில் விற்கப்படும் பாலைக் குடித்து அடிமைகளாகக் கிடக்கப் போகிறோமா?


· செஞ்சுடர்