Language Selection

புதிய ஜனநாயகம் 2005

04_2005.jpgஓட்டுக்கட்சி ரவுடிகளால் சாதி மத வெறியர்களால் ஆளும் வர்க்கக் கும்பலால் உழைக்கும் மக்கள் மீது அன்றாடம் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் ஏவிவிடப்படுகின்றன. இவற்றுள் ஏதோ ஒன்றிரண்டு தாக்குதல்கள்தான் நாடெங்கிலும் அம்பலமாகி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி அம்பலமான தாக்குதல்களில் கூட குற்வாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

 

ஐந்தாண்டுகளுக்கு முன்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தருமபுரி நகரில் அ.தி.மு.க. குண்டர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. கொடைக்கானல் ப்ளஸன்ட் ஸ்டே விடுதி ஊழல் வழக்கில் ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக ஹேமலதா கோகிலவாணி காயத்ரி என்ற மூன்று அப்பாவி மாணவிகளின் உயிரை அ.தி.மு.க. காலிகள் பறித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வாய்தாக்களையும் இழுத்தடிப்புகளையும் சந்தித்த இந்த கொலைக் குற்ற வழக்கு இப்பொழுதுதான் நகரவே தொடங்கியுள்ளது.

 

கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்தக் கொலையை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசு பிரிவு அ.தி.மு.க.வின் தருமபுரி ஒன்றியச் செயலராக இருந்த ராஜேந்திரன் மற்றும் ரவீந்திரன் நெடுஞ்செழியன் உள்ளிட்டு 30 அ.தி.மு.க. குண்டர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் 2001 தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றபின் இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது.

 

இந்த வழக்கில் அரசு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த அனைவரையும் அ.தி.மு.க. குண்டர்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டியதால் 22 சாட்சிகளும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக பல்டியடித்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கை நடத்த நியமிக்கப்பட்ட கூடுதல் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரும் சிறப்பு அரசு வழக்குரைஞரும் சாட்சிகள் மிரட்டப்பட்டதற்குத் துணை நின்றனர். வழக்கை நடத்திய கிருஷ்ணகிரி நீதிமன்றம் இந்த அயோக்கியத்தனத்தைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது.

 

இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2001 இறுதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கு அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது.

 

22.08.03 அன்று வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் ""கிருஷ்ணகிரி நீதிமன்றம் இந்த வழக்கைக் கண்துடைப்புக்காக நடத்துகிறது'' என ஒப்புக் கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியது. மேலும் சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை இந்த வழக்கிற்கான அரசு வழக்குரைஞராக நியமித்தது.

 

அ.தி.மு.க. அரசோ வழக்குரைஞர் சீனிவாசனுக்கு பணி நியமன உத்திரவு வழங்காமல் சேலம் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு ஒரு அடி கூட முன்னேறி விடாமல் தடுத்தது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்களாகியும் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்திரவு வழங்காததால் கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 

கடந்த சனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கையே குழிதோண்டிப் புதைக்கும் நோக்கத்தோடு ""இந்த கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; டிச. 2003லிருந்து கட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாக கேஸ் கட்டு தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்'' எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு. ""இந்த வழக்கை மையப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவா?'' என உயர்நீதி மன்றம் மிரட்டிய பிறகுதான் திடீரென காணாமல் போன கேஸ் கட்டு திடீரென கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஏறத்தாழ ஐந்தாண்டுகள் கழித்து சேலம் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ள இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு பேராசிரியைகள் பேருந்துக்குள் ஏறி பெட்ரோலை ஊற்றிய குற்றவாளியை அடையாளம் காட்டியுள்ளனர். எனினும் எந்த நேரத்திலும் சாட்சிகள் மிரட்டப்பட்டுக் கலைக்கப்படலாம் என்ற அச்சத்தை சேலம் நீதிமன்றமே வெளியிட்டுள்ளது.


···


1987ஆம் ஆண்டு உ.பி. மாநிலத்திலுள்ள மீரட் நகரைச் சேர்ந்த 42 முசுலீம்கள் பிரதேச ஆயுதப் படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலை ஆர்.எஸ்.எஸ்.க்கு இணையாக போலீசு துறையும் இந்து மதவெறி பிடித்து அலைவதை நாடெங்கும் அம்பலப்படுத்தியது. இந்தப் படுகொலை நடந்து ஏறத்தாழ 18 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் குற்றம் சாட்டப்பட்ட 19 போலீசாரில் ஒருவர்கூட இன்றுவரை கைது செய்யப்படவில்லை.

 

இப்படுகொலை பற்றி விசாரணை நடத்தி ஒரு அறிக்கை தயாரிக்கவே உ.பி. மாநில போலீசார் ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். இந்த அறிக்கையை போலீசாரால் கொல்லப்பட்ட முசுலீம் குடும்பத்தினரின் கண்களில் கூட காட்ட மறுத்துவிட்டது உ.பி. மாநில அரசு. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட முசுலீம்கள் வழக்கு தொடுத்த பிறகுதான் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது.

 

இதன் பிறகு 1996ஆம் ஆண்டு உ.பி. மாநில காசியாபாத் நீதிமன்றத்தில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வராமலேயே வழக்கு விசாரணை நாடகம் தொடங்கப்பட்டது. விசாரணையில் ஏதாவது விடிவு பிறக்கும் என நான்கு ஆண்டுகள் காத்திருந்த முசுலீம்கள் அதன் பிறகு இந்த நாடகத்தை நிறுத்தச் சொல்லி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

ஏறத்தாழ இரு ஆண்டுகள் கழித்து உச்சநீதி மன்றம் இந்த வழக்கு விசாரணையை உ.பி. மாநிலத்தில் இருந்து தில்லிக்கு மாற்றியது; புதிய அரசு வழக்குரைஞரை நியமிக்கச் சொல்லி உ.பி. அரசுக்கு உத்திரவு போட்டது. அக்டோபர் 2002இல் போடப்பட்ட உச்சநீதி மன்ற உத்திரவை "மதச் சார்பற்ற' முலயம் சிங் அரசு மார்ச் 2004 வரை கண்டு கொள்ளவேயில்லை. அதன் பின் உப்பு சப்பில்லாத ஒரு வழக்குரைஞரை அரசு வக்கீலாக நியமித்து தில்லி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையைக் கேலிக் கூத்தாக்கி விட்டது.

 

இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசாரில் ஒருவன் கூட தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படவில்லை. குற்றவாளிகள் அனைவரும் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு அரசின் பாதுகாப்போடு சுதந்திரமாகச் சுற்றி கொண்டு திரிகின்றனர். பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்கள்தான் தங்கள் கைக்காசை செலவழித்து நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


···


"சுதந்திர' இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பட்டியல் இட்டால் அதில் ஆந்திர மாநிலம் சுண்டூரில் நடந்த தாக்குதலைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. சுண்டூர் தாழ்த்தப்பட்டோர் ரெட்டி சாதி நிலப்பிரபுக்களின் வயல்களில் வேலை செய்ய மறுத்ததாலும் படித்த இளைஞர்கள் தீண்டாமையை எதிர்த்ததாலும் போலீசின் துணையோடு ரெட்டி நிலப்பிரபுக்களால் தாக்கப்பட்டனர்.

 

இத்தாக்குதலில் மாண்டு போன தாழ்த்தப்பட்டோரின் பிணங்களைப் பிரேதப் பரிசோதனை செய்த தாழ்த்தப்பட்ட மருத்துவர் ரவிசந்தர் குமார் மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டார். அந்த அளவிற்கு சுண்டூர் தாக்குதல் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டது. கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் உடல்களை வெட்டித் துண்டாக்கி சாக்குப் பையில் கட்டி துங்கபத்ரா ஆற்றில் வீசியெறிந்தனர் மேல்சாதி வெறியர்கள்.

 

இத்தாக்குதலில் 70 தாழ்த்தப்பட்டோர் இறந்து போயிருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் ஆந்திர அரசோ 9 பேர் மட்டுமே இறந்து போனதாக வழக்கில் பதிவு செய்துள்ளது.

 

இத்தாக்குதலில் இறந்து போனவர்களின் உறவினர்களுக்கு ஒரு வீடு ஒரு ஏக்கர் நிலம் அரசாங்க வேலை எனச் சலுகைகளை வீசியெறிந்து ரெட்டி நிலப்பிரபுக்களைக் காப்பாற்றி விடச் சதி செய்தது ஆந்திர அரசு. தாழ்த்தப்பட்டோர் இச்சலுகைக்கு மயங்காமல் நீதி கேட்டு தொடர்ந்து போராடியதால் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

 

எனினும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 219 பேரில் ஏழு முக்கிய குற்றவாளிகளை இதுநாள் வரையில் கைது செய்யாமல் வழக்கு விசாரணைக்கு முட்டுக் கட்டை போடப்படுகிறது. சுண்டூர் தாக்குதல் 1991 ஆகஸ்டில் நடந்தது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை 13 ஆண்டுகள் கழித்து டிச. 2004இல்தான் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுது கூட விசாரணையை நடத்தாமல் பிப். 2005க்கு விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

 

இவ்வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பே 29 குற்றவாளிகள் எவ்விதத் தண்டனையும் அடையாமல் இயற்கையாக மரணம் அடைந்து விட்டனர்; வழக்கு இப்படியே இழுத்துக் கொண்டு போனால் மற்ற குற்றவாளிகளுக்கும் இயற்கை மரணம் தான் தண்டனை போலாகிவிடும்! ""தெய்வம் நின்று கொன்றது'' என்று இத்தண்டனையை ஏற்றுக் கொள்ளவா முடியும்?

 

தருமபுரி மீரட் சுண்டூர் போன்று நீதிமன்றம் என்ற ஊறுகாய் டப்பாவுக்குள் போடப்பட்டுள்ள வழக்குகளைப் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் எனச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுவார்கள். இதன்படி பார்த்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்பட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும்.

 

இந்த வழக்குகள் இன்றுவரை உயிரோடு இருப்பதற்கு சட்டத்தின் தயவோ நீதிபதிகளின் நேர்மையோ நாணயமோ காரணம் இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட குடும்பங்களும் ஜனநாயக இயக்கங்களும் நீதி கேட்டு தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்கள்தான் இந்த வழக்குகளின் மூச்சுக் காற்றாக இருந்து வருகிறது. இப்போராட்டங்கள் இல்லையென்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சட்டம் இன்னொரு முறை கொன்றிருக்கும்; நீதிமன்றமே இந்த வழக்குகளின் கல்லறை ஆகியிருக்கும்!


· செல்வம்