போலி கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம். தனது 18வது அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ளது. இதற்கு முன்னதாக அக்கட்சி செயல்படும் மாநிலங்களில் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறது. கேரள மாநில மாநாட்டில் வழக்கம் போலவே குழுச் சண்டைகள் பகிரங்கமான நாய்ச் சண்டையாகி சந்தி சிரித்தது. இக்குழுச் சண்டைகள் பதவிக்கான சண்டையாக மட்டுமின்றி கட்சி சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகாரச் சண்டையாகவும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
இழப்பதற்கு ஏதுமில்லாத தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். கட்சிக்குள் சொத்துத் தகராறா? நீங்கள் ஆச்சரியப்பட்டு புருவத்தை உயர்த்தலாம். கட்சி ஊழியர்களும் ஆதரவாளர்களும்தானே ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொத்தாக இருக்க முடியும்; அப்படியிருக்க சி.பி.எம். கட்சிக்குள் சொத்து தகராறு எப்படி வர முடியும் என்று நீங்கள் அதிசயிக்கலாம்.
ஆனால் சி.பி.எம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே அல்ல. கட்சி என்ற பெயரில் அது ஒரு கம்பெனியை நடத்துகிறது. கேரளாவில் மட்டும் அக்கம்பெனியின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 4000 கோடி ரூபாய்! கம்பெனி என்றால் அதற்கு ஒரு ""பாஸ்'' உண்டு. கேரள சி.பி.எம். கட்சி செயலர் பினரயி விஜயன் இக்கம்பெனியின் தலைமை ""பாஸ்'' ஆக உள்ளார்.
வடக்கு கண்ணனூரில் ""ரப்கோ'' எனும் ரப்பர் கூட்டுறவுக் கழகம் 1997லிருந்து இயங்கி வருகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 450 கோடிக்கு வர்த்தகம் செய்யும் இந்நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து கட்டுப்படுத்துபவர்கள் சி.பி.எம். கட்சியினராவர். இப்போது தொழிலை விரிவுபடுத்த அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களிடம் ரூ. 1300 கோடி பெற ""ரப்கோ'' முயற்சித்து வருகிறது. சி.பி.எம். கட்சியினர் அன்னிய மூலதனத்தை எதிர்ப்பவர்களாயிற்றே என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அப்படி சந்தேகிப்பது தவறு. ஏனென்றால் அன்னிய மூலதன எதிர்ப்பு என்பது சி.பி.எம். கட்சியின் கொள்கை. ஆனால் ""ரப்கோ'' அன்னிய மூலதனத்தை வரவேற்பது என்பது வர்த்தகம். அதாவது கொள்கை வேறு; வர்த்தகம் வேறு!
கூட்டுறவுக் கழகங்கள் மூலம் தொழில் செய்வது சிக்கல் இல்லாமல் சாதகமாக இருப்பதால் சி.பி.எம். கம்பெனியினர் ஏராளமான கூட்டுறவுக் கழகங்களைத் தொடங்கி தொழிலை விரிவுபடுத்தி வருகின்றனர். கேரள கூட்டுறவு மருத்துவமனை சம்மேளனம் தலைச்சேரி கூட்டுறவு மருத்துவமனை கேரள மாநில கூட்டுறவு சங்கம் முதலானவற்றின் தலைமைப் பொறுப்பில் ஈ. நாராயணன் என்ற சி.பி.எம். கட்சியின் முதலாளித்துவ காம்ரேடு உள்ளார். இவர் மூலமாக ""தலைச்சேரி மருத்துவ அறக்கட்டளை'' எனும் ஐந்து நட்சத்திர மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் நிறுவ சி.பி.எம். கட்சி முயற்சித்து வருகிறது.
ஏற்கெனவே மலபார் பிராந்தியத்தில் தலைச்சேரி கூட்டுறவு மருத்துவமனையை சி.பி.எம். நடத்தி வருகிறது. இதுதவிர மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணில் ஈ.எம்.எஸ். நினைவு மருத்துவமனையையும் முன்னாள் கட்சி செயலாளர் ஏ.பி. வர்க்கி பெயரால் ஒரு மருத்துவமனையையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் ஏழைகளுக்கான இலவச மருத்துவமனைகள் அல்ல. அரசு மருத்துவமனைகளின் அவலத்துக்கு எதிராகப் போராடாத சி.பி.எம். அடுத்தடுத்து தனியார் மருத்துவமனைகளைத் திறந்து மக்களுக்குச் "சேவை' செய்கிறது. ""வாருங்கள் தோழர்களே குறைந்த கட்டணம்தான்!'' என்று அழைக்கிறது.
இந்த சாதாரண சேவையும் போதாதென்று உயர்தர சேவை செய்ய தலைச்சேரியில் பலகோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நட்சத்திர சொகுசு மருத்துவமனையைக் கட்ட முயற்சித்து வருகிறது. இதுதவிர எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு தலைச்சேரியில் ஒரு ""ஹைப்பர் மார்க்கெட்'' (பல சூப்பர் மார்க்கெட்டுகளைக் கொண்டு மேலை நாட்டு பாணியில் அமைந்தது) தொடங்கவும் தீர்மானித்துள்ளது. உள்ளூர் சிறு வியாபாரிகளை ஒழித்துக் கட்ட பெரு முதலாளிகள் சுபிக்ஷா ஃபுட்வேர்ல்டு முதலான சூப்பர் மார்க்கெட்டுகளைத் தொடங்கும்போது சி.பி.எம். கட்சியினர் அதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியுமா என்ன? எனவேதான் போட்டியில் முந்த களத்தில் இறங்கி விட்டார்கள்!
தொழில் என்று வந்துவிட்டால் எந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கிறதோ அதில் முதலீடு செய்வதுதான் அறிவுடைமை. "மார்க்சிஸ்டு'கள் முட்டாள்களா என்ன? மலபார் சுற்றுலா வளர்ச்சி கூட்டுறவு சங்கம் மூலமாக கேளிக்கை பூங்காக்கள் (சென்னையிலுள்ள எம்.ஜி.எம்; கிஷ்கிந்தா வி.ஜி.பி. போன்றவை) தொடங்க முனைந்தனர். ஆனால் காங்கிரசு அரசாங்கம் கூட்டுறவுக் கழகங்களையும் வங்கிகளையும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததால் "மார்க்சிஸ்டு'களின் இலட்சியக் கனவு உடனடியாக ஈடேறவில்லை. எனவே இப்போது மலபார் மனமகிழ்ச்சி பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு அறக்கட்டளையை கண்ணனூர் மாவட்டச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலைமையிலான குழு மூலம் தொடங்கி கேளிக்கை பூங்காங்களை நிறுவ முயற்சித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இல்லாவிட்டால் சத்யம் விப்ரோ இன்போசிஸ் காக்னிசன்ட் முதலான பெரு முதலாளிகள் இத்துறையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தக் கிளம்பி விடுவார்களே! அதை முளையிலேயே கிள்ளியெறிவதற்காகத்தான் தொலைநோக்குப் பார்வையுடன் இவற்றைத் தொடங்கத் தீர்மானித்துள்ளனர்.
சரி இவற்றுக்கெல்லாம் எப்படி பணம் திரட்டுவது? முதலாளித்துவ நிறுவனங்களைப் போல "மார்க்சிஸ்டு'களும் பங்குகளை விற்று பணம் திரட்டுகிறார்கள். யாரிடமெல்லாம் பங்குகளை விற்று பணம் திரட்டலாம் என்பதற்கு வரையறை எதுவும் கிடையாது. யாராயிருந்தாலென்ன? எந்தத் தொழில் செய்தாலென்ன? தமிழனாக இருந்தால் போதும் என்று நன்கொடைகள் பகிர்வுகள் திரட்டும் தமிழினப் பிழைப்புவாதிகளைப் போலவே "மார்க்சிஸ்டு'களும் எல்லோரிடமும் நிதி திரட்டுகிறார்கள். சி.பி.எம். கட்சியின் ""கைரளி டி.வி.'' நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தத்தளித்தபோது எல்லோரிடமும் நிதி திரட்டி அதைத் தூக்கி நிறுத்தி விட்டார்கள்.
கைரளி டி.வி.யின் 25 இலட்ச ரூபாய் பங்குகளை சென்னையைச் சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரியான புருசோத்தமன் வாங்கியுள்ளார். கேரளத்தில் 36 பேரின் சாவுக்குக் காரணமான கள்ளச் சாராயத் "தோழர்' மணியச்சன் பல லட்ச ரூபாய்க்கான பங்குகளை வாங்கியுள்ளார். இதுதவிர வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளிடமும் பல கோடி ரூபாய்க்கு கைரளி டி.வி.யின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. "மார்க்சிஸ்டு'களால் மத அடிப்படைவாதக் கட்சியாகச் சித்தரிக்கப்படும் இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சியின் எம்.பி.யான அப்துல் வகாப் என்கிற பெருமுதலாளி கூட பல கோடிக்கு பங்குகள் வாங்கி கைரளி டி.வி.யின் இயக்குனர் குழுவிலும் அங்கம் வகித்தார். பின்னர் காங்கிரசு கூட்டணியிலுள்ள முசுலீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி எதிர்க்கட்சி நிறுவனத்தின் பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்று அக்கட்சித் தலைமை வலியுறுத்தியதால் இப்போது அவர் அப்பொறுப்பில் இல்லை. இதேபோல் கட்சியின் ""தேசாபிமானி'' நாளேட்டுக்கும் பலரிடம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். கேளிக்கை பூங்காங்கள். ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் தகவல் தொழில்நுட்ப மையங்கள் தொலைக்காட்சிகள் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி விடுதலை செய்ய முடியும் என்று நீங்கள் குழப்பமடைகிறீர்களா? அப்படியானால் நீங்கள் காலத்துக்கேற்ப மாறிக் கொள்ளாத பழமைவாதி! ஏனென்றால் "மார்க்சிஸ்டு' கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான எம்.ஏ.பேபி இப்படித்தான் சொல்கிறார். ""இன்னமும் பழமைவாதச் சிந்தனையில் இருப்பது சரியல்ல; காலத்துக்கேற்ப நாம் மாறவேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம் மருத்துவமனைகள் கேளிக்கை பூங்காக்களை கூட்டுறவு சங்கங்கள்தான் நடத்துகின்றனவே தவிர கட்சியே நடத்தவில்லை. மேலும் கேளிக்கை பூங்காக்களை நிறுவுவது மார்க்சியத்துக்கு எதிரானதல்ல'' என்று சித்தாந்த விளக்கமும் அளித்துள்ளார்.
இனி என்ன கவலை! நீங்களும் ஒரு முதலாளித்துவ காம்ரேடாக கம்யூனிச கனதனவாக விரும்பினால் "மார்க்சிஸ்டு' கம்பெனியில் சேரலாம். கொள்கை அடிப்படையில் ""தனியார்மயம் ஒழிக! அன்னிய மூலதனம் ஒழிக!'' என்று முழங்கிவிட்டு தொழில் அடிப்படையில் அன்னிய மூலதனத்துடன் கூட்டுச் சேர்ந்து ""பிசினஸ்'' செய்யலாம்; முதலாளிகளுக்கு போட்டியாக நீங்களும் தொழில் தொடங்கலாம்.
சே! இது என்ன துரோகத்தனம் என்று காறி உமிழ்ந்துவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்கான மகத்தான புரட்சியில் பங்கேற்க விரும்பினால் நீங்கள் கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் அணிவகுக்கலாம்.
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
· குமார்