Language Selection

அனைத்துலக மகளிர் தினத்தை (மார்ச்8) ஒட்டி திருச்சியில் ம.க.இ.க. மகளிர் குழுவினர் மார்ச் 15ஆம் நாளன்று எழுச்சிமிகு அரங்கக் கூட்டத்தை நடத்தினர். ""உழைக்கும் வர்க்கப் பெண்களே ஒன்று சேருங்கள்'' என்ற முழக்கத்தின் கீழ் நடந்த இக்கூட்டத்தில் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான இப்போராட்ட நாளைக் கொச்சைப்படுத்தும் முதலாளித்துவ செய்தி ஊடகங்களையும் உழைக்கும் பெண்களின் போராட்டத்தை தனிப்பட்ட குடும்பத்தில் ஆணுக்கு எதிரான போராட்டமாகத் திசை திருப்பி வரும் பெண்ணியவாதிகள் மற்றும் தன்னார்வக்

 குழுக்களை அம்பலப்படுத்தியும் தோழர் வனிதா தலைமையுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து ""மறுகாலனியாதிக்கமும் பெண்களும்'' என்ற தலைப்பில் வழக்குரைஞர் தோழர் பானுமதியும் ""வர்க்கப் போராட்டமும் பெண்கள் விடுதலையும்'' என்ற தலைப்பில் ம.க.இ.க. இணை செயலர் தோழர் காளியப்பனும் சிறப்புரையாற்றினர். பின்னர் சாதி மத மூடத்தனங்களை எதிர்த்தும் போராட்ட உணர்வூட்டும் வகையிலும் சிறுவர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் மகளிர் குழுவினர் தயாரித்த சிறந்த பெண் யார்? என்பதைக் காட்டும் வகையில் அமைந்த நாடகமும் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது. திரளாக வந்திருந்த பெண்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்த இக்கூட்டம் பெண்கள் அமைப்புரீதியாகத் திரண்டு போராட வேண்டிய கடமையை உணர்த்துவதாக அமைந்தது.
— பு.ஜ. செய்தியாளர்கள்