04_2005.jpgவாய் பேசாத ஊமைப்பிள்ளை திருவாய் மலர்ந்து ""எப்பம்மா தாலியறுப்பே?'' என்று தன் தாயிடம் கேட்டதாம். தென் மாவட்ட வழக்குரைஞர்கள் போராடிப் "பெற்ற' சனியனான மதுரை உயர்நீதி மன்றம் தனது முதல் சாதனையாக மக்களின் கூரைக்குக் கொள்ளி வைத்துவிட்டது.

 

மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் கிழக்கு தெற்கு தெருக்களிலுள்ள கடை வியாபாரிகள் அதே தெருவில் வணிகம் செய்யும் தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கோரி மாநகராட்சிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் தரைக்கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டதுடன் மதுரை நகரெங்குமுள்ள "ஆக்கிரமிப்புகளை' அகற்றுமாறும் மாநகராட்சிக்கு உத்திரவிட்டது மதுரை உயர்நீதி மன்றம்.

 

மதுரை நகரெங்கும் உருண்டன புல்டோசர் சக்கரங்கள். தங்களது அதிகாரத்தின் வலிமையைக் கண்டு மனக்கிளர்ச்சியடைந்த நீதிபதிகள் ""சபாஷ்.... சட்டத்தின் சக்கரங்கள் தென்மாவட்டங்கள் முழுவதும் உருளட்டும்'' என்று இன்னொரு உத்தரவும் பிறப்பித்தனர்.

 

சிவகாசி தங்களுக்கெதிராக இப்படியொரு "மரண தண்டனை' உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது சிவகாசி வெம்பக்கோட்டை தெருவைச் சேர்ந்த ஐநூறு தொழிலாளர் குடும்பங்களுக்குத் தெரியாது. சிவகாசியின் புகழ் பெற்ற பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் அச்சகங்களிலும் பணியாற்றும் அந்தத் தொழிலாளர்கள் மார்ச் 10ஆம் தேதியன்று காலையில் வேலைக்குக் கிளம்பும்போது நகராட்சி அதிகாரி ஒருவர் அந்தத் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக வாய்வழித் தகவல் தந்திருக்கிறார். "தங்களது தெருவே ஆக்கிரமிப்பாகக் கருதி அகற்றப்படும்' என்று அந்த மக்கள் நினைத்தும் பார்க்கவில்லை.

 

மதியம் சுமார் ஒரு மணிக்கு அந்தத் தெருவின் மின் இணைப்புகள் அனைத்தும் திடீரெனத் துண்டிக்கப்பட்டபோது தான் ஆபத்து நெருங்குகிறது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதற்குள் வீடுகளின் மீது புல்டோசர் ஏறத் தொடங்கி விட்டது. சில மணி நேரங்களில் எல்லாம் முடிந்து விட்டது.

 

கணவனும் மனைவியுமாக அன்றாடம் பன்னிரெண்டு மணி நேரம் உழைத்து சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய கல் வீடுகள் அவர்கள் கண் முன்னே கற்குவியல்களாயின. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அவர்கள் செலுத்தி வரும் சொத்துவரி குழாய் வரி மின் கட்டண ரசீதுகளும் ரேசன் கார்டுகளும் வாக்காளர் அடையாள அட்டைகளும் அவர்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்கின்றன.

ஆனால் இந்த நிரூபணங்கள் எவையும் இடித்த வீடுகளை உயிர்ப்பிக்கப் போவதில்லை. பேச்சுரிமை மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்கும் ஜனநாயக உரிமை என்பதால் அந்த உரிமையின் கீழ் அவர்கள் கதறினார்கள்; ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களுக்கு சாபம் இட்டார்கள். இதனை எதிர்பார்த்து நகராட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் சொல்லி வைத்தாற்போல தலைமறைவாகி விட்டார்கள்.

 

சட்டத்தின் சக்கரங்கள் சுழல்கின்றன. முன்னறிவிப்பு கொடுத்துவிட்டுத்தான் இடிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆணையிட்டிருப்பதால் தென் மாவட்டங்கள் முழுவதும் ஒலிபெருக்கிகளும் தண்டோராக்களும் முழங்குகின்றன. தனது குடிமக்களுக்கு உயிர்வாழும் உரிமையை நேர்மறையில் உத்தரவாதம் செய்யவியலாத அரசானது அவர்களுடைய உயிர்வாழும் உரிமையைப் பறிக்கும்போது "சட்டப்படி' நடந்துகொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவேதான் தண்டோராக்கள்!

 

தங்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த வன்முறைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு மதுரை உயர்நீதி மன்றத்தில் அலைமோதுகிறார்கள் தென் மாவட்ட மக்கள்.

 

சிவகாசியைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி 10இ000 உழைக்கும் மக்களுடைய வீடுகளை அதாவது "ஆக்கிரமிப்பு'களை அகற்றும் பணியைத் தொடங்கியது. அதற்கு இடைக்காலத் தடை பெற்றிருக்கிறார் மதுரை வழக்குரைஞர் லஜபதிராய். ஆனால் மற்ற பல நகரங்களிலிருந்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தென் மாவட்டங்களின் எல்லா நகரங்களிலும் சட்டத்தின் புல்டோசர் சக்கரங்கள் ஏழைகளின் குடிசைகளை மிதித்து நசுக்குவதற்கு அரசின் ஆணையை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன.

 

மும்பை டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கிய குடிசை இடிப்பில் தகர்க்கப்பட்ட வீடுகள் 91இ000. ஆனந்த் நகர் என்ற சேரிப்பகுதியில் புல்டோசர்கள் நுழைந்தபோது "இடிக்காதே இடிக்காதே' என்று கதறியபடியே தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்துக் கொண்டார் ராஜேந்திர சிரேஷ்ட் எனும் தொழிலாளி. 20 நிமிடங்கள் அவர் உடல் எரிந்து துடித்து அடங்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது போலீசு. புல்டோசர்கள் வேடிக்கை பார்க்கவில்லை. அவை இயங்கின.

 

காட்கோபர் பகுதியில் குடிசை இடிப்பு தொடங்கிய நேரத்தில் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். பிரசவம் முடியும் வரை கூட புல்டோசர் காத்திருக்க வில்லை. திறந்தவெளியில் மறைப்புக்கு மக்களே சுற்றி நிற்க அவள் பிரசவித்தாள். புல்டோசர் அவளுடைய வீட்டை நசுக்கிக் கொன்றது.

 

பகுதி மக்கள் மீண்டும் குடிசை போட்டுவிடாமல் தடுப்பதற்காக கூரை மூங்கில் கதவு அனைத்தையும் நெருப்பு வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர் மாநகராட்சி ஊழியர்கள்.

 

3 லட்சம் மும்பை மக்கள் கடந்த 3 மாதங்களாக வெட்டவெளியில் தவிக்கிறார்கள். கழிவறை தேடி தண்ணீரைத் தேடித் தெருத்தெருவாக அலைகிறார்கள் பெண்கள். வெயிலும் கடும் குளிரும் பல குழந்தைகளைக் காவு வாங்கிவிட்டன.

 

ரஃபீக் நகர் என்ற இடிக்கப்பட்ட குடிசைப் பகுதியின் மக்கள் அந்த இடிபாடுகளின் மீதே படுத்துறங்குகிறார்கள். ""இது கல்லறைக்காக ஒதுக்கப்பட்ட இடம்'' என்று அறிவிக்கிறது அங்கே மாநகராட்சி நட்டு வைத்திருக்கும் அறிவிப்புப் பலகை

 

இவை மும்பை குடிசை இடிப்பின் சில காட்சிகள் மட்டுமே. மராத்திய காங்கிரசு அரசும் சிவசேனாவின் மும்பை நகராட்சியும் இணைந்து நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதலை பாக்தாத் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலுக்குக் கீழான எதனுடனும் ஒப்பிட முடியாது.

 

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து 305 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியிருப்பதாக அறிவித்திருக்கிறார் மராத்திய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்.

 

மகாராஷ்டிராவில் இன்னமும் அமலில் இருக்கும் நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்த வேண்டிக் காத்திருக்கும் காலி மனைகளின் பரப்பு 30இ000 ஏக்கர். 1971 முதல் அரசு கையகப்படுத்தியுள்ள காலிமனைகளோ வெறும் 165 ஏக்கர்.

 

இன்று சதுர அடி 250 ரூபாய் வாடகை நிலவுகின்ற நகரின் மையமான பகுதிகளில் இருக்கும் அரசு நிலம் பெரும் தரகு முதலாளிகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகைத் தொகை சதுர அடி 2 ரூபாய். இதனால் மட்டும் ஆண்டுதோறும் அரசு இழக்கும் தொகை 3000 கோடி. இவையன்றி மூடிக் கிடக்கும் ஜவுளி ஆலைகளில் முடங்கியிருக்கும் அரசு நிலம் 600 ஏக்கர். 58 தனியார் ஜவுளி மில்கள் அரசு நிலத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

மத்திய மும்பையில் உள்ள 33 மில்களில் 29 மூடப்பட்டு விட்டன. தொழிலாளிகளின் ஊதிய பாக்கியைக் கூடத் தராத அந்த மில் முதலாளிகள் ஆலை நடத்துவதற்காக அரசிடம் குத்தகைக்கு வாங்கிய நிலத்தில் ஏழு நட்சத்திர விடுதிகளையும் ""ஷாப்பிங் மால்''களையும் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். கடாவ் மில்லின் 6000 தொழிலாளிகள் தங்கள் சம்பள பாக்கிக்காக 1982இலிருந்து இன்னும் போராடி வருகிறார்கள். அந்த மில் நின்று கொண்டிருக்கும் அரசு நிலத்திற்கு மாத வாடகையோ வெறும் 10இ156 ரூபாய்!

 

"சட்ட விரோதமானவை' என்று மராட்டிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மும்பை குடிசைப் பகுதிகள் பல ஆயிரம். ஆனால் "சட்டவிரோதமான கட்டிடங்கள்' என்று பட்டியலிடப்பட்டிருப்பவையோ வெறும் 125 தான். ""மும்பையின் பாந்த்ரா பகுதியில் மட்டும் 500 சட்டவிரோதக் கட்டிடங்களை உள்துறை அமைச்சருக்கு நான் காட்டுகிறேன். நீதிமன்றத் தடையாணை நீக்கப்பட்ட பிறகும் மாநகராட்சி இடிக்க மறுக்கும் பல கட்டிடங்களையும் நான் காட்டுகிறேன்'' என்கிறார் சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராகப் போராடிவரும் எட்வின் பிரிட்டோ. இந்தக் கணக்கின்படி மாநகரம் முழுவதும் குறைந்த பட்சம் 50இ000 கட்டிடங்கள் சட்ட விரோதமானவையாக இருக்கக் கூடும்.

 

மேற்கூறியவையனைத்தும் பொது இடங்களை உண்மையிலேயே ஆக்கிரமித்திருப்பவர்கள் யார் என்பதை நிறுவுவதற்கான சில புள்ளி விவரங்கள்.

 

மும்பையின் தற்போதைய மக்கள் தொகை 130 லட்சம். இதில் 65மூ பேர் அதாவது சுமார் 85 லட்சம் பேர் சேரிகளில் வசிப்பதாகவும் சேரிகளின் மொத்தப் பரப்பளவு மும்பை நகரின் 6 சதவீத நிலம் என்றும் கூறுகிறது மராத்திய அரசின் அறிக்கை. மும்பையின் 73மூ மக்கள் ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டிலும் 18மூ பேர் ஒரு சமையலறையும் ஒரு அறையும் உள்ள வீட்டிலும் வசிப்பதாகவும் அரசுப் புள்ளி விவரம் கூறுகிறது. அதாவது இரண்டு அறைகளுக்கு மேல் கொண்ட வீடுகளில் வசிப்போர் வெறும் 9 சதவீதத்தினர்தான்! இதில் 3இ4 அறைகள் கொண்ட நடுத்தர வர்க்கக் குடியிருப்புகளும் அடக்கம்!

 

இதுதான் மும்பை! சிவகாசி திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களின் குடியிருப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுமாயின் ஏறத்தாழ இதனையொத்த சித்திரத்தையே நாம் பெறுவோம்.

 

குடிசை இடிப்பு குறித்த ஓட்டுக் கட்சிகளின் அணுகுமுறையிலும் தேசிய அளவில் பெருத்த வேறுபாடு இல்லை. மும்பையின் 40 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு 8 லட்சம் இலவச வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து ஏற்கெனவே ஆட்சியைப் பிடித்த சிவசேனா பா.ஜ.க. அரசு ஒரேயொரு வீடு கூடக் கட்டித் தரவில்லை.

 

2000ஆம் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் அனைத்திற்கும் உத்தரவாதம் வழங்குவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி இப்போது 1995இல் உருவான குடிசைப்பகுதிகளை இடிக்கிறது. அச்சிடப்பட்ட தேர்தல் அறிக்கையைக் காட்டிக் கேள்வியெழுப்பிய நிருபர்களிடம் ""தேர்தல் அறிக்கை தயாரித்ததில் நான் ஈடுபடவில்லை'' என்று தெனாவெட்டாகப் பதிலளிக்கிறார் முதல்வர் தேஷ்முக். மாநகராட்சியை கையில் வைத்திருக்கும் சிவசேனா குடிசை இடிப்புக்கு முழு ஆதரவு வழங்குகிறது.

 

""அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். தங்குவதற்கு வீடில்லாதவர்கள் நகரத்திற்கு ஏன் வருகிறார்கள்? இந்தச் சேரிகள் இருக்கும்வரை மும்பை உலகத்தரம் வாய்ந்த நகரமாக ஆகவே முடியாது. சேரி மக்களால் எங்கள் வாழ்க்கை முறையே நாளுக்கு நாள் நாசமாகி வருகிறது. வெளிநாட்டுக் காரர்களிடம் நம் மதிப்பும் கெடுகிறது'' என்று நஞ்சைக் கக்குகிறார் விஜய் மகாஜன். பம்பாய் நகரப் பெரு முதலாளிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ""மும்பைக்கே முதலிடம்'' என்ற அமைப்பிற்கு இவர் தலைவர்.

 

மும்பை நகரின் அரசுப் புறம்போக்குகளில் குடிசை போட்டிருக்கும் மக்களனைவரும் ""பொதுச் சொத்தைக் கொள்ளையிடும் திருடர்கள்; தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள்'' என்பது மகாஜனின் கருத்து. மும்பை சேரி மக்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டுமென்று கூடக் குரலெழுப்பியிருக்கிறார்கள் மும்பை முதலாளிகள்.

 

ஏழைகள் மீது வெறுப்பும் தொழிலாளி வர்க்கத்தின் மீது கட்டுங்கடங்காத துவேசமும் கொண்ட முதலாளி வர்க்கத்தினரின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் வெளிவருவதில் வியப்பில்லை.

 

ஆனால் ""உயிர்வாழும் உரிமையைப் பறிக்காதே! மாற்று இடம் வழங்காமல் மக்களின் குடிசைகளை இடிக்காதே!'' என்ற கோரிக்கைகளுடன் நீதிமன்றப் படியேறிய மக்களிடம் உச்சநீதி மன்றம் கூறியதும் இதுதான்: ""பொது இடத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதென்பது பிக்பாக்கெட் திருடனுக்கு பரிசு வழங்குவதற்கொப்பானது'' என்று பிப்ரவரி 2000த்தில் தீர்ப்பளித்தது உச்சநீதி மன்றம்.

 

ஆனால் இதே மும்பை நகரின் நடைபாதைவாசிகள் 1981இல் மாநகராட்சியால் விரட்டப்பட்ட போது மேற்கூறிய தீர்ப்புக்கு நேரெதிரான தீர்ப்பை முன்னர் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிறது.

 

""உயிர்வாழும் உரிமை என்பது வாழ்க்கை நடத்துவதற்கான தொழில் செய்யும் உரிமையையும் வாழ்விட உரிமையையும் உள்ளடக்கியது. எனவே நடைபாதை வாசிகளை ஒருதலைப்பட்சமாக அகற்றக் கூடாது'' என்று ஓல்கா டெலிஸ் என்ற பத்திரிகையாளர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உச்சநீதி மன்றம் கூறியது.

 

""சட்டப்பிரிவு 21 வழங்கும் உயிர்வாழும் உரிமை என்பதில் வாழ்விடத்துக்கான உரிமையும் அடங்கியுள்ளதால் வீடு என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை'' என்றும் ""உயிர்வாழும் உரிமை என்பது பொருளுள்ளதாக இருக்க வேண்டும்; ஒவ்வொரு குடிமகனுக்கும் உறைவிடம் வழங்குவது அரசின் சட்டபூர்வமான கடமை'' என்றும் 1990களில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புகள் கூறின.

 

இந்த ஏட்டுச் சுரைக்காய் தீர்ப்புகளால் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை நடைமுறையில் பெற முடிந்ததில்லையெனினும் "முற்போக்குத் தீர்ப்புகள்' என்று இன்றளவும் கொண்டாடப்படும் இந்தத் தீர்ப்புகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் வெளிவந்தவை.

 

இந்திராவின் அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் எல்லா அடிப்படை உரிமைகளும் முடக்கப்பட்டு டெல்லி மும்பை போன்ற பெருநகரங்களை அழகுபடுத்துவது என்ற பெயரில் சஞ்சய் காந்தியின் ஆணைப்படி ஆயிரக்கணக்கான குடிசைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அவசரநிலைப் பாசிசம் தோற்றுவித்த சிவில் உரிமை குறித்த விழிப்புணர்வு இத்தகைய பல தீர்ப்புகளுக்கு வழிவகுத்தது. ""இந்தச் சுரண்டல் சமுதாயத்தில் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறமுடியாத பரிதாபத்துக்குரிய பலிகடாக்களான ஏழை மக்கள் சார்பாக யார் வேண்டுமானாலும் பொதுநலன் கருதி வழக்கு தொடரலாம்'' என்ற உரிமையையும் அங்கீகரித்தது உச்சநீதி மன்றம்.

 

இன்று சொற்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவற்றின் பொருளை நீதிமன்றம்
நேரெதிராக மாற்றிவிட்டது. மதுரையின் தரைக்கடை வியாபாரிகளைத் துரத்துவதும் சிவகாசித் தொழிலாளர்களின் வீடுகளை இடிப்பதும் "பொதுநலன்' கருதி அவசியமானது என்கிறது மதுரை நீதிமன்றம்.

 

""தூய்மையான சுற்றுப்புறத்துக்கான உரிமை உயிர்வாழும் உரிமையைக் காட்டிலும் மேன்மையானது'' என்கிறது உச்சநீதி மன்றம். வாழ்விடத்திற்கான உரிமையோ பிக்பாக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்பாகி விட்டது.

 

"மகாஜன் என்ற பணக்காரப் பன்றியின் கொழுப்பெடுத்த பேச்சு' என்று நீங்கள் கருதியிருக்கக் கூடிய சொற்கள் மகாகனம் பொருந்திய நீதிபதிகளின் வாயிலிருந்து வெளிவரும் அரசியல் சட்டத்திற்கான பொழிப்புரைகளாகி விட்டன. பாசிசத்திற்கெதிரான ஜனநாயக வேடம் பூண்டிருந்த நீதிமன்றம் இன்று பாசிசத்தை சட்டபூர்வமாக அமல்படுத்தும் பொறுப்பைத் தானே முன்வந்து ஏற்றிருக்கிறது.


···


நகர்ப்புற ஏழைமக்கள் மீது நாடு தழுவிய அளவில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் சாலைகளை அகலப்படுத்தும் திடீர்க் கரிசனையோ சேரிகளைப் பார்க்கப் பொறுக்காத பணக்கார வர்க்கத்தின் வழக்கமான வெறுப்புணர்வோ அல்லது ஏதோ சில நீதிபதிகளின் தற்செயலான கிறுக்குத்தனமோ அல்ல. இத்தகைய தனிப்பட்ட காரணங்கள் பல இருப்பினும் அவை செயல்படுவதற்கான களத்தை மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான் உருவாக்கியிருக்கின்றன.

 

மும்பைக்கே முதலிடம் என்ற திட்டத்துக்கு ஆலோசனை வழங்கிய மெக்கின்ஸி எனும் பன்னாட்டு நிறுவனம் எல்லா குடிசைப் பகுதிகளையும் நகரிலிருந்து அகற்றிவிட்டு 2013ஆம் ஆண்டிற்குள் இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவில் "அழகு மும்பை' உருவாக்க ஆலோசனை கூறியிருக்கிறது. 1990 முதற்கொண்டே மும்பையில் குடிசை மாற்று வீடுகள் கட்டுவதை அரசு நிறுத்திவிட்டது என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

 

இவ்வாறு நகரங்கள் மற்றும் பெருநகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் "குடிசை வாழ் மக்கள்' எனப்படுவோர் யார்?

 

நகரம் சார்ந்த உற்பத்தித் துறைகளின் பரப்பிலிருந்தும் வணிகத்துறை மற்றும் சேவைத் துறைகளின் பரப்பிலிருந்தும் மறுகாலனியாக்கம் யாரையெல்லாம் துரத்துகிறதோ அவர்கள் நகரத்தின் நிலப்பரப்பிலிருந்தும் துடைத்தெறியப்படுகிறார்கள்.

 

சிறு தொழில்களை ஒழிக்கும் கொள்கைகள் மற்றும் சிறு வணிகத்தை ஒழிக்கும் ""வாட்'' வரிவிதிப்பு போன்றவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேலிருந்து இடிக்கிறார் சிதம்பரம். அவர்களது வாழ்விடத்தைக் கீழிருந்து பெயர்த்தெடுக்கின்றன மராட்டிய முதல்வர் தேஷ்முக்கின் புல்டோசர்கள்.

 

வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் விவசாயமும் சிறுதொழில்களும் அழிந்து கோடிக்கணக்கான மக்கள் திக்கற்றவர்களாகி பெருநகரங்களை நோக்கி ஓடக் காரணம் அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகள். இந்தக் காரணத்தைப் பாதுகாக்கிறார் சிதம்பரம்; விளைவுகளை ஒழித்துக் கட்டுகிறார் தேஷ்முக்.

 

பெருநகரங்களின் 70 சதவீத குடிசைவாழ் மக்களை வெளியேற்றிவிட்டால் "ஆண்டை'களுக்குத் துணி வெளுக்கவும் சாக்கடை அள்ளவும் தெருக்கூட்டவும் ஆள் வேண்டுமே! ""ஐம்பது மைலுக்கு வெளியே துரத்தினாலும் காலை 5 மணிக்கெல்லாம் அவர்கள் வேலைக்கு ஆஜராகி விடுவார்கள்'' என்பது ஆண்டைகளுக்குத் தெரியும். ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களை அள்ளிக் கொண்டு வருவதைப் போல பேருந்து அனுப்பி இவர்களைக் கொண்டுவரத் தேவையில்லை. தங்கள் சொந்தக் காசில் அவர்கள் வேலைக்கு வந்து சேர்வார்கள். எத்தனை மைல் தொலைவிற்கு வெளியே தள்ளினாலும் பசியே எரிபொருளாகி தங்களை நோக்கி அவர்களைத் தள்ளிக் கொண்டு வரும் என்பது முதலாளி களுக்குத் தெரியும்.

 

மும்பையின் ஜூஹு கடற்கரை என இன்று அழைக்கப்படும் மோராகான் எனும் மீனவ கிராமத்தில் எஞ்சியிருக்கும் மீனவர் குடிசைகள் டிசம்பர் மாதம் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கே கடற்கரை மாளிகைகள் கட்டி வாழும் தேவ் ஆனந்த் டிம்பிள் கபாடியா மாதுரி தீட்சித் போன்ற நட்சத்திரங்களுக்கு மேற்கூறிய குடிசை இடிப்பின் "பொருளாதார சூத்திரம்' தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய "அழகுணர்ச்சி' குடிசைகளை அப்புறப்படுத்தக் கோருகிறது.


மதுரை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி குடிசை இடிப்புக்கு உத்திரவிடும்போது மாதுரி தீட்சித்தின் அழகுணர்ச்சி அரசியல் சட்டத்தின் உணர்ச்சியாக அரிதாரம் பூசிக் கொள்கிறது. "பொதுநலன்' என்பதற்குப் புதுவிளக்கம் பிறக்கிறது.

 

மதுரை நகரின் மீது சட்டத்தின் சக்கரங்கள் சுழலும்போது நடைபாதை வியாபாரிகளுடன் நடைபாதைக் கடவுளர்களும் சேர்ந்து நசுங்கிச் சாகிறார்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர்களுக்கும் விநாயகர் கலவரத்துக்கும் அனுமதி வழங்கிய நீதிமன்றம் ""மதத்தின் பெயரால் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது'' என்று இப்போது வேதம் ஓதுகிறது.

 

குடிசை இடிப்பு நடவடிக்கை கிரிமினல் ஒழிப்பு நடவடிக்கையாகச் சித்தரிக்கப்படுகிறது. குடிசை வாழ் மக்கள் மீது கட்டப் பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு வரையிலான எல்லா அக்கிரமங்களையும் போலீசின் ஆசியுடன் நடத்திவந்த தாதாக்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் இந்த நடவடிக்கையின் மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக செய்தி வெளியிடுகின்றன பத்திரிகைகள். புல்டோசரைப் பயன்படுத்தி ரவுடிகளைக் "ஒழிக்கும்' அதிசயத்தையும் நாம் காண்கிறோம்.

 

35 ஆண்டுகளாக சிவகாசியின் வெம்பக்கோட்டைத் தெருவில் வாழ்ந்து வந்த தொழிலாளர்களை ஒரே ஒரு உத்தரவின் மூலம் ஆக்கிரமிப்பாளர்களாக்கி அவர்களைத் தண்டித்து விட்டது நீதிமன்றம். ஆனால் அந்த "ஆக்கிரமிப்பாளர்களிடம்' சொத்துவரி குழாய் வரி மின்கட்டணம் வசூலித்த நகராட்சி அதிகாரிகள் மீதோ ரேசன் அட்டையும் வாக்காளர் அடை யாள அட்டையும் வழங்கிய மாநில அரசு மீதோ நடவடிக்கை இல்லை.

 

""35 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தால் ஒரு ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது; பொது இடத்தை ஆக்கிரமித்த திருடர்களுக்குப் பரிசு வழங்க முடியாது'' என்பதுதான் நீதிபதிகளின் வாதம்.

 

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் உழைத்துச் சேர்த்த அவர்களுடைய "தனிப்பட்ட சொத்தான' பென்சன் நிதி தனியார் முதலாளிகளிடம் வழங்கும் நோக்கத்திற்காக அரசால் களவாடப் பட்டிருக்கிறது. ""கற்பழிப்பு முடிந்துவிட்டது; இனி கத்திப் பயனில்லை; தாலி கட்ட ஆதரவு தாருங்கள்'' என்று பென்சன் மசோதாவுக்கு இடதுசாரிகளிடம் ஆதரவு கேட்கிறார் சிதம்பரம். சிதம்பரத்தின் இந்த ஆக்கிரமிப்பை தகர்க்க எந்த புல்டோசரை ஏவுவது?

 

நீதிமன்றத்தின் ஆசியுடன் சர்வகட்சி ஒத்துழைப்புடன் இன்று நகர்ப்புறங்களில் நடத்தப்படும் இந்த நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகள் அல்ல; இது உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆளும் வர்க்கம் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்புப் போர். உள்நாட்டுத் தொழில்கள் மீது மக்கள் தம் சொந்தக் கையை ஊன்றி உருவாக்கிக் கொண்ட வாழ்க்கை மீது நமது வாழ்வுரிமை மீது எதிரிகள் தொடுக்கும் போர்.

 

பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்கும் யூதக் குடியேற்றம் ஈழத்தை ஆக்கிரமிக்கும் சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றுக்கும் குடிசைப் பகுதியை ஆக்கிரமிக்கும் இந்த "நட்சத்திர'க் குடியேற்றத்துக்கும் வேறுபாடில்லை. பாகிஸ்தானில் நுழையும் இந்திய இராணுவத்தின் டாங்கிகளுக்கும் வெம்பக்கோட்டைத் தெருவில் நுழைந்த புல்டோசர்களுக்கும் இடையிலான வேறுபாடு சக்கரங்களின் எண்ணிக்கையில் மட்டுமே! நம்மீது ஒரு உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள் எதிரிகள். போரை போரால் எதிர்கொள்வோம்!


· பாலன்