பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். பொருளாதார நிபுணர்கள் இந்த பட்ஜெட்டுக்கு 10க்கு 8 மதிப்பெண் கொடுக்கலாம் என்கிறார்கள்.
""1997க்குப் பின்வந்துள்ள நல்லதொரு எதார்த்தமான பட்ஜெட் இது'' எனத் தரகு முதலாளிகள் வருணிக்கிறார்கள். இவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளும் பட்ஜெட்டைப் புகழ்ந்து தள்ளியுள்ளன.
""இதற்கு முன் எந்தவொரு பட்ஜெட்டும் இதனைப் போல கிராமப்புற வளர்ச்சிக்கான திசை வழியைச் சுட்டிக் காட்டியதில்லை'' எனப் பாராட்டி இருக்கிறது வலது கம்யூனிஸ்டு கட்சி.
"மார்க்சிஸ்டு' கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) ""இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க நல்ல மாற்றங்கள் இருப்பதாக'' அறிக்கை வெளியிட்டுள்ளது. ""நாங்கள் கேட்ட அளவிற்கு சமூக நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதைத் தவிர வேறெந்தக் குறையும் பட்ஜெட்டில் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது அக்கட்சி.
கல்வி சுகாதாரம் விவசாயம் கிராமப்புற வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைக் காட்டித்தான் இதனைக் கிராமப்புற ஏழை மக்களுக்கான பட்ஜெட் எனப் பலரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு பொருளாதாரப் புள்ளி விவர மோசடி!
நலத்திட்டங்களில் தில்லுமுல்லு
""மார்க்சிஸ்டு'' களின் வேத நூலாகிவிட்ட குறைந்தபட்ச பொது வேலை திட்டத்தில் ""ஒவ்வொரு கிராமப்புற நகர்ப்புற ஏழை மற்றும் கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்திலும் உடற்தகுதியுள்ள ஒருவருக்குக் குறைந்தபட்சக் கூலி கிடைக்கும் வகையில் ஆண்டுக்கு நூறு நாட்களுக்காவது சட்டபூர்வ வேலை உத்திரவாதம் கிடைக்கும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்தத் திட்டத்தில் இருந்து நகர்ப்புறத்தை ஒதுக்கிவிட்டு இதனை ""தேசிய கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம்'' என வெட்டிக் குறுக்கி விட்டார் ப.சிதம்பரம். இந்தத் திட்டத்திற்கு 5இ400 கோடி ரூபாய் 50 இலட்சம் டன் உணவு தானியம் இரண்டுமாகச் சேர்த்து 11இ000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை ஒப்பீடும் பொழுது 275 சதவீதம் அதிகம் என்றும் பீற்றிக் கொள்கிறார்கள்.
இந்த 11இ000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டை காகிதத்தில் பார்த்து நக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஏனென்றால் இந்தத் திட்டத்திற்கான பணத்தை இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும் என ப.சிதம்பரம் பட்ஜெட் உரையிலேயே பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இவர் பணத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் கிராமப்புற ஏழைகள் அடிவயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்.
இது ஒருபுறமிருக்க இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் அரிசி ஃ கோதுமையின் விலை கிலோ ஒன்றுக்கு 11.00 ரூபாய் என பட்ஜெட்டில் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் புழுத்துப் போன அரிசியை யாரும் ரூ. 5.50க்கு மேல் வாங்க மாட்டார்கள். இதன்படி பார்த்தால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் உணவு தானியத்தின் மதிப்பு 2இ750 கோடி ரூபாய்தான். இதோடு ப.சிதம்பரம் கண்டுபிடிக்கப் போகும் 5இ400 கோடி ரூபாயையும் சேர்த்துக் கொண்டால் தேசிய கிராமப்புற வேலை உத்திரவாத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8இ200 கோடி ரூபாய்தான்!
கிராமப்புற ஏழைகளின் வேலை வாய்ப்புக்காக வேலைக்கு உணவு திட்டம் சம்பூர்ண கிராம வேலை வாய்ப்பு திட்டம் என்ற இரு திட்டங்களை ஏற்கெனவே மைய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்திரவாதத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே சம்பூர்ண கிராம வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1இ600 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம் செயல்படும் மாவட்டங்களில் வேலைக்கு உணவு திட்டம் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல தில்லுமுல்லுகள் செய்துதான் கிராமப்பற வேலை வாய்ப்புக்கு 275 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் கும்பல் படம் காட்டுகிறது.
கிராமப்புற ஏழைகளின் வேலைவாய்ப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்த திட்டக் கமிசன் ஒரு கிராம பஞ்சாயத்தில் ஒரு குடும்பத்துக்குத்தான் நூறு நாட்களுக்கு வேலை கிடைப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் கூட அதற்கு 40இ000 கோடி ரூபாய் முதல் 50இ000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் ப.சிதம்பரமோ தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்திரவாதத் திட்டத்திற்கு வெறும் 5இ400 கோடி ரூபாயை ஒதுக்குவதாகக் காகிதத்தில் குறிப்பிட்டு விட்டு கிராமப்புற வேலைவாய்ப்பில் ஏதோ புரட்சியைச் செய்துவிட்டது போல மாய்மாலம் செய்கிறார்.
கிராமப்பற வளர்ச்சிக்கு கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 2இ905 கோடி ரூபாய் (நிதி ஒதுக்கீடு 11இ494 கோடி ரூபாய்) நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் கூறுகிறார். பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கிராமப்புற வளர்ச்சிக்கு 200203ஆம் ஆண்டில் 11இ939 கோடி ரூபாயும்; 200304ஆம் ஆண்டில் 11இ369 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 8இ589 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. தங்களது ஆட்சியில் குறைக்கப்பட்டதை மீண்டும் பழைய அளவிற்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு ஏழைப் பங்காளன் போல வேடம் போட்டுக் கொண்டுவிட்டார் ப.சிதம்பரம்.
""பாரத் நிர்மாண்'' என்ற திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புற ஏழை மக்களுக்கு 2009க்குள் 60 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏனோதானோவென்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்திரா ஆவாஸ் யோஜ்னா என்ற திட்டம்தான் பாரத் நிர்மாண் எனப் புதிய அவதாரம் எடுத்துள்ளது. ""மைய அரசு ஏறத்தாழ 100 நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்ததாகவும் அவற்றுள் 30 திட்டங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு சில திட்டங்களை இணைத்தும்; சில திட்டங்களுக்குப் புதுப் பெயர் கொடுத்தும் பட்ஜெட்டில் அறிவித்திருப்பதாக'' மைய அரசின் அதிகாரி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.
""கிராமப்புற வளர்ச்சி'' என்ற முகமூடி
சி.பி.எம். உள்ளிட்டு இந்த பட்ஜெட்டைப் பாராட்டுபவர்கள் அனைவருமே இது கிராமப்புற வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட் என்கிறார்கள். இவர்களைப் பொருத்தவரை கிராமங்களில் தார்ச் சாலை போட்டு நகரத்தோடு இணைப்பது; கிராமங்களில் தொலைபேசி கணினி வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுதான் கிராமப்புற வளர்ச்சி.
இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் நசிவடைந்து கொண்டே போகும் விவசாயம் எழுந்து நின்றுவிடுமா? கடன் சுமை தாளாமல் ஏழை நடுத்தர விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதைத் தடுத்து விடுமா? அரிசிக்கும் கோதுமைக்கும் கரும்புக்கும் எண்ணெய் வித்துக்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைத்துவிடுமா! இந்தப் பிரச்சினைகளில் ஒன்றைக் கூடத் தீர்க்க சிதம்பரத்தின் பட்ஜெட் முன்வரவில்லை; மாறாக கிராமப்புற பொருளாதாரத்தையும் தாராளமயத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கத் தான் முனைப்பு காட்டுகிறது.
நமது நாட்டில் 1980இல் ஒரு நபருக்கு 178 கிலோ என்றிருந்த உணவு தானிய உற்பத்தி இன்று 155 கிலோவாகச் சரிந்துவிட்டது. நிலைமை இப்படியே போனால் 2015இல் இந்தியா உணவு தானியங்களை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என எச்சரிக்கிறார்கள் விவசாய வல்லுநர்கள்.
இப்படிப்பட்ட நிலைமையில் உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது பற்றி பட்ஜெட் பேசவில்லை. மாறாக மாற்றுப் பயிர் திட்டங்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்
ப.சிதம்பரம். சென்னை மும்பய் போன்ற ஏழு நகரங்களின் அழகுக்காக 5இ000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கும் ப.சிதம்பரம் விவசாய வளர்ச்சிக்கு வெறும் 6இ425 கோடி ரூபாயை வாய்க்கரிசியாகப் போட்டிருக்கிறார். இந்த ஒதுக்கீட்டில் 10ல் ஒரு பங்கு 630 கோடி ரூபாய் ஏற்றுமதி சார்ந்த தோட்டப் பயிர் வளர்ச்சிக்கு கொட்டப்பட்டுள்ளது.
விவசாயக் கடனுக்காக 1இ08இ500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை 1 கோடியாக உயர்த்த வேண்டும் என உத்திரவு போட்டிருக்கிறார் ப.சிதம்பரம். அரசாங்கக் கணக்குப்படி 1 கோடி விவசாயிகளைத் தவிர மீதி உழவர்களெல்லாம் கந்துவட்டிக்காரனிடம்தான் கையேந்த வேண்டும். பிறகு ஏன் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நடக்காது? இது ஒருபுறமிருக்க இந்த ஒரு கோடி விவசாயிகள் யார் என்றால் ஒப்பந்த விவசாயத்தில் நுழைந்துள்ள பெப்சி கெல்லாக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கூட விவசாயிகள்தான் எனத் தாராளமயத்தைப் புகுத்தி விட்டார் ப.சிதம்பரம்.
ஒரு கோடி ஏக்கரைப் புதிதாக விளைநிலமாக்கப் போவதாக பட்ஜெட்டில் சொல்லியிருக்கிறார் ப.சிதம்பரம். ஒரு கோடி ஏக்கர் நிலம் எங்கேயிருந்து வரும்? பண்ணையாளர்களிடமிருந்து பிடுங்கப் போகிறதா காங்கிரசு அரசு? அரசாங்கப் புறம்போக்கு நிலங்களை அம்பானி போன்ற "விவசாயி'களிடம் குத்தகைக்கு விடும் சதித் திட்டமாகத்தான் இது இருக்க முடியும். சிதம்பரத்தின் இந்த அறிவிப்பைக் கேட்டவுடனே நிலமில்லாத விவசாயிகள் குதூகலிக்கவில்லை. உரக்கம்பெனி முதலாளிகள்தான் மகிழ்ச்சியடைந்தார்கள்.
விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைத் தருமாறுதான் அரசாங்கத்திடம் கேட்கிறார்கள். ஆனால் ப.சிதம்பரமோ சந்தை விலை விபரத்தை விவசாயிகள் தெரிந்து கொள்ள கிராமப்புற தகவல் மையம் என்ற திட்டத்தை உருவாக்கி அதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். ஊருக்கு வழி கேட்டால் இவர்கள் சுடுகாட்டுக்கு வழிகாட்டுகிறார்கள். ஏற்கெனவே கிராமப்புறச் சந்தையை இணைய தள வலைப் பின்னல் மூலம் விழுங்கிக் கொண்டிருக்கும் ஐ.டி.சி. இந்துஸ்தான் லீவர் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்குத்தான் இந்தத் திட்டம் பயன்படும்.
நாலுகால் பாய்ச்சலில் தாராளமயம்
விவசாய விளைபொருட்களின் இறக்குமதி மீது அதிக சுங்கவரி விதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையைக் கண்டு கொள்ளாத ப.சிதம்பரம் சுங்கவரித் தீர்வையைத் தென்கிழக்காசிய நாடுகளின் அளவிற்குக் குறைப்பதுதான் எனது குறிக்கோள் என பட்ஜெட்டை உரையிலேயே அறிவித்துவிட்டார். இதனின் தொடக்கமாக 217 விதமாக மின்னணு சாதனங்கள் நுகர் பொருட்களின் இறக்குமதிக்கு எந்தவிதமான சுங்கவரியும் கிடையாது எனத் தாராள சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சிறு தொழில் தயாரிப்புக்கென ஒதுக்கப்பட்ட 108 பொருட்களை அப்பட்டியலில் இருந்து நீக்கி இனி தரகு முதலாளிகளும் அந்த 108 தொழில்களில் நுழையலாம் எனச் சலுகை காட்டியதன் மூலம் சிறு தொழில்களின் அழிவைத் துரிதப்படுத்தியிருக்கிறார் ப.சிதம்பரம்.
உலக வங்கி உத்திரவுப்படி ரேசன் அட்டை வழங்குவதை வறுமை கோட்டுக்கு மேலே ஃ கீழே எனப் பிரித்ததைப் போல தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திலும் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப நபர்களுக்குத்தான் வேலை வழங்கப்படும்; இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது; அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலி வழங்குவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது எனப் புதிய விதிகளைப் புகுத்தி அந்தக் கவர்ச்சிவாதத் திட்டத்தையே செல்லாக் காசாக்கி விட்டார்.
பட்ஜெட்டுக்கு முன்பாகவே இந்திய வங்கிகளில் 74 சதவீதம் வரை அந்நிய மூலதனம் நுழைய அனுமதியளித்திருந்த ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அந்நிய வங்கிக் கிளைகள் திறப்பதற்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளை அறவே நீக்கிவிட்டார்; மேலும் அந்நிய வங்கிகள் தங்களின் துணை நிறுவனங்களைத் திறந்து கொள்ளவும் அனுமதி அளித்திருக்கிறார்.
ரிசர்வ் வங்கியை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவும்; பொதுத்துறை வங்கிகள் வைத்திருக்க வேண்டிய அன்றாட பணக் கையிருப்புக்கு இருந்து வரும் கட்டுப்பாடுகளை நீக்கவும் மைய அரசு பட்ஜெட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த சுதந்திர செயல்பாடு என்பது ஐ.எம்.எஃப். உலக வங்கியின் நிபந்தனைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கூட இன்றி நடைமுறைப்படுத்தும் சுதந்திரம் ஆகும். மேலும் சுரங்கத் தொழிலிலும் சில்லறை வர்த்தகத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதியளிக்கப் போவதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
கறிச் சோறும் எலும்புத் துண்டும்
ஏழை விவசாயிகளின் விவசாயக் கடனுக்கான வட்டியைக் கூட ரத்து செய்ய மறுத்துவிட்ட ப.சிதம்பரம் மேட்டுக்குடி கும்பலுக்கும் முதலாளிகளுக்கும் வரிச் சலுகைகளை அளிப்பதில் மட்டும் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. தனிநபர்களின் வருமானத்திற்கு மட்டுமின்றி உள்நாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் வருமானத்திற்கும் தாராள சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வரிச் சலுகைகளின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் வரி வருவாய்க்கும் இடையேயான விகிதம் 10.53 சதவீதமாக விழுந்து விட்டது. அதேசமயம் நமது நாட்டின் மீது தனியார்மயத்தைத் திணித்துவரும் ஏகாதிபத்திய நாடுகளில் இந்த விகிதம் 37 சதவீதமாகும். அரசனை மிஞ்சிய விசுவாசியாக இருக்கிறது காங்கிரசு கும்பல்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையின் காரணமாக தரகு முதலாளி டாடாவிற்கு அவருடைய உருக்கு ஆலையில் இருந்து மட்டும் 131 கோடி ரூபாய் கூடுதல் இலாபமாகக் கிடைக்கும். இந்த பட்ஜெட்டுக்குப் பின் குமார மங்கலம் பிர்லா என்ற தரகு முதலாளியின் சொத்து மதிப்பு 57.88 கோடி ரூபாயும்; ""இன்போசிஸ்'' நிறுவன அதிபர் நாராயண மூர்த்தியின் சொத்து மதிப்பு 90 கோடி ரூபாயும்; ""விப்ரோ'' நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 1இ443 கோடி ரூபாயும் அதிகரிக்கும் என ""டைம்ஸ் ஆப் இந்தியா'' நாளிதழ் கணக்குப் போட்டுக் காட்டி நம்மை மலைக்க வைக்கிறது.
வரிச் சலுகைகளுக்காக மட்டுமின்றி விவசாயம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதற்காகவும் சிதம்பரத்தின் பட்ஜெட்டைத் தரகு முதலாளிகள் பாராட்டுகிறார்கள். எலி அம்மணமாக ஓடுகிறதென்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது.
நகர்ப்புறச் சந்தை ஏற்கெனவே தேக்கத்தை அடைந்துவிட்டது. எவ்வளவுதான் இலவசங்கள் விற்பனைச் சலுகைகளை வாரி வழங்கினாலும் இந்தத் தேக்கத்தை உடைக்க முடியவில்லை. இதனால் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கிராமங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விட்டன.
இதற்கு ஏற்ப அவர்களின் வியாபாரத் தந்திரங்களும் மாறியுள்ளன. கிராமப்புற மக்களுக்காகவே கிளினிக் ப்ளஸ் ஷாம்பு 50 பைசா பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது. சிகரெட் மட்டுமே தயாரித்து வந்த ஐ.டி.சி. கம்பெனி இன்று நோட்டு புத்தகங்கள் சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்கள் தயாரிப்பிலும் இறங்கிவிட்டது. சிறு தொழில்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொண்டு அவற்றை அழிப்பதன் மூலம் கிராமப்புற மக்கள்கூடத் தங்களின் தேவைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களைத்தான் வாங்க வேண்டும் என்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கிராமப்புறச் சந்தையை வளைக்க வேண்டும் என்றால் கிராமங்களில் ஓரளவு பணப்புழக்கம் இருக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ""பாரத் நிர்மாண்'' என்ற கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமே இந்தப் பணப் புழக்கத்தை ஏற்படுத்துவதுதான். சி.ஐ.ஐ. என்ற தரகு முதலாளிகளின் சங்கம் பாரத் நிர்மாண் திட்டத்தை ஆதரித்துக் கொடுத்துள்ள அறிக்கையைப் படித்துப் பாருங்கள். கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களால் பலன் அடையப் போவது ஏழை விவசாயிகளா? நுகர்பொருட்கள் மோட்டார் பம்ப்புகள் சிமெண்ட் தயாரிக்கும் முதலாளிகளா என்ற உண்மை புரிந்து விடும்.
ப.சிதம்பரம் இந்த பட்ஜெட்டின் மூலம் தரகு முதலாளிகளுக்கு கறி விருந்து படைத்திருக்கிறார். அதில் கொஞ்சம் எலும்புத் துண்டை எடுத்து கிராமப்புற வளர்ச்சி என்ற பெயரில் வீசி விட்டார். மனித முகத்துடன் கூடிய தாராளமயம் எனப் பசப்புகிறார்களே அதனின் உண்மையான முகம் இதுதான். இந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு ப.சிதம்பரத்திற்கு விசுவாசமாக வாலாட்டுகிறார்கள் "மார்க்சிஸ்டு'கள்!
· செல்வம்