04_2005.jpgபிப்ரவரி புதிய ஜனநாயகம் இதழில் அல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணுவுக்கு சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளியும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் கும்பலால் இழைக்கப்பட்ட அநீதியை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை வெளிவந்தது. இதைத் தொடர்ந்து அல்லிவயல் பிரச்சினையில் வி.வி.மு.வின் உறுதியான போராட்டத்தைக் கண்டு உத்வேகமடைந்த பல்வேறு சக்தியினர் குணசேகரன் கும்பலின் அடுக்கடுக்கான தில்லுமுல்லு மோசடிகளை ஆதாரபூர்வமாக அளித்த வண்ணமுள்ளனர். குறிப்பாக வலதுகளின் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் மறவமங்கலத்தில் குணசேகரன் கும்பலின் சவால்கள் அச்சுறுத்தல்களை மீறி எழுச்சியுடன்

 நடந்தேறிய வி.வி.மு.வின் தொடக்கவிழா நிகழ்ச்சியால் புதிய நம்பிக்கையைப் பெற்று வலதுகளின் கட்சிக்குள் "ஒதுங்கி' இருக்கும் சில முக்கிய புள்ளிகள்கூட வி.வி.மு. தோழர்களிடம் தகவல்களை அளித்து வருகின்றனர். இவற்றில் முக்கியமான ஒன்றுதான் குணசேகரன் கும்பலின் ""அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்!''

 

சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டபுரம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி. இதன் தெற்குப்புறமாக அரசு மருத்துவமனை உள்ளது. இதற்குக் கிழக்கே பல பத்து ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இது ராஜவம்ச ஜமீன்களுக்குச் சொந்தமா னது எனச் சில ஆவணங்கள் இருந்தாலும் இந்து அறநிலையத் துறை கணக்குகளின்படி சுமார் 1 ஏக்கர் நிலப்பிரப்பில் கூனங்குண்டு எனும் ஊரணியும் சுமார் 0.30 செண்ட் பரப்பளவில் சுடுகாடும் மருத்துவமனையின் கிழக்குப் புற காம்பவுண்ட் சுவரை ஒட்டி தெற்கே உள்ள இந்திரா நகருக்குச் செல்ல ஒரு பொதுப்பாதையும் இருப்பது வரை படங்களில் தெளிவாக உள்ளது. இந்நிலப்பரப்பு சிவகங்கைக் காடுகள் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. ஊரணி பொதுப்பாதை சுடுகாடு இம்மூன்றும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ள நிலையில் 1991ஆம் ஆண்டு அங்கே வருகிறார் கதாநாயகன் குணசேகரன்.

 

சில போலிப் பத்திரங்களைப் பதிவு செய்துகொண்டு "காடுகள்' என வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் நிலப்பரப்பை முதலில் ஆக்கிரமித்து பின்னர் மெதுவாக ஊரணி சுடுகாடு பொதுப்பாதை ஆகியவற்றிலும் குணசேகரன் கை வைத்தார். ஆரம்பத்தில் கண்டு கொள்ளாத அப்பகுதி மக்கள் பின்னர் தட்டிக் கேட்கத் தொடங்கினர். உடனே தனது வழக்கமான ""கட்டப் பஞ்சாயத்தை'' அப்போதைய சிவகங்கை மாவட்ட வலது கம்யூனிஸ்ட் செயலாளர் எஸ். மகாலிங்கம் தலைமையில் நடத்தி தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

 

அந்த இடத்தைப் பொருத்தவரை குணசேகரன் கொண்டு வந்த போலி பத்திரம் தான் ஒரே ஆவணமாக அப்போது காண்பிக்கப்பட்டு அரசு சர்வேயர் அல்லாமல் தனிநபர் சர்வேயரைக் கொண்டு இடத்தை அளக்க ஆரம்பித்த குணசேகரன் அதிலுள்ள 0.24 செண்ட் சுடுகாடு தவிர மீதமனைத்தும் தமக்கே என்கிற சதியை நிறைவேற்றிக் கொண்டார்.

 

ஒன்றும் புரியாமல் மிரண்டு போயிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் தேனொழுகப் பேசி இந்தச் சுடுகாட்டு இடத்தில் சமுதாயக் கூடம் கட்டித் தருகிறேன் என அவர்கள் வாயில் கூனன் குண்டு ஊரணிக் களிமண்ணையே வைத்து அடைத்தார் "தலித் பாதுகாவலன்' குணசேகரன். பொதுப்பாதை அடைக்கப்பட்டுவிட்டது. கூனன் குண்டு ஊரணியோ புல்டோசரால் மண் நிரப்பப்பட்டு பிளாட்டுகளாக மாறி விற்பனையாகி வருகிறது. வீடுகளும் கட்டப்பட்டு விட்டன. இது நடந்து 14 ஆண்டுகளாகியும் சமுதாயக் கூடம் எழும்பாத சுடுகாட்டு இடமும் இப்போது கல் ஊன்றி பிளாட்டுகளாக மாறத் தயார் நிலையில் உள்ளது. இதுதான் அகிலாண்டபுரம் அமுக்கிய புராணச் சுருக்கம்.

 

பல்வேறு நேரங்களில் இதை எதிர்த்துப் பேசிய தாழ்த்தப்பட்ட மக்கள் மிரட்டப்பட்டுள்ளனர். சிலர் பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டனர். இப்போது வி.வி.மு.வின் துண்டறிக்கை வெளிவந்ததும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீண்டநாள் கழித்து நீதி கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியில் வி.வி.மு.வை தொடர்பு கொண்டு வருகின்றனர். கம்யூனிஸ்டு என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்திக் கொண்டு செங்கொடியையும் சிவப்புத் துண்டையும் இழிவுபடுத்தி வரும் குணசேகரனோ போலி பத்திரத்தை ஒரிஜினலாக்க இப்போது இந்து அறநிலையத் துறை அலுவலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

 

வி.வி.மு.வின் செயல்பாடுகளால் உற்சாகமடைந்துள்ள கம்யூனிச உணர்வுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் சிலர் காரைக்குடியில் நடந்த வலதுகளின் மாவட்ட மாநாட்டில் மாநிலத் தலைவரான நல்லகண்ணுவிடம் மேடையிலேயே பு.ஜ. இதழையும் வி.வி.மு. துண்டறிக்கையையும் கொடுத்துள்ளனர். அவரும் படித்துப் பார்ப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் படித்து முடித்த பின்னர் குணசேகரன் மாவட்டச் செயலாளராக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்புதான் வெளியாகியது. எவ்வித சுயபரிசீலனையுமின்றி உச்சி முதல் உள்ளங்கால் வரை வலது கம்யூனிஸ்ட் கட்சி சீரழிந்து கொண்டிருப்பதற்கு இது இன்னுமொரு நிரூபணம்.

 

··· பின் இணைப்பு:

 

படமாத்தூர் சக்தி சுகர்ஸ் கோகோ கோலா பேரம் (பம்பர் பரிசாக டாடா சுமோ); அரிசிக்கடை சிவசாமிநாடார் அந்தாதி; காளவாசல் நில அபகரிப்பு புராணம்; குடஞ்சாடி கண்மாய் மர ஏல மகாத்மியம்; மார நாடு விளத்தூர் கால்வாய் விவகாரம்; தீர்த்தாம்பேட்டை திருப்புகழ்; வசந்தம் தியேட்டரை "பலான' தியேட்டராக்கி மூடிய "கிளுகிளு' கதை; கட்சிக்குள்ளேயே தாழ்த்தப்பட்டோரைக் கட்டம் கட்டிய தொடர்கதை; அண்ணாமலை நகர் அடாவடி இப்படி குணசேகரன் கும்பலின் அட்டூழியங்கள் அத்துமீறல்கள் பற்றி அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் வி.வி.மு.விடம் வந்தவண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து போலி கம்யூனிச நாட்டாமை குணசேகரன் கும்பலை அம்பலப்படுத்தும் பணியில் வி.வி.மு. ஆயத்தமாகி வருகிறது. குணசேகரன் கும்பலின் "மகாத்மியங்கள்' விரைவில் வி.வி.மு. பிரசுரங்களில் வெளியிடப்படும்.

 

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி
சிவகங்கை.