தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சிந்தனைப் போக்கை (பார்ப்பன பாசிஸ்டுகளின் சிந்தனைப் போக்கை என்றும் கருதலாம்) மிகவும் தெளிவாகக் கடந்த மாதம் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். ""நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது காவல்துறை. வலிமையான நாடாக இந்தியா இருக்க வேண்டும்; அதில் வளமிக்க மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்ற லட்சியம் ஈடேற வேண்டுமென்றால் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டும். எந்த வளர்ச்சிக்கும் முதல் தேவையாக இருப்பது அமைதியான சூழ்நிலைதான். அத்தகைய அமைதிச் சூழ்நிலையை உருவாக்குவதிலும் அதனைக் கட்டிக் காப்பதிலும் காவல்துறையின் பணி இன்றியமையாதது. இதன் அடிப்படையில்தான் காவல்துறையை நவீனப்படுத்தவும் காவல்பணியை மேம்படுத்தவும் காவலர்கள் நலன்பேணவும் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகள் ஆகியவற்றை நான் அறிவித்தேன்.''
விவசாயம் மற்றும் தொழிற்துறைக்குத் தேவையான உள்கட்டுமான வசதிகளைப் பெருக்குவது; கல்வி மருத்துவம் குடிதண்ணீர் குடியிருப்பு முதலிய வசதிகளை உழைக்கும் மக்களுக்கு உறுதிப்படுத்துவதன் மூலம் மனித வளத்தை மேம்படுத்துவது; உற்பத்தியைப் பெருக்குவதைப் போலவே நாட்டு மக்களின் வாங்கும் சக்தியையும் விரிவுபடுத்தி சந்தையைப் பெருக்குவது இவைதான் வளமிக்க வலிமையான நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது என்று ஆக்கப்பூர்வமான முறையில் அதிகாரத்திலுள்ள ஜெயலலிதா சிந்திக்கவில்லை. வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் குறிப்பாக நாட்டின் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதன் மூலம் அமைதிச் சூழ்நிலையை உருவாக்கி நாட்டை அமைதிப் பூங்காவாக்கிப் பராமரிப்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் காவல்துறை என்று தவறான பொருளில் அழைக்கப்படும் போலீசின் வலிமையை அதிகாரத்தைப் பெருக்கி நவீனப்படுத்தி ஆயுத தளவாடங்களை மேம்படுத்தி போலீசின் நலன்களைப் பேணப் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகளை செயல்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. ""வளர்ச்சியின் பலன்கள்'' மறுக்கப்படும் உழைக்கும் மக்கள் பொங்கி எழுந்தால் அவர்களை அடக்கி ஒடுக்கி அமைதிச் சூழலை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் வேட்டை நாய்களுக்கு கொழுத்த தீனி போட்டு வைப்பதைப் போல போலீசு படையை எந்நேரமும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற பாசிச முறையிலேயே சிந்திக்கிறார்.
கோடிகோடியாகக் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணத்துக்கு அடுத்து ஜெயலலிதா நம்புவது போலீசைத்தான். வேறு எந்த ""சிவிலியன்'' அரசு அதிகார வர்க்கத்தைக் கூட அவர் நம்புவதில்லை. எனவேதான் குடிநீர் சாக்கடை போக்குவரத்து ரேசன்கடை வெள்ளம் புயல் சுனாமி நிவாரணம் ஆகிய எதற்காக மக்கள் போராடினாலும் பிரச்சினையைக் கையாள்வதற்கு ஜெயலலிதா அரசு ஏவிவிடுவது போலீசு அதிகாரிகளைத்தான். அதற்காகவே சமூக நலப் பணிகளுக்காக என்ற பெயரில் ஊர் முழுக்கவும் சந்து பொந்துகளில் எல்லாம் போலீசு சாவடிகளைத் திறந்து வைத்துக் கொண்டும் போலீசு கார்களில் ரோந்து சுற்றிக் கொண்டும் குடிமக்களைக் கண்காணிக்கும் ஏற்பாட்டை இந்த அரசு செய்திருக்கிறது. ஆனால் போலீசு நடவடிக்கைகளின் பதிவேடுகள் காட்டுவதென்ன? கொலை கொள்ளை பாலியல் வன்முறைகள் நாளும் பெருகி வருவதோடு பல்வேறு வழக்குகளிலும் கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கும் போலீசுக்கும் கள்ளக் கூட்டுகள் உள்ளன. போலீசே கொலை கொள்ளை வழிப்பறி மோசடி பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. தலைமைப் போலீசு அதிகாரி (டி.ஜி.பி) மாநகர ஆணையர் முதல் எல்லா மட்டங்களிலும் குற்றச் செயல்களில் சிக்கியுள்ளனர். சிவகாசி ஜெயலட்சுமி விவகாரம் ஒரு எடுத்துக்காட்டுதான். நீதிமன்றங்களில் போலீசாரின் யோக்கியதை அம்பலமாகி நாடே நாறுகிறது