Language Selection

05_2005.jpg"சி.பி.எம். கட்சியின் 18வது அனைத்திந்திய மாநாடானது, கட்சி வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது'' என்று பெருமையுடன் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி. உண்மைதான்! பித்தலாட்டத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் புதிய எல்லைகளைத் தொட்டு, சி.பி.எம். கட்சியானது இம்மாநாட்டின் மூலம் தனி முத்திரையைப் பதித்து விட்டது. ""ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, உலகமயமாக்க சூழலில், உலகமயமாக்கத்துடன் இசைந்து செயல்படுவதற்கான பொருத்தமான வழிமுறைகளை வகுத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே பாராட்டுமளவுக்கு சி.பி.எம். கட்சி மாநாடு தனி முத்திரையைப் பதித்து விட்டது.

 

""ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்போம்; அந்நிய ஏகபோக மூலதனத்தை வேரோடு பிடுங்கி மொத்தமாகத் தூக்கியெறிவோம்!'' என்றெல்லாம் சவடால் அடித்து வந்த சி.பி.எம். கட்சி, இப்போது வெளிப்படையாகவே அந்நிய நேரடி மூலதனத்தை வரவேற்கக் கிளம்பிவிட்டது. அந்நிய நேரடி மூதலீடானது தற்போதைய உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்; தொழில்நுட்ப ரீதியாக பொருளாதாரத்தை முன்னேற்ற உதவுவதாக அமைய வேண்டும்; வேலை வாய்ப்பைப் பெருக்குவதாக இருக்க வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகளுடன் அந்நிய நேரடி முதலீட்டை சி.பி.எம். கட்சி வரவேற்கிறது. ""சில கொள்கை விவகாரங்கள் பற்றி'' என்ற ஆவணத்தில் உள்ள இந்த அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதித்து இறுதியாக்கியுள்ளனர்.

 

இன்றைய தாராளமய உலகமய சூழலில் ஒரு ஏழைநாட்டில் நுழையும் ஏகாதிபத்திய மூலதனமானது, அந்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி, இயற்கை மூலவளங்களையும் மக்களையும் சூறையாடி, அந்நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஒரு ஏற்பாடாக இருக்கும்போது, வேலை வாய்ப்பைப் பெருக்கி தொழில்நுட்ப ரீதியாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தி உற்பத்தித் திறனை வளர்க்கக்கூடிய அந்நிய முதலீடு என்று ஏதாவது இருக்க முடியுமா? இப்படி பசப்பு வார்த்தைகளுக்குப் பின்னே, அந்நிய முதலீட்டை வரவேற்கும் தமது பச்சைத் துரோகத்தை சி.பி.எம். கட்சி மூடி மறைக்க முயற்சி செய்கிறது.

 

இதற்காக, பருண்மையான நிலைமைக்கேற்ப சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்படுவது அவசியமாகும் என்று பீடிகை போடும் இத்துரோகிகள், அந்நிய முதலீடுகளை முற்றாக நிராகரிப்பதற்குப் பதிலாக, தாராளமய உலகமய சூழலில் செயலுத்தி அடிப்படையில் அவற்றைப் பொருத்தமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்கின்றனர்.

 

""இன்றைய தாராளமய உலகமய சூழலின் யதார்த்த நிலைமையை உணராமல், அதிலிருந்து விலகி தப்பித்து விட முயற்சிப்பது நமது அகநிலை விருப்பமாகவே இருக்கும். உலகமய தாராளமயக் கொள்கைகளையும் அதன் தீய விளைவுகளையும் எதிர்த்துப் போராடும் அதேசமயம், கிடைத்துள்ள சில வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வங்கி, காப்பீடு துறை, சில்லறை வியாபாரம் முதலானவற்றில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் அதேநேரத்தில், வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய தொழில்களில் அந்நிய நேரடி முதலீட்டை நாம் அனுமதிக்கலாம். மேலும், மாநில அரசுகளை மத்திய அரசு பிச்சைக்காரத்தனமாக நடத்தி, நிதியில்லை என்று புறக்கணித்து வரும் சூழலில், மக்கள் நலனை முன் வைத்து ஊறு ஏற்படாத வகையில் ஒரு சில தொழில்களில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தவறல்ல'' என்று துரோகத்தனத்திற்கு சித்தாந்த விளக்கமளிக்கிறார், சி.பி.எம். கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரகாஷ் காரத்.

 

இதேபோல, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களுடனும் ஒத்திசைந்து செயல்பட சி.பி.எம். கட்சியினர் தீர்மானித்துள்ளனர். நேரடியாக ஏகாதிபத்திய நிதியுதவியுடன் இயங்கும் குழுக்களை நிராகரித்துவிட்டு, அறிவொளி இயக்கம் போன்ற சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வக் குழுக்கள் சுய உதவிக்குழுக்களுடன் இணைந்து செயல்பட சி.பி.எம். கட்சியினர் தீர்மானித்துள்ளனர். ஏகாதிபத்தியங்கள், அறக்கட்டளைகள், மத நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறாத தன்னார்வக் குழு எது என்பதை சி.பி.எம். கட்சியினர்தான் விளக்க வேண்டும். ஏற்கெனவே, மும்பையில் நடந்த உலக சமூக மன்ற மாநாட்டில் தன்னார்வக் குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து "புரட்சி' செய்த இவர்கள், இப்போது அதையே புரட்சிக்கான கூட்டணியாக மாற்றிவிட்டனர்.

 

தமிழகத்தில் பாசிச ஜெயா கும்பலும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் தமது ஓட்டு வேட்டைக்கான பகடைக் காய்களாகத் தன்னார்வக் குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சி.பி.எம். கட்சியினர் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? எனவேதான், ஏகாதிபத்திய கைக்கூலிகளுடன் புதிய கூட்டணி கட்டிக் கொண்டு "புரட்சி' செய்யப் புறப்பட்டுள்ளனர்.

 

இதுவொருபுறமிருக்க, நிலப்பிரபுக்களின் சொத்துக்கள் அனைத்தையும் நட்டஈடின்றிப் பறிமுதல் செய்வது என்ற முந்தைய நிலைப்பாடு அடியோடு நீர்த்துப் போகும் வகையில், அவசியமான நிலைமைகளில் பண்ணை நிலங்களுக்கு நட்டஈடு கொடுத்து, விலைக்கு வாங்கி கூலிஏழை விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிப்பது என்று சி.பி.எம். கட்சி மாநாடு தீர்மானித்துள்ளது. நிலப்பிரபுக்களின் பிற சொத்துக்களைப் பறிமுதல் செய்வது பற்றி அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.

 

அடிப்படையான இந்த மாற்றம், ஏற்கெனவே 2000மாவது ஆண்டில் நடந்த திருவனந்தபுரம் சிறப்பு மாநாட்டில் நிறைவேறிய புதிய மேம்படுத்தப்பட்ட கட்சி திட்டத்தில் இடம் பெற்றுள்ளது என்றும், இதையொட்டி தற்போதைய மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், புதிய மத்தியக் கமிட்டி இறுதி முடிவு செய்யும் என்றும் பிரகாஷ் காரத் கூறுகிறார்.

 

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் தீவிரமாகச் செயல்படுத்திவரும் வேகத்திற்கேற்ப, போலி கம்யூனிஸ்டுகளும் தமது சிவப்பு முகமூடிகளை வேகமாகக் கழற்றி எறிந்துவிட்டு திருத்தல்வாத திருமுகத்தைக் காட்டி வருகின்றனர். இந்த இலட்சணத்தில் வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கெதிராக தொடர்ந்து விடாப்பிடியாகப் போராடப் போவதாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அது என்ன போராட்டம்? ""மீன்காரனுக்குத் தூண்டில் மிதவை மீதுதான் கண்'' என்பதைப்போல, நாற்காலியைக் குறிவைத்து நாடாளுமன்ற அரசியல் தரகு வேலைகளையே விளக்குகிறது அக்கட்சி. பா.ஜ.க. தலைமையிலான வகுப்புவாத சக்திகளை மீண்டும் அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பது; இதற்காக காங்கிரசு தலைமையிலான கூட்டணி ஆட்சியை ஆதரிப்பது; இடதுசாரி மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியையும் அதன் தலைமையிலான மாற்று அரசாங்கத்தையும் நிறுவப் பாடுபடுவது; இந்தி பேசும் மாநிலங்களிலும் நாடாளுமன்றத்திலும் இடதுசாரி சக்திகளின் பலத்தை அதிகரிக்கச் செயலாற்றுவது என்பதே அக்கட்சி வகுத்துக் கொண்டுள்ள கடமைகள்.

 

இந்த மூன்றாவது அணி என்பது நொண்டிக் குதிரையின் மீது பந்தயம் கட்டுவதுதான் என்பது சி.பி.எம். தலைவர்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும், கல்லறையில் உறங்கும் மூன்றாவது அணிக்கு மீண்டும் ஆவியெழுப்புகிறார்கள். மறுபுறம், சி.பி.எம்.மின் நடைமுறையோ பா.ஜ.க.வுக்கு எதிராகக் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து வால்பிடித்துச் செல்வதாக உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் காங்கிரசோடு சி.பி.எம். அணிசேரும் அதேசமயத்தில், காங்கிரசோ தாராளமயமாக்கலில் பா.ஜ.க.வுடன் அணி சேருகிறது. இந்நிலையில் வகுப்புவாதம், தாராளமயம் இரண்டையும் எதிர்த்துப் போராட ஓட்டுக் கட்சிகளின் புதிய அணியைச் சேர்க்க முயற்சிப்பது பகற்கனவுதான். இந்த மூன்றாவது அணியின் மூலகர்த்தாக்களான வி.பி.சிங், குஜ்ரால், தேவேகவுடா, சந்திரசேகர் முதலானோர் தாராளமயமாக்கலை ஓரணியில் நின்று ஆதரிக்கும்போது, யாரை வைத்து மூன்றாவது அணி கட்ட முடியும்? ஆக, சி.பி.எம்.இன் தாராளமய வகுப்புவாத எதிர்ப்பு என்பது வெறும் பித்தலாட்டம்தான். அண்மைக் காலங்களில் தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்களைத் திரட்டி எந்தவொரு போராட்டமும் நடத்த முன்வராத சி.பி.எம்., விடாப்பிடியாகப் போராடும் என்பதை அக்கட்சியின் அணிகளே கூட நம்பமாட்டார்கள்.

 

சி.பி.எம்.இன் பித்தலாட்டங்கள் இதோடு நின்றுவிடவில்லை. அந்நிய மூலதனக் கொள்ளைக்கும் ஆதிக்கத்துக்கும் கதவை அகலத் திறந்துவிட்டுள்ள முதலாளித்துவ சீனாவை, சோசலிசம் பூத்துக் குலுங்கும் நாடு என்றும், மார்க்சிய லெனினியத்தை மண்ணுக்கேற்ப நடைமுறைப்படுத்திவரும் நாடென்றும் கூசாமல் புளுகுகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் போலவே, உலகின் எல்லா வகையான கம்யூனிச துரோகக் கட்சிகளையும் அங்கீகரித்து அதிகாரபூர்வ உறவை சி.பி.எம். கட்சி மேற்கொண்டுள்ளது. இலங்கையின் பாசிச சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகா அரசையும் தாராளமயக் கொள்கைகளையும் ஆதரித்துக் கூட்டணி சேர்ந்துள்ள ஜனதா விமுக்தி பெரமுணா (ஜே.வி.பி.) கட்சியைக் கூட சகோதரக் கட்சியாக சி.பி.எம். பாவிக்கிறது.

 

மூத்த தலைவர்கள் வழிவிட்டு, புதிய தலைமுறையினர் தலைமைக்கு வந்துள்ளதையும், முதன்முதலாக தலைமைக் குழுவுக்கு ஒரு பெண் உறுப்பினர் (பிருந்தா காரத்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு, இம்மாநாடு சி.பி.எம். கட்சியில் ஒரு திருப்புமுனையைக் காட்டுவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன. செக்குமாட்டுப் பாதையில் எப்போதுமே திருப்பம்தான்!

 

கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவின் இரு பெரும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளான வலது கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ) "இடது' கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.எம்.) தமது மாநாடுகளை நடத்தி, புதிய நிலைமைகளுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டு ஓட்டுக்கும் சீட்டுக்குமான தமது வழக்கமான புரட்டல்வாத செக்குமாட்டுப் பாதையில் பீடுநடைபோடக் கிளம்பி விட்டன. மறுகாலனியாதிக்கம், இந்துவெறி பாசிசம் எனும் இருபெரும் சுமைகளோடு இப்போது போலி கம்யூனிஸ்டுகளின் துரோகச் சுமையும் உழைக்கும் மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்பதையே இக்கட்சிகளின் மாநாடுகள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

 

·குமார்