"ஏப்ரல் 14 முதல் தமிழகமெங்கும் மும்பை எக்ஸ்பிரஸ்'' திரையிடப்படும் என்ற விளம்பரத்தை ராமதாசின் முதுகில் மட்டும்தான் கமலஹாசன் ஒட்டவில்லை. தமிழகம் முழுக்க, எல்லா இடங்களிலும் விளம்பரங்கள் பளிச்சிட்டன.
அதற்கு முன்னரே, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கருணாநிதி குடும்ப நிறுவனங்கள் உள்பட வானொளி, வானொலி மற்றும் தினசரிகள், சந்தை ஏடுகள் அனைத்தும் சினிமா நடிகைகள், நடிகர்கள் பின்னால் ரசிகர்களாக ஓடின.
புத்தாண்டு படங்களில் நடித்த புதிய நடிகைகளின் தொடைகளையும் மார்பகங்களையும் பல வண்ணங்களில் தங்கள் ஊடகங்கள் மூலம் சுடச்சுட விற்றுத் தீர்த்தன.
தமிழ்ப் புத்தாண்டில் திரையிடப்பட்ட ரஜினியின் "சந்திரமுகி' கமலின் "மும்பை எக்ஸ்பிரஸ்' மற்றும் விஜய்யின் "சச்சின்' போன்ற புதிய படங்களைப் பற்றிய ""பரபரப்பு'' விளம்பர மழையில் தமிழகமே தொப்பலாக நனைந்தது.
இதில் ஜன்னி கண்டு உளர ஆரம்பித்தார், "தமிழ் குடிதாங்கி' "மருத்துவர் ஐயா' அவர்கள். ""சினிமா படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்கக் கோரி போராட்டம் நடத்தமாட்டோம். வேண்டுகோள் விடுப்பதுடன் நிறுத்திக் கொள்வோம்!'' என்று திடீர் அறிவிப்பு செய்தார்.
தமிழ் சினிமாவில் குரூர வில்லன் படம் முடிவதற்கு முன் கதாநாயகனிடம் பாவ மன்னிப்பு கேட்பது போல் கேட்டு, தமிழ் குடிதாங்கி நிஜக் கலைஞர்களை, குறிப்பாக கமலஹாசனைக் கலங்க வைத்து விட்டார்.
""வன்முறையில்(?) ஈடுபடும் உத்தேசம் எங்களுக்கு இல்லை. திருந்தினால் திருந்தட்டும் (தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்). சிறு பிரச்சினைக்கு (!) போராட்டம் நடத்தி எங்கள் சக்தியை வீணடிக்க மாட்டோம். மக்களுக்காகப் போராட வேண்டியது உள்ளிட்டு அதிகமான வேலை (?) எங்களுக்கு உள்ளது. புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் எலி வேட்டையில் இறங்க மாட்டார்கள்'' என்று எலி, புலி கதையைச் சொல்லி, எலி வேட்டைக்காக இவ்வளவுநாள் தாங்கள் யானை மீது வலம் வந்த கதையை மறைக்கப் பார்த்தார்.
25.1.05 அன்று சென்னையில் ராமதாசு தலைமையில் நடந்த தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலை குழுக் கூட்டத்தின் தீர்மானத்தில் ""மும்பை எக்ஸ்பிரஸ்'', ""பெஸ்ட் பிரண்ட்'' என்ற பெயர்களை மாற்றி, உடனடியாக தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும். இதையும் மீறினால் அந்தப் படங்கள் தமிழகத்தில் எங்குமே திரையிட முடியாது'' என்றனர்.
மேலும், ""தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பையும் மீறி, 2 படங்களையும் ஆங்கிலப் பெயருடன் வெளியிட்டால், என்ன விலை (தண்டனை) கொடுத்தாலும் அதைத் தடுப்போம்'' என்று தோள் தட்டிக் கொண்டு தமிழகத்தின் 4 திசைகளிலிருந்தும் ""பயணம்'' புறப்பட்டனர்.
ஆக, எலி வேட்டைக்கு யானை மீது சென்றவர்கள், எலியைப் பார்த்தவுடன், ""நாங்கள் புலி வேட்டைக்குதான் போகிறோம்'' என்று சிதறி ஓடினார்கள்.
ராமதாசு, திருமா தலைமையிலான ""தமிழ் பாதுகாப்பு'' படை எலியைப் பார்த்து மிரண்டு ஓடியது வேடிக்கையல்ல! வேதனையான உண்மை!
காரணம், எலிகளின் வாழ்விடமும் இவர்களின் வசிப்பிடமும் ஒரே இடம்! ஊடகங்கள் என்ற வானொளி, வானொலி மற்றும் சந்தை பத்திரிக்கைகள் அடங்கிய சுயவிளம்பரம் என்ற பொந்து அது! எனவே, தங்கள் சவக் குழிக்குத் தாங்களே யாராவது பள்ளம் பறிப்பார்களா? பாவம்! அதை மறைக்கத்தான் புலி வேட்டைக்குப் போவதாக இப்போது புதிய "கிலி'யைக் கிளப்புகிறார்கள். ""இதற்கு பத்திரிக்கைகள்தான் உதவ வேண்டும்'' என்று வெட்கங்கெட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளார், ராமதாசு. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போன கதை' இதுதான்!
வாரம் ஒரு "மெகா ஹிட்' திரைப்படம் வெளியிடுவது போல் "தமிழ்ப் பாதுகாப்பு' இயக்கத்தின் பெயரால் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்த திருமாவளவன், திடீரென ""தமிழ் பாதுகாப்பு இயக்கம் தனிப்பட்ட கமலஹாசனுக்கு எதிரானது அல்ல. அவர் நடிக்கும் படங்களுக்கு நட்டம் ஏற்படுத்தும் எண்ணமும் எங்களுக்கு இல்லை'' என்று 13.4.05 அன்று மதுரையிலிருந்து அறிக்கை வெளியிட்டார். அதே அறிக்கையில் ""மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்'' என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். ஏன் இந்த சுய முரண்பாடு? இது முரண்பாடு இல்லை! சுத்தமான அக்மார்க் மற்றும் அய்.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்ற பிழைப்புவாத அரசியல்!
சினிமா கிசுகிசு என்ற போதையில் உயிர் வாழும் சந்தை ஊடகங்களும் ரசிகர்களும் "சினிமா எதிர்ப்பு' என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று பதற்றமடைந்து, ""திரையுலகில் யாரையும் அச்சுறுத்துவது எங்கள் நோக்கமல்ல'' என்று "அப்ரூவர்'களாக மாறினர். இதுநாள் வரையில் ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் சினிமாக்களைப் பற்றி ""காம'', ""வக்கிர'', ""அசிங்கமான'', ""நடத்தை கெட்ட'' என்று ஏராளமான தமிழ் வார்த்தைகளில் தாங்கள் திட்டியது, ""அச்சுறுத்துவதற்கு'' அல்ல, சும்மா விளையாட்டுக்குத்தான் என்றனர். இருந்தாலும் அந்த விளையாட்டைக் கூட இனி தொடரமாட்டோம்! இனி ""சினிமா படங்களுக்கு தமிழ் பெயர்களை வைக்க அமைதியான முறையில் (இவ்வளவு நாள் ரத்தம் சிந்தியா போராடினார்கள்?) வலியுறுத்துவோம்'' என்று ஆங்கில பெயர் எதிர்ப்புகளுக்கு ""வணக்கம்'' போட்டு முடித்து விட்டனர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தங்கள் ""போராட்ட''ப் பணியை முடித்துக் கொண்டதாக அறிவித்தப் பிறகும், "தமிழ் பாதுகாப்பு' இயக்கத்தினரை தமிழ் தேசியம் கடை நடத்தும் தமிழ் ரசிகர்கள் விடவில்லை. போராட்டத்தை நடத்துமாறு, "ஒன்ஸ்மோர்' கேட்கிறார்கள்!
""அதில் (தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில்) தமிழ் உணர்வு நீறு பூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கிறது'' என்று அதை விசுறும் வேலையில் இறங்கிவிட்டனர். அதற்காக, தங்களையே ""தமிழ் அறிஞர்கள்'', ""தமிழ் உணர்வாளர்கள்'' என்று பாராட்டி கொள்கின்றனர். ""தமிழ்ப் பாதுகாப்பு'' போன்ற பிழைப்புவாத கூடாரங்கள் காலியானால் ""வேறு போக்கிடம் ஏது?'' என்று கலக்கமடைகிறது, ஒட்டுண்ணி ""தமிழ் அறிஞர்கள்'' கூட்டம்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் மொழிப் போர் அறிவிப்பு மாநாட்டின் தீர்மானத்தின்படி ராமதாசு புலிவேட்டை என்று அர்த்தப்படுத்துவது எது தெரியுமா? சொன்னால் வெட்கக்கேடு!
மே 23இல் தமிழகமெங்கும் கடைகளில் இருக்கும் விளம்பர பலகைகளில் உள்ள பிறமொழி எழுத்துக்களின் மீது "தார்' பூசுதல்!
நவம்பர் 1இல் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மைய, மாநில அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டம்!
""சினிமா படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க போராட்டம் நடத்த மாட்டோம்'' என்பவர்கள், ""கடைகளில் உள்ள பிறமொழி எழுத்துக்களின் மீது தார் பூசுவோம்'' என்று ஆர்ப்பரிக்கிறார்கள். ஏன்? தமிழ் சினிமாக்களுக்கு தமிழ் பெயர் வைக்க மறுக்கும் நடிகர்கள், சினிமா முதலாளிகள் முகத்தில் தார் பூச வேண்டியதுதானே? யார் தடுத்தது? தமிழன் கடையின் தகரப் பலகைகளில் தார் பூசுவதுதான் புலி வேட்டையா?
அப்படியானால் இவர்கள் மட்டும் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலை முழுக்க இந்தியை எழுதலாமா? மத்திய ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறுப்பு வகிக்கும் கருணாநிதி கட்சியின் தி.மு.க.தானே அதற்கு முழு பொறுப்பு! ராமதாசும் அதற்கு உடந்தைதானே! அதற்கு இவர்கள் முகத்தில் எதைப் பூசுவது?
செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு தேசிய கல்வித்துறையில் முதல் தர தகுதி! செம்மொழி என்று அறிவித்த பிறகும் தமிழுக்கு அத்தகுதியை மறுக்கும் மைய அரசின் துரோகத்திற்கு ராமதாசும் கருணாநிதியும் தானே முழு பொறுப்பு! தன்னுடைய ஆட்சியில், தாய் தமிழ் வழிக் கல்வியை மறுத்த முதல் குற்றவாளி கபட வேடதாரி கருணாநிதிதானே? தன் ஆட்சியில் பெரும்பான்மை இருந்தும் தமிழ் வழிக் கல்விக்காக சட்டம் இயற்றாமல் அதிகாரமற்ற அரசாணையைப் பிறப்பித்து ஏமாற்றியது, கருணாநிதி தானே!
திருமாவளவன், ராமதாசு, நெடுமாறன், சேதுராமன் போன்றோர் இவற்றுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்ன தண்டனை வழங்கப் போகிறார்கள்?
அதிகார பீடங்களுக்கு எதிரான இக்கேள்விகளை எல்லாம் தவிர்த்து விட்டு, அப்பாவி தமிழனின் கடையில் தார் பூசுவதைத்தான் ""மூன்றாவது மொழிப் போர்'' என்று ஏமாற்றுகிறார்கள். போராட்டம் என்ற பெயரில் தங்கள் அரசியல் பிழைப்புக்கு எவ்விதத்திலும் ஆபத்தில்லாத உளுத்துப் போன, செத்துப்போன பாம்புகளை அடிப்பதில்தான் வீரம் காட்டுகிறார்கள். தமிழின அரசியல் பிழைப்புவாதிகள், இதை ஒரு நுண்கலை போன்றே மரபு வழியாக பின்பற்றுகிறார்கள்! தங்களுடைய சாதிய ஓட்டு வங்கியை அடைகாத்துக் கொண்டு தங்கள் சாதிக்கு அப்பாற்பட்ட பல சாதி ஓட்டுக்களையும் வேட்டையாடும் கலை இது! அதற்கு வசதியாக "தமிழ்ப் பாதுகாப்பு' என்ற ஒளி வட்டத்தோடு வேட்டைக்கு கிளம்புகிறார்கள்!
ஆனால் தமிழகத்தின் இன்றைய வேலைவாய்ப்பில் உள்ள உண்மைநிலை என்ன? ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் தனியார் நிறுவனங்களின் கதவுகள் திறக்கின்றன. ராமதாசு அங்கம் வகிக்கும் மத்திய அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் வேலை வாய்ப்பு உள்ள ஒரே துறை, தகவல்தொடர்பு துறை மட்டும்தான். அதிலும் நான்காம்தரமான "கால் சென்டர்' வேலைகள்தான் காலியாக இருக்கின்றன. அதற்கு படிப்புத் தகுதியாக செந்தமிழையா கேட்கிறார்கள்? மாறாக, அமெரிக்காவின் "டெக்சாஸ்' மாநிலத்தில் பேசும் ஆங்கில நடையும் "புளோரிடா' மாநிலத்தில் பேசும் ஆங்கில நடையும் பேச முடியுமா? என்று தானே கேட்கிறார்கள்.
இப்படி தமிழ் மண்ணிலேயே புகுந்து, தமிழ் மொழியை விரட்டும், தமிழனை வெளியே தள்ளும் உலகமயத்திற்கு எதிராக இவர்கள் எப்படித் தனியாக தாய் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் காப்பாற்றப் போகிறார்கள்? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? உள்ளூர் தமிழன் கடைகளில் தார் பூச விரிவாகத் திட்டம் வைத்திருக்கும் இவர்கள், தாய்மொழியையும் தமிழகத்தையும் விழுங்கும் உலகமயத்தை எதிர்க்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? தொடர்ந்து, மத்திய மந்திரிகளாகி காட்டிக் கொடுக்கும் வேலையைத் தவிர!
· குணசேகரன்
""மூன்றாவது மொழிப்போர் மாநாடு''
— சில துளிகள்
· ""மயிரை ஒட்ட வைத்துக் கொண்டு (தீடிஞ-;விக்) முகத்திற்குச் சாயம் பூசி நடிப்பவர்களுடன் இனி மோதுவதில்லை'' என்று கூறி தன் சவடால் சாயத்தைக் கலைத்தார், தொல்.திருமாவளவன். பிறகு, ""தமிழ்ப் பாதுகாப்பு கூட்டணி, அரசியல் கூட்டணியாக மாறினாலும் மகிழ்ச்சி'' என்று கொள்கை அறிவிப்பு செய்தார்.
· ""தமிழ் உணர்வாளர்கள்'', ""தமிழ் அறிஞர்கள்'' என்று கூட்டிய கருத்தரங்கத்தில் கடைசிவரை அதில் 100 பேர் கூட அமர்ந்து கவனம் செலுத்தவில்லை.
· மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேச "தமிழ் அறிஞர்கள்' ஒவ்வொருவருக்கும் 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதில், தொல்.திருமாவளவன் மற்றும் "அய்யா' இராமதாசைப் புகழவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. "தந்தை பெரியாருக்குப் பிறகு ""அய்யா'' என்ற தகுதி இராமதாசுக்கு தான் உண்டு' என்று பரவசமடைந்தனர் பல அறிஞர்கள்.
· மாநாட்டை வந்தடைந்த ஊர்திப் பயணத்தின்போது பல இடங்களில் பா.ம.க. கொடியையும் வன்னிய சாதி கொடியையும் ஏற்றியதைப் பட்டியலிட்டு பரவசமடைந்தார், தொல்.திருமாவளவன். ""இதை, அய்யா இராமதாசிடம் தொலைபேசியில் தெரிவித்த போது, அய்யா இராமதாசுக்கு நா எழ மறுத்து, கால் மணிநேரம் வார்த்தையே வரவில்லை'' என்று உணர்ச்சியுடன் கூறித் தொண்டர்களின் இதயத்தைப் பிசைந்தார்.
· "தமிழ் அறிஞர்கள்' மேடையில் தொல்.திருமாவளவனைப் பற்றிப் புகழ்ந்தபோது கூட்டம் பேரலை போல் இரைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், இராமதாசைப் பற்றி புகழ்ந்தபோது மட்டும் கைதட்டல், இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தான் கேட்டது. இதனால் பதற்றமடைந்த தங்கர்பச்சான், அறிவுமதி போன்றோர் மேடையிலிருந்து எழுந்து, கூட்டத்தினருக்கு உபதேசம் செய்தனர். ""இரு தலைவர்கள் பற்றி "அறிஞர்கள்' பேசும்போது சமமாக ஒலி எழுப்ப (பாராட்ட) வேண்டும்'' என்றும் மேலும், ""அய்யா இராமதாசை அறிஞர்கள் பாராட்டும்போது சிறுத்தைகளும்; வன்னிய சொந்தங்கள் தொல்.திருமாவளவனுக்கும் மாறி மாறி கைதட்டி தங்கள் ஒற்றுமையைக் காட்டும்படி'' கேட்டுக் கொண்டனர்.
· கூட்ட முடிவில் தமிழ்ப் பண் பாடலுக்கு கூட்டத்தினரை எழுந்து நிற்கச் சொன்னார், தொல்.திருமாவளவன். ஆனால், கூட்டத்தினருக்கும் முன்பாக "தமிழறிஞர்கள்' அவசரமாகக் கலைந்து சென்றனர். கடைசிவரை அனாதையாக தமிழ் பண் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. "அய்யா' இராமதாசு, தொல்.திருமாவளவன் கூட்டணியால், மொழிப் போர் அறிவிப்பு மாநாடுதான் நடத்த முடியும்; மொழிப் போர் நடத்த முடியாது என்று மாநாட்டின் நடைமுறை நிரூபித்தது.
இ. கரிகாலன், பு.மா.இ.மு., தஞ்சை.