Language Selection

புதிய ஜனநாயகம் 2005

05_2005.jpg"மெட்ரிக்குலேசன் பள்ளியை இழுத்து மூடு'' என்று போராட்டம் நடத்திய "கொள்கை ஏறுகள்' மெட்ரிகுலேசன் தொட்டியிலேயே கழுநீர் குடிக்கலாமா?'' என்ற கேள்விக்கு யோக்கியமாகப் பதில் சொல்ல முடியாததால், "அறிவார்ந்த' எதிர்க்கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறது, தமிழர் கண்ணோட்டம்.

 

""விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் நடத்திய ம.க.இ.க.வினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தோழர் பீட்டரை அதே மருத்துவமனையில் சேர்த்தது எப்படி?'' என்பது தமிழர் கண்ணோட்டத்தின் கேள்வி.

 

எப்பேர்ப்பட்ட தருக்க அறிவு! நள்ளிரவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தன்னந்தனியாகச் சாராய ரவுடிகளுடன் மோதிய தோழர் பீட்டர் அங்கிருந்து அவர்களால் அடித்துத் தூக்கி வீசப்பட்டார். குற்றுயிராகக் கீழே விழுந்தவரை அவரது மனைவியும் அண்டை வீட்டாரும் ஒரு ஆட்டோவில் தூக்கிச் சென்று அருகாமையிலிருந்த விநோதகன் மருத்துவமனையில் சேர்த்தனர். அடிதடிபோலீசு கேஸ் என்று அறிந்தால் தனியார் மருத்துவமனையில் சேர்க்க மறுப்பார்கள் என்று அஞ்சி, "மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டதாக'க் கூறிச் சேர்த்தனர். இதில் இரகசியம் ஒன்றுமில்லை.

 

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கெதிரான இயக்கம். சட்டபூர்வமான வழிகளில் இந்த மக்கள் விரோதிகளைத் தண்டிப்பதோ, அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்வதோ இயலாது என்ற உண்மையை மக்களுக்கு உணர்த்தும் முகமாக நடத்தப்பட்ட போராட்டமே விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம். இப்போராட்டத்தை நடத்திய காரணத்தினாலேயே அங்கே சிகிச்சை பெறக்கூடாது என்பது என்ன வகை ஒழுக்கம்?

 

ஒருவேளை த.தே.பொ.க. வினரின் ஒழுக்கநெறி அவ்வளவு கடுமையானதோ? நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறதே! இப்பேர்ப்பட்ட அந்தச் சீற்றம், கேவலம் ஒரு பக்க விளம்பரத்துக்காக வாலைக் குழைத்திருக்கிறதே!

 

புதிய ஜனநாயகம், விநோதகன் மருத்துவமனையிடம் விளம்பரம் வாங்கி பொங்கல் மலர் வெளியிட்டதா? அல்லது நேர்மையற்ற முறையில் அவ்வாறு கைநீட்டி விட்டு, பிறகு தன்திறனாய்வு செய்து "கவனக்குறைவு' என்று காரணம் கண்டுபிடித்ததா?

 

சலுகை கோரி தலை சொரிந்து நிற்காமல், மருத்துவக் கட்டணத்தை எமது தோழர்கள் கவனமாகச் செலுத்தியிருக்கின்றனர். தமிழர் கண்ணோட்டம் "கவனக்குறைவாக' பணம் வாங்கியிருக்கிறது. கவனக்குறைவாக பணத்தைத் தவறவிடுவதைத்தான் நாம் அறிந்திருக்கிறோம். கவனக்குறைவாக வாங்கிவிட்டார்களாம்!

 

தமிழர் கண்ணோட்டம் இதே பாணியில் பு.ஜ.வை விமர்சனம் செய்ய விரும்பினால், கீழ்க்கண்ட கேள்விகளையும் கேட்டுத் தனது மேதாவிலாசத்தை வெளியிடலாம்.

""அரசு எந்திரத்தை நொறுக்க வேண்டுமெனக் கூறிக் கொள்ளும் ம.க.இ.க.வினர், பொதுக்கூட்ட அனுமதிக்கு போலீசிடம் எழுதிக் கொடுப்பது ஏன்? நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வது ஏன்? ம.க.இ.க. தோழர்கள் அரசுத்துறையில் வேலை பார்ப்பது என்ன வகைப் புரட்சி?'' என்றெல்லாம் கேள்வி எழுப்பட்டும்.

 

தன்னுடைய நடத்தை தவறென்று உண்மையிலேயே உணர்ந்திருப்பின், அதை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் பண்பு வேண்டும். பிடிபட்ட கள்வனின் மனநிலையில் தமிழர் கண்ணோட்டம் குமுறிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், ""நீ மட்டும் பத்தினியா?'' என்று சேறடிக்கிறது. ""தவறி விழுந்து செத்தவரை தியாகியாக்கி விட்டார்கள்'' என்று கூறி தோழர் பீட்டரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறது.

 

தோழர் பீட்டர் தவறிவிழுந்து இறந்தாரா, அல்லது சாராய ரவுடிகளுடன் மோதி உயிர் விட்டாரா என்பதை ம.க.இ.க.வினரிடம் கேட்டு அறிந்து கொள்வதை விட, அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த அண்டை வீட்டாரிடம் தமிழர் கண்ணோட்டம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அல்லது மறுநாள் காலையிலேயே வழக்குப் பதிவு செய்த போலீசிடம் போய்க் கேட்கலாம். "விபத்தைக் கொலையென்று நம்பி ஏமாந்து' இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கில் வந்து கலந்து கொண்ட தொலைபேசி ஊழியர்களிடமும் கேட்டறியலாம்.

 

"இது கொலையல்ல' என்று தமிழர் கண்ணோட்டம் உறுதிபட நம்புவதால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சாராய ரவுடி மார்ட்டினுக்கு ஆதரவாக சாட்சியளிக்க வருமாறு த.தே.பொ.க.வின் தலைவரை அழைக்கிறோம்.

 

ஒரு "இந்திய தேசியரை'க் கொன்றதாக "கள்ளச்சாராயத் தமிழர்' ஒருவர் அபாண்டமாகக் குற்றம் சாட்டப்படும்போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அதைப் பார்த்துக் கொணடு; வாளாவிருக்க முடியுமா? வாருங்கள்!

 

நாங்கள் ""மெட்ரிகுலேசன் பள்ளியில் காசு வாங்கலாமா?'' என்று மட்டும்தான் கேட்டோம். இந்தக் "கள்ளச் சாராயத் தோழமை' ரகசியம் நீங்கள் சொல்லித்தான் தெரியும். இதற்காக எங்கள் மீது பாயவேண்டாம்.

 

— ஆசிரியர் குழு