05_2005.jpgபோலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நடந்துவரும் காங்கிரசு கூட்டணி ஆட்சி, அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலை பார்த்துவரும் தொழிலாளர்களுக்கு மே தினப் பரிசாக, தொழிலாளர் ஓய்வூதிய வைப்பு நிதியைத் தனியார்மயமாக்கும் சட்டத்தைத் தரப் போகிறது. உலக வங்கி பத்தாண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் பற்றித் தயாரித்து அளித்த அறிக்கையின் ""ஜெராக்ஸ்'' காப்பிதான் இப்புதிய ஓய்வூதியச் சட்டம்.

 

இதற்கு முந்தைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, தொழிலாளர்கள் வகிக்கும் பதவி, அவர்களது பணிக்காலம் ஆகியவற்றைப் பொருத்து, அவர்கள் ஓய்வு பெற்ற பின், மாதா மாதம் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் வைப்பு நிதிக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை, தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதலுக்கு ஏற்ப, முழுமையாகவோ, பகுதியளவோ பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். அந்தச் சூதாட்டத்தில் கிடைக்கும் இலாபத்துக்கு ஏற்பத்தான் ஓய்வூதியம் வழங்கப்படும். பங்குச் சந்தை திடீரென கவிழ்ந்து போனால், தொழிலாளர்கள் ஓய்வூதியத்திற்குப் பதிலாக தூக்குக் கயிறைத்தான் தேட வேண்டியிருக்கும்.

 

அரசாணையாக இருந்து வரும் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டமாக்கும் நோக்கத்தோடு, மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சட்ட நகலை தாக்கல் செய்துவிட்டது, காங்கிரசு கூட்டணி ஆட்சி. தற்பொழுது சனவரி 2004க்குப் பின் பணியில் சேர்ந்த மைய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை, மையமாநில அரசுகள் மற்றும் தனியார்துறையைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் விரிவாக்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; ஓய்வூதியத்திற்காகத் தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்படும் சேமநல நிதியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து அரசைக் கழட்டிவிட்டு விட்டு, பன்னாட்டு நிறுவனங்களிடமும், தனியார் முதலாளிகளிடமும் அப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் ப.சிதம்பரத்தின் நோக்கம். இதுநாள்வரை தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்படும் சேமநல நிதியை அரசுக்குச் செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொள்ளையடித்து வரும் முதலாளிகள், இனி, ப.சிதம்பரத்தின் தயவால் சட்டப்படியே கொள்ளையடிக்கலாம்.

 

தொழிலாளர்களின் எதிர்காலத்தின் மீது அணுகுண்டை வீசியுள்ள மைய அரசு விவசாயிகளையும் விட்டுவிடவில்லை. கடந்த சனவரி மாதம் மைய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதைச் சட்டம், ""விவசாயிகள் தங்களின் சொந்த உபயோகத்திற்காக விதைகளைச் சேமிப்பதை; தங்களின் சேமிப்பில் உள்ள விதைகளை விவசாயிகள் விற்பதை; ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்வதை''த் தடை செய்கிறது. அதாவது, பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் விதைகளைத்தான் இனி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இச்சட்டத்தின் பொருள்.

 

இச்சட்டத்தை மீறும் விவசாயிகள் மீது 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் கிடைக்குமாம். இச்சட்டத்தை விவசாயிகள் மீறுகிறார்களா எனக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும் என்பதோடு, அப்படையானது விவசாயிகளின் வீடுகளுக்குள் புகுந்து, நெல்குதிரைத் திறந்து பார்த்துச் சோதனை போடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அரசிடம் உள்ள நெல் கோதுமை கொள்முதலையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் முகமாக, பன்னாட்டு நிறுவனங்கள் தானிய கிடங்குகளைத் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக, புதிய மாதிரி சந்தை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு ஏற்றவாறு, இந்தியா, தனது பொருளாதாரத்தை இந்த ஆண்டிற்குள் முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். காப்புரிமை சட்டம் திருத்தப்பட்டிருப்பது; மதிப்புக் கூட்டுவரி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது; ஜவுளி பின்னலாடை ஏற்றுமதிக்கு இருந்து வந்த ""கோட்டா'' முறை ரத்து செய்யப்பட்டிருப்பது; சேவை வரி விரிவுபடுத்தப்பட்டிருப்பது மற்றும் புதிய ஓய்வூதியச் சட்டம், புதிய விதைச் சட்டம், புதிய சந்தை சட்டம் ஆகிய இப்பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் உலக வர்த்தகக் கழக உத்தரவுப்படி நாடு மறுகாலனியாக்கப்படுவதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.