Language Selection

05_2005.jpgஉழைக்கும் மக்களின் வாழ்வைச் சீரழித்து நாசமாக்கும் லாட்டரி சூதாட்டத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளதைத் தொடர்ந்து, லாட்டரி முதலாளிகளான கருப்புப் பணபேர்வழிகள், லாட்டரிச் சீட்டு விற்பதையே தொழிலாகக் கொண்டோரைத் திரட்டி உண்ணாவிரதம் இருப்பது, ""அம்மா''வுக்கு வேண்டுகோள் விடுத்து நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரம் செய்வது என்று பலவழிகளிலும் முயற்சித்து, மீண்டும் இழந்த சொர்க்கத்தைக் கைப்பற்றத் துடிக்கின்றனர். ""அம்மா'' அசைந்து கொடுக்காததாலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதாலும் எதிர்க்கட்சிகளிடம் பேரம் நடத்தி தமது சுரண்டல் முயற்சிக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.

 

லாட்டரிச் சீட்டு விற்று பிழைத்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் இன்று பிழைக்க வழியின்றி தவிப்பதால், அவர்களுக்கு மாற்று வேலை கொடுக்கச் சொல்லி அரசிடம் போராடுவதை விட்டுவிட்டு, லாட்டரி முதலாளிகளின் "நியாயமான' கோரிக்கையை ஆதரித்து மீண்டும் லாட்டரி சூதாட்டத்தைத் தொடங்கக் கோரி போலி கம்யூனிஸ்டுகள் போராடக் கிளம்பி விட்டார்கள். மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் அருகே 4.4.05 அன்று லாட்டரி வியாபாரிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை சி.பி.எம். கட்சியின் மதுரை எம்.பி.யான திருவாளர் மோகன் தொடங்கி வைத்து வாழ்த்துரையும் வழங்கியுள்ளார்.

 

இந்தியாவிலேயே முதன்முதலாக லாட்டரி சூதாட்டத்தை கேரளாவில் தொடங்கி வைத்த முன்னோடிகள் போலி கம்யூனிஸ்டுகள்தான். எனவே தான் தமது பாரம்பரியப் பெருமையுடன் சீரழிவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஆதரிக்கக் கிளம்பிவிட்டார்கள் போலும்! இதே வழியில் நாளை சாராயம், மசாஜ் பார்லர், வீடியோ பார்லர், விபச்சாரம், கந்துவட்டி முதலானவற்றையும் வரவேற்று போராட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

சுரண்டும் சூதாட்டக் கும்பலின் கொள்ளைக்கும் ஆதிக்கத்துக்கும் சமூக சீரழிவுக்கும் ஆதரவாக நிற்கும் போலி கம்யூனிஸ்டு துரோகிகளை அம்பலப்படுத்தி, ""மகா நடிகர் எம்.பி. மோகனே, கம்யூனிஸ்ட் என்று சொல்லாதே!'' என்ற தலைப்பிட்டு அதேநாளில் மதுரை நகரெங்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. போலி கம்யூனிஸ்டுகளைக் கையும் களவுமாகப் பிடித்து அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டிய இச்சுவரொட்டிகள் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றதோடு, சி.பி.எம். கட்சி அணிகளிடையே விவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

 

புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி,
மதுரை.