கரண்ட் பில் கட்டாத சாமானிய மக்களின் வீடுகளில் ப்யூஸைப் பிடுங்கும் ஆட்சியாளர்கள், மக்கள் வரிப்பணத்திலிருந்து என்ரானின் 5,250 கோடி ரூபாய் கடனை அடைக்கக் கிளம்பியுள்ள நிலையில், இம்மக்கள் விரோதிகளை எதைக் கொண்டு அடிப்பது? இவர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிசத் துரோகிகளை எதைக் கொண்டு அடிப்பது?
பிரியதர்ஷிணி, சென்னை.
ஏழைகளின் கையை வெட்டி அவர்களுக்கே ""சூப்'' தயாரித்துக் கொடுக்கும் தன்னார்வக் குழுக்களின் நுண்தொழில் மோசடித்தனத்தையும் இதன் பின்னே மறைந்துள்ள ஏகாதிபத்திய சதியையும் அம்பலப்படுத்திக் காட்டிய கட்டுரை சிறப்பு. திறந்த வீட்டுக்குள் புகுந்த ஓநாயாகிய என்ரானுக்கு விருந்து வைக்கும் கசாப்புக்காரனாகி விட்டார் ப.சிதம்பரம். இந்த சிதம்பர ரகசியத்தை மூடி மறைத்து அன்னிய முதலீடுகளை வெட்கமின்றி ஆதரித்து நியாயப்படுத்த மாநாடு கூட்டி மக்களை ஏய்க்கின்றனர், "மார்க்சிஸ்டுகள்'!
கதிரவன், சென்னை.
நம்ம ஊர் ஊத்தவாயன் சங்கராச்சாரிக்குப் போட்டியாக உள்ள உலகமகா பிற்போக்காளன் போப் ஜான்பாலின் உண்மை உருவத்தைத் திரைகிழித்துக் காட்டி, கிறித்துவ மதவெறியர்களுக்குச் சம்மட்டி அடி கொடுப்பதாக பு.ஜ. இதழ் அமைந்துள்ளது. இந்தக் கழிசடையின் சாவுக்கு மூன்று நாள் அரசு முறை துக்கம்; ஆனால், சுனாமியால் கொல்லப்பட்ட உழைக்கும் மக்களுக்கு அஞ்சலியோ, துக்கமோ, நிவாரணமோ இல்லை. அரசு என்பது எந்த வர்க்கத்தின் நலனுக்கானது என்பதை இச்சம்பவமே நிரூபித்துக் காட்டுகிறது.
புதியவன், கிருஷ்ணகிரி.
தமிழர் கண்ணோட்டம் கும்பலின் சந்தர்ப்பவாத பித்தலாட்ட அரசியலானது, கள்ளச் சாராய ரௌடிகளை எதிர்த்துப் போராடித் தியாகியான தோழர் பீட்டரையும், அவர் சார்ந்த அமைப்பையும் வக்கிரமாக இழிவுபடுத்துமளவுக்குப் போயிருப்பது மிகக் கேவலமானது. இப்பிழைப்புவாதிகள், ஜெயகாந்தன் ஒரு தமிழன் என்பதால், தமிழர்களையே இழிவுபடுத்தும் அப்பார்ப்பனக் கைக்கூலி எழுத்தாளனுக்கு ஞானபீடப் பரிசு வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். மெட்ரிகுலேசன் பள்ளி அதுவும் ஏகாதிபத்திய பார்ப்பன சேவையில் ஈடுபட்ட அன்னிபெசண்ட் பெயரில் பள்ளி நடத்தும் "தமிழ் ஆர்வலரிடம்' காசு வாங்கிவிட்டுப் பூசி மெழுகும் இப்பிழைப்புவாதிகளுக்கு, புரட்சிகர இயக்கத்தினரைப் பற்றி விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது?
செம்முகில், ஈரோடு.
ஜெயகாந்தனின் தமிழின விரோதப் போக்கையும் பார்ப்பனக் கைக்கூலித்தனத்தையும், அவரது எண்ணங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ளதையும் அக்குவேறு ஆணி வேராகப் பிட்டு வைத்துக் காட்டி, எந்தக் கொம்பனாக இருந்தாலும் துணிவோடு எதிர்க்கும் புதிய ஜனநாயகத்தின் சமுதாயப் பணி வாழ்க!
தங்க. சங்கரபாண்டியன், மணலிப்புதுநகர்.
விவசாயிகளின் வாழ்வைப் பறித்து, அவர்களைச் சிறைப்பிடிக்கவும் வகைசெய்யும் புதிய விதைச் சட்டம் பற்றிய தலையங்கக் கட்டுரை, நாட்டைச் சூழ்ந்துள்ள பேரபாயத்தை எடுப்பாக உணர்த்துகிறது. இதழின் அனைத்து கட்டுரைகளும் கருத்தாழமிக்கவை.
பி. சண்முகவேல், கொட்டாரக்குறிச்சி.
கிராமப்புற ஏழைகளின் இரத்தத்தை வட்டியாக உறிஞ்சும் அட்டைகள்தான் சுய உதவிக் குழுக்கள் என்பதையும், தனியார்மய தாராளமயச் சூழலில் மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்புவதற்கான ஏகாதிபத்திய சதிகார ஏற்பாடுதான் நுண்கடன் நுண்தொழில் என்பதையும் பு.ஜ. தெளிவாக எடுத்தியம்பியுள்ளது.
ஜான், சென்னை.
பங்காளி வாங்கிய கடனுக்கு பெண்டாட்டி தாலியை அறுத்த கதையாக, என்ரானின் கொள்ளைக்கு நமது வரிப்பணத்தைச் சூறையாடக் கிளம்பிவிட்டது அரசு என்பதை என்ரான் பற்றிய கட்டுரை தெளிவாக்கியது. கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள வைப்பு நிதியையும் சூறையாடக் கிளம்பிவிட்டார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இச்சதியை அம்பலப்படுத்தி முறியடிக்க முன்வரவேண்டும்.
தளபதி, சென்னை.
போப் ஜான் பால்ஐஐ பற்றிய கட்டுரை, அவருடைய பிற்போக்குப் பின்னணியை நன்கு விளக்கியுள்ளது. எனினும் கட்டுரையானது, விவரங்களின் தொகுப்பாகவும் உரைநடை பாணியிலும் எழுதப்பட்டுள்ளதால் படிக்க சலிப்பூட்டுகிறது. இதுபோன்ற பழமைவாத பிற்போக்கு மதநிறுவனங்கள் அனைத்தும் வீழ்த்தப்பட வேண்டிய அவசியத்தை விளக்கி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஜீவா, சென்னை.
நுண்கடன் நுண்தொழிலின் பின்னே மறைந்துள்ள ஏகாதிபத்திய சதியையும் தன்னார்வக் குழுக்களின் தரகு வேலையையும் அம்பலப்படுத்திக் காட்டிய கட்டுரை சிறப்பு. மூன்றாவது மொழிப் போர் நடத்தக் கிளம்பிய சூரப்புலிகளின் சரணாகதி சந்தர்ப்பவாதத்தைத் தோலுரித்துக் காட்டியது அருமை. தொழிலாளர் வைப்பு நிதியும் சூறையாடப்படவுள்ள அபாயத்தை பு.ஜ. மட்டுமே முன்கூட்டியே எச்சரித்துப் போராட அறைகூவியுள்ளது.
வாசகர் வட்டம், பென்னாகரம்.
ஊடகங்கள் போப் ஜான்பாலை ஒரு மாபெரும் மகானாக, ஏசுவின் மறு அவதாரமாகச் சித்தரித்த போது, பு.ஜ. கட்டுரையானது அவர் எத்தகையதொரு இழிந்த பழமை பிற்போக்குவாதி என்பதை விளக்கிக் காட்டியது. என்ரான் கொள்ளை பற்றிய கட்டுரையானது நாடு வேகமாக மறுகாலனியாக்கப்பட்டு வருவதை உணர்த்துகிறது.
சுடர், சென்னை.
பானை சோற்றைப் பதம் பார்த்தாற்போல, அன்னிய முதலீடுகளை வரவேற்று மாநாட்டில் தீர்மானம் போட்டுள்ள செயல் ஒன்றே சி.பி.எம். கட்சியின் துரோகத்தனத்திற்குச் சான்று கூறப் போதுமானது. தமிழ் சினிமா கதாநாயகர்கள் உருவாக்கும் பொறுக்கி கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக, சினிமா கழிசடைகள் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது.
வாசகர் வட்டம், சாத்தூர்.
தமிழ் சினிமா கதாநாயகர்கள் அடிக்கும் கொள்ளை, பரப்பும் சீரழிவு, இக்கழிசடைகளுக்கு ஜெயா அரசின் போலீசு பாதுகாப்பு ஆகியன பற்றி புதிய கோணத்தில் வெளியான கட்டுரை பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவியது. புனிதமானவராகச் சித்தரிக்கப்படும் போப் ஜான் பால், அமெரிக்க ஆசியுடன் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையோடு, பல ஆட்சிக் கவிழ்ப்புகள், சதிகள் கொலைகளில் தொடர்புடைய பிற்போக்குவாதிதான் என்பதை மறுக்கமுடியாத ஆதாரங்களுடன் பு.ஜ. உணர்த்தியுள்ளது. ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களின் பலவகைப்பட்ட சதிகளை அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வருவது சிறப்பு.
வாசகர் வட்டம், திருச்சி.