Language Selection

புதிய ஜனநாயகம் 2005

06_2005.jpg"போலீசு துறையைக் கலைத்திடு!'' இப்படியொரு முழக்கம் கொண்ட பதாகையை (ஆச்ணணழூணூ) ஏப்ரல் மாத இறுதியில் மும்பய் நகரில் காண முடிந்தது. இது, ஏதாவதொரு புரட்சிகர அமைப்பின் வேலையாயிருக்கும் என நீங்கள் நினைத்தால், அது தவறு. மும்பய் நகர மக்கள்தான், தாங்களே இந்தப் புரட்சிகரமான முழக்கத்தை வடிவமைத்து, பேனர்களில் எழுதி, மும்பய் நகரின் பல இடங்களில் கட்டியிருந்தார்கள். ஏப்ரல் 21 அன்று மும்பயில் நடந்த சம்பவம்தான், போலீசுக்கு எதிரான போராட்டத்தில் இப்படியொரு புரட்சிகரமான தீர்வைத் தன்னெழுச்சியாக முன்வைக்கும் நிலைக்கு மும்பய் நகர மக்களைத் தள்ளியது.

 

மும்பயில் உள்ள ""மெரைன் டிரைவ்'' கடற்கரையோரச் சாலையை, சென்னை மெரீனா கடற்கரைச் சாலைக்கு இணையாகக் கூறலாம். பல்வேறு விதமான அலுவலகங்களும், மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து வாகன நெரிசலும் நிறைந்த பகுதி இது. இப்பகுதியைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தில் செம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி ஏப்ரல் 21 அன்று சுனில் ஆத்மராம் மோர் என்ற போலீசு மிருகத்தால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்.

 

அக்கல்லூரி மாணவி விசாரணைக் கைதியோ, விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவரோ கிடையாது. சம்பவம் நடந்த அன்று, அவர் தனது ஆண் நண்பருடன் மெரைன் டிரைவ் சாலையில் நடந்து வந்திருக்கிறார். அப்பொழுது பணியில் இருந்த சுனில் ஆத்மராம் மோர், அப்பெண்ணின் ஆண் நண்பரை மிரட்டி அனுப்பிவிட்டு, அப்பெண்ணை விசாரிக்க வேண்டும் என போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கிறான்.

 

அக்கல்லூரி மாணவி அடுத்தடுத்து மூன்று முறை பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டிருப்பதாகவும்; அந்த சமயத்தில் அப்போலீசுக்காரன் குடித்திருந்ததாகவும் மருத்துவ ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் ஆள் நடமாட்டமே இல்லாத நள்ளிரவு நேரத்தில் நடக்கவில்லை. பகல் நேரத்தில், மாலை 4.30 மணி போல், மக்கள் நடமாடிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது.

 

ஒரு பொறுக்கியோ, ரவுடியோ செய்யத் துணியாத காரியத்தை, ஒரு போலீசுக்காரனால் துணிந்து செய்ய முடிகிறது என்றால், ""காக்கிச் சட்டையை மாட்டிக் கொண்டு எதையும் செய்யலாம்; அதற்காக யாரும் தன்னைத் தட்டிக் கேட்கவோ, தண்டித்து விடவோ முடியாது'' என்ற அதிகாரத் திமிரோடு போலீசுத் துறை வளர்க்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

 

காக்கிச் சட்டை ரவுடிகளின் இந்தப் பொறுக்கித்தனத்தையும், பாசிசத் திமிரையும் எதிர்த்து பெண்கள் அமைப்புகள் மட்டுமின்றி, கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் என மும்பய் நகரின் பல்வேறு தட்டு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான கிதிகா வோரா என்ற பெண், ""நான் எனது இரண்டு பெண்களிடமும் உங்களுக்கு என்ன நடந்தாலும், போலீசிடம் மட்டும் உதவி கேட்டுப் போய்விடாதீர்கள் எனச் சொல்லியிருக்கிறேன். பெரும்பாலான போலீசுக்காரர்கள், பார்வையாலேயே கற்பழித்து விடுவார்கள்'' என்கிறார்.

 

சிறீவத்ஸவா என்ற தாய், ""அந்தப் போலீசுக்காரனை அம்மணப்படுத்தி, நடுத்தெருவில் தூக்கில் போட வேண்டும்'' எனத் தனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்.

 

இச்சம்பவம் நடந்த மெரைன் டிரைவ் பகுதியில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இன்னொரு பெண், ""அவனின் கண்களைக் குத்திக் குருடாக்கிய பிறகு தூக்கில் போட வேண்டும்; பத்திரிக்கைகள் இந்தச் சம்பவத்தை சும்மா விட்டுவிடக் கூடாது'' எனக் கூறுகிறார்.

 

12 வயது சிறுமிக்குத் தாயான இன்னொருவரோ, ""அவன் சாதாரண போலீசுக்காரன் என்பதால் மாட்டிக் கொண்டான். அவனே உயர் அதிகாரியாக இருந்தால், இந்தச் சம்பவத்தை மூடி மறைத்து, அவனைக் காப்பாற்றியிருப்பார்கள்'' என போலீசுத்துறையின் நாணயத்தைப் புட்டு வைக்கிறார்.

 

மும்பய் நகர மக்கள் போலீசின் மீது எவ்வளவு தூரம் ஆத்திரம் அடைந்து இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சம்பவத்தையும் ஆதாரமாகக் கூறலாம். கடந்த மே 10ஆம் தேதி மும்பய் நகரைச் சேர்ந்த தானே ரயில் நிலையத்தில், இரண்டு நபர்கள், 42 வயதான ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். ரயில் நிலையத்தில் இருந்த பொது மக்கள் அந்த நபர்களைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த இரண்டு பேரும் போலீசுக்காரர்கள் எனத் தெரிந்ததும், வாயால் விசாரிப்பதை நிறுத்திவிட்டு, அவர்கள் இருவரையும் ஆத்திரம் தீர உதைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.

 

பொதுமக்களின் ஆத்திரத்தைத் தணித்து, அவர்களிடம் தனது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள மகாராஷ்டிரா போலீசு பல தரப்பட்ட செப்படி வித்தைகளில் இறங்கியிருக்கிறது. பாலியல் பலாத்காரம் நடந்த மெரைன் டிரைவ் புறக்காவல் நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டது; குற்றவாளி சுனில் ஆத்மராம் மோருக்கு ஓய்வூதியம், சேமநல நிதி சேமிப்பு, பணிக் கொடை போன்ற எந்தவிதமான பணச் சலுகைகளும் கிடைத்துவிடாதபடி, சிறப்புச் சட்டத்தின் கீழ் பணி நீக்கம் செய்துவிட்டது.

 

இது ஒருபுறமிருக்க, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மனைவிகள் சங்கம், பாதிக்கப்பட்ட பெண்ணின் உயர் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, பாவ மன்னிப்பு கோரியிருக்கிறார்கள். பெண் போலீசார், ""போலீசுத் துறையில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் கிடையாது. எங்களைக் கண்ணியத்துடன் தான் நடத்துகிறார்கள்'' எனப் பிரச்சாரம் செய்து, போலீசு துறையை உத்தமனாகக் காட்ட முயலுகிறார்கள்.

 

ஆனாலும், போலீசின் குறுக்குப் புத்தி வேலை செய்யாமல் இருக்குமா? ""அக்கல்லூரி மாணவி தன்னைப் பலாத்காரப்படுத்த வந்த போலீசுக்காரனை எதிர்த்துப் போராட வாய்ப்புகள் இருந்தும் கூட, போராடவில்லை. பயத்தினால் கூட, அப்பெண் அடிபணிந்து போயிருக்கலாம்'' என மகாராஷ்டிரா போலீசு அவதூறு பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையைச் சந்தேகிப்பதன் மூலம், தனது சகாவின் குற்றத்தை நியாயப்படுத்த முயலுகிறார்கள்.

 

போலீசாரின் இந்த ஆணாதிக்கத் திமிர்த்தனத்திற்கு, இந்து மதவெறி பிடித்த சிவசேனா கட்சி ஒத்து ஊதுகிறது. ""செம்பூர் பகுதியில் வசிக்கும் அந்தப் பெண், ஆண் நண்பருடன் மெரைன் டிரைவ் பகுதிக்கு ஏன் சென்றார்?'' என போலீசுக்கு ஆதரவாகக் கேள்வி எழுப்புகிறது. இதைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், ""பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; மீறி வந்தால், கற்பழிக்கப்படுவீர்கள்'' என்பதுதான். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போட்ட ஆணையை, இந்து மதவெறிக் கும்பல், "மதச்சார்பற்ற' இந்தியாவில் அமல்படுத்திவிடத் துடிக்கிறது.

 

இது மட்டுமின்றி, ""இந்தியப் பெண்கள் இந்து கலாச்சாரப்படி ஆடை அணியாமல், அரைகுறை ஆடையுடன் வெளியே நடமாடுவதால்தான் கற்பழிப்புகள் பெருகி விட்டதாக'' ஒரு வக்கிர கண்டுபிடிப்பையும், சிவசேனா தனது பத்திரிகையில் தலையங்கமாக எழுதி, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளி ஆக்கிவிட்டது.

 

இந்து கலாச்சாரப்படி சேலை கட்டும் பெண்களை போலீசு தெய்வமாக மதிப்பது போலச் சரடு விடுகிறது, சிவசேனா. சிதம்பரம் பத்மினியின் சேலையை உருவி, நிர்வாணமாக்கி அண்ணாமலை நகர் போலீசு நிலையத்தில் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவில்லையா? மாயா தியாகி என்ற நிறைமாத கர்ப்பிணியை, கணவனின் கண் எதிரேயே, சேலையை உருவி போலீசார் பலாத்காரப்படுத்தவில்லையா? இவ்வளவு ஏன், பஞ்சாப் தீவிரவாதிகளை நர வேட்டையாடியதற்காக ""ஹீரோ'' வாகப் புகழப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி கே.பி.எஸ். கில், ஒரு மாலை நேர விருந்தில், பல பெரிய மனிதர்கள் முன்னிலையில், ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பின்புறத்தில் தட்டி, தனது காமவெறியைக் காட்டிக் கொள்ளவில்லையா? இப்படிப்பட்ட அதிகாரத் திமிரும், காமவெறியும் கொண்ட போலீசாரிடமிருந்து இந்தியப் பெண்களை இரும்புக் கவசம் கூடக் காப்பாற்றி விடாது என்பதுதான் உண்மை.

 

****

 

ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை, இந்தியாவின் ஏதாவதொரு மூலையில், யாராவது ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்குப் பலியாவதாக புள்ளிவிவரமொன்று கூறுகிறது. பெரும்பாலான பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கும், போலீசுக்கும் நேரடி தொடர்பில்லை என்பது உண்மைதான். எனினும், இவ்வழக்குகளை விசாரிக்கும் போலீசின் அணுகுமுறை பாதிக்கப்பட்ட பெண்ணை முதல் குற்றவாளியாக்குவதாகவே அமைந்து விடுகிறது.

 

சமீபத்தில் தலைநகர் தில்லியில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த 20 வயதான இளம் பெண், தனது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தேநீர் சாப்பிட்டுவிட்டுப் போவதற்காக, தனது தோழியுடன் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்பொழுது ஒரு காரில் வந்து கொண்டிருந்த நான்கு பேர், கண்ணிமைக்கும் நேரத்தில், அப்பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டுக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரப்படுத்திய பின், நடுத்தெருவில் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பிவிட்டனர்.

 

இவ்வழக்கை விசாரித்து வரும் தில்லி போலீசார் அப்பெண்ணிடம் கேட்ட முதல் கேள்வியே ""உன்னை யார் ராத்திரி 2 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வரச் சொன்னது?'' என்பதுதான். வேலைக்குப் போய்க் கொண்டே படிக்கும் பெண், இரவு நேரத்தில்தான் தேர்வுக்குத் தயாரிக்க முடியும். இரவு நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைப்பதே ஆபத்தானது என்றால், இரவு நேர ஷிப்டுகளில் இனி பெண்களை வேலைக்கு அமர்த்தலாம் என உச்சநீதி மன்றம் உத்திரவு போட்டுள்ளதே, அதையும் பெண்களின் பாதுகாப்பு கருதி போலீசார் எதிர்க்க வேண்டியதுதானே?

 

போலீசு விசாரணையின் போதும், அதன்பின் நடக்கும் நீதிமன்ற விசாரணையின் போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டுமொரு முறை வார்த்தைகளால் பாலியல் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. போலீசு நிலையத்தில் பதிவாகும் பாலியல் பலாத்கார வழக்குகளில், 5 சதவீத வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இதற்கு சட்டத்தின் ஓட்டைகள் மட்டுமின்றி, நீதிபதிகளின் மேல்சாதி ஆணாதிக்கத் திமிரையும் காரணமாகக் கூறலாம்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திரபூர் போலீசு நிலையத்தில் மதுரா என்ற பழங்குடியினப் பெண், இரண்டு போலீசு மிருகங்களால் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ""மதுரா, தன்னைக் காப்பாற்றும்படி கூச்சல் போட்டதாகத் தெரியவில்லை. எனவே, அவர் சம்மதத்துடன்தான் உடலுறவு நடந்திருப்பதாகத்'' தீர்ப்புக் கூறி, குற்றவாளிகளை விடுதலை செய்தது.

 

கேரளாவில் நடந்த சூர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் இளஞ் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, 40 நாட்களாகத் தொடர்ந்து பல பெரிய மனிதர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார். மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய 36 குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டனர். ஆனால், கேரள உயர்நீதி மன்றமோ, இவர்களுள் 35 பேரை நிரபராதிகளாகக் கூறி விடுதலை செய்துவிட்து.

 

""அச்சிறுமி எளிதாகத் தப்பித்துப் போயிருக்க முடியும்; ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. எனவே அவள் சம்மத்துடன்தான் எல்லாம் நடந்திருக்கிறது'' எனத் தீர்ப்பெழுதி, பாதிக்கப்பட்ட சிறுமியை நடத்தை கெட்டவளாக முத்திரை குத்திவிட்டது, கேரள உயர்நீதி மன்றம். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியும் கூட, பாலியல் பலாத்கார குற்றத்திற்காகத் தண்டிக்கப்படவில்லை. மாறாக அச்சிறுமியை வைத்து ""விபச்சாரம் நடத்தினார்'' என்ற நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

 

மும்பய் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கொன்றில், குற்றவாளி அப்பெண்ணை மணந்து கொள்வதாகக் கூறி பாவ மன்னிப்பு கேட்டிருக்கிறான். உடனே நீதிபதி பி.சி. சிங், பாதிக்கப்பட்ட பெண்ணின் "சம்மதத்தை'ப் பெற்று, ""இந்தக் குற்றத்திற்கு இதுதான் பரிகாரம்'' எனத் தீர்ப்பெழுதி, குற்றவாளியை விடுதலை செய்துவிட்டார். கிராமப்புறங்களில் மேல்சாதி கும்பலால் நடத்தப்படும் கட்டப் பஞ்சாயத்துகளுக்கும், இதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?

 

இதற்கெல்லாம் மேலாக, போலீசும், இராணுவமும் "தீவிரவாதிகளை வேட்டையாடுவது' என்ற பெயரில் நடத்தும் பாலியல் வன்முறைகளை, அரசாங்கமும், நீதிமன்றமும் குற்றமாகவே பார்ப்பதில்லை. வீரப்பன் வேட்டையின் பொழுது, பழங்குடியினப் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திய அதிரடிப் படை ரவுடிகள் மீது ஏதாவது ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறதா? மாறாக, அவ்வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான செயலாகச் சித்தரிக்கப்பட்டு, காக்கிச் சட்டை ரவுடிகளுக்கு பணமும், பதவி உயர்வும் பரிசாக அளிக்கப்பட்டது.

 

போலீசு கொட்டடியில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களைத் தடுக்க போலீசுக்கு மனித உரிமைகள் பற்றியும், பெண்களை அணுகுவது குறித்தும் போதிக்க வேண்டும் என்பதெல்லாம் புலிக்கு பசுத்தோலை போர்த்திவிடுவது போன்றதுதான். சட்டபூர்வ ரவுடி கும்பலான போலீசை அமைப்பைக் கலைக்கக் கோருவது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும். போலீசு என்ற தனிவகை சாதிக்குப் பதிலாக ஆயுதந்தாங்கிய மக்கள் படை; நீதிமன்றங்களுக்குப் பதிலாக மக்கள் சர்வாதிகார மன்றங்கள் இப்புரட்சிகர அமைப்புகளைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரியும் குற்றவாளிகள், எந்தவிதத்திலும் தப்பித்து விடாதபடி தண்டிக்க முடியும்!


· செல்வம்