"ஆன்மீகச் செம்மல், அன்னதானப் பிரபு, இந்தியாவின் விடிவெள்ளி, வாழும் அம்பேத்கார், உலகப்புகழ் ஸ்ரீமான் மு.ஆதிகேசவன், பி.ஏ.பி.எல் தேசிய தலைவர், அகில இந்திய டாக்டர் அம்பேத்கார் எஸ்.சி., எல்.டி., நலக்கூட்டமைப்பு'' இப்படியெல்லாம் சுவரொட்டிகளில் தனக்குத்தானே விளம்பரம் செய்து கொண்ட திருவாளர் ஆதிகேசவன் இப்போது அரைடஜனுக்கும் மேற்பட்ட செக்மோசடிகள் மற்றும் கொலை முயற்சி போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் தமிழக போலீசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
110 சவரன் எடை கொண்ட ஒன்றரை அடி நீள தங்கச் செயின், 21 சவரன் பிரேஸ்லெட், 35 சவரனில் 6 விரல்களில் ""சொளவு'' மோதிரங்கள். "ஹோம் தியேட்டர்', குளுகுளு அரங்கம், கண்காணிப்பு கேமிராக்கள் என்று மூன்று நட்சத்திர வசதி கொண்ட ஆடம்பர வீடு அலுவலகம், அரைடஜனுக்கும் அதிகமான அதிநவீன கார்கள், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள், பண்ணை வீடுகள், நிலங்கள், தங்கம், ரொக்கம், முதலீடு என்று பல கோடி சொத்துக்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட விமானப் பயணம், சென்னை தாதாக்களான வெள்ளை ரவி, சேரா, அப்பு, ஆயில் பாண்டியன் ஆகியோரிடம் "நட்பு' ஒருபுறம், மறுபுறம் முன்னாள் இந்திய "குடியரசு' தலைவர் கே.ஆர். நாராயணன், சங்கராச்சாரி ஜெயேந்திரன் மற்றும் கலைஞர் கருணாநிதிவரை சரளமான சந்திப்புகள் நடத்துமளவுக்கு முக்கிய புள்ளியாகப் பவனி வந்துள்ளார்.
""நடமாடும் நகைக்கடை'', ""அரண்மனையில் வாழ்க்கை, தங்கத்திலே குளியல்'', ""காலையில் கோயில், மாலையில் விருந்து'', ""ஆல் இன் ஆல் அமர்க்களம்'' என்று ஆதிகேசவன் கடந்த ஒரு மாதகாலமாக தமிழக செய்தி சந்தையில் அட்டைப்பட நாயகனாக வலம் வருகிறார்.
இதற்காக, ஆதிகேசவன் செய்த முதலீடு என்ன தெரியுமா? வடநாட்டுச் செய்திப் பத்திரிக்கைகளில் ஒரு "துண்டு' விளம்பரம் மற்றும் அந்நிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் முதலீடுகளை (N.கீ.ஐ.) கையாளும் வங்கியின் நடைமுறை பற்றியான அரைகுறை அறிவு! இதன் மூலம் ஆதிகேசவன் மடியில் பணம் கோடிகோடியாய் கொட்டியது! நம்ப முடிகிறதா? இதோ, ஆதிகேசவன் செய்த மந்திர விளம்பரம்!
""ரூபாய் ஒரு லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டு இந்தியர்களின் பணம் உள்ளது. இந்தப் பணம் தொழில் தொடங்குவதற்கும் தொழில் அபிவிருத்திக்கும் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்படும்'' என்று வடமாநில செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். புனே, நாசிக், பம்பாய் மற்றும் டில்லி நகரங்களில் என்.ஆர்.ஐ. ஏஜெண்டுகள் என்று படித்த உள்ளூர் "வர்த்தக' பிரமுகர்களை நியமித்தார். அவர்கள், தூண்டிலாகச் செயல்பட்டு கொழுத்த இரைகளாகப் பார்த்து ஆதிகேசவனிடம் இழுத்து வந்தனர்.
அலங்கார பூக்கள், இறால் மற்றும் செம்மீன்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் தொழில்களை விரிவுபடுத்துவதற்காக மற்றும் பல்வேறு தொழில்களுக்காக கடன் கேட்டு வந்த வட இந்திய வர்த்தகர்களை மொத்தமாக தனது வலையில் சிக்க வைத்தார் ஆதிகேசவன்.
மத்திய ரிசர்வ் வங்கியும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் தன்னை "என்.ஆர்.ஐ. ஏஜெண்டாக' நியமித்து இருப்பதாக மோசடி கடிதங்களைக் காட்டி நம்ப வைத்தார். வட இந்திய ஓட்டுக் கட்சித் தலைவர்கள் மற்றும் முதன்மந்திரிகள் ஆகியோரிடம் தனக்குள்ள நெருக்கம், அதற்கான புகைப்பட ஆதாரங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கை இவற்றின் மூலம் அவர்களை எளிதாக வீழ்த்தினார். எதற்கும் மசியாத முரட்டு வாடிக்கையாளர்களை இளக வைக்க, ஆன்மீக லௌகீக, வைதீக, பார்ப்பனிய தொழில் தர்மங்களை கடைசி அஸ்திரமாக ஏவினார். வாடிக்கையாளர்களின் குறிப்பறிந்து, சிறப்பு பிரசாதங்களை பிரத்தியேகமாக வழங்கினார். பணத்தோடு வரும் வைதீக வர்த்தகர்களுக்கு காணிக்கையாக திருப்பதி லட்டு, லௌகீக வர்த்தகர்களுக்கு சீமைச் சாராயம், சிவப்பு விளக்கு சமாச்சாரங்கள், மற்றும் முரண்டுபிடிக்கும் நபர்களுக்கு உருட்டுக் கட்டை என்று கச்சிதமாக காரியத்தை சாதித்தார்.
இந்தியாவின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்து வணங்கி கடன் கேட்டவர்களுக்கு, "இந்தா என்.ஆர்.ஐ. பணம்' என்று ரூ. 1,400 கோடிக்கு "செக்' கொடுத்தார், ஆதிகேசவன். தான் கொடுத்த "செக்'குகளுக்காக ஒரே ஒரு ரூபாயைக் கூட அவர் வங்கியில் முதலீடு செய்யவில்லை.
வங்கி இருப்பு இல்லாமல் காசோலை வழங்கிய மோசடிக் குற்றம் தன் மீது பாயாதவாறு தடுக்க, கிரிமினல் குற்ற சட்டவிதிகளின் கீழ் வராத அன்பளிப்பு காசோலைகள் (ஞ்டிழூவ) வழங்கினார். இவ்வாறு, கடந்த 10 ஆண்டுகளில் என்.ஆர்.ஐ. கடன் கேட்டு வந்த சுமார் 500 பேர்களுக்கு ஏறக்குறைய ரூ. 1,400 கோடிக்கு போலி காசோலைகள் கொடுத்து அவர்களிடம் 50 கோடி ரூபாய் கமிசனை ரொக்கமாக வாங்கியிருக்கிறார், ஆதிகேசவன்.
ஆதிகேசவன் மொத்தமாக அம்பலப்பட்ட பிறகும், ஏமாந்தவர்களில் 10 பேர் கூட தைரியமாக முன்வந்து போலீசிடம் புகார் மனு அளிக்கவில்லை. காரணம் ஊரறிந்ததுதான்! ஆதிகேசவனின் அனைத்து மோசடிகளுக்கும் இதுநாள் வரையில் சட்ட ஆலோசனையும் பாதுகாப்பும் கொடுத்த அதே போலீசு கும்பல்தான் இப்போது ஆதிகேசவன் குற்றங்களை துருவித் துருவி கண்டு பிடிக்கும் நீதிமான் வேடத்துடன் திரிகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
மும்பை, நாசிக்கைச் சேர்ந்த வர்த்தகரான ஆசிஸ் பர்தேசி என்பவர் வெளிநாடுகளுக்கு அலங்கார பூக்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த 1997ஆம் ஆண்டு ரூ. 5 கோடி கடனுக்காக, ரூ. 60 லட்சம் கமிசனை ரொக்கமாக ஆதிகேசவனிடம் கொடுத்துள்ளார். அதற்கு ஈடாக, ஆதிகேசவன் அவருக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் விருந்து கொடுத்தார். ஆனால், கடனை மட்டும் கடைசிவரை கொடுக்கவேயில்லை.
ஆசிஸ் பர்தேசி கொடுத்த புகாரை வாங்கிய சென்னை, மகாகவி பாரதிநகர் (ஆதிகேசவன் வீடு இருக்கும் இடம்) போலீசு, புகார் கொடுத்தவர் மீதே வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மிரட்டியது. அவருடைய பல ஆண்டு கால விடா முயற்சிக்குப் பிறகுதான், இப்போது ஆதிகேசவன் லீலைகள் எல்லாம் அம்பலமாகியுள்ளது.
ஆதிகேசவனின் அந்தரங்க உதவியாளரான ஜெயவீரன் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது டி.டி.வி. (சசிகலா) தினகரனுடன் ஜெயா டி.வி.யின் தூணாக விளங்கியவன். இக்கும்பல்தான், ஆதிகேசவனை முன்னாள் "குடியரசு' தலைவர் கே.ஆர் நாராயணன் வரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆதிகேசவன் பிறப்பால் தலித் என்பதால் தலித் சமுதாய புரவலர், காவலர் என்று பரிவட்டம் கட்டி, கூட்டுக் கொள்ளை அடித்திருக்கிறது, போலீசு மற்றும் ஓட்டுப் பொறுக்கிகள் கூட்டம்.
போலீசு கைதுக்குப் பிறகு மேலும் வெறியோடு தன்னுடைய தலித் பிறப்பு அடையாளத்தை திரும்பத் திரும்ப காட்டுகிறார் ஆதிகேசவன். இதன் மூலம் தன்னுடைய கொள்ளைக்கு தலித் அடையாளத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவதில் ஓட்டுப் பொறுக்கித் தலைவர்களையும் விஞ்சி விட்டார்.
தன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தவுடன், தன் மகன் சாரதியை தலைமறைவாக்கி தன் தலைமையிலான தலித் இயக்கத்தையே போலீசு அழிப்பதாக அவர் மூலம் வதந்தி பரப்புகிறார். ""போலீசு எங்க குடும்பத்தை பழிவாங்கறாங்க சார். எங்க அப்பாவைக் கைது செய்ததும், அவர் நடத்தின அம்பேத்கர் இயக்கம் அழிஞ்சிடும்னு நினைச்சாங்க. ஆனால், ஏற்கெனவே இயக்கத்தின் பொறுப்பில் (?) இருந்தவன் என்பதால் என்னை ஒர்க்கிங் பிரஸிடெண்டாக கடந்த 12ந் தேதி தேர்ந்தெடுத்தாங்க இயக்கத்தினர்(!). அதிலிருந்துதான் என்னையும் கைது செய்ய முயற்சிக்குறாங்க'' என்று பத்திரிகைகளுக்கு தொலைபேசியில் தலைமறைவு பேட்டியளிக்கிறார், சாரதி. மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆதிகேசவனின் ஏஜெண்டாக பிடிப்பட்ட ஹேனா நேசமணி என்பவர், தானும் ஒரு தலித் புரவலர்தான் என்று அதிர்ச்சியூட்டுகிறார். ""நான் ஒரு தலித். எங்க மக்களுக்கான அமைப்பு ஒண்ணை வெச்சிக்கிட்டு உதவிகளைச் செய்துட்டு இருக்கேன். எங்க அமைப்போட தலைமை அலுவலகம் அமெரிக்காவுல இருக்கு. எனக்குச் சம்பளம் மட்டும் மாசம் நாற்பதாயிரம் கிடைக்குது. முப்பது தலித் கிராமங்களைத் தத்தெடுத்து உதவி செய்துட்டு இருக்கேன்'' என்று பேட்டியளிக்கிறார்.
தான் செய்த பகற்கொள்ளைக்காக "ஆதிகேசவன் அன்கோ' கொஞ்சமும் கூனிக் குறுகவில்லை. மாறாக, தாங்கள் தலித்துகளின் இழிவைப் போக்க வந்த வீரபுருஷர்களாக, அதற்காக தலித் இயக்கம் கண்ட இலட்சியவாதிகளாக, அதில் உடல், பொருள், ஆவி, குடும்பம் என்று அனைத்தையும் இழந்த தலித் தியாகச் சீலர்களாக, பதற்றமே இல்லாமல் தெளிவாகப் புளுகுகிறார்கள்.
கடந்த காலங்களில் நடந்த, பங்குச் சந்தை மோசடி, இந்தியன் வங்கி மோசடி, பத்திரத்தாள் மோசடி தற்போது இணையத் தளத்தில் தினந்தோறும் நடக்கும் "சைபர் கிரைம்' என்றழைக்கப்படும் மோசடி குற்றங்கள், வங்கி நிதி வர்த்தக மோசடிகள் அனைத்தும் தனியார்மயம், தாராளமயம் என்ற "கவர்ச்சிகரமான' புதிய பொருளாதார கொள்கையின் செல்ல கள்ளக் குழந்தைகள் ஆகும். ஆதிகேசவனின் என்.ஆர்.ஐ. மற்றும் காசோலை மோசடியும் அவ்வாறான வழியில் பிறந்த "சவலை'க் குழந்தையாகும்! காரணம், மோசடியின் மதிப்பு ரூ. 100 கோடிக்கும் கீழானதுதான் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன.
தலித் அடையாளத்தைக் கேடாக பயன்படுத்தும் ஆதிகேசவன் என்ற அசிங்கத்தை, ஆளும் வர்க்கத்தின் எச்சத்தை, உழைக்கும் தலித் மக்களே உடனடியாகப் பிடித்து தண்டிக்க வேண்டும். அந்த தண்டனை, தலித் தலைவர் எனச் சொல்லிக் கொண்டு, சமூக விரோதக் குற்றங்களில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.
· பச்சையப்பன்