"நாட்டை மீண்டும் காலனியாக்காதே! மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே!'', ""மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் கொலைவெறி, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை முறியடிப்போம்!'', ""இந்திய அரசே! நேபாளத்தின் பிற்போக்கு மன்னராட்சிக்கு ஆயுதம் வழங்காதே! நேபாளத்தில் புதிய ஜனநாயக அரசமைக்கப் போராடும் கம்யூனிசப் போராளிகளை வேட்டையாடும் அமெரிக்காவின் சதிக்குத் துணை போகாதே!'' என முழக்கமிட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும்
பேரணி, பொதுக்கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் அமெரிக்க மேலாதிக்கத்தையும், நாடு மறுகாலனியாவதையும் எதிர்த்த அரசியல் ஆர்ப்பாட்ட தினமாக மே தினத்தை மாற்றின.
"உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைப்படி ஏரி, குளம், ஆறுகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் தண்ணீர் தனியார்மயத் திட்டம்; சில்லறை வியாபாரம் முதல் குப்பை அகற்றுதல் வரை அனைத்தையும் அந்நிய முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடுதல்; வெள்ளையனின் நேரடிக் காலனியாதிக்கத்தைவிடக் கபடமானது, கொடியது தனியார்மயம் என்ற பெயரில் நடக்கும் இம்மறுகாலனியாதிக்கத்தின் கோரத் தாண்டவம்! பாராளுமன்றமும் சட்டமன்றமும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு உரிமம் வழங்கும் கருவிகள்! நடப்பது உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்சி! தனியார்மய, உலகமயச் சுருக்கு இறுகுகிறது! விழித்துக் கொள்வோம்! புதிய ஜனநாயக அரசமைக்க நக்சல்பாரிப் பாதையில் அணிதிரள்வோம்!' என்று புரட்சிகர அமைப்பினர் மக்களை அறைகூவி அழைத்தனர்.
சென்னையில்...
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் மே நாள் பேரணி, பொதுக்கூட்டம் சென்னைஆலந்தூர் பகுதியில் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு. மாநில பொதுச் செயலர் தோழர் சுப. தங்கராசு பேரணியைத் துவக்கி வைக்க, தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் 400 பேர் முழக்க அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தி, முரசு போல் முழக்கங்களை முழங்கிச் சென்றதைப் பொதுமக்கள் பிரமிப்புடன் நின்று பார்த்தனர்.
பொதுக்கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் பா.விஜயகுமார் சிறப்புரையாற்றினார். சிறுவர்களின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளை பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
திருச்சியில்...
உறையூர் கடைவீதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களின் பங்கேற்புடன், மே நாள் பொதுக் கூட்டம் மற்றும் சிறுவர் கலைநிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடந்தன.
தனியார் மருத்துவக் கொள்ளைக்காக, இனி அரசு மருத்துவமனைகளில் நாய்க் கடி மருந்துக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை என்பதை விளக்கி பெண் தோழர்கள் நடத்திய ""நாய்க்கடி' நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கூட்டத்தில் தோழர் குருசாமி மயில்வாகனன் சிறப்புரையாற்றினார்.
மே நாள் காலையில் திருச்சி துவாக்குடியில் உள்ள அண்ணாவளைவு பகுதியில், ""ஓட்டல் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்'' புதிய கிளை துவங்கப்பட்டது. கொடியேற்றி சங்கப் பலகையை திறந்து வைத்தார், ஓட்டல் தொழிலாளர் பாதுகாப்பு சங்க மாநிலத்தலைவர் தோழர் ப.பாரதிதாசன். கூட்டத்தில் பேசிய சங்க பொறுப்பாளர்கள், ""தொழிலாளர்கள் சங்கமாய் ஒன்று சேரும்போதுதான் உரிமைகளை வென்றெடுக்க முடியும்'' என்பதை வலியுறுத்தினார்கள்.
தருமபுரியில்...
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை மையப்படுத்தி தருமபுரியில் மே நாள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அனுமதி வழங்காமல் வழக்கம் போல் இறுதி வரை இழுத்தடித்த போலீசார், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி மே நாள் அன்று அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி பெண்கள், குழந்தைகள் மற்றும் ஜனநாயக சக்திகள் உள்ளிட்டு 500 பேர் ""தருமபுரி மாவட்டத்தில் போலீசு ஆட்சி ஒழிக!'' என்று விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனர்.
திடீரென அங்கு குவிந்த போலீசு, 40க்கும் மேற்பட்ட தோழர்களைக் கைது செய்தது. ஊர்வலத்தினர் உறுதி குலையாமல், பெண்கள்குழந்தைகள் உள்பட அனைவரும் போலீசின் அடக்குமுறையை எதிர்த்து முழக்கமிட்டனர்.
வழக்கமாக ""நக்சலைட்டுகள்'' என்று பீதியூட்டி அடக்குமுறைகளையும் அவதூறுகளையும் மேற்கொள்ளும் போலீசு அவமானகரமாக அம்பலப்பட்டு நின்றது.
நாமக்கல்லில்...
250க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் மோகனூர் ரோடு அண்ணா சிலையிலிருந்து புறப்பட்ட பேரணி, பிரசுரங்கள், முழக்க அட்டைகள் மற்றும் முழக்கங்கள் மூலம் மே நாள் ஆர்ப்பாட்டச் செய்தியை மக்களிடம் கொண்டு சென்றது. ஒழுங்கமைப்புடன், கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட இந்த பேரணியைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசிக் கொண்டனர்.
தோழர் காளியப்பன் அவர்களின் சிறப்புரை மற்றும் மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் பகுதி மக்களைக் காந்தமாக ஈர்த்தது. 500க்கும் மேற்பட்ட மக்கள், அசைவின்றி ஆர்வத்துடன் கூட்டம் முடியும்வரை இருந்து ஆதரவளித்தனர்.
தஞ்சையில்...
திருவாரூர், நாகை மாவட்டங்களை மையப்படுத்தி தஞ்சையில் பேரணி, பெரும் ஆர்ப்பாட்டமாய் அமைந்தது.
தோழர் பரமானந்தம் சிறப்புரையாற்ற, சிறுவர்களின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள் பொதுக்கூட்டத்தில் உணர்வுபூர்வமாக விளங்கியது.
கடலூரில்...
மே தினத்தில் கூடத் தொழிலாளர்களுக்காக வாய்திறக்க மறுத்து அஞ்சிக் கிடந்த ஓட்டுக் கட்சிகள் மத்தியில், பெரும் நெருப்பாய் எழுந்தது புரட்சிகர அமைப்புகளின் மே தினப் பொதுக் கூட்டம்.
மஞ்சக்குப்பம் தண்ணீர் தொட்டி அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பு.மா.இ.மு. சென்னை மாவட்ட செயலர் தோழர் கணேசன் மற்றும் பு.ஜ.தொ.மு. கடலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் காதர் பாஷா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
""காப்புரிமைச் சட்டம்'' என்ற வடிவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கியிருக்கும் சுனாமி, இந்தியாவையே அழிக்கும் அபாயம் நிறைந்தது என்பதை எடுப்பாக எடுத்துரைத்தனர்.
மதுரை, தேனியில்...
மே தின பேரணி தெற்கு வாசலிலிருந்து புறப்பட்டு, சுப்பிரமணியபுரம் பொதுக்கூட்ட மேடையை அடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், தேனிமாவட்டம் கூடலூரிலும் மே தின பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது.
ஓசூரில்...
புரட்சிகர அமைப்புகள் மீது மே நாள் அன்று தருமபுரியில் நடந்த போலீசு அடக்குமுறைகளை எதிர்த்து ஓசூர் காந்திசிலை அருகில் 23.05.05 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
""தருமபுரி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்காதே! பேச்சுரிமை, கருத்துரிமையைத் தடுக்காதே!'' என்ற முழக்கத்தின் கீழ் திரளான மக்கள் தருமபுரியில் ஏவப்படும் போலீசு ஆட்சியை எதிர்த்தனர்.
விருதுநகர், வேலூர் ஆகிய பகுதிகளில் மே தினப் பேரணி, கூட்டங்களுக்கு போலீசு தடை விதித்தது. கோவையில் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு, கணபதியில் பொதுக்கூட்டம் நடந்தது.
நாட்டை மீண்டும் மறுகாலனியாக்கும் எதிர்ப்புரட்சி கும்பல், தனக்கு எதிரான சிறு பொறியையும் கண்டு அஞ்சி குலைநடுங்குகிறது. புரட்சிகர அமைப்புகளின் மே தின பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிக்கும் ஆளும் கும்பல்களின் அடக்குமுறைகள் இதையே நிரூபிக்கின்றன.