Language Selection

புதிய ஜனநாயகம் 2005

06_2005.jpgகும்மிடிப்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. பெற்ற அமோக வெற்றி, அக்கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது!

 

இவ்விரு தொகுதிகளிலும் முன்னெப்போதையும்விட அதிகமான அளவு ஓட்டுப்பதிவு நடந்துள்ளதோடு, அ.தி.மு.க. பெரும் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

 

இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி ""தேர்தல் விதிகளை மீறி, ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அரசாங்கப் பணத்தையே செலவிட்டு இரு தொகுதிகளிலும் வசதிகள் செய்திட சில கோடி ரூபாய்களைச் செலவழித்தும் போதாமல், அடிப்பது போல் அடி, (தேர்தல் ஆணையம்) நாங்கள் அழுவது போல் அழுது எங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம் என்ற சூழ்ச்சியில் ஈடுபட்டும் அ.தி.மு.க. இந்த வெற்றியைப் பெறமுடிந்தது'' என்றார்.

 

பா.ம.க. தலைவர் இராமதாசு, ""பணநாயகம் தற்காலிகமாக ஜெயித்திருக்கிறது'' என்றார். ""நாங்க பிரியாணிக்கு காசு தந்தோம்! தி.மு.க. பீடாவுக்கு காசு தந்தது!'' என்று தங்கள் வெற்றியின் ரகசியத்தை மனம் திறந்து சொல்கின்றனர், அ.தி.மு.க.வினர்.

 

காஞ்சிபுரம் தொகுதிக்கு பொன்னையன் தலைமையில் 12 மந்திரிகள். கும்மிடிப்பூண்டிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 12 மந்திரிகள். 3 வார்டுக்கு ஒரு மந்திரி; ஒரு தெருவுக்கு ஒரு எம்.எல்.ஏ.; இவர்களுக்கும் கீழே மாவட்ட, ஒன்றிய, இணைச் செயலர்கள் என்று துரத்திவிட்டு, அவர்களுக்குப் பின்னால் போலீசு, அரசு எந்திரத்தை தொடர் வண்டி போல் அனுப்பி வைத்து, இந்த மொத்த கும்பலையும் உளவுத்துறை போலீசு மூலம் கண்காணித்து, பணத்தை இறைத்து வெற்றியைப் பறித்தார், பாசிச ஜெயலலிதா.

 

""500 ரூபாய் வாங்கியும் கூட (வாக்காளர்கள்) ஓட்டுப் போட வராமல் இருந்தாலும் நாங்க கோவிச்சுக்கலை. 1000 ரூபாயை கையில திணிச்சி இலைக்கு போடச் சொன்னோம்... 20 கோடிகளைக் கொட்டி இரண்டு தொகுதிகளை வங்கினோம்'' என்று சந்தை பத்திரிகைகளில் சர்வ சாதாரணமாகச் சொல்கின்றனர், அ.தி.மு.க.வினர்.

 

""தலைமைக் கழகம் (அ.தி.மு.க.) தந்தது மூன்று கோடியாம்; பன்னிரண்டு அமைச்சர்களும் தலைக்கு செலவு செய்தது ஐம்பது லட்சமாம்'' என்று அ.தி.மு.க. இறைத்த பணத்திற்கு கணக்கு சொல்கின்றன, "புலனாய்வு' பத்திரிக்கைகள்.

 

இதற்கு மத்தியில், "அறுக்க மாட்டாதவனுக்கு இடுப்ப சுத்தி ஆயிரதெட்டு அருவா!' என்பதுபோல், தேர்தல் ஆணையம் தேர்தல் களத்தில் சுழன்றடித்து வித்தைக் காட்டியது. ""தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சிகளின் 25 வாகனங்கள் பறிமுதல்! கதிகலங்க வைக்கிறார், தேர்தல் கமிஷன் சிறப்பு பார்வையாளர், கே.ஜே.ராவ்'', ""கலவரம் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு; வெளி மாவட்டத் தொண்டர்கள் வெளியேற்றம்'', ""அரசியல் கட்சியினரைத் தங்க வைக்கும் லாட்ஜ், ஓட்டல் அங்கீகாரம் ரத்து!'', ""தேர்தல் கமிசனின் கெடுபிடியான நடவடிக்கைகள் காரணமாக எங்குமே, யாரும் கள்ள ஓட்டுப் போட முடியவில்லை'', ""10,000க்கும் மேற்பட்ட தமிழக போலீசு மற்றும் 8 கம்பெனி துணை இராணுவம் வாக்கு சாவடிகளுக்கு முழுப் பாதுகாப்பு'' என்று பத்திரிக்கைகள் தேர்தல் கமிசனை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நெருப்பு வளையமாகச் சித்தரித்தன. கருணாநிதி தலைமையிலான எதிரணியினர் அதற்கும் மேலே ஒரு படி சென்று, "தேர்தல் கமிசன் என்ற நெருப்பு வளையத்தில் அ.தி.மு.க. பொசுங்கப் போவது நிச்சயம்' என்று பூரிப்படைந்தனர்.

 

தேர்தல் களத்தில் வெற்றிக்கு பொறுப்பேற்ற கருணாநிதி மகன் ஸ்டாலினும் பேரன் தயாநிதி மாறனும் மத் திய தேர்தல் கமிசனுக்கு சாமரம் வீசினர். ""மத்திய தேர்தல் கமிசன் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றனர்.

 

ஆக, ஜனநாயகம் என்ற புதையலைப் பாதுகாக்கப் படமெடுத்து ஆடும் பாம்பாக தேர்தல் கமிசனை வழிபட்டனர். ஜெயலலிதா என்ற ஜனநாயக விரோதி, அதனிடம் கடிபடுவது உறுதி என்று மலைபோல் நம்பியிருந்தது, தி.மு.க.

ஆனால், விளைவு எதிர்மறையாகிப் போனது! ""கள்ள ஓட்டு, வாக்குச்சாவடியைக் கைப்பற்றியது போன்ற குற்றங்கள், குளறுபடிகள் இல்லை'' என்ற பாராட்டுப் பத்திரமும், அமோக வெற்றியும் ஜெயலலிதா மீது பூவாகப் பொழிந்தது.

 

"வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டு போடுவது, துப்பாக்கி சூடு நடத்துவது' என்று "பீகார் மாடல்' புராதன பாணி வன்முறைகளில் ஜெயலலிதா இறங்கவில்லை. மாறாக, "கார்ப்பரேட்' நிறுவனங்களின் பங்கு முதலீட்டாளர்களின் கூட்டம் போல் சட்டமன்ற இடைத் தேர்தலை நடத்தினார். எதிரணியினரை உளவு நிறுவனங்கள் மூலம் மோப்பம் பிடித்து நுணுக்கமான திட்ட அடிப்படையில் எதிரிப்படைகளுக்குள்ளேயே காய்களை நகர்த்தினார். பணத்தால் அடிப்பது, எதையும் விலைக்கு வாங்குவது, எதிரியின் நிழலுக்கும் எலும்புத் துண்டை வீசியெறிவது என்று சில வாக்குச்சாவடிகளை அல்ல, இரண்டு தொகுதிகளையே தேர்தல் கமிசன் முன்னிலையில் அசாதாரண விலையில் பகிரங்கமாக ஏலம் எடுத்தார்.

 

எதிரணியினரின் கடைசி தலைவர் வரை விலை பேசியது, அ.தி.மு.க. இந்த பகிரங்க ஏலத்தின் எதிரொலி தேர்தல் முழுக்க வியாபித்தது. விளைவு; ""கும்மிடிப்பூண்டியில் பல இடங்களில் தி.மு.க. தரப்பில் பூத் ஸ்லிப் கொடுக்கக்கூட ஆள் இல்லை'' என்று பச்சையாக எழுதின, பத்திரிக்கைகள்.

 

"ஏழு கட்சிகள் கூட்டணியில் கண்ணை மூடிக் கொண்டு ஜெயித்து விடுவோம்' என்று இறுமாப்பில் இருந்த தி.மு.க. இரண்டு தொகுதிகளிலும் தோற்றதற்கு இன்னுமொரு காரணம், ""கறுப்பு ஆடுகள்'' என்கிறார்கள். ""எங்கள் கட்சியின் கிளைச்செயலாளர்கள் எத்தனை பேருக்கு அவர்கள் (அ.தி.மு.க.) பணம் கொடுத்தார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்'' என்று வாக்குமூலம் அளித்தது, தி.மு.க. பா.ம.க. அணிகளிடமும் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றியது அ.தி.மு.க.

 

ஜெயா பணத்தை வாரியிறைத்து, இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டார் என எதிர்க்கட்சிகள் ஒருபுறம் குற்றஞ்சுமத்திக் கொண்டிருக்க, மறுபுறமோ ஜெயலலிதா பெற்ற இவ்வெற்றிக்கு அறிவியல்பூர்வமான விளக்கம் கொடுத்து ஜெயலலிதாவை எப்படியாவது மக்கள் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன, "முற்போக்கு', பிற்போக்கு பார்ப்பனப் பத்திரிக்கைகள் மற்றும் "நடுநிலை' தகவல் ஊடகங்கள்.

 

""இது "இடைத்'தேர்தல் இல்லே. "எடைத்' தேர்தல்!'' (18.05.05 துக்ளக்) என்று தெருக் கழுதைகளும் கருத்துச் சொல்வதாக கருத்துப்படம் வரைந்த சோ, அதற்கடுத்த "துக்ளக்' ஏட்டில் பல்டி அடித்தார். ""இந்த போட்டியில் ஆளும் கட்சி பெற்றுள்ள வெற்றி, ஜெயலலிதாவின் வெற்றி... அவருடைய தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி'' (25.5.05 துக்ளக்) என்றார். தன்னுடைய அறிவு, கழுதையின் அறிவு அளவுக்குத் தெளிவானது அல்ல என்று நிரூபித்தார்.

 

""இந்து'' ஏட்டில், அதன் ஆசிரியர் ராம் ""இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. பெற்ற உறுதியான வெற்றி, அது தனது மக்கள் விரோத கொள்கைகளைத் திரும்பப் பெற்றதற்குக் கிடைத்த பரிசு'' என்கிறார்.

 

ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற கிசுகிசு "புலனாய்வு' பத்திரிக்கைகள், இரண்டு இடைத்தேர்தல்களிலும் ஜெயலலிதா தனது அ.தி.மு.க. கட்சியை விஞ்ஞானப்பூர்வமாக இயக்கித் திட்டமிட்டு வெற்றிப் பெற்றதாகப் புகழ்கின்றன.

 

தமிழகத்தையே திகைக்க வைத்த அ.தி.மு.க.வின் வெற்றிக்கு, ""ஜெயா வீசியெறிந்த பணம் காரணமா? இல்லை, ஜெயலலிதா தனது மக்கள் விரோதக் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், மக்கள் மன்னித்து விட்டார்களா?'' என்ற பட்டிமன்றத் தலைப்பு கிடைத்திருப்பதுதான் இந்தத் தேர்தலினால் கிடைத்திருக்கும் ஒரே பலன்.

 

முதலாளத்துவப் பத்திரிக்கைகள் சொல்வது போல, ""மக்கள் ஜெயாவை மன்னித்து விட்டார்கள்'' என எடுத்துக் கொண்டால், அதைவிட ஏமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது; ""வாக்காளர்களை ஜெயா விலை பேசிவிட்டார்'' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை எடுத்துக் கொண்டால், அதைவிட இந்திய ஜனநாயகத்திற்கு வேறெதுவும் அசிங்கம் இருக்க முடியாது.

 

· குணசேகரன்