06_2005.jpg"குழந்தைத் திருமணம் பிற்போக்குத்தனமான மூடப்பழக்கம்; அது, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைக் காவு கொடுப்பதற்கு ஒப்பானது சட்டப்படி தவறானது'' எனக் கிராம மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததற்காக, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சகுந்தலா வர்மா என்ற பெண் அதிகாரி மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொலை செய்துவிடும் முடிவோடு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், அவரின் இரு கைகளும் துண்டாகித் தனியாக விழுந்துவிட்டன. அவரது கூந்தல் அறுக்கப்பட்டு, அவர் கோரப்படுத்தப்பட்டுள்ளார்.

 

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரின் கைகள், அறுவை சிகிச்சைக்குப் பின் இணைக்கப்பட்டுவிட்டன் எனினும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ்தான் இருந்து வருகிறார். குழந்தை திருமணத்திற்கு எதிராக யாராவது வாயைத் திறந்தால் அவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும் என எச்சரிக்கும் விதமாக இத்தாக்குதல் பிற்போக்கு கும்பலால் நடத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்து நடுத்தர வர்க்கம் நகைக்கடைகளை நோக்கி ஓடும் ""அக்ஷய திருதியை'' நாளை, குழந்தை திருமணங்களை நடத்துவதற்கு ஏற்ற முகூர்த்த நாளாக, மத்தியப் பிரசேத்திலும், ராசஸ்தானிலும் கொண்டாடுகிறார்கள். கடந்த மே 11 ஆம் தேதி வந்த அக்ஷய திருதியை நாளில் மட்டும் ஏறத்தாழ 10,000 குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கக் கூடும் என அரசாங்கமே ஒத்துக் கொள்கிறது. இதற்கு முதல் நாள் (மே 10) இரவில்தான் சகுந்தலா வர்மா பிற்போக்கு கும்பலால் தாக்கப்பட்டார்.

 

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சகுந்தலா வர்மாவிற்கு ஆறுதல் சொன்ன ம.பி. மாநில பா.ஜ.க முதல்வர் பாபுலால் கௌரின் அதே வாய், இன்னொரு புறம், ""குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வாய்ப்பில்லை'' என வக்காலத்து வாங்கியிருக்கிறது. குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள துறையின் அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ், ""இந்தத் தாக்குதலுக்கு முன் விரோதம்தான் காரணம்'' எனக் கூறி, சகுந்தலா வர்மாவைத் தாக்கிய பிற்போக்குக் கும்பலைக் காப்பாற்றவிட முயலுகிறார். பார்ப்பன பிற்போக்குத்தனங்களை காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ள பா.ஜ.க. கும்பலிடம், இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்?

 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ராசஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்பவர், குழந்தைத் திருமணத்தைத் தடுத்ததற்காக, மேல்சாதி வெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார். அவ்வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், ""கீழ்சாதிப் பெண்ணான பன்வாரி தேவியை உயர் சாதிக்காரர்கள் கற்பழித்திருக்க முடியாது'' எனத் தீர்ப்புக் கூறி, குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. நீதிமன்றமே குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாகச் செயல்படும் பொழுது, ""இப்போது இருப்பதைவிடக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்தால் குழந்தைத் திருமணத்தை ஒழித்து விடலாம்'' என நமது காதில் பூ சுற்றுகிறது, காங்கிரசு.

 

2020இல் இந்தியா வல்லரசாகப் போவதாக ஆளுங்கும்பல் பீற்றிக் கொண்டு திரிகிறது. ஆனால், இந்தியா கற்காலத்தைக் கூட இன்னும் தாண்டவில்லை என்பதற்கு மே 11இல் நடந்த 10,000 குழந்தைத் திருமணங்களே சாட்சி.

குழந்தைத் திருமணம், சதி போன்ற பிற்போக்குத்தனங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால், முதலில் பார்ப்பனிய பண்பாட்டு மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்குத் தேவை தகவல் தொழில் புரட்சியல்ல. மாறாக, நக்சல்பாரிகளின் புதிய ஜனநாயகப் புரட்சி!


பாலன்