Language Selection

புதிய ஜனநாயகம் 2005

06_2005.jpgமே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம் ""டாடா பிர்லா கூட்டாளி; பாட்டாளிக்குப் பகையாளி'' என்று முன்னொரு காலத்தில் முழங்கிய சி.பி.எம். கட்சி இப்போது, ""டாடாவும் பிர்லாவும் எங்கள் பங்காளி; பாட்டாளிகளே பகையாளி'' என்று முழக்கமிடத் தயாராகிவிட்டது. தொழிலாளர் போராட்டங்களுக்குத் தடைவிதித்துவிட்டு, அன்னிய நேரடி முதலீடுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இப்போலி கம்யூனிஸ்டுகள், மாவீரன் பகத்சிங், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தரகுப் பெருமுதலாளி டாடாவையும் சேர்த்து மாபெரும் நாட்டுப் பற்றாளனாகச் சித்தரித்து புகழாரம் சூட்டுகிறார்கள். கொள்ளைக்கார மோசடி தரகுப் பெருமுதலாளி முகேஷ் அம்பானிக்கு

 வெட்கமின்றிச் சாமரம் வீசுகிறார்கள். இத்தகைய துரோகத்தனங்களையே அக்கட்சி சித்தாந்தமாகக் கொண்டுள்ளதைப் பகிரங்க வாக்குமூலமாக அளித்துள்ளார், சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மே.வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா. ""தி வீக்'' என்ற ஆங்கில வார ஏட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல் (மே.29,2005), சி.பி.எம். கட்சியின் யோக்கியதையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளதால், அதன் ஒரு பகுதியை இங்கே வெளியிடுகிறோம். - ஆசிரியர் குழு.

 

- ஏற்கெனவே நீங்கள் இரு அரசுத்துறை நிறுவனங்களை மூடி விட்டீர்கள். விரைவில் கிரேட் ஈஸ்ட்ரன் ஓட்டலையும் விற்க முடிவு செய்துள்ளீர்களே...?

 

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எல்லாக் கட்சிகளும் தம்மைத்தாமே சுயபரிசீலனை செய்து வருகின்றன. தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டு வருகின்றன. இதுபோலவே சி.பி.எம். கட்சியும் தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு வருகிறது. அனைத்து அன்னிய நிறுவனங்களையும் அவற்றின் முதலீடுகளையும் கைப்பற்றித் தேசவுடைமையாக்க வேண்டும் என்பது முன்பு எமது கொள்கையாக இருந்தது. இப்போது நாங்கள் எங்கள் கொள்கையைத் தலைகீழாக 180 டிகிரிக்கு மாற்றி விட்டோம்.

 

மன்மோகன் சிங் தாராளமயமாக்கலின் சிற்பி ஆவார். நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள அரசுத்துறை நிறுவனங்களில் இலாபமீட்டும் நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதையே நாங்கள் எதிர்க்கிறோம். ஒட்டு மொத்தமாக தனியார்மயத்தை நாங்கள் எதிர்ப்பதில்லை. நாங்கள் நேருவின் கூட்டுப் பொருளாதாரக் கொள்கையை இப்போதும் ஆதரிக்கிறோம். முன்பு, தனியாரிடமிருந்த நிறுவனங்களை நாங்கள் அரசுத்துறை நிறுவனங்களாக்கினோம். இப்போது, மே. வங்கத்தில் 56 அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இப்போது நாங்கள், எல்லா தனியார் நிறுவனங்களையும் அரசுடைமையாக்கியது தவறு என்று உறுதியாக நம்புகிறோம். இந்த அரசுத்துறை நிறுவனங்களை இப்போது நாங்கள் மறு ஒழுங்கமைப்பு செய்ய முயற்சித்து வருகிறோம். ஏற்கெனவே இரண்டு அரசுத்துறை நிறுவனங்களை மூடிவிட்டோம். 1617 நிறுவனங்களை அரசும் தனியாரும் கூட்டுச் சேர்ந்து பங்கேற்கும் கூட்டுப் பங்கு நிறுவனங்களாக மாற்றியமைக்க முயற்சித்து வருகிறோம். மற்றவற்றை ஓராண்டுக்குள் மறுசீரமைக்க முயற்சிப்போம்.

 

- கிரேட் ஈஸ்ட்ரன் ஓட்டல் விவகாரம் என்னவாயிற்று?

 

ஒரு மாதம் பொறுத்திருங்கள். சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் அரசின் முடிவை (தனியார்மயமாக்குவதை) ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையேல், அவை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் எச்சரித்துள்ளேன்.

 

- நடந்து முடிந்த சி.பி.எம். மாநாட்டில் உற்பத்தியைப் பெருக்க உதவுகின்ற, தொழில்நுட்பத்தை மேம்படுத்தக் கூடிய, வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள். அன்னிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்வதற்கு இந்த நிபந்தனைகள் உதவியாக இருக்குமா?

 

யதார்த்தமான அரசியலில் வறட்டுவாதத்துக்கு இடமே இல்லை. அண்மைக் காலமாக நாங்கள் பெருமளவு மாறியுள்ளோம். எங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றிக் கொண்டுள்ளோம். கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் மே.வங்கத்தின் முன்னேற்றத்துக்குப் பேருதவியாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

 

- கடந்த நாலரை ஆண்டுகளில் மே.வங்கத்தை முதலாளிகளின் நம்பகமான நட்பு மாநிலமாக மாற்றியதில் உங்கள் பங்கு மகத்தானது என்று இந்தியாவின் பெருந் தொழில் நிறுவனங்கள் உங்களைப் பாராட்டியுள்ளனவே! முதலீடுகள் வெள்ளமெனப் பாய்வதில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா?

 

196070களிலும் அதன் பின்னரும் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் நாங்கள் மிகக் கடுமையான தவறுகளைச் செய்துவிட்டோம். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ""கெரோ'' (முற்றுகைப் போராட்டம்) என்ற சொல் இடம் பெற்றதற்கு, அப்போது பரவலாக தொழிலாளர்கள் இத்தகைய ""கெரோ'' போராட்டங்களை நடத்தியதே காரணமாகும். இப்போது நாங்கள் எங்கள் தொழிற்சங்கங்களை பழைய தவறுகள் (கெரோ போராட்டம்) தொடராமல் செயல்படுமாறு கோரியுள்ளோம்.

 

ஒரு ஆலையின் இலாபத்துக்கும் நட்டத்துக்கும் ஆலை நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும். நமது ஆலைகளில் நாம் உற்பத்தியைப் பெருக்காவிட்டால், உலகளாவிய ரீதியில் நாம் போட்டி போட்டு முன்னேறவே முடியாது. போட்டி போட்டு முன்னேறாவிடில், எந்தவொரு ஆலையும் நீடித்திருக்கவே முடியாது.

 

நாங்கள் ""கெரோ'' போராட்டத்தையோ, முரட்டுத்தனமான அழிவேற்படுத்தும் போராட்டங்களையோ ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இதன் விளைவாக, மே.வங்கத்தைப் பற்றிய எதிர்மறையான சித்திரம் இப்போது மறைந்துவிட்டது. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர்), முன்னேறிய தகவல் தொழில் நுட்பக் கழகத்தை எமது மாநிலத்தில் தொடங்கப் பேரார்வம் காட்டி வருவதே இதற்குச் சான்று கூறப் போதுமானது. எஃகு ஆலை, சுட்ட நிலக்கரி தயாரிப்பு ஆலை, மோட்டார் வாகன ஆலை, புற்றுநோய் மருத்துவக் கழகம் ஆகியவற்றை எமது மாநிலத்தில் தொடங்க ரத்தன் டாடா முன்வந்துள்ளார். ஜிண்டால் நிறுவனம், எமது மாநிலத்தில் புதிய எஃகு ஆலை தொடங்கவுள்ளது. மிட்சுபிஷி, ஐ.பி.எம்; பெப்சி ஆகிய அன்னிய நிறுவனங்கள் ஏற்கெனவே எமது மாநிலத்தில் இயங்கி வருகின்றன. இருப்பினும், எமது மாநிலத்தின் அன்னிய நேரடி முதலீட்டின் அளவு ஆண்டுக்கு ரூ. 2,300 கோடியாக இருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோல் இன்னும் இரண்டு மடங்கு அளவுக்கு அன்னிய நேரடி முதலீடுகள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 

- இவ்வாறு அன்னிய முதலீடுகள் பெருகிவரும் போக்கை நீங்கள் நீடித்து நிலைபெறச் செய்வீர்களா?

 

நிச்சயமாக. மே. வங்கத்தின் தொழிற்துறை மறுமலர்ச்சியை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தவே முடியாது.

 

- எந்தெந்த பெருமுதலாளிகள் உண்மையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார்கள்?

 

ரத்தன் டாடாவும் அசிம் பிரேம்ஜியும் (விப்ரோ நிறுவனத்தின் அதிபர்) உயர்ந்த நாட்டுப்பற்றாளர்கள்.

 

பின் இணைப்பு:

 

சி.பி.எம். மாநாட்டில், சமூகசேவையில் ஈடுபடும் தன்னார்வக் குழுக்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு "புரட்சி' செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே, மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் துணைவியாரான மீரா, அரசியலுக்கு அப்பாற்பட்ட "சமூகசேவை'யில் ஈடுபட்டு வருகிறார். அவரது மகளான சுசிதனா, சுற்றுச்சூழல் வனவிலங்கு பாதுகாப்புக்கான தன்னார்வக் குழுவை நிறுவி "சமூக சேவை' செய்து வருகிறார். மே. வங்க முதல்வரின் குடும்பத்திலிருந்தே "புரட்சி' தொடங்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது!