நாட்டை மீண்டும் காலனியாக்குவதில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது, காங்கிரசு கூட்டணி ஆட்சி. காப்புரிமைச் சட்டத் திருத்தம், மதிப்புக் கூட்டு வரி விதிப்பு, ஜவுளி பின்னலாடை ஏற்றுமதிக்கு இருந்து வந்த ""கோட்டா'' முறை ரத்து, புதிய ஓய்வூதியச் சட்டம், புதிய விதைச் சட்டம், புதிய சந்தைச் சட்டம் என உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி இந்தியப் பொருளாதாரத்தை இந்த ஆண்டிற்குள் முற்றிலுமாக மாற்றியமைக்கும் வேகத்தோடு அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
இதுவும் போதாதென்று சில்லறை வியாபாரத்தைக் கல்லறைக்கு அனுப்பும் முடிவோடு, சில்லறை வியாபாரத்தில் 26 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளிக்கத் தீர்மானித்துள்ளது. மளிகைக் கடை, பெட்டிக்கடை என ஏறத்தாழ 4 கோடி குடும்பங்களின் (16 கோடிப் பேரின்) வாழ்க்கைக்கான ஒரே ஆதாரமாக இருப்பது சில்லறை வியாபாரக் கடைகள்தான். வால் மார்ட், மோரிஸ்ஸ்பென்சர் முதலான பன்னாட்டு பகாசுர அங்காடிகளை இத்துறையில் அனுமதிப்பதன் மூலம் கோடிக்கணக்கான சிறுகடை வியாபாரிகளின் எதிர்கால வாழ்வைப் பறித்து மரணக் குழியில் தள்ளி விட்டுள்ளது, காங்கிரசு கூட்டணி ஆட்சி.
காங்கிரசு கூட்டணி, பதவிக்கு வந்த அடுத்த சில நாட்களிலேயே டெல்லி மற்றும் மும்பய் விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கப் போவதாக அறிவித்தது. அதன்பிறகு, கட்டுமானத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளிக்கப் போவதாக அறிவித்தது. விவசாயத் துறையில் 14 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. கமுக்கமாக, இராணுவத் தளவாட உற்பத்தியைத் தனியாரிடம் ஒப்படைப்பது பற்றி விவாதித்து வருகிறது. இவ்வளவும் போதாதென்று, கடந்த மூன்றாண்டுகளாக சராசரியாக 15 சதவீத அளவுக்கு இலாபமீட்டி வரும் அரசுத்துறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு விற்கக் கிளம்பிவிட்டது.
நவரத்தினங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் ஒன்பது மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத மிகு மின் நிறுவனத்தின் (""பெல்'') அரசுப் பங்குகளில் 10 சதவீதத்தைத் தனியாருக்கு விற்றுவிட முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் அண்மையில் அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் இத்தகைய கொள்கை முடிவுகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத போதிலும், கொல்லைப்புறமாக இவற்றைக் கொண்டுவந்து, தனியார்மய தாராளமயத் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது காங்கிரசு கூட்டணி ஆட்சி.
இந்த லட்சணத்தில், தனது ஓராண்டு நிறைவு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது, இக்கூட்டணி ஆட்சி. பயங்கரவாத ""பொடா'' சட்டம் நீக்கப்பட்டிருப்பது, தகவல் அறியும் உரிமையளிக்கும் சட்டம், சமூக நலத்திட்டங்கள் மற்றும் விவசாயத்துக்கான முதலீடு அதிகரிப்பு, சேது சமுத்திர திட்டம், தமிழ் செம்மொழியாக ஏற்பு, தகவல் தொழில்நுட்பத் துறையின் சேவை விரிவாக்கம், வரியில்லாத பட்ஜெட், அண்டை நாடுகளுடன் நல்லுறவு என ஓராண்டுச் "சாதனை'களைப் பட்டியலிட்டுப் பெருமிதம் கொள்கிறது.
""பொடா'' சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதே தவிர, பொடா வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. இப்பாசிச சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டுள்ள சிறையிலிடப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்படவுமில்லை. பொடாவை விடக் கொடிய ""ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்'' நீக்கப்படவில்லை. இச்சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் கொலைவெறி காமவெறியாட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்திய இராணுவத்தைத் தடுக்கவோ தண்டிக்கவோ எந்த நடவடிக்கையுமில்லை.
பா.ஜ.க.வின் இந்துத்துவ வகுப்புவாதத்தை வீழ்த்தவே இந்த மதச்சார்பற்ற கூட்டணி என்று போலி கம்யூனிஸ்டுகளால் தாங்கிப் பிடிக்கப்படும் இந்த ஆட்சியானது, பா.ஜ.க. ஆட்சியில் பாடநூல்களில் திணிக்கப்பட்ட இந்துவெறி கறைகளில் ஒருசிலவற்றை நீக்கியதற்கு மேல், இந்துவெறி பயங்கரவாத சக்திகளை முடமாக்க உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளூர் அளவிலான 40க்கும் மேற்பட்ட இந்துவெறித் தாக்குதல்களும் கலவரங்களும் நடந்து தற்காலிகமாகத் தணிந்துள்ளனவே தவிர, எந்தவொரு இந்துவெறியனும்தண்டிக்கப்படவில்லை. ஒரிசாவில் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு எரித்துக் கொன்ற இந்துவெறி பயங்கரவாதியான தாராசிங்குக்கு ஒரிசா உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்துள்ளதையும் அவனது கூட்டாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் எதிர்த்து, மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையப் புலனாய்வுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத்தின் பயங்கரவாத முதல்வர் மோடியைக் கைது செய்யவோ, இன்னமும் அகதி முகாம்களில் அல்லற்படும் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு மறுவாழ்வளித்து பாதுகாக்கவோ இந்த ஆட்சி முயற்சிக்கவில்லை. பா.ஜ.க. ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்டு தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காப்புரிமைச் சட்டம், தொழிலாளர் ஓய்வூதியச் சட்டம் ஆகியவற்றை பா.ஜ.க.வுக்கு மாற்று என்று கூறிக் கொள்ளும் காங்கிரசு, அப்படியே செயல்படுத்துகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கூட்டணி ஆட்சி அறிவித்துள்ள குறைந்தபட்ச பொதுத்திட்டம் ஏட்டுச் சுரைக்காயாகி விட்டது. கிராமப்புற விவசாயிகளுக்கான வேலை உத்திரவாத திட்டம், ரேஷன் விநியோகமுறையை விரிவாக்கி உறுதிப்படுத்தும் திட்டம் முதலானவை ஓராண்டாகியும் நிறைவேற்றப்படுவதற்கான ஆரம்ப அறிகுறி கூட இல்லை. நெல், கரும்பு, பருத்தி மட்டுமின்றி, மிளகாய், கடுகு உற்பத்தி செய்யும் விவசாயிகளும் விலை வீழ்ச்சியால் போண்டியாகிப் பரிதவிக்கின்றனர்.
ஆந்திர விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைக் காட்டி பதவிக்கு வந்துள்ள ஆந்திராவின் காங்கிரசு ஆட்சியிலும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதாக உறுதியளித்து பதவியைப் பிடித்த காங்கிரசு ஆட்சி, ஆந்திர விவசாயிகளுக்குப் பட்டை நாமத்தைப் போட்டு விட்டது.
இந்த உண்மைகளை மூடி மறைத்துவிட்டு ஏகாதிபத்தியவாதிகளும் தரகுப் பெருமுதலாளிகளும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் இக்கயமையின் கூட்டணியாட்சியைத் துதிபாடி தூக்கிப் பிடிக்கின்றனர். எதிர்ப்பதாக முணுமுணுத்துக் கொண்டே, தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள்.