மதுரை மாவட்டம், உசிலை வட்டத்திலுள்ள ரிசர்வ் தொகுதியான கீரிப்பட்டியில் 1996 முதல் 19 முறை பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டும், அந்த பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் ஒரு தலித் அமர முடியவில்லை. பாப்பாபட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நின்ற நரசிங்கம் என்ற தலித் வேட்பாளர் மர்மமான முறையில் இறந்துள்ளார். நாட்டார்மங்கலம் தொகுதியில் யாரும் வேட்பு மனுக் கூடத் தாக்கல் செய்யவில்லை.
இது ஒரு போலி ஜனநாயகம் என்பதை 19வது முறையாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் கீரிப்பட்டியின் சாதிவெறியர்கள். தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியான கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினரான பிரன்மலைக் கள்ளர்களால் நிறுத்தி வைக்கப்பட்ட திரு. அழகுமலை என்ற தலித் வேட்பாளர், வெற்றி பெற்று பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ஏற்ற மறுகணமே அதனை ராஜினாமா செய்திருக்கிறார்; செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்.
""அரசியல் சட்டம் தலித் மக்களுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமையைப் பகிரங்கமாக பறிக்கிறார்கள் கீரிப்பட்டியின் சாதிவெறியர்கள். இதற்காக, அவர்களுடைய வாக்குரிமை ரத்து செய்யப்பட வேண்டும். தலித் மக்களுக்கான தனித்தொகுதியை இட ஒதுக்கீட்டை மறுக்கும் கீரிப்பட்டியின் பிரன்மலைக் கள்ளர் சாதியினர் அனைவருக்கும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும். தங்களுடைய நிலவுடைமை ஆதிக்க பலத்தைக் கொண்டு தலித் மக்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்து அவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிக்கிறார்கள் சாதிவெறியர்கள். எனவே அவர்களுடைய நிலம், மின்சாரம், சாலை, வங்கிக் கடன் போன்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.''
""இவை மிகையான கோரிக்கைகள் அல்ல் எத்தகைய வன்முறைகளை அவர்கள் தலித் மக்கள் மீது ஏவுகிறார்களோ, அந்த வன்முறையின் வலியை அவர்கள் அனுபவிக்க வேண்டும். கீரிப்பட்டியின் சாதிவெறியர்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி இந்த நாடே வெறுத்தொதுக்க வேண்டும்'' என்று மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. துண்டு பிரசுரம், தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம் என்று பல வடிவங்களில் சாதிவெறியர்களின் அக்கிரமங்களை மக்களிடம் எடுத்து சென்றனர்.
16.05.05 அன்று உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரிலும் 17.05.05 அன்று மதுரையில், தல்லாகுளம் தபால்தந்தி அலுவலகம் முன்பும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பல்வேறு ஜனநாயகச் சக்திகள் ஊக்கமுடன் முன்வந்து போராட்டத்திற்குத் தோள் கொடுத்து உதவினர். மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை வழக்குரைஞர்கள் சங்கம், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் வழக்குரைஞர்கள் பிரிவு, திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை பிரிவு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு பேரவை ஆகிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து சாதிவெறியர்களுக்கு எதிராகத் திரளுமாறு மக்களை அறைகூவி அழைத்தனர்.
""இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கும் கீரிப்பட்டி பிரன்மலைக் கள்ளர்களின் சாதி இறுமாப்பு, சாதி வெறியாட்டத்துக்குக் கைக்கட்டிச் சேவகம் செய்யும் அரசு நிர்வாகம், இக்கும்பல்களைத் தண்டிக்க மறுக்கும் உயர்சாதிவெறி கொண்ட பார்ப்பன பாசிச ஜெயலலிதா இவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் தலித் மக்களின் நேரடி எதிரிகள்'', என்று பகிரங்கமாக எச்சரித்தனர்.
""நாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஊரில் சிறுபான்மை தலித் சாதியைச் சேர்ந்த ஒருவர் எப்படிப் பஞ்சாயத்துத் தலைவராக முடியும்?' என்கிறார்கள், சாதிவெறி பிடித்த கள்ளர்கள். "கீரிப்பட்டியில் இருக்கும் குலதெய்வ சாமி நஞ்சுண்டம்மன், ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராக வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டாள்; ஊர் குற்றமாகி விடும்' என்கிறார்கள். "தேர்தல் வேண்டும் என்றால் கீரிப்பட்டியை அரசாங்கம் பொது தொகுதியாக மாற்ற வேண்டும். தலித் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறட்டும்' என்கிறார்கள் கள்ள சாதிவெறியர்கள்.
""ஜனநாயகம், சுயமரியாதை, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்ட நம் ஒவ்வொருவருடைய வாயிலும் மலத்தைத் திணித்து ""உங்களால் என்ன புடுங்க முடியும்?'' என்று நம்மை எகத்தாளம் செய்கிறார்கள் கீரிப்பட்டியின் சாதிவெறியர்கள். இந்திய அரசியல் சட்டத்தின் மீது மட்டுமல்ல, மனித குல நாகரிகத்தின் மீதே காரித் துப்புகிறார்கள், சாதிவெறியர்கள்.
""பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தலித் மக்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கும் கள்ளர் சாதிவெறியர்களை அதே வழியில் திருப்பி தாக்குவோம்'' என்று முழங்கினார்கள் ஆர்ப்பாட்டத்தினர். ""சாதிவெறியர்களின் நிலஉரிமை, ஓட்டுரிமை, இட ஒதுக்கீட்டுரிமை ஆகியவைகளை அவர்களிடமிருந்து பறித்துத் தண்டிப்போம்'' என்று போராட்டத் தீயை மூட்டினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கள்ளர் சாதியில் பிறந்த ஜனநாயக பற்றாளர்கள் மற்றும் புரட்சிகர அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், வறிய தலித்துக்களை எதிர்க்கும் கள்ளர் சாதிவெறியர்களின் பேடித்தனத்தையும் கோழைத்தனத்தையும் வன்மையாகச் சாடினார்கள். ""நாங்களும் பிறப்பால் கள்ளன்தான்டா... உங்க கௌரவம், உங்க குலதெய்வம் எல்லாம் யார்கிட்ட வாலாட்டும்னு எங்களுக்குத் தெரியும்டா'' என்று நெருப்பாய்ச் சாடினார்கள்.
""கிடா வெட்டுத் தடைச் சட்டம் வந்தபோது உங்க வீரம் எங்க போச்சு? கிடா கேக்குற உங்க குலதெய்வத்தின் வீரம், அன்று எங்க போச்சு? கையில் முறுக்குச்சட்டி, அரிகரண்டி தூக்கிக்கினு நீங்க பிழைப்பைத் தேடி ஆந்திராவுக்கு ஓடும்போது, உங்க கௌரவம் எங்க போச்சு? உங்க ஊர்ல, நாயுடுவோ, கவுண்டரோ நின்னா நீங்க பெரும்பான்மை பேச முடியுமா? அதிகம் போனா, ஏதாவது கேட்டு பேரம் பேசுவீங்க! அந்தஸ்துஅதிகாரம் உள்ள கள்ளன் கிட்ட, ஏழைக் கள்ளன் போய் பொண்ணு கேட்டு மீசையை முறுக்கு பாப்போம்!'' என்று சாதிவெறியர்களைத் தோலுரித்துத் தொங்க விட்டனர்.
""கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத் தேர்தல்களுக்கு மட்டும் துணை இராணுவம், போலீசு, அதிகாரவர்க்கக் கும்பல்களைக் கொண்டு வந்து கொட்டி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, வெளியூர்காரர்களை விரட்டி, "கிரிமினல்'களிடமிருந்து வாக்காளர்களைப் பாதுகாத்த அரசு நிர்வாகம், கீரிப்பட்டியில் மட்டும் ஏன் சாதிவெறி கிரிமினல்களுக்கு வாலாட்டுகிறது?'' என்று கேள்வி எழுப்பினார்கள்.
ஆக, அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் தலித் மக்களின் தனித் தொகுதியைப் பறிப்பதற்கு உடந்தை என்பதை விளக்கினார்கள். ""கள்ளர் சாதவெறியர்களின் பெயரைக் கூட குறிப்பிட அஞ்சும் ஓட்டுப் பொறுக்கிகள் எப்படி தலித்துகளின் உரிமையை மீட்டெடுக்க முடியும்? இப்படியே, 10 வருடம் முடிந்து விட்டால் தானாக சுழற்சி முறையில் கீரிப்பட்டி பொதுத் தொகுதியாக மாறிவிடும் என்று சாதிவெறியர்களும், ஓட்டுச் சீட்டுத் தலைவர்களும் காலத்தைக் கடத்துகிறார்கள்'' என்று சாதிவெறியர்களுக்கும், ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் இருக்கும் மறைமுகக் கூட்டைத் தெளிவாகச் சுட்டிக் காட்டினார்கள், ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர்கள்.
""பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!'' என்ற அறைகூவல், ஆர்ப்பாட்டம் முடிவதற்கு முன்பே பெரும் நெருப்பாக, புரட்சிகரமான செயல் வடிவம் பெற்று ஒளிர்ந்தது!
ஆர்ப்பாட்டத்தைக் காணவந்த நாட்டார்மங்கலம் (தலித்துக்கள் மிரட்டப்பட்டு, வேட்பு மனுக்கூட தாக்கல் செய்யாமல் இருக்கும் இடம்) தொகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியில் பிறந்த இளைஞர்கள், தங்கள் மீது குத்தப்பட்டுள்ள சாதி அடையாளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ""நாங்களும் உங்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுக்கிறோம்'' என்று முன் வந்தனர். தங்கள் பகுதிகளில் பிரச்சாரத்தை விரிவுபடுத்த, ஆலோசனைகளையும் ஆர்ப்பாட்ட சுவரொட்டிகளையும் அக்கறையுடன் கேட்டு வாங்கினர். அச்சுவரொட்டிகளைத் தங்கள் ஊரில் ஒட்டியதோடு, தங்கள் ஊரில் பொதுக்கூட்டம் நடத்தவும் கோரினர். கள்ளர் சாதிவெறியர்களுக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் சமரசமற்ற போராட்டத்தின் துவக்கம் ஜனநாயக சக்திகளுக்கு புது ரத்தத்தை பாய்ச்சியது!
பு.ஜ. செய்தியாளர், மதுரை.