Language Selection

புதிய ஜனநாயகம் 2005

07_2005.jpg- கண்டன ஆர்ப்பாட்டம் நவரத்தினரங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனத்தின் (""பெல்'') அரசுப் பங்குகளில் 10 சதவீதத்தைத் தனியாருக்கு விற்றுவிட அண்மையில் காங்கிரசு கூட்டணி அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று திருச்சி ""பெல்'' ஆலை வாயிலருகே பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தின. பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச் செயலாளர் தோழர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் காளியப்பன் (ம.க.இ.க.) சிறப்பரையாற்றினார்.

 

இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த காங்கிரசு கட்சி, இப்போது தொழிலாளர்களின் முதுகில் குத்துவதையும், ஏற்கெனவே பால்கோ, மாடர்ன் பிரட், துறைமுகங்கள் முதலானவற்றைத் தனியாருக்கு விற்றதால் ஏற்பட்ட கோரமான விளைவுகளை விளக்கியும், இக்கேடுகெட்ட ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துவரும் போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தியும், தனியார்மய தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் முன்னணியாளர்கள் உரையாற்றினர்.

திரளான தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டமும் தெருமுனைக் கூட்டங்களும் தொழிலாளர்களிடம் போராட்ட உணர்வூட்டி புதிய நம்பிக்கையை விதைத்தன.

 

பு.ஜ. செய்தியாளர், திருச்சி