போலீசு துறையைக் கலைக்கக் கோரும் மும்பை மக்களின் போராட்டம் மிகச் சரியானது. சென்னையில் வழிப்பறி கும்பலாக, கொள்ளைக் கூட்டமாக, பிளாச்சிமடா கோக் ஆலையின் காவல் நாயாக உள்ள போலீசு துறையைக் கலைத்து, மக்கள் தமது அதிகாரத்தை ஏந்திச் சுழற்றும் மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தளபதி சண்முகம், சென்னை.
விதிவிலக்கின்றி அனைத்து மத அமைப்புகளும், சட்டம், போலீசு, இராணுவம் போன்ற அதிகார அமைப்புகளும், குடும்ப அமைப்பும், ஆணாதிக்கமும் வெவ்வேறு வகையில் பெண்ணுக்கு விலங்கிடுகின்றன. பொருளாதார சுதந்திரமும் பெண்களுக்கு அதிகாரமும் அளிக்கும் புரட்சிகர சமுதாயத்தில் மட்டுமே பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்படும் என்பதை உணர்த்தும் விதமாக முசுலீம் தனிநபர் சட்ட சீர்திருத்தம் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. போலீசு பற்றிய கட்டுரையானது போராட்ட உணர்வூட்டுவதோடு எளிய நடையில் அமைந்துள்ளது.
ஜீவா, சென்னை.
பாக்தாத் பொறியாளர் புஷ்ஷிற்கு எழுதிய பகிரங்கக் கடிதம், அமெரிக்க பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இக்கடிதத்தின் ஊடாக நீங்கள் இன்னமும் அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடவில்லையா என்று அவர் கேட்கிறார். நமது போராட்டங்கள் மூலம் இதற்கு நாம் பதில் சொல்லியே தீரவேண்டும்.
எங்கெல்ஸ், கும்மிடிப்பூண்டி.
புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஒப்புதல் வாக்குமூலம், சி.பி.எம். கட்சியின் யோக்கியதையைப் பறைசாற்றுகிறது. இனி இவர்கள் முதலாளிகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் சிரிப்பாய் சிரிக்கும் போராட்டம், ஒப்பாரி வைக்கும் போராட்டம், படுத்துக் கொண்டு குறட்டை விடும் போராட்டம், மொட்டையடித்து நாமம் போட்டுக் கொள்ளும் போராட்டம், பின்னால் நடக்கும் போராட்டம் எனத் தீவிரமாகப் போராடுவார்கள். இந்த மோசடிப் பேர்வழிகளுக்கு இன்னும் எதற்கு செங்கொடி?
தர்மராசு, திருச்சி.
பாப்பாபட்டி கீரிப்பட்டி வன்கொடுமைக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் போராட்ட அறைகூவல் சாதிவெறியர்களுக்குச் சவுக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது. மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம், உறக்கத்திலிருக்கும் சி.பி.எம். கட்சி அணிகளை உசுப்பிவிடும். தலித் அடையாளத்தைக் கேடாகப் பயன்படுத்தும் திடீர் பணக்கார கிரிமினல் பேர்வழி ஆதிகேசவனை, உழைக்கும் தலித் மக்கள் தண்டிக்க வேண்டும் என்ற அறைகூவல் மிகச் சரியானது.
இரா. கணேசன், சாத்தூர்.
நாம் தகர்த்தெறிய வேண்டியது கோக் முதலான பன்னாட்டுக் கம்பெனிகள் மட்டுமல்ல் இந்தியாவின் அடிமை அநீதி மன்றங்களையும்தான் என்பதை உணர்த்தும் வகையில் அட்டைப்படக் கட்டுரை அமைந்துள்ளது. தேர்தல் கமிசனின் நடுநிலை நாடகத்தையும், ஜெயாவின் பணநாயகத்தையும் எதிர்க்கட்சிகளின் ஓட்டாண்டித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டிய காஞ்சி கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் பற்றிய கட்டுரை சிறப்பு.
புதியவன், கிருஷ்ணகிரி.
நாடு மீண்டும் காலனியாக்கப்பட்டு வருவதையும், கண்காணிக்கும் நாய்களான போலி கம்யூனிஸ்டுகள் குரைப்பதற்கு மேல் வேறெதுவும் செய்யாமல் காங்கிரசு கயவாளிகளுக்கு கைக்கூலி வேலை செய்வதையும் தலையங்கம் எடுப்பாக அம்பலப்படுத்திக் காட்டியது.
அப்பு, மதுரை.
நாடு மீண்டும் காலனியாக்கப்பட்டு வருவதையும் இந்துத்துவ எதிர்ப்பு என்ற பெயரில் காங்கிரசு துரோகிகளுக்கு போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து வருவதையும் ஓராண்டு காங்கிரசு ஆட்சியின் "சாதனை' யிலிருந்து தலையங்கம் எடுப்பாக உரைத்தது. கோக் ஆலைக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் போராட்ட அறைகூவல் மிகச் சரியானது; இன்றியமையாதது.
சுடர், சென்னை.
ரத்தன் டாடாவும் அசிம் பிரேம்ஜியும் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் என்று வாக்குமூலம் அளித்துள்ள மே.வங்க முதல்வரின் விசுவாசத்தைக் கண்டு தரகு முதலாளிகள் மெய்சிலிர்த்துப் போவார்கள். தன்மானமுள்ள சி.பி.எம். அணிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டால் மரியாதையாவது மிஞ்சும். இல்லையேல் துரோகிப்பட்டம்தான் கிடைக்கும்.
கதிரவன், சென்னை.