Language Selection

புதிய ஜனநாயகம் 2005

07_2005.jpgமதுரையில் இயங்கிவரும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம், சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் தலித் மக்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறப்படுகின்ற தன்னார்வக் குழுக்கள் ஆகியவை இணைந்து, ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம், தமிழ்நாடு'' என்ற ஒரு கூட்டமைப்பை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தி வருகின்றன.

 

தமிழகத்தில் நடந்து வரும் கொட்டடிப் படுகொலைகள்; போலி மோதல் சாவுகள்; பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை; சாதிவெறித் தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதையின் கோர முகத்தை இந்தக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது.

 

ஜூன் 26 என்பது சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா.வின் ஆதரவு நாள். இதை ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கூட்டமைப்பு பல வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்கிறது. ஜூன் 26ஐ ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கலைக்குழுக்களை வைத்து கலைப்பயணங்களை நடத்துகின்றது.

 

இந்தப் பயணத்தில் காவல்துறையை எதிர்த்து கலைக்குழுவினர் வீதி நாடகம் நிகழ்த்தும் போது, பொதுமக்களுக்கே ஒரு ஆச்சரியம் வருகின்றது. பல இடங்களில் பிரச்சாரத்தின் போது, போலீசு நடத்தக் கூடாது என்பதும் அதை எதிர்த்து அதே இடத்தில் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தில் ஈடுபடுவதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகின்றது. இவையெல்லாம் வெறும் கண்கட்டி வித்தை. இது பற்றி பிறகு பார்ப்போம்.

 

நிதி மற்றும் செயல்பாடு

இவர்கள் இப்படி எல்லாம் செய்ய, திட்டங்களைத் தயாரித்துக் கொடுப்பதோடு, அதற்குத் தேவையான நிதியையும் தருவது அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு பவுண்டேசன் உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளையும் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள்தான். ஆனால், சித்திரவதைக்கு எதிரான பிரச்சார கூட்டமைப்பின் கூட்டங்களில், இதை வழி நடத்துகின்ற மக்கள் கண்காணிப்பகம், ""நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தப் பிரச்சாரத்திற்கு ஆகும் செலவுகளை அரசியல் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்'' எனக் கூறி, நிதியின் தேவையை அரசியல் அமைப்புகளிடம் கேட்பார்கள். ஆனால், எந்த அரசியல் கட்சியும் குறித்த நேரத்தில் நிதி கொடுக்க மாட்டார்கள். எனினும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் படுவேகமாக நடந்து முடியும். இதற்கான வரவு செலவு என்ன என்பதை யாரும் கேட்டு விட முடியாது.

 

தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு செயல்படாத தொண்டு நிறுவனங்களை விலைக்கு வாங்கியும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு செங்கல்பட்டில் இயங்கி வருகின்ற எல்.ஆர்.எஸ்.ஏ. (ஃகீகுஅ) என்ற நிறுவனம் ""மக்கள் கண்காணிப்பகத்தின்'' கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் குறித்து செயல்பட்டு வரும் சிறு நிறுவனங்களுக்கும் இந்த அமைப்புதான் தாய் அமைப்பு. மாநிலத்தில் எந்த இடத்தில் போலி மோதல் சாவு, கொட்டடிக் கொலை, சாதிமோதல் சாவு, பாலியல் வன்முறை நடந்தாலும், இவர்களின் களப் பணியாளர்கள் அங்கு போய் நிற்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

 

மனித உரிமை அமைப்பு என்பதால் மக்களும் நம்பிக்கையுடன் இவர்களை நாடிச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட வழக்குகளுக்கான முழு செலவையும் இவர்களே செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்த மாட்டார்கள். அதேபோல இவர்கள் எங்கெல்லாம் கூப்பிடுகிறார்களோ அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் சென்று, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லவேண்டும். குறிப்பாக, பாதிக்கப்பட்டோரின் சோகத்தை காட்டி, கதறக் கதற அழ வைத்து நிதியைப் பெறுவார்கள்.

 

இந்த நிறுவனத்தை நம்பி நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற அதிரடிப்படை மலைவாழ் மக்கள் மீது ஏவிவிட்ட மனித உரிமை மீறல்களைச் சொல்லி மாள முடியாது. இவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை ""மக்கள் கண்காணிப்பகம்'' தான் செய்தது. மேட்டூர் பகுதியில் ஒரு அரசியல் கட்சிக்கு நிகராக ""மக்கள் கண்காணிப்பகம்'' செயல்படுகின்றது. அந்த மக்களைத் திரட்டி போராட்டம், தர்ணா என நடத்தி வருகிறது.

 

அதேசமயம், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற வகையில், காவல்துறை அதிகாரிகளோடு சுமுகமான உறவையும், தனிப்பட்ட நெருக்கத்தையும் வளர்த்துக் கொள்வார்கள். அதாவது, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுதான் ""மக்கள் கண்காணிப்பகத்தின்' அரசியல் தந்திரம்.

 

இந்த நிறுவனம் இப்படியொரு பக்கம் அரசை எதிர்ப்பதாக மாயை காட்டி விட்டு, மறுபுறம் மைய அரசின் துணையோடு அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியைக் கொடுத்து வருகிறது. இதற்குப் பெயர் ""மனித உரிமைக் கல்வி நிறுவனம்.''

 

பெண்களின் குடும்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ""சுதந்திரா'' என்ற பெண்கள் அமைப்பு இந்த நிறுவனத்தின் அங்கமாக உள்ளது. குடும்ப பிரச்சினை, பாலியல் வன்முறை போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேனின் மனைவி சிந்தியா டிபேன் தான் ""சுதந்திரா''வின் இயக்குநர். இவரது மாதச் சம்பளம் ரூ. 15,000. ஹென்றி டிபேனின் சம்பளம் ரூ. 30,000. சமூகப் பணிக்கு படித்த முதுகலைப் பட்டதாரிகள் இந்நிறுவனத்தில் அதிகம் உண்டு. சமூகப் பணிகள் செய்வதாகக் கூறிக் கொண்டு குறித்த நேரத்தில் மட்டும் வேலை பார்ப்பவர்கள் இங்கு அதிகம். சட்டக்கல்லூரி மாணவர்கள், முற்போக்காகப் பேசும் இளைஞர்களை இந்த அமைப்பிற்கு கொண்டு வந்து, அவர்களை வைத்து என்ன செய்ய முடியும் எனப் புதுப்புது திட்டங்களைப் போட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் அதைக் காட்டி, நிதி வாங்குவார்கள். இப்படி புதிதாகத் தோன்றியதுதான் ""மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்.''

 

பெயரை வாடகைக்கு விட்ட த.மு.எ.ச:

சித்திரவதைக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் பத்து கலைக் குழுக்கள், ஃபோர்டு பவுண்டேஷன் உதவியோடு பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு தன்னார்வக் குழுக்களின் கலைஞர்களோடு பயணம் நடத்தி வருகிறது. ஜூன் 26 அன்று தொடங்கிய இப்பயணம் ஜூலை 9ஆம் தேதி மதுரையில் நிறைவடைய இருக்கின்றது. (இதில் நாமக்கல் சி.பி.ஐயின் குழு, சமர்ப்பா கலைக்குழு, சி.பி.எம்; இளைஞர் பெரு மன்றம் போன்ற அமைப்புக ளின் முழு நேரப் பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.) நிறைவு விழா மிகப் பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அந்த நிறைவு விழாவிற்கு, சித்திரவதைக்கு எதிரான ""கலை இரவு'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கலைவிழாவை தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில தலைவர்களுள் ஒருவரான பாரதி கிருஷ்ணகுமார் வடிவமைத்துள்ளார். இதற்காகத் திட்டமிடும் கூட்டம் மட்டும் பத்துமுறை நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இதற்காகவே அவர் சென்னையிலிருந்து வந்து சென்றுள்ளார். இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட கூலி, அவருடைய ""இராமய்யாவின் குடிசை'' என்ற குறும்படத்திற்காக 10,000 விளம்பரத் துண்டு பிரசுரங்கள் அடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தங்களது கலை இரவின் மூலம் தமிழ்நாடு முழுவதும் மக்களை விழிப்படையச் செய்திருப்பதாக, தமிழகத்தையே விடிய வைப்பதாக பீற்றிக் கொள்ளும் த.மு.எ.ச. பயன்படுத்துகின்ற முக்கிய நிகழ்வே இக் ""கலை இரவு'' என்ற வார்த்தை தான். அதே ""கலை இரவு'' என்ற வார்த்தையை கிருஷ்ணகுமார் இந்த தன்னார்வ அமெரிக்க கைக்கூலி நிறுவனத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார்.

 

சி.பி.எம். அணியினர் தன்னார்வ குழுக்களோடு கொஞ்சிக் குலாவுவது தெரிந்த விசயமாக இருந்தாலும், குறிப்பாக ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கலை இரவிற்கென்றே ஒரு பார்வையாளர் கூட்டம் தனியாக உள்ளது என்று நம்பப்படுகின்றது. நடுத்தர வர்க்கத்தினர் கலை இரவிற்கு வருவது மதுரை போன்ற நகரங்களில் இயல்பாக உள்ளது. இதில்தான் சூழ்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

கம்யூனிச அமைப்புகளைப் போல் தன்னைக் காட்டிக் கொண்டு, அதில் வரக்கூடிய இளைஞர்களையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும், தன் பக்கம் இழுப்பதற்கும், அவர்களது போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்குமான முயற்சிதான் இது. மதுரையில் நடக்கும் இந்த விழாவிற்காக மதுரை முழுவதும் சி.பி.எம். கட்சி, தான் பிடித்து வைத்திருந்த சுவர்களை இந்த ""கலை இரவு'' விளம்பரத்திற்காக வாடகைக்கு விட்டுள்ளது. இதற்காகவே முழுப்பொறுப்பேற்று கலைவிழா வேலைகளைச் செய்து வருகிறார் சி.பி.எம். கட்சியின் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர். அதேபோல கலைஇரவு நடத்தப்படுகின்ற இடம் ஒவ்வொரு ஆண்டும் கிறித்துவ தன்னார்வக் குழுக்களால் நடத்தப்படுகின்ற தலித் கலைவிழா நடக்கும் இடமாகும்.

 

ஏமாந்து வரும் முசுலீம் அமைப்புகள்

தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்ற இந்த கலைப் பயணத்திற்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கிக் கொடுத்தது, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்தான். அதேபோல தமிழகம் முழுவதும் இந்த கலைக்குழுக்களுக்கு உணவளிப்பதும் இவர்கள்தான். தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. செ.ஹைதர் அலி அவர்களை ஜெனிவாவில் நடந்த மனித உரிமை கருத்தரங்கில் கலந்து கொள்ள மக்கள் கண்காணிப்பகம் அனுப்பி வைத்தது. இது போன்ற கண் துடைப்பு வேலைகள் மூலம், முசுலீம் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபடுவதைப் போல மக்கள் கண்காணிப்பகம் காட்டிக் கொள்ளும்.

 

உலகமயமாக்கலுக்கு ஆதரவு

இந்த அமைப்பு கடந்த ஆண்டு சித்திரவதைக்கு எதிராக ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அதில் அட்டைப்படமாக ஈராக்கில் அபு கிரைப் சிறையில் நடந்த கொடூரங்களைப் படங்களாக போட்டிருந்தது. இதுமட்டுமின்றி அடிக்கடி வெளிநாட்டில் மனிதஉரிமை குறித்துப் பேசிவரும் இந்நிறுவனத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன் உலகமயமாக்கலை எதிர்த்துப் பேசியது மற்றும் இவர்களின் இரு மாத இதழான மனித உரிமை ""கண்காணி''யில் உலகமயமாக்கலை எதிர்த்து எழுதியதற்காக தனது நிதியை நிறுத்திக் கொண்டது, ஃபோர்டு பவுண்டேஷன். அதேபோல் வல்லரசு நாடுகளை விமர்சிக்கக் கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளது.

 

தன்னை முற்போக்கு அமைப்பாகக் காட்டிக் கொண்ட நிறுவனம், மக்களின் பல்வேறு சிக்கலைத் தீர்த்து வைப்பதாக காட்டி கொண்ட இந்நிறுவனம் உலகமயமாக்கலை எதிர்ப்பதாகவும் காட்டிக் கொண்டது. இதை அறிந்த ஜெர்மனியைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்று கடந்த மே மாதம் (22.5.05 முதல் 24.5.05) உதகையில் குன்னூருக்கு அருகில் உள்ள தியோடர் சர்ச்சில் மக்கள் கண்காணிப்பகத்தின் முழு நேரப் பணியாளர்களுக்கு உலகமயமாக்கலின் அவசியத்தை மூன்று நாள் முகாமாக நடத்தியுள்ளது. உலகமயமாக்கலை அவசியமாக ஆதரிக்க வேண்டும் என்பதே இந்த முகாமின் நோக்கம். இதற்கு சில ஊழியர்கள் மறுக்கவே தேவையை ஒட்டி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பின்வாங்கி விட்டனர், அந்த நிறுவனத்தினர்.

 

இதுபற்றி ஹென்றி டிபேனிடம் கேட்டபொழுது, ""நாம் அவர்களிடம் நிதி வாங்கிப் பணிபுரிகிறோம். அவர்கள் நிதியைப் பயன்படுத்தும் வரை அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். மேலும் பெப்சி, கொக்கோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களைப் புறக்கணிக்கக் கூடாது; அதை ஆதரிக்க வேண்டுமென ஜெர்மனியில் இருந்து வந்த கருத்தாளர்கள் கூறியுள்ளனர். இதை கேட்ட ஊழியர்களுள் சிலர் ""உலகமயமாக்கலினால் எந்த ஆபத்தும் இல்லை; பொருளாதார முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு என நன்மைதான் உள்ளது'' எனப் பேசத் தொடங்கியுள்ளனர்.

 

உலகெங்கிலும் நடந்து வருகிற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்ற மக்களையும்; மனித உரிமைகள் மீது ஆர்வம் கொண்டுள்ள ஜனநாயக சக்திகளையும், தங்களின் வலைப் பின்னலுக்குள் கொண்டு வருவதற்காகவே, அமெரிக்க அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் ""அமெரிக்க கண்காணிப்பகம்'', ""ஆசியா கண்காணிப்பகம்'' என ஒவ்வொரு நாட்டிலும் இவை போன்ற மனித உரிமை அமைப்புகளைக் கட்டி இயக்கி வருகின்றன. அத்தகைய ஏகாதிபத்திய திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஹென்றி டிபேன் நடத்தி வரும் ""மக்கள் கண்காணிப்பகம்'' மற்றும் ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம்.''

 

அமெரிக்காவும் அந்நாடு திணிக்கும் தனியார்மய பொருளாதாரக் கொள்கைகளும்தான் உலகெங்கிலுமே மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதில் முன்னணியில் இருக்கின்றன. யாரைச் சமரசமின்றி எதிர்க்க வேண்டுமோ, அவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசும் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகம் என்பது நண்பன் வேடத்தில் இருக்கும் எதிரி. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து விடக் கூடாது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டும்; அவர்களின் அரசியல் உணர்வைக் காயடிக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய அரசுகளின் திட்டங்களை, அவர்கள் சொல்லுகிறபடியே செயல்படுத்தும் ஒரு பொம்மைதான் மக்கள் கண்காணிப்பகம்.

 

மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பது என்பது, அவர்களைப் ""பொது நல வழக்குகள்'' போன்ற சட்டவாத சகதிக்குள் மூழ்கடிப்பதாகும். தவறு செய்யும் அதிகாரிகளை, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலீசு அதிகாரிகளை மக்களே தண்டிக்கும் உரிமையை மறுத்து, அவர்களை நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் எனக் கோரி, அந்த அதிகாரிகளை மக்களிடமிருந்து காப்பாற்றும் நரித்தந்திர வேலையைத்தான் ""மக்கள் கண்காணிப்பகம்'' போன்ற மனித உரிமை அமைப்புகள் செய்கின்றன.

 

இதன் மூலம் நீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிடாதபடி செய்து, அவற்றின் "புனிதத்தை'க் காப்பாற்றுகின்றன. இச்சமூக அமைப்பையே மாற்ற வேண்டும் என்ற புரட்சிகர உணர்வு மக்கள் மனதில் தோன்றிவிடாதபடி, அவர்களைச் சட்டவாத சமரசவாதிகளாக மாற்றுகின்றன. இப்படி முதலாளித்துவ சட்டம், நீதிமன்றத்தைப் பாதுகாக்கும் கேடயமாக இருப்பதால்தான், ""மக்கள் கண்காணிப்பகம்'' போன்ற அமைப்புகளை முதலாளித்துவ பத்திரிகைகள் புகழ்ந்து எழுதி, அவைகளுக்கு மக்களிடம் விளம்பரத்தைத் தேடிக் கொடுக்கின்றன. இந்தப் பசுத்தோல் போர்த்திய புலிகளுக்குச் சிவப்புச் சாயம் பூசி, அரசியல் அரங்கில், மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையை சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.

 

நம்மிடம் இருந்து கொண்டே நம்மை காட்டிக் கொடுக்கும் இந்த எட்டப்பர்களிடமிருந்து நமது மக்களைப் பாதுகாக்க வேண்டும். சிசுக் கொலை, பொது சுகாதாரம், சிறு சேமிப்பு, சுய உதவி குழுக்கள், மனித உரிமை எனப் பல வடிவத்தில் மக்களைச் சிறு குழுக்களாக, நிறுவனங்களாகப் பிரிக்கும் இந்நிறுவனங்கள், இதன் மூலம் வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வேலையைச் செய்து வருகின்றன. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறிக் கொண்டுள்ள இந்நிறுவனங்கள், படித்தவர்களை முழு அடிமையாக வைத்துள்ளன. இதற்காகவே, சமூக சேவையில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும் (ஆ.கு.ஙி.ஃஆ.கு.ஙி.) நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு கொடுக்க வேண்டிய வேலையை, படித்த வேலையில்லா இளைஞர்கள் கேட்கக் கூடாது என்பதே இவர்கள் நோக்கம்.

 

அன்றோ ஒரு எட்டப்பன், ஒரு சாக்சன் துரை. இன்றோ சில பன்னாட்டுக் கம்பெனிகள்; பல எட்டப்பர்கள். இவர்களை இனம் கண்டு விரட்டியடிப்போம்.

 

ஏகலைவன்