Language Selection

07_2005.jpg ஏகாதிபத்திய நிறுவனங்கள் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அடிமை புத்தி கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் என்பதற்கு இன்னொரு சான்று தண்ணீர் தனியார்மயம். உலக வர்த்தகக் கழகத்தில் ""காட்ஸ்'' ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே, அதன் விதிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். கேரள உயர்நீதி மன்றம் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு இதை உறுதி செய்கிறது.

 

""உள்நாட்டு குடிமகன்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் அந்நிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்'' என்பது ""காட்ஸ்''இன் விதி. கேரளாவிலுள்ள பிளாச்சிமடா கிராமத்து மக்கள் கொக்கோ கோலாவிற்கு எதிராக நடத்திய வழக்கை விசாரித்த கேரள உயர்நீதி மன்றம், ""சட்டபூர்வமான பொருளில் நிலவும் கொக்கோ கோலா என்ற நபருக்கு இத்தகைய கட்டுப்பாடு (நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது தொடர்பாக) விதிக்கப்படுமானால், மற்றெல்லா குடிமகன்களுக்கும் இதே போன்று கட்டுப்பாடு விதிக்க வேண்டியிருக்கும்'' எனக் கூறி, காட்ஸ்இன் விதியினையே தீர்ப்பாகக் கூறிவிட்டது.

 

இது மட்டுமின்றி, தண்ணீர் தனியார்மயம் குறித்து உலக வங்கி தரும் ஆலோசனைகளையே, தேசிய நீர் கொள்கை 2002 என்ற பெயரில் இந்திய அரசு தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் குறிப்பிட்ட 30 நகரங்களின் குடிநீர் வழங்கும் சேவையினைப் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கத் திட்டங்கள் தயாராக உள்ளன. இந்த 30 நகரங்களில் திருப்பூர் முன்னணியில் உள்ளது.

 

திருப்பூர் நகராட்சி எல்லைக்குள் அமைந்திருக்கும் குடியிருப்புகள், பின்னலாடைத் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைகள் மற்றும் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்குத் தண்ணீர் எடுத்து வரப்படும் வழியில் அமைந்துள்ள 23 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் பொறுப்பை தமிழக அரசு, இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனமான ""மஹிந்திரா அண்ட் மஹிந்திரா'', அமெரிக்காவைச் சேர்ந்த பெக்டெல், மற்றும் யுனைடெட் வாட்டர் யுடிலிடீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களிடம் முப்பது வருடக் குத்தகைக்கு விட்டிருக்கிறது.

 

அதேசமயம், இந்த இந்திய அந்நிய நிறுவனங்களின் கூட்டணிதான் திருப்பூர் நகர மக்களுக்குக் குடிநீர் வழங்கப் போகும் எஜமானர்கள் என்பது வெளிப்படையாகத் தெரியாமல் இருப்பதற்காக, திருப்பூர் பின்னலாடை முதலாளிகள் சங்கத்துடன் இணைந்து ""புது திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம்'' என்ற அமைப்பை தமிழக அரசு உருவாக்கி, இந்த கழகம்தான் திருப்பூர் நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப் போவதாகக் காட்டி வருகிறது.

 

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, திருப்பூர் நகர மக்களுக்கு தினந்தோறும்கூட குடிநீர் வழங்க முடியும் எனப் பீற்றிக் கொள்கிறது திருப்பூர் நகராட்சி. தண்ணீர் எத்தனை நாளைக்கு ஒருமுறை வரும் என்பதைவிட, தண்ணீர் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பதுதான் பிரச்சினை.

 

திருப்பூர் நகராட்சி, அந்நகரில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தற்பொழுது 1000 லிட்டர் நீரை ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறது. இப்புதிய குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பின்னலாடை தொழில் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் விலை 1,000 லிட்டருக்கு 45 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விடும். இதை வைத்துப் பார்த்தால், தற்பொழுது வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு நான்கு ரூபாயாக இருக்கும் கட்டணம், விண்ணை முட்டிக் கொண்டுதான் நிற்கும்.

 

இக்குடிநீர் திட்டத்திற்காக, தனியார் முதலாளிகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தண்ணீர் கட்டணத்தை திருப்பூர் நகராட்சி நிர்ணயிக்க முடியாது. தண்ணீர் கட்டணத்தைப் பொது மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுக்கும் ""ஏஜெண்டு'' வேலையைத்தான் பார்க்க முடியும். அரசின் தலையீடு இன்றி தண்ணீர் கட்டணத்தை நிர்ணயிக்க, முதலாளிகளின் எடுபிடிகளைக் கொண்ட தனியொரு கமிட்டி அமைக்கப்படும்; தண்ணீர் கட்டணம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் விலைவாசி உயர்வுக்கும், பண வீக்கத்துக்கும் தகுந்தவாறு மாற்றி அமைக்கப்படும். இந்தத் திட்டத்தில் பங்குதாரர்களாகப் புகுந்துள்ள அந்நிய நிறுவனங்கள் தங்களின் இலாபத்தை அமெரிக்க டாலர்களாக அள்ளிச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் விலைவாசி உயர்வு, பண வீக்கம் என்றெல்லாம் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

திருப்பூர் நகரில் வாழும் தொழிலாளர்கள், தங்களின் உணவுக்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவழிக்கிறார்களோ, அதே அளவிற்கு தண்ணீருக்கும் செலவழிக்க வேண்டும் என்ற அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இதில் இருந்து யாரும் தப்பித்துவிட முடியாது. ஏனென்றால், திருப்பூர் நகரில் உள்ள பொதுக் குழாய்களையும், லாரி மூலம் தண்ணீர் வழங்கப்படுவதையும் இனி நிறுத்திவிடப் போவதாக திருப்பூர் நகராட்சி அறிவித்து விட்டது. பின்னலாடைத் தொழிலால் நிலத்தடி நீரே மாசுபட்டுப் போய்விட்ட திருப்பூர் நகரில் வாழும் மக்கள், தனியார் முதலாளிகள் தரும் தண்ணீரை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாத இக்கட்டில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு வழியில்லாத கூலித் தொழிலாளர் குடும்பங்கள், திருப்பூர் நகரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்; இல்லையென்றால், குடிக்கவே லாயக்கற்ற தண்ணீரைத் தேடிப் பிடித்துதான் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

 

இந்தத் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கட்டணத்தை ரூ. 4ஃலிருந்து ரூ. 7ஃ ஆகவும்; கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் கட்டணத்தை ரூ. 7ஃலிருந்து ரூ. 14ஃ ஆகவும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறது, திருப்பூர் நகராட்சி. திருப்பூர் குடிநீர் திட்டத்திற்கு 125 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ள உலக வங்கியின் நிபந்தனைக்குப் பணிந்துதான் இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்குவது தனியார் கைக்குப் போன பிறகு திடீரென கட்டண உயர்வை அறிவிப்பதைவிட, இப்பொழுது தொடங்கியே மெல்ல மெல்ல தண்ணீர் கட்டணத்தை அதிகப்படுத்துவதன் மூலம், சுமையை எதிர்க்காமல் தாங்குவதற்கு மக்களைப் பழக்கப்படுத்தப் பார்க்கிறது, தமிழக அரசு.

 

இக்குடிநீர் திட்ட ஒப்பந்த விதி எண் 29.1ன் படி, இந்த ஒப்பந்தம் குறித்த நிதி விசயங்கள், வியாபார விசயங்கள் பற்றி எவருக்கும் தெரிவிக்கவோ, வெளியிடவோ உரிமையில்லை என்றும்; ஒப்பந்த விதி எண் 29.4இன்படி, இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்கள் பற்றிய அதாவது, தனியார் முதலாளிகள் பற்றிய ரகசிய விபரங்களை வெளியிடக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, மாற்று வழி பற்றி தமிழக அரசு ஆலோசித்தால், குத்தகைதாரர்களான தனியார் முதலாளிகளின் வியாபாரத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில் மாற்றுத் திட்டம் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

அரசின் பொறுப்பில் இருக்கும் குடிநீர் வழங்கும் சேவையை வியாபாரமயமாக்கும், தனியார்மயமாக்கும் இந்தத் திட்டம் திருப்பூர் நகரில் வெற்றி பெற்றால், இதே போன்ற திட்டத்தை சிவகாசியில் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு.

 

பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் குத்தகையை கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஓட்டல் முதலாளிக்கும்; தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் குத்தகையை கொக்கோ கோலாவிற்கும் கொடுத்திருக்கும் தமிழக அரசு, தமிழகமெங்கும் நகர்ப்புற குடிநீர் வழங்கும் சேவையைத் தனியார்மயமாக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாடு தண்ணீர் முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது.

இத்தண்ணீர் தனியார்மயம் நகர்ப்புறத்தோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. விவசாயத்திற்கு வழங்கப்படும் பாசன வசதிகளையும் தனியார்மயமாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது.

 

ஆந்திராவிலும், ஒரிசாவிலும் பாசன வசதிகளை கிராம மக்களிடம் ஒப்படைப்பது என்ற சதித்திட்டத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட ""பாணி பஞ்சாயத்துகள்'', இன்று கிராமப்புற ஆதிக்கச் சக்திகளின் பிடிக்குள் போய் தனியார்மயமாகிவிட்டது.

மகாராஷ்டிர அரசு, உலக வங்கியின் கட்டளைப்படி, பாசன வசதியை வியாபாரமயமாக்கும் திட்டத்தோடு, ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கான பாசனக் கட்டணம் ரூ. 8,000ஃ என நிர்ணயித்து, விவசாயிகளின் மீது இன்னுமொரு சுமையை ஏற்றிவிட்டது.

 

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளை, இந்தப் பாசனக் கட்டண உயர்வு நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடும். இப்படி தரிசாகப் போடப்படும் விளைநிலங்களை, தரிசு நில மேம்பாடு என்ற பெயரில் தனியார் முதலாளிகள் சுருட்டிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.

 

எனவே, பாசன வசதியைத் தனியார்மயப்படுத்துவது என்பது நமது விளைநிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களும், அவர்களின் ஏஜெண்டுகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொல்லைப்புற வழியாக கைப்பற்றிக் கொள்ளுவதற்கான ஏற்பாடுதான். இந்திய மக்களை உணவுக்கும், குடிநீருக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் கையேந்த வைக்கும் மறுகாலனியாதிக்கச் சதிதான் தண்ணீர் தனியார்மயம்.

 

இந்தச் சதித் திட்டத்திற்குச் சாவுமணி அடிக்காமல் நமக்கு வாழ்க்கையில்லை. உ.பி.யில் உள்ள தெர்ரி அணைக்கட்டுப் பாசனப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கங்கையில் இருந்து தண்ணீர் எடுக்கும் குத்தகையைப் பெற்றுள்ள பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு தண்ணீர் நிறுவனமான சூயஸை எதிர்த்து, ""சூயஸே வெளியேறு'' என்ற முழக்கத்தை முன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்ட நெருப்பு திருப்பூரிலும், திருநெல்வேலியிலும் பற்றிப் பரவட்டும்; தண்ணீரைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும், உள்ளூர் முதலாளிகளையும் சுட்டுப் பொசுக்கட்டும்!

 

அழகு