நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஜி.எச்.சி.எல். ஆலையின் நச்சுக் கழிவால், ""40 கி.மீ. வட்டச் சுற்றுக்குள் உள்ள பகுதிகள் பாலைவனமாய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்'' என்று அவ்வாலையினால் ஏற்பட்ட கேடுகளை பட்டியலிட்டு எச்சரித்ததோடு உடனடியாக, ஜி.எச்.சி.எல். நச்சு ஆலையின் ""மின் இணைப்பைத் துண்டிக்கவும்'', ""ஆலையின் உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும்'' வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆணை நிறைவேற்றி, அதை அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனடியாக அமல்படுத்தக் கோரியது.
கிராம பஞ்சாயத்துக்களின் ஊராட்சி ஒன்றியம் நிறைவேற்றிய ஆணையை குப்பைக் கூடையில் வீசியெறிந்தது, அதிகார வர்க்கம். உடனே, ஜி.எச்.சி.எல். ஆலை எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து இயங்க போலீசு மற்றும் அரசு எந்திரங்கள் மூலம் கூடுதல் பாதுகாப்பளித்தது, அதிகார வர்க்கம்.
இந்த நச்சு ஆலையைப் பற்றி சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பே புதிய ஜனநாயகம் ஏடு அம்பலப்படுத்தியிருந்தது. ""உப்பு ஆலையா? நச்சு ஆலையா?'' என்ற தலைப்பில் அதன் அபாயத்தை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தது.
வேதாரண்யம் கடற்கரையை ஒட்டிய கிராமங்களின் தென்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்துள்ள சதுப்பு நிலப் பகுதியில் அமைந்துள்ளது, ஜி.எச்.சி.எல். ஆலை. அப்பகுதியின் கிராம மக்கள் சிறு அளவிலான உப்பளங்கள் அமைத்து, காலங்காலமாக உப்பு உற்பத்தி செய்து வந்தனர்.
1963ஆம் ஆண்டு, அப்பகுதியை "விம்கோ' என்ற உப்பு உற்பத்தி நிறுவனம் அரசிடமிருந்து 40 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது. முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு குத்தகைக் கட்டணமாக ஏக்கர் 1க்கு ஒரு ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
1991ஆம் ஆண்டு விம்கோ நிறுவனம், டி.சி. டபிள்யூ என்ற நிறுவனத்திற்கு தனது குத்தகை உரிமையை விற்றது. குத்தகையைப் பெற்ற டி.சி. டபிள்யூ நிறுவனம் சட்ட விரோதமாக தனது குத்தகையை ஜி.எச்.சி.எல். என்ற டால்மியா தரகு முதலாளித்துவ நிறுவனத்திற்கு உள்குத்தகைக்கு விற்றது. பிறகு, இரண்டு கொள்ளை நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு அப்பகுதி சதுப்பு நிலத்தின் இயற்கை வளங்களை முழுவதுமாக சூறையாடின.
உணவு உப்பு தயாரிப்பு ஆலை என்ற பெயரில், சட்ட விரோதமான முறையில் வெடிமருந்து மற்றும் உரம் தயாரிப்பதற்கான இரசாயன மூலப் பொருட்கள் தயாரிக்கும் வேலையில் இறங்கியது, ஜி.எச்.சி.எல். ஆலை.
அபாயகரமான இந்த இரசாயன மூலப் பொருட்கள் ஆலைக்குள், முத்திரை இல்லாத மூட்டைகளில் அடைக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த இரகசியம், வெளியில் கசியாமல் இருக்க, அவ்விடங்களில் வேலைபார்த்த உள்ளூர் தொழிலாளர்களை அகற்றிவிட்டு வெளிமாநில ஆட்களை அமர்த்தியது, ஆலை நிர்வாகம்.
இப்பகுதியில் இயங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஜி.எச்.சி.எல். ஆலையை பாதுகாக்கும் அதிகாரவர்க்கம் மற்றும் அரசு எந்திரத்தை எதிர்த்து பிரச்சார இயக்கம் மேற்கொண்டது. காய்ந்த சருகுகளாக சிதறி கிடந்த விவசாயிகளின் வெஞ்சினம் தீயாக எழுந்தது. ஆலைக்கு எதிராக அப்பகுதியிலுள்ள கடினவயல் கிராமத்தினர் ஆர்த்தெழுந்தனர். நூற்றுக்கணக்கில் திரண்டு நச்சு ஆலையின் உள்ளே நுழைந்து ஆலையை இயங்கவிடாமல் தடுத்தனர். போராடிய விவசாயிகள் வன்முறையில் இறங்கியதாக பெண்கள் உள்பட 69 பேர்களை பிணையில் விடமுடியாத பொய் வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது, போலீசு.
அரசு எந்திரத்தின் அடக்குமுறைக்கும் போலீசின் பொய்வழக்குகளுக்கும் பணிய மறுத்த விவசாயிகள் போர்க் குணத்தோடு மீண்டும் போராட்டங்களில் அணிதிரளுகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்போது, ஐ.என்.டி.யு.சி உப்பு உற்பத்தியாளர் சங்கமும் களத்தில் இறங்கியுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக, இப்பகுதியின் ஒன்றிய தலைவரான பி.வி. குழந்தைவேல் அவர்களும் போராட்டக் களத்தில் நிற்கின்றார்.
நிலத்தடி நீரை உறிஞ்சி, நச்சுக்கழிவுகளை வெளியேற்றி கேரளத்தின் பிளாச்சிமடா பகுதியையே சுடுகாடாக்கிய கொக்கோ கோலா நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுத்த பிளாச்சிமடா கிராமத்தின் பஞ்சாயத்து தீர்ப்பை ஏற்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்து, ""கோக்''கிற்கு மீண்டும் உரிமம் வழங்கியது கேரள உயர்நீதி மன்றம். தமிழகத்தில் நீதிமன்றம் அல்ல, போலீசின் குண்டாந்தடியே தீர்ப்பு எழுதுகிறது.
எனவேதான், ஜி.எச்.சி.எல். நச்சு ஆலை எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து இயங்குகிறது. ஆலையை இழுத்து மூடக்கோரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே இறுதி தீர்ப்பாக அமையும்.
பு.ஜ. செய்தியாளர் உதவியுடன்
பச்சையப்பன்