சமூகம் கல்வி, அரசியல்பொருளாதாரம் ஆகிய பலவகைகளிலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை நடத்தவேண்டிய களம் தேர்தல்களோ, நாடாளுமன்றம் சட்டமன்றங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. அவற்றுக்கு வெளியே எழுச்சிக் களங்களை உருவாக்க வேண்டும். இந்த உண்மையை தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்தை செல்லாது என்று தீர்ப்புக் கூறியதன் மூலம் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் ஆகிய விவகாரங்கள் தொழிற்
தகராறுகளில் மட்டுமல்ல, குறிப்பாக, இட ஒதுக்கீடு, தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கான பல்வேறு வழக்குகளிலும் ஆளும் வர்க்கங்கள், பன்னாட்டுத் தொழில் கழகங்கள், மேல்சாதிமேட்டுக்குடி நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே நீதிமன்றத் தீர்ப்புகள் அமைகின்றன.
இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்த அதே மேல்சாதி மேட்டுக்குடியினர், அதே ""தகுதி, தரம், திறமை'' ஆகிய காரணங்களை முன்வைத்து, இப்போது தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்தையும் கடுமையாக எதிர்க்கின்றனர். நீதிமன்றமோ, அதற்குச் சட்டபூர்வ நியாயங்கற்பித்துள்ளது. ஒரு மாநிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வித் திட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் ஃ கல்லூரிகள் இருந்தால் (அதாவது தமிழ்நாட்டில் ""மாநிலம்'', ""சி.பி.எஸ்.சி.'' மற்றும் ""ஐ.எஸ்.சி'' ஆகிய மூன்று வகை பாடத்திட்டங்களும் தேர்வுகளும் மதிப்பெண் முறைகளும் உள்ளன). ""சமநிலையை ஏற்படுத்த'' பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, தொழிற்கல்விக்கான மாணவர்களின் தரவரிசையை நிர்ணயிக்க வேண்டும்; அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். இவை இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை உருவாக்கியுள்ள விதிமுறைகளில் அடங்கியவை. இவை அரசியல் சட்டம் 14வது பிரிவின்படி ""சமத்துவ அடிப்படையிலான'' விதிமுறையாகவும் சட்டமாகவும் 1997ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டன. இச்சட்டத்தை நியாயப்படுத்தி உச்சநீதி மன்றமும் சில தீர்ப்புகள் வழங்கியுள்ளது. இச்சட்டத்துக்கு விரோதமாக தமிழக அரசு ஒரு உத்திரவு போட்டு, நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிவிட்டது.
வௌ;வேறு கல்விபாடத் திட்டங்கள், வௌ;வேறு தேர்வு ஆணையங்கள் தேர்வு முறைகள் மதிப்பீடுகள் பெற்று வரும் மாணவர்களிடையே தரத்தில் சமநிலை சமத்துவமான வாய்ப்புகளை ஏற்படுத்தவே பொது நுழைவுத் தேர்வு வந்தது என்பதே உண்மையல்ல் அது ஒரு பித்தலாட்டமாகும். இந்த வேறுபாடுகள் எல்லாமே நகர்ப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையே நிலவும் வசதிவாய்ப்புகள், மேல்சாதிமேட்டுக்குடிக்கும் ஒடுக்கப்பட்ட சாதி ஏழை, எளிய மக்களுக்கும் இடையே சமூகத்தில் நிலவும் சமநிலையின்மை அசமத்துவம் ஆகியவற்றுக்கேற்ப ஏற்படுத்தப்பட்டவைதான். கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததைப் போல, இந்நிலையை மேலும் உறுதிப்படுத்துவதுதான் பொது நுழைவுத் தேர்வு முறை. அதாவது, நகர்ப்புற மற்றும் மேல்சாதி மேட்டுக்குடியினருக்காக ஏற்படுத்தப்பட்டவைதாம் ஆங்கில வழிக் கல்வியும், சி.பி.எஸ்.சி. மற்றும் ஐ.எஸ்.சி. பாடத்திட்டங்களும் ஆகும்; கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிஏழை, எளிய உழைக்கும் மக்களுக்காக இருப்பவைதாம் தமிழ் வழிக் கல்வியும் அரசு பாடத் திட்டக் கல்வியும் என்பதில் சந்தேகமில்லை.
சி.பி.எஸ்.சி. மற்றும் ஐ.எஸ்.சி. பள்ளிகளுக்கு நன்கொடை, கல்விக் கட்டணங்கள், சிறப்புப் பயிற்சிகள் உட்பட ஆண்டுக்குப் பல ஆயிரம் ரூபாய் அளவு செலவிடப்படுகிறது. இது தவிர, அதே காலத்தில் பொது நுழைவுத் தேர்வுக்காக இரண்டு ஆண்டுகள் வரை தனிப் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள், பயிற்சி நூல்கள் ஆகிய வகைகளில் இலட்சக்கணக்கில் செலவிடப்படுகிறது. இவற்றை கிராமப்புற, ஒடுக்கப்பட்ட சாதிஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் கனவிலும் அடையவே முடியாது என்பதை அறிந்தும், நீதிமன்றங்களும் மேல்சாதிமேட்டுக்குடி அறிவுஜீவிகளும், பொதுவில் அரசியல்வாதிகளும் அப்பாவிப் பெற்றோர்கள் மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாக ஒப்பாரி வைக்கிறார்கள்.
ஒருபுறம், வாய்ப்பு வசதிகள் நிரம்பி வழியும் வாழ்க்கை கல்வி சமூகப் பின்னணி கொண்ட மாணவர்கள்; மறுபுறம், இவையெல்லாம் மறுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் இப்படி சம வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமநிலையற்ற பின்னணி கொண்ட இரு வேறு பிரிவு மாணவர்களுக்கு ஒரே பொதுப் போட்டி, தேர்வு வைத்து அவர்களின் தகுதி, தரம், திறமையைத் தீர்மானிப்பது எந்த விதத்தில் நீதியானதாகும்? இது எப்படி சமநிலையை ஏற்படுத்தக் கூடியது, சமத்துவ அடிப்படையிலானது?
ஆகவே, பொதுவில் சமூக சாதி ரீதியிலான இடஒதுக்கீடு, கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, விதவைப் பெண்கள் மொழிப் போர் தியாகிகளுக்கான இடஒதுக்கீடு போன்றவற்றுக்கு எதிரான நிலை எடுத்திருக்கும் நீதித்துறை மேற்கண்ட உண்மைகளை அறிந்தே தமது சாதிவர்க்க நலன்களுக்காகவே நுழைவுத் தேர்வு ரத்துக்கு எதிரான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இவை ஒருபுறம் இருக்க, தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு என்பதே கேலிக்கூத்தாக உள்ளது. நுழைவுத் தேர்வு வைக்கவேண்டும் என்று சட்டமும் விதிமுறையும் பொதுவில் கூறுகிறதே தவிர, அதற்கான கல்வி வரையறையோ, அதிகார வரையறையோ எதுவும் கிடையாது. ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழம், அண்ணாமலை மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள்; புற்றீசல்கள் போல பெருகியுள்ள தனியார்சுயநிதி கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வுகள் என்று குறைந்தது பத்துத் தேர்வுகளாவது நடத்தப்படுகின்றன.
இவை தவிர, தனியார்சுயநிதிக் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இடஒதுக்கீடுக்கு எந்த அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்கிற குழப்பமும் தீர்க்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், சுயநிதிக் கல்லூரிகளும் +2 இறுதித் தேர்வு முடிந்தவுடன் இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வுகளையும் பற்றி அக்கறையின்றி மாணவர் சேர்க்கைகளை இரகசியமாக செய்து வருகின்றன.
இவ்வாறு ஒடுக்கப்பட்ட சாதி கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கான வாய்ப்புகள் பலவழிகளிலும் மேல்சாதி மேட்டுக்குடியினரால் பறித்துக் கொள்ளப்படும் அதேவேளையில், சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவை பற்றி வாய்ச்சவடால் அடிக்கும் ஜெயலலிதா, கருணாநிதி, இராமதாசு, வைகோ போன்றவர்களோ, அவர்களின் முதுகில் குத்தித் துரோகமிழைக்கின்றனர். நுழைவுத் தேர்வை உரிய காலத்திலும் சட்டப்படியும் ரத்து செய்வதற்குப் பதிலாக, ஜெயலலிதா அரசு வெறுமனே ஒரு உத்தரவு போட்டு நாடகமாடுகிறது.
இதுவரை எல்லா வகையிலும் கிராமப்புற ஒடுக்கப்பட்ட சாதி, ஏழை எளிய மக்களுக்கு எதிரான பிற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஜெயலலிதா அரசு, தேர்தல்கள் நெருங்கும் போது சில சலுகைகளைக் காட்டி ஏமாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக நுழைவுத் தேர்வு ரத்து முடிவை எடுத்துள்ளது. அவரது ""உடன்கட்டைப் புரட்சித் தலைவர்'' எம்.ஜி.ஆர்.தான் இந்த நுழைவுத் தேர்வு முறையையே முதன்முதலில் இங்கு கொண்டு வந்தவர். சுயநிதிக் கல்லூரிகள் என்ற பெயரில் கல்விக் கொள்ளைக்கான கதவுகளைத் திறந்து விட்டவர்.
நுழைவுத் தேர்வு முறைக்கு எதிராக இன்று குதியாட்டம் போடும் இராமதாசு, வைகோ மற்றும் ஜெயலலிதா கட்சிகள் மத்திய அரசில் பங்கேற்றிருந்த சமயத்தில்தான் நுழைவுத்தேர்வு முறை சட்டமாக்கப்பட்டது. நுழைவுத் தேர்வுமுறையை புகுத்துவதற்கான முயற்சி 1970களில் கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே தொடங்கி, அப்போதே ஈ.வெ.ரா. பெரியார் அதை எதிர்த்திருக்கிறார்.
தனியார் சுயநிதிக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பகற்கொள்ளையும், அரசே மேற்கொண்டுள்ள கல்விக் கட்டண அதிகரிப்புகளும் காரணமாக ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் கிராமப்புற ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பிள்ளைகள் தவறிப் போய் தொழிற்கல்விக் கல்லூரிகளில் சேர்வதற்கு வாய்ப்புக் கிட்டினாலும் தொடர்ந்து படிப்பதற்கான பொருளாதார வசதி கிடையாது. தகுந்த புரவலர்களைத் தேடி அலைய வேண்டியுள்ளது. இவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே கைவிடுவதோடு, சில சமயம் தற்கொலைக்குக் கூடத் தள்ளப்படுகிறார்கள்.
இராமதாசு போன்றவர்கள் மட்டுமல்ல கல்விக் கொள்ளையர்களின் தலைவர் ஜே.பி.ஆரும் நுழைவுத் தேர்வு ரத்தை தீவிரமாக ஆதரிப்பது, தனியார் தொழிற்கல்வி நிறுவனங்கள் வரைமுறையின்றி மாணவர் சேர்ப்புக்கு வசதியாக செய்யப்படும் ஒரு கண்துடைப்பு சீர்திருத்தம்தான் என்பதை நிரூபிக்கிறது.
வௌ;வேறு பாடத்திட்டங்களை ஒழித்து ஒரே பொதுப் பாடத்திட்டம், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை ஒழித்து அரசே கல்வி நிறுவனங்களை நடத்துவது, அவையும் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய உழைக்கும் மக்களின் பிள்ளைகள் நுழைவதற்கு தடையின்றி அமைப்பது போன்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடுவதை விட்டு, சில தற்காலிகத் தீர்வுகளைக் காண விழைவது எந்த வகையிலும் பயனளிக்காது!