Language Selection

08_2005.jpgஅரசு விடுமுறை நாட்களில்கூட தொழிலாளிக்கு விடுப்பு கிடையாது; முன்அனுமதியுடன்கூட தொழிலாளி விடுப்பு எடுக்க முடியாது.

 

சம்பள உயர்வு கிடையாது; பஞ்சப்படியும் கிடையாது.

 

தொழிலாளர்கள் சங்கம் கட்ட முயற்சித்தால், தற்காலிகப் பணி நீக்கம்; வெளிமாநிலக் கிளைகளுக்கு மாற்றம்.

 

போராடிய தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு.

 

தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சங்க சட்டங்கள் குப்பைக் கூடையில்.

 

- இவையெல்லாம் ஆந்திரா கர்நாடகாவில் கூலி விவசாயிகளைக் கொத்தடிமைகளாக நடத்தும் செங்கற்சூளைகளில் பின்பற்றப்படும் விதிகள் அல்ல. இந்தியாவின் மிகப்பெரிய தரகு முதலாளித்துவ நிறுவனங்களுள் ஒன்றான சிறீராம் ஃபைபர்ஸ் (குகீஊ) நிறுனத்தில் தொடரும் சட்டவிரோத கொத்தடிமைத்தனங்கள்.

 

சிறீராம் ஃபைபர்ஸ் நிறுவனம் சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியில் தனது கிளை நிறுவனத்தைத் தொடங்கி நைலான் இழைகளை உற்பத்தி செய்கிறது. இந்த ஆலையில் 160 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். சட்டப்படியான உரிமைகளை மறுத்து தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி மாட்டைப் போல வேலை வாங்கி வந்த இக்கிளையில், வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களின் முன்முயற்சியால் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் எஸ்.ஆர்.எஃப் புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் எனும் புதிய தொழிற்சங்கம் 3.4.05இல் தொடங்கப்பட்டது.

 

இக்கொத்தடிமை நிறுவனம், அரசு விடுமுறை நாளான தொழிலாளர் தினமான மே முதல் நாளன்று வேலைக்கு வராத தொழிலாளர்கள் 44 பேருக்கு ""மெமோ'' கொடுத்துள்ளதை எதிர்த்தும், ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் கூடாது என்ற சட்டத்தையும் மீறி 23 ஷிப்டுகள் தொடர்ந்து வேலை செய்யுமாறு தொழிலாளர்களை நிர்ப்பந்திப்பதை எதிர்த்தும், தொடர்ந்து பல ஆண்டுகளாக சம்பள உயர்வு பஞ்சப்படி வழங்காமலும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து தராமலும் ஏய்ப்பதை எதிர்த்தும் எஸ்.ஆர்.எஃப். பு.ஜ.தொ.சங்கம் தொடர்ந்து போராடியது. தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்பு இத்தொழிற் தாவாவை முன்வைத்தும் கூட, ஆணையர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த வராமல் நிர்வாகம் அலட்சியப்படுத்தியது. மறுபுறம், தொழிற்சங்க முன்னோடிகளை சட்ட விரோத வழிகளில் பழிவாங்கி வருகிறது.

 

கடந்த சில மாதங்களில், சங்கம் கட்டிய "குற்ற'த்திற்காக 5 தொழிலாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 11 தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் பிரிவுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். 14 தொழிலாளர்கள் "பயிற்சி' என்ற பெயரில் ஆந்திராவிலுள்ள என்.டி.டி.இ. பயிற்சி மையத்துக்கு விரட்டப்பட்டுள்ளனர். 9 தொழிலாளர்கள் போபாலில் உள்ள பயிற்சி மையத்துக்கு இதேபோல துரத்தப்பட்டுள்ளனர். சங்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள தொழிலாளர்களை கேரளா, ராஜஸ்தான் என பிற மாநிலங்களுக்கு அவசர வேலையாக அடிக்கடி அனுப்புவதோடு, ஆலைக்குள் வரவேண்டாம்; சம்பளம் கொடுத்து விடுகிறோம் என்று 4 முன்னணியாளர்களை வெளியிலேயே வைத்துள்ளது நிர்வாகம். நிர்வாகத்தின் சட்டவிரோத பழிவாங்கும் போக்கை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

 

சிறீராம் நிறுவனத்தின் பழிவாங்கும் போக்கை எதிர்த்தும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் கும்மிடிப்பூண்டியில் 22.5.05 அன்று பு.ஜ.தொ.மு. எழுச்சிமிகு பேரணியையும் பொதுக் கூட்டம் கலை நிகழ்ச்சியையும் நடத்தியது. குடும்பம் குடும்பமாக தொழிலாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற ஊர்வலமும் பொதுக் கூட்டமும் இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களால் பெருத்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது.

 

இதற்கிடையே, குவாலியருக்கு மாற்றப்பட்ட தொழிலாளர்கள், அந்த யூனிட்டில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் உண்மை நிலையை விளக்கி ஒன்றுபட்டுப் போராட அறைகூவல் விடுத்தனர். குவாலியரிலுள்ள சிறீராம் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இருமுறை பொதுக்குழுவைக் கூட்டி இதுபற்றி விவாதித்துள்ளனர். இதையறிந்து பீதியடைந்த நிர்வாகம், கும்மிடிப்பூண்டி தொழிலாளர்களை குவாலியர் சங்கத்தில் சேர்த்து விடாதீர்கள்; மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கே அவர்களை அனுப்பி விடுகிறோம் என்று அங்குள்ள சங்க நிர்வாகிகளிடம் பேரம் பேசிவருகிறது. ஆனால், பு.ஜ.தொ.சங்கத்தின் முன்முயற்சியால், சிறீராம் நிறுவனத்தின் பிற கிளைகளான குவாலியர் (ம.பி.), மணலி (சென்னை), விராலிமலை (திருச்சி) ஆகியவற்றின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடுவதற்கான கூட்டமைப்பை கட்டியமைக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இவற்றைக் கண்டு அரண்டு போயுள்ள டெல்லியிலுள்ள இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பு.ஜ.தொ.சங்கத்தின் தலைமையிடம் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

 

பு.ஜ.தொ.ச.வின் சமரசமற்ற போராட்டமும் போர்க்குணமும் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. மிகப் பெரிய தரகு முதலாளிக்கு எதிராக பு.ஜ.தொ.மு. நடத்தி வரும் போராட்டம், சிறீராம் நிறுவனத்தின் கிளைகள் எங்கும் எதிரொலித்து வருகிறது. தொழிலாளி வர்க்கம் தோற்றதாக வரலாறு இல்லை.

 

தகவல்:
- எஸ்.ஆர்.எஃப். புதிய
ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்,
கும்மிடிப்பூண்டி.