Language Selection

புதிய ஜனநாயகம் 2005

08_2005.jpg"நாலு எழுத்துப் படிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வேலை திணிக்கப்படுகிறது.''

 

""சாமி கும்பிடுவதற்காகக் கோவிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞர், மேல்சாதி வெறியர்களால் அடித்தே கொல்லப்படுகிறார்.''

 

""இரட்டை குவளை முறையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட சிறுவன் சிறைக்குள் தள்ளப்படுகிறான்.''

 

"சமூக நீதி'யின் பிறப்பிடம் எனத் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட சமூக அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் எவ்விதத் தடையுமின்றி நடந்து வருகின்றன.

 

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகே அமைந்துள்ள கிராமம் பன்னாங்கொம்பு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் தான் தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கழிப்பறையைக் கழுவ வைத்து, பிஞ்சு மனங்களிலே தீண்டாமையையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பதிய வைத்திருக்கிறார்கள், ஆசிரியப் பெருமக்கள்.

 

பள்ளியையும், வகுப்பறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக சுகாதாரக் கமிட்டியை அமைத்து, அக்கமிட்டியில் பல்வேறு சாதிகளைச் சேர்த்த தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, கழிப்பறையைக் கழுவி சுத்தம் செய்யும் வேலையை மட்டும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீது சுமத்தி, தீண்டாமையை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார். தனலெட்சுமி என்ற ஆசிரியை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கழிப்பறையை ஒழுங்காகச் சுத்தம் செய்கிறார்களா என்பதைக் கண்காணித்து வந்திருக்கிறார். தலைமையாசிரியரின் உத்தரவுப்படி நடந்து வந்த இந்த "வேலைப் பிரிவினை'யை மற்ற ஆசிரியர்கள், கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வந்திருக்கிறார்கள்.

 

""தினசரி மதியம் ரெண்டு மணிக்குத்தான் சுத்தம் பண்ணுவோம். வாளி நிறைய தண்ணீர் எடுத்துட்டுப் போய் விளக்குமாறால சுத்தமா கழுவணும். டீச்சர் வந்து பார்ப்பாங்க. கழுவினது அவங்களுக்கு சரியாத் தெரியலைனா, அன்னிக்கு நாங்க கிளாஸ{க்குப் போக முடியாது. முழுசுமே கக்கூஸ்தான் கழுவிக்கிட்டிருக்கணும்'' என இவ்வன்கொடுமையை விளக்குகிறான், இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சிறுவன்.

 

சனி, ஞாயிறு போன்ற பள்ளி விடுமுறை நாட்களில் கூட, இவ்""வேலை''யைச் செய்வதில் இருந்து தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தப்பித்து விட முடியாது. இது மட்டுமின்றி, ""இப்பள்ளி வகுப்புகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களையும், பிற மேல்சாதி மாணவர்களையும் தனித்தனியாகப் பிரித்துதான் உட்கார வைப்பார்கள்'' எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், பன்னாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாகி அப்பள்ளியில் நடந்து வந்த இத்தீண்டாமைக் கொடுமை பத்திரிகைகளின் வழியே வெளியே கசிந்த பின்னர்தான், திருச்சி மாவட்ட ஆட்சியாளர் விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டுபிடித்து, தலைமையாசிரியர் ஆரோக்கியசாமியையும், தனலெட்சுமி டீச்சரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்திருக்கிறார். ஆனாலும், அவர்கள் இருவரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

 

***

 

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகேயுள்ள குருவம்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் சங்கர். புத்தனாம்பட்டியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் சாதியினருக்குச் சொந்தமான கல்லடி கருப்புசாமி கோவில் திருவிழாவின்போது, மேல்சாதி வெறியர்களால் சங்கர் அடித்தே கொல்லப்பட்டார்.

 

சம்பவம் நடந்த அன்று, தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கரியமாணிக்கத்துக்குக் கிளம்பிப் போன சங்கர், போகும் வழியில் உள்ள கல்லடி கருப்பசாமி கோயில் திருவிழாவைப் பார்த்தவுடன் சாமி கும்பிடுவதற்காக அக்கோவிலுக்குள் சென்றிருக்கிறார். அடிக்கடி "சாமி' வந்து "அருள்வாக்கு' சொல்லும் சங்கருக்கு, கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே "சாமி' வந்துவிட்டது.

 

அக்கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த மேல்சாதியினர், சங்கருக்கு சாமி மலையேறியவுடனேயே, "யாரு எவரு'னு விசாரித்துள்ளனர். சங்கர், ""நான் குருவம்பட்டி சேரித் தெருன்னு'' சொன்னவுடனேயே, ஆதிக்கசாதி வெறியர்கள், ""சேரிப்பய கோவிலுக்குள்ள நுழைஞ்சதால கோவிலுக்குத் தீட்டுப் பட்டுருச்சு... அவனக் கட்டி வெச்சு உதைங்கடா''னு சொல்லிட்டு சங்கரை ஒரு வேப்பமரத்துல கட்டிப் போட்டு, ஆளாளுக்கு விறகுக் கட்டையால் தாக்கியும், காலால் மிதித்தும், அவரைக் கதற கதற அடித்தே கொன்று விட்டனர்.

 

""கோவிலுக்குள் நுழைந்து வேலைத் திருட முயன்ற சங்கரைப் பிடித்து, நாலு தட்டு தட்டி விசாரித்தபொழுது, சங்கர் எதிர்பாராத விதமாகச் செத்துப் போய்விட்டதாக'' ஒரு கட்டுக் கதையை ஆதிக்கசாதி வெறியர்கள் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் சாதிவெறியால் நடந்த இப்படுகொலையை, "திருட்டைத் தடுக்க முயன்ற பொது மக்களின் கோபமாக'ப் பூசிமெழுகிவிட முயலுகின்றனர்.

 

கடந்த ஆறேழு ஆண்டுகளாக பெங்களூரில் கொத்தனார் வேலை பார்த்துவரும் சங்கருக்குத் திருடிப் பிழைக்க வேண்டிய அவசியமே கிடையாது. மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதற்கும் மேலாக, பட்டப் பகலில் கோவிலுக்குள் பல நூறு பேர் இருக்கும் பொழுது, எந்தவொரு திருடனும், நூறு ரூபாய் கூடப் பெறாத வேலைத் திருடி, தானே மாட்டிக் கொள்ளத் துணிய மாட்டான்.

 

இப்படி குறுக்கு கேள்விகள் கேட்டு உண்மையைக் கண்டுபிடிக்காத போலீசு, ஆதிக்கசாதி வெறியர்கள் சங்கர் பற்றி அவிழ்த்துவிடும் பொய்யையும், அவதூறையுமே முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்து, இவ்வன்கொடுமையை மூடி மறைத்து சாதிவெறியர்களைக் காப்பாற்றிவிட ஒத்துழைக்கிறது.

 

****

 

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களில், திருத்தலைகிரியும் ஒன்று. ""இந்த ஊரில் உள்ள தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருப்பதோடு, இங்குள்ள உணவகங்களில் தாழ்த்தப்பட்டோர் உட்கார்ந்து உணவருந்த முடியாது; முடித்திருத்தகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முகம் மழிக்க மாட்டார்கள்'' எனத் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிறது.

 

இவ்வூரைச் சேர்ந்த 17 வயதான கஞ்சமலையான் என்ற தாழ்த்த்ப்பட்ட சிறுவன், விஷ்ணு காபி பார் என்ற கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தனிக் குவளையில் தேநீர் தரும் தீண்டாமையை எதிர்த்து நியாயம் கேட்டான். இதனால் ஆத்திரமடைந்த அக்கடையின் உரிமையாளர் மாணிக்கம் மற்றும் பாண்டியன், ஆறுமுகம், வெங்கடாசலம் ஆகியோர் அச்சிறுவனைக் கொலைவெறியோடு தாக்கியதோடு, அச்சிறுவன் தங்களைக் கொலை செய்ய முயன்றதாகப் பொய்ப் புகாரும் கொடுத்தனர். இப்புகாரின் அடிப்படையில், கஞ்சமலையான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து, அச்சிறுவனை சேலம் மத்திய சிறையில் அடைத்தது போலீசு.

 

கஞ்சமலையான் 18 வயது நிரம்பாத சிறுவன். அவனது கல்விச் சான்றிதழின் அடிப்படையில், கஞ்சமலையானுக்கு 17 வயது 9 மாதமே ஆகிறது. எனவே, ""அச்சிறுவனை மத்திய சிறைச் சாலையில் அடைத்தது சட்டப்படி செல்லாது; மனித உரிமை மீறல்'' என வழக்குத் தொடுத்ததன் அடிப்படையில், கஞ்சமலையான் சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்றப்பட்டான்.

 

எனினும், சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி மாலதி, அச்சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, கஞ்சமலையானுக்கு 19 அல்லது 20 வயது இருக்கலாம் என மருத்துவர்கள் கொடுத்த சான்றிதழ் அடிப்படையில், அச்சிறுவனை மீண்டும் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் கஞ்சமலையானின் தந்தை சேலம் மாவட்டத்தில் நிலவும் இரட்டை டம்ளர் தீண்டாமையைக் குறிப்பிட்டு, கஞ்சமலையானை பொய் வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதி மன்ற நீதிபதிகள், இரட்டை டம்ளர் முறை குறித்து அறிக்கை தரும்படி சேலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். இதற்கு, சேலம் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராக இருந்த பொன்.மாணிக்கவேல், ""சேலத்தில் இரட்டை டம்ளர், அரைடம்ளர், கால் டம்ளர் என எதுவும் இல்லை'' எனத் திமிரோடு பதில் கூறினார்.

 

விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, ""தலித் உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு'' என்ற முன்னணியை உருவாக்கி, இரட்டை டம்ளர் முறையை அம்பலப்படுத்தியும், அதற்கு எதிராகப் போராடிய கஞ்சமலையானை விடுவிக்கக்கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகுதான், அச்சிறுவனைத் தாக்கிய ஆதிக்கசாதி வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அக்குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க போலீசு முயலவேயில்லை. அதேசமயம், தீண்டாமையை எதிர்த்துப் போராடியதற்காக பிப்ரவரி 2005இல் சிறையில் அடைக்கப்பட்ட சிறுவன் கஞ்சமலையானுக்கு, பத்திரிகை செய்திகளின்படி ஏப்ரல் 2005 முடிய பிணைகூட கிடைக்கவில்லை.

 

***

 

தமிழகம் ஆதிக்கசாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக இருக்கிறது என்பதைப் புட்டு வைக்கும் உதாரணங்கள்தான் இந்தச் சம்பவங்கள். ஆனால், ""தீண்டாமையை முற்றிலும் ஒழித்துவிடும் பாதையை நோக்கித் தமிழகம் சென்று கொண்டிருப்பதாக'' சட்டமன்றத்திலேயே புளுகியிருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எஸ். கருப்பசாமி, இதற்கு ஆதாரமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைவான அளவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

 

தாழ்த்தப்பட்டோர் மீது வன்கொடுமையை ஏவிவிடும் ஆதிக்கசாதி பெரிய மனிதர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றால், அவர்களால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் அதற்குத் தங்களின் உயிரையே விலையாகத் தர வேண்டியிருக்கிறது.

 

கோவைக்கு அருகிலுள்ள நாகமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சம்பத், தனக்குத் தரவேண்டிய பணத்தையும் தராமல், தன்னைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய ""கல்யாண் டெக்ஸ்டைல்ஸ்'' அதிபர் சண்முகம் உள்ளிட்ட 6 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, 26.4.2005 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சாவுக்குப் பிறகும்கூட, கவுண்டர் சாதியைச் சேர்ந்த சண்முகத்தின் மீது கொலைமிரட்டல் வழக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுண்டர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு, சம்பத் கொடுத்த புகாரை, அவரை மிரட்டி திரும்பப் பெற்றுக் கொள்ள செய்த காவல்துறை ஆய்வாளர் மீது எந்தச் சட்டமும் பாயவில்லை.

 

அரசு ஆதிக்கசாதி வெறியர்களுக்கு ஆதரவாக மட்டும் நடந்து கொள்ளவில்லை; அரசே மனுதர்மத்தின்படி தீண்டாமையைக் கடைப்பிடித்து வருகிறது என்பதை கடந்த மாதம் நடந்த கண்டதேவி சொர்ணமூர்த்தி ஈஸ்வரர் கோவில் தேரோட்டம் பச்சையாக அம்பப்படுத்தி விட்டது.

 

கண்டதேவி கிராமத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான போலீசைக் குவித்துத் தாழ்த்தப்பட்ட மக்களை பீதியூட்டி; அதையும் மீறி தேரோட்டத்தில் கலந்து கொள்ள முயன்ற தாழ்த்தப்பட்ட மக்களைச் சட்டவிரோதக் காவலில் அடைத்து; போலீசு பாதுகாப்போடு நாட்டார்களைத் தேரிழுக்க வைத்து, தீண்டாமையைக் காப்பாற்றியிருக்கிறது, பார்ப்பன ஜெயா அரசு. வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய தாழ்த்தப்பட்ட மக்களை, தலித் அமைப்புகளின் தலைவர்களை தீய சக்திகள் எனக் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார், சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் ஆனந்த் பாட்டில்.

 

நியாயமாகப் பார்த்தால், போலீசு துறையைத் தன் கையில் வைத்திருக்கும் ஜெயா தொடங்கி, கண்டதேவியில் காவலுக்கு நின்ற போலீசுக்காரன் வரை அனைவரின் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தச் சாதிவெறி பிடித்த அதிகார வர்க்கத்தின் மீது மிகச் சாதாரண நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கூடத் தொடரப்படவில்லை. உயர்நீதி மன்றமும், போலீசும் ""நீ அடிக்கிற மாதிரி அடி; நான் அழுகிற மாதிரி அழுகிறேன்'' என்ற பாணியில் நடந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டன.

 

கடந்த ஆண்டு நடந்த கண்டதேவி கோவில் தேரோட்டத்தின் பொழுது, 10 தாழ்த்தப்பட்டவர்கள் தேரிழுப்பதில் கலந்து கொண்டார்களாம். இந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அளித்த முற்போக்கான தீர்ப்புக்குப் பிறகு, தேரோட்டத்தில் 26 தாழ்த்தப்பட்டோர் கலந்து கொண்டார்களாம். இந்த "முன்னேற்றத்தின்'படி பார்த்தால், கண்டதேவியைச் சுற்றிலும் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் தேரோட்டத்தில் கலந்து கொள்ள இன்னும் எத்தனை முற்போக்கு தீர்ப்புக்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும்?

 

முற்போக்கான தீர்ப்புகள், அதை நடைமுறைப்படுத்தக் கூடிய நியாயமான அதிகாரிகள் என்ற அரசு இயந்திரத்தின் உறுப்புகள் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்பதெல்லாம் மாயை என்பதைத்தான் கண்டதேவி தேரோட்டப் பிரச்சினை எடுத்துக் காட்டியிருக்கிறது. சட்டம், நீதிமன்றம், அதிகார வர்க்கம் என இவை அனைத்துமே தாழ்த்தப்பட்டவர்களை நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கும் பொழுது, அவர்கள் தங்களின் சமூக உரிமைகளுக்காக, சட்ட வரம்புகளை மீறி, தெருப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதுதான் கண்டதேவி தேரோட்டப் பிரச்சினையும், ஒவ்வொரு தீண்டாமைக் கொடுமையும் எடுத்துக் காட்டும் பாடம்!

 

ரஹீம்