Language Selection

புதிய ஜனநாயகம் 2005

08_2005.jpgஉ.பி. மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்தினுள் அமைந்துள்ள ராமர் கோவிலின் மீது கடந்த ஜூலை மாதம் ஆம் தேதி நடந்த தாக்குதலின் பொழுது ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் தவிர சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் சாமி கும்பிட வந்த பெண் ஒருவரும் இத்தாக்குதலின்பொழுது இறந்து போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் என அழைக்கப்படும் அந்தக் கூடாரத்திற்கு சேதம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லையென்றாலும் முசுலீம் தீவிரவாதத்தை எதிர்த்துக் கூச்சல் போடும் அனைவரையும் இத்தாக்குதல் உலுக்கிப் போட்டிருக்கும்.

 

மற்ற கோவில்களில் ""விசுக்கென்று நுழைவதைப் போல பாபர் மசூதி வளாகத்தினுள் உள்ள ராமர் கோவிலுக்குள் மேல்சாதியினர் கூட எளிதாக நுழைந்துவிட முடியாது. மைய அரசும் உ.பி. மாநில அரசும் மூன்று அடுக்கு பாதுகாப்பை இக்கோயிலுக்கு வழங்கியிருக்கின்றன.

 

சிவப்பு வளையம் என அழைக்கப்படும் ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி மைய அரசின் ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த போலீசார் மற்றும் விரைவு அதிரடிப்படையைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய்களால் பாதுகாக்கப்படுகிறது

 

மஞ்சள் வளையம் என அழைக்கப்படும் கோயிலை அடுத்துள்ள பகுதி உ.பி. மாநில அரசின் பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசாரால் பாதுகாக்கப்படுகிறது.

 

பச்சை வளையம் என அழைக்கப்படும் வெளிப்புறப் பகுதி உ.பி. மாநில போலீசால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பாபர் மசூதி வளாகம் முழுவதையும் கண்காணிப்பதற்காக கோபுரங்களும் நிறுவப்பட்டுள்ளன.

 

இத்துணை பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்த ஐந்து தீவிரவாதிகளுக்கும் ஆயுதப் படையினருக்கும் இடையே ஒன்றரை மணி நேர துப்பாக்கிச் சண்டை நடந்திருப்பதோடு ராமர் கோயில் கருவறைக்கு அடி தூரத்தில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ஆனால் பா.ஜ.க.வோ குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ""ராமர் கோவிலுக்குப் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது அதனால்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்துவிட்டதாகப் புலம்புகிறது. இன்னும் சொல்லப்போனால் மைய மாநில அரசின் புலனாய்வுப் பிரிவுகள் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இத்தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூட இன்னும் ஆதாரபூர்வமாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட "தீவிரவாதிகள் சுன்னத் செய்திருப்பதால் முசுலீம்கள் என்றும் தாக்குதலுக்குப் பின் கண்டு எடுக்கப்பட்ட செல்போனை வைத்துக் கொண்டு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கர்இதொய்பா தான் இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் யூகங்களையே ஆதாரங்களாகப் புலனாய்வு அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.

 

இத்தாக்குதல் மூலம் இந்து முசுலீம் மதக் கலவரத்தைத் தூண்டி விடுவதுதான் தீவிரவாதிகளின் நோக்கம் என காங்கிரசு சி.பி.எம். உள்ளிட்ட "தேசியக் கட்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் நிறைவேறாமல் போன அவர்களின் "நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை இத்தாக்குதலின் பின்னே பா.ஜ.க. கையில் எடுத்துக் கொண்டது. இன்னும் சொல்லப் போனால் இப்படியொரு தீவிரவாத சம்பவம் நடைபெறாதா என அக்கட்சி எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது என்பதுதான் உண்மை.

 

இதற்கு நிரூபணம் வேண்டும் என்றால் இத்தாக்குதல் நடந்தவுடனேயே ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட அறிக்கையைப் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னே கட்சிக்குள் நிலவி வரும் தேக்கநிலை ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளுக்குள் கொள்கை மோதல் என்ற பெயரில் நடந்து வந்த கோஷ்டி சண்டை இவை எல்லாவற்றையுமே இத்தாக்குதல் தீர்த்து வைக்கும் காரணியாகி விட்டது என்றது ஆர்.எஸ்.எஸ்.

 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்தான் எனது வாழ்க்கையில் மிகவும் வேதனைக்குரிய நாள் என பாகிஸ்தானில் முதலைக் கண்ணீர் விட்ட அத்வானி தாக்குதல் நடந்து முடிந்தவுடனேயே ராமர் கோவிலை அதே இடத்தில் (பாபர் மசூதி வளாகத்தினுள்) கட்டுவோம் எனக் கூறி தனது இந்து மதவெறி விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார். பா.ஜ.க. இத்தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் எனக் கூறி தனது வானரப் படைகளை உசுப்பேற்றி விட்டது. பா.ஜ.க. சூசகமாகச் சொன்னதை ராமஜென்ம பூமி நியாஸ் என்ற ""கஞ்சா சாமியார்கள் அமைப்பு அயோத்தியில் இருந்த முசுலீம்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் எனப் பச்சையாகச் சொன்னது. குஜராத் தவிர நாடெங்கும் கடையடைப்பு ரயில் மறியல் என நடத்தி ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்க முயன்றது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

 

ஆனால் களில் பா.ஜ.க.விற்கு ராமர் கைகொடுத்ததைப் போல இந்த முறை கை கொடுக்கவில்லை. அவர்கள் அறிவித்திருந்த கடையடைப்புப் போராட்டம் அயோத்தியிலேயே பிசுபிசுத்துப் போனது. அயோத்தியில் அத்வானி தலைமையில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்திற்கு உள்ளூர் மக்கள் ஒரு ஆயிரம் பேர் கூடத் திரண்டு வந்து ஆதரவு கொடுக்கவில்லை. அயோத்தியைச் சேர்ந்த மஹந்த் கியான்தாஸ் என்ற சாமியார் அவர்கள் மசூதியை இடிக்காமல் இருந்திருந்தால் தீவிரவாதிகள் அயோத்தி பக்கம் வந்திருக்க மாட்டார்கள் எனக் கூறி உள்ளூர் மக்களின் மனோநிலையைப் பிரதிபலித்தார்.

 

இத்தாக்குதல் பற்றி ஒரு ""இந்து சாமியார் வெளிப்படுத்தியிருக்கும் நேர்மையான நியாயமான கருத்தை மதச்சார்பற்ற ஓட்டுக் கட்சிகளும் கூறியிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சிகளோ இத்தாக்குதல் பற்றி பா.ஜ.க.வின் குரலில் பேசி தங்களின் "மென்மையான இந்து மதவெறியை வெளிப்படுத்திக் கொண்டன.

 

ராமர் கோயில் மீது நடந்த தாக்குதலை நாட்டின் இறையாண்மையின் மீது நடந்த தாக்குதலாகக் கூறினார் காங்கிரசின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி.

 

சி.பி.எம். சி.பி.ஐ. உள்ளிட்ட இடதுசாரிக் கூட்டணியோ அயோத்தி மீது நடந்த தாக்குதல் நாட்டின் மீது நடந்த தாக்குதல் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியலில் நிலையற்ற தன்மை மற்றும் சர்வாதிகாரத்தை உருவாக்க நடந்த சதி என பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளன. நாட்டையும் நாட்டின் இறையாண்மையையும் ஒரு கோவிலோடு தொடர்புபடுத்துகிறார்கள் என்றால் இந்த நாட்டை இந்து நாடு என்றே அறிவித்து விடலாம்.

 

மதச் சார்பின்மை வேடம் போடும் காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும் ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் நடந்த வரலாற்று உண்மையைக் குழிதோண்டி புதைக்கிறார்கள். டிச. அன்று பாபர் மசூதியைச் சட்ட விரோதமாக இடித்துத் தள்ளியதோடு அந்த இடத்தில் திடீர் ராமர் கோவிலையும் கட்டி முடித்தன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். இந்தச் சட்டவிரோத ராமர் கூடாரத்திற்கு அன்று நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த மைய காங்கிரசு அரசும் உ.பி. மாநில உயர்நீதி மன்றமும் சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கின. பாபர் மசூதி வளாகத்தை இந்துமத வெறிக் கும்பல் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துக் கொள்ளுவதற்கு வசதியாகவே அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து நடந்துவரும் வழக்கில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்ப்புச் சொல்லாமலேயே இழுத்தடித்து வருகிறது அலகாபாத் உயர்நீதி மன்றம்.

 

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கோ ராமர் கோவிலில் இருந்த இடத்தை இடித்து விட்டுத்தான் முசுலீம் மன்னர் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கோ எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது என்பதை ஏராளமான வரலாற்று ஆய்வுகளும் பாபர் மசூதி வளாகத்தில் நடந்துள்ள அகழ்வாராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. ஆனால் இந்து மதவெறிக் கும்பலோ மத நம்பிக்கை என்ற பெயரில் இந்த அறிவியல்பூர்வமான வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் அடாவடித்தனமாக நடந்து வருகிறது. ஊரான் சொத்தை ரவுடிகள் ஆக்கிரமித்துக் கொள்வதைப் போல இந்து மதவெறிக் கும்பல் தனது அரசியல் பலம் அதிகார வர்க்கத்தில் ஊறிப் போயிருக்கும் இந்து மதவெறி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு முசுலீம்களுக்குச் சொந்தமான பாபர் மசூதி வளாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

 

இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியைக் கட்டிக் கொடுக்கக் கோரிப் போராடுவதுதான் அரசியல் ரீதியில் சரியான முடிவாக இருக்க முடியும். ஏனென்றால் சட்டவிரோதமான முறையில் ஆர்.எஸ்.எஸ். கட்டியுள்ள கூடாரம் மத நம்பிக்கை சார்ந்த விசயமல்ல. இந்து மதவெறி பாசிஸ்டுகள் அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்தின் குறியீடு. இந்தக் குறியீட்டைத் தகர்க்கப் போராடுவது எந்த வகையிலும் நாட்டிற்கோ மக்களுக்கோ எதிரானதல்ல.

 

ஆனால் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக் கட்சிகளோ இந்தப் பிரச்சினையில் முடிவெடுக்கும் உரிமையை நீதிமன்றத்திடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டன. அவர்களின் முடிவுப்படி பார்த்தால் கூட இந்தத் தாக்குதல் முயற்சிக்குப் பிறகாவது பாபர் மசூதி வளாகம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் நியாயமாகவும் விரைவாகவும் தீர்ப்பு வழங்கக் கோரியிருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட எழுப்பாமல் இந்தத் தாக்குதலை நாட்டின் மீதான தாக்குதலாக ஊதிப் பெருக்கியிருப்பது அக்கட்சிகளின் மிதவாத இந்து மதவெறியைத்தான் எடுத்துக் காட்டியிருக்கின்றது.

 

செல்வம்