Language Selection

புதிய ஜனநாயகம் 2005

08_2005.jpgகையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். "அகதி' என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883இலேயே இறந்து விட்டவர்.

ஆம்! "மார்க்ஸ் எனும் அரக்கன்' என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. "ரேடியோ 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறிகொண்ட எதிர்வினைக்குக் காரணம்.

 

""ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?'' இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.

 

இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத் தக்கதே. 15 ஆண்டுகளுக்குமுன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், ""மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது'' என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. ""அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை'' என்பதே அந்தப் பொதுக் கருத்து.

 

பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா கூறினார், ""நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இதுதான். இத்துடன் முடிந்தது'' இது அவரது பிரகடனம்.

 

வரலாறோ திரும்பியது ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரசியாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலகச் சந்தை முழுதும் பீதி பரவத் தொடங்கியது.

 

""உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?'' என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் ""ஃபைனான்சியல் டைம்ஸ்'' பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? ""டாஸ் காபிடலை (மார்க்சின் ""மூலதனம்'' நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!''

 

முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட ""நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?'' என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.

 

""தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்'' என்று எச்சரிக்கை செய்கிறார், மிகப் பெரும் கோடீசுவரனும் ஊகச்சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.

 

""முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சமநிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.''

 

""அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை சந்தை கடுங்கோட்பாட்டுவாதம்தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்.''

 

இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச்சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்

 

"நியூயார்க்கர்' பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997இல் எழுதினார். ""வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை'' என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.

 

மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன்முறையாக மார்க்சைப் படித்தாராம். ""உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்'' இவை மார்க்சைப் படித்தபின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.

 

முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்சும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம். ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.

 

கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: ""ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எலலா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.''

 

சமீப காலம் வரையிலும் இங்கிலாந்தில் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்; அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல, ""திடப்பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன'' அல்லவா?

 

உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும், அந்தச் சரக்கானது, பேராற்றலையும் உயிர்த்துடிப்பையும் பெற்று, தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.

 

நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும், அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்தரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம்தான் இருக்கிறது; அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.

பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்

பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்துவரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார் கார்ல் மார்க்ஸ்.

 

- ஃபிரான்சிஸ் வீன்
("கார்ல் மார்க்ஸ்' என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்.)
லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரை.
"இந்து' நாளேட்டிலிருந்து (22.7.05) மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.