மன்மோகன் சிங் அமெரிக்காவிற்குக் கிளம்பிச் செல்லும் முன்பாக இந்தியா விற்பனைக்கு அல்ல ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டத்தை மூன்றாவது நபர் தீர்மானிக்க முடியாது நாட்டுப்பற்றைப் பற்றி காங்கிரசுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை என்றெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளோடு அறிக்கை போர் நடத்தினார். ஆனால் இந்த வசனமெல்லாம் வெற்றுச் சவடால்கள் என்பது மன்மோகன் சிங் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடனேயே அம்பலமானது.
ஈரானில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் பல அபாயங்கள் இருக்கின்றன அதனால் இத்திட்டத்திற்கு முதலீடு செய்யத் தயங்குகிறார்கள் என பேட்டியளித்து ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டத்தைக் கை கழுவ இந்தியா தயாராக இருப்பதை சூசகமாக தெரிவித்துவிட்டார் மன்மோகன் சிங்.
மேலும் அமெரிக்கா மிரட்டாமலேயே சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பது தொழிலாளர் வைப்பு நிதியைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது அந்நிய கணக்காயர் நிறுவனங்களும் சட்ட நிறுவனங்களும் இந்தியாவில் நுழைய அனுமதிப்பது ஆகிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
குறிப்பாக விவசாயத்தில் அதிஉயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்ற பெயரில் இரண்டாவது பசுமைப் புரட்சியைக் கொண்டுவரத் திட்டம் போடுகிறது அவரது அரசு. முதல் பசுமைப் புரட்சி பாரம்பரியமிக்க இந்திய விதைகளை அழித்தது மண்ணை நஞ்சாக்கியது என்றால் இந்த இரண்டாம் பசுமைப் புரட்சி இந்திய விவசாயிகளை விவசாயத்தில் இருந்து தூக்கியெறிந்துவிட்டுத் தான் ஓயும்!
உலகிலேயே மிகவும் அதிகமாக வெறுக்கப்படும் நபர் ஜார்ஜ் புஷ்தான். அவரது சொந்த நாட்டிலேயே கிறித்தவ மத வெறியர்களும் போர் வெறியர்களும்தான் அவரை ஆதரிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜார்ஜ் புஷ்ஷின் தலைமையை உலகிலுள்ள ஒவ்வொரு நாகரிக மனிதனும் பாராட்டுவான் ஏற்றுக் கொள்வான் எனப் புகழ்ந்து பேசி தனது அருவருப்பான அடிமைத்தனத்தைக் காட்டிக் கொண்டார் மன்மோகன் சிங்.
இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்காக காலனிய ஆட்சியின் பொழுது பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்குப் பல நன்மைகளைச் செய்திருக்கிறது எனக்கூறி தனது காலனிய விசுவாசத்தைக் காட்டிக் கொண்ட மன்மோகன் சிங்கிடம் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது!