குர்கானில் ஹோண்டா நிறுவனத் தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்தியுள்ள தாக்குதலுக்கு விவரணை தேவையில்லை. இராக் மக்கள் மீது அமெரிக்க இராணுவமும் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் இராணுவமும் நடத்திவரும் தாக்குதல்களில் வெளிப்படும் கொலைவெறியை இந்தத் தாக்குதலிலும் நாம் காண்கிறோம். தடிக் கம்பிற்குப் பதிலாக போலீசின் கையில் துப்பாக்கிகள் மட்டும் இருந்திருக்குமானால், இரண்டாவது ஜாலியன்வாலா பாக்கை அந்த மண் இந்தியாவிற்கு வழங்கியிருக்கும்.
700 தொழிலாளர்களுக்கு இரத்தக் காயம்; மருத்துவமனையில் திரண்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரும் மூர்க்கமாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். காணாமல் போன தொழிலாளர்களின் கதியோ என்னவென்றே தெரியவில்லை. ""அவர்கள் வீட்டுக்குப் போயிருப்பார்கள்'' என்று திமிராகப் பதில் சொல்கிறது போலீசு. போலீசின் கொலை வெறியை அம்பலப்படுத்தி தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுத்த ராஜேந்திர பதக் எனும் தொழிலாளர்களின் வழக்குரைஞரை இரண்டு நாட்கள் சித்திரவதை செய்து, பிறகு அவர் மீது கொலை முயற்சி வழக்கும் போட்டிருக்கிறது போலீசு. பொய் வழக்கை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்கிறார்கள் வழக்குரைஞர்கள்; ""இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்'' என்று சவால் விட்டு ராஜேந்திர பதக்கிற்குப் பிணையை மறுத்துச் சிறையில் தள்ள உத்தரவிடுகிறார் நீதிபதி. இந்தக் கொலைவெறியாட்டத்தைப் படம் பிடித்த தொலைக்காட்சி நிருபர்கள் போலீசால் தாக்கப்படுகிறார்கள்; 28ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட குர்கான் பந்த்ஐ முறியடிக்க போலீசே முன்நின்று வேலை செய்கிறது. போராட்டம், தாக்குதல், கலவரம், கண்ணீர், கடையடைப்பு, நாடாளுமன்ற அமளி, கட்சித் தலைவர்களின் கண்டனங்கள்.... அனைத்திற்குப் பிறகும் ""வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது'' என்று திமிராக அறிவித்திருக்கிறது, ஹோண்டா நிர்வாகம்.
இனி என்ன? தொழிலாளி வர்க்கத்திற்கேயுரிய போர்க்குணத்துடன், போலீசு என்றழைக்கப்படும் அந்தக் கூலிப்படையைத் திருப்பித் தாக்கிய ஹோண்டா தொழிலாளர்களின் வீரமும் தனியொரு பெண்ணாக நின்று போலீசின் அடிமைத் தொப்பியையும், ஆதிக்கத் தடிக்கம்பையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை ஓட ஓட விரட்டிய வீரமதியின் வீரமும் நம் கண்ணில் நிற்கிறது. போலீசென்னும் கூலிப்படை ஒரு கோழைப்படைதான் என்ற உண்மையை, இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் நாடி நரம்புகளிலெல்லாம் உணர்ச்சியாகப் பாய்ச்சியிருக்கிறது இந்தப் போராட்டம். அடிமைத்தனத்தையும் இயலாமையையும் இறைஞ்சுதலையுமே விடுதலையின் பாதையாக இருளில் தடுமாறி வந்த இந்திய விடுதலை இயக்கத்திற்கு பகத் சிங் என்றொரு ஒளிக்கீற்றை ஜாலியன்வாலா பாக் வழங்கியதைப் போல, குர்கான் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் கண்ணைத் திறக்க வேண்டும். தொழிற்சங்கவாதமும் சமரசவாதமும் தன்னிடம் தோற்றுவித்திருக்கும் அறிதுயில்தான், தனது சகோதரர்கள் அநாதைகளைப் போல வேட்டையாடப்படுவதற்குக் காரணம் என்பதைத் தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும். போலீசின் மீது சோனியாகாந்தி தெரிவித்திருக்கும் கண்டனமும், சில அதிகாரிகளின் இடமாற்றமும், நீதி விசாரணையும், நிவாரணத் தொகையும் இந்த வன்முறையின் உண்மையான உள்ளடக்கத்தை மறைப்பதற்காகவே நடத்தப்படும் நாடகங்கள்.
பன்னாட்டு நிறுவனங்களின் மனங்கவர்ந்த மையமான குர்கானின் எந்தத் தொழிற்சாலையிலும் தொழிற்சங்கம் கிடையாது. தொழிலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு கிடையாது. குறைந்தபட்ச ஊதியம் குறித்த வரைமுறைகள் கிடையாது. இரத்தம் சொட்டத் சொட்டத் தாக்கப்பட்டுச் செய்வதறியாமல் திகைத்து நிற்கும் ஹோண்டா தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒரிசா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடிச் சென்ற இந்தத் தொழிலாளர்களின் அதிகபட்ச ஊதியமே 5000 ரூபாய்தான் என்கிறது ""தினமணி''. இந்த ஊதியத்திலும் கால் பகுதியை வைப்புத் தொகையாக நிர்வாகமே பிடித்து வைத்துக் கொள்கிறது என்றும் பெண் தொழிலாளர்கள் வசைச் சொற்களால் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டுகிறார் ""மார்க்சிஸ்டு'' கட்சியின் மாதர் சங்கத் தலைவர்.
இந்தப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்த சம்பவமே குர்கான் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் கொடுங்கோன்மைக்குச் சான்று கூறுகிறது. 6 மாதங்களுக்கு முன் ஹோண்டா நிர்வாகத்தின் அதிகாரியொருவன் ஒரு தொழிலாளியைத் தாக்கியதாகவும், அதற்கு நியாயம் கேட்கப் போன 4 தொழிலாளர்களையும் சேர்த்து 5 பேரையும் வேலை நீக்கம் செய்ததாகவும், இந்த அநீதியை எதிர்த்த 50 தொழிலாளர்கள் உடனே தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறுகிறது ""இந்து'' நாளேடு. மிகக் குறுகிய காலத்தில் 1000 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்ததுடன், ஜூன் 27 முதல் கதவடைப்பும் செய்திருக்கிறது, நிர்வாகம்.
மாட்டைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி 5 தலித் இளைஞர்களைப் பகிரங்கமாக வெட்டிக் கொன்றார்களே ஜாட் சாதி வெறியர்கள், அந்த நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மை அரங்கேறிய ஜஜ்ஜாருக்கு அருகில்தானிருக்கிறது குர்கான். அதற்கு எந்த விதத்திலும் சளைக்காத முதலாளித்துவக் கொடுங்கோன்மை இந்தத் தொழில் நகரம் முழுவதும் ஆட்சி செலுத்துகிறது. ""நாட்டின் தலைநகருக்கு அருகாமையிலேயே இருக்கும் இந்தத் தொழில் நகரத்தில் இந்திய அரசின் சட்டங்கள் எதையும் பன்னாட்டு நிறுவனங்கள் மதிப்பதில்லை'' என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது "மார்க்சிஸ்டு' கட்சி. ""போலீசு பன்னாட்டு நிறுவனங்களின் கூலிப்படையா?'' என்று விடை தெரிந்த விசயத்தையே கேள்வியாக எழுப்புகின்றனர் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இத்தகைய கேள்விகளின் அசட்டுத்தனத்தை அம்பலமாக்குவதுபோல வெளிவருகிறது அரியானா காங்கிரசு முதல்வர் ஹ_டாவின் வேண்டுகோள்: ""அந்நிய மூலதனத்தின் மையமான குர்கானில் அமைதி திரும்ப உதவுங்கள்!''. அமைதி திரும்ப வேண்டுமென்றால் தொழிலாளர் துறை "சீர்திருத்தங்கள்' உடனே சட்டமாக்கப்பட வேண்டும் என்று அறிக்கை விடுகிறது இந்திய முதலாளிகள் சங்கம்.
அடி வாங்கிய தொழிலாளி அதைச் சகித்துக் கொண்டு போயிருந்தால், வேறு நான்கு பேர் அதில் தலையிட்டு நீதி கேட்காமல் ஒதுங்கியிருந்தால், அவர்களுடைய வேலை நீக்கத்தை அந்த 50 பேர் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் பிரச்சினை இல்லை, போராட்டம் இல்லை, தடியடியும் இல்லை. இத்தகைய தொழில் அமைதியைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் கோருகின்றன் ப.சிதம்பரமும் கோருகிறார். ""குர்கான் போன்ற சம்பவங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்து விடும்'' என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் ஜப்பானின் தூதர். இந்தத் திமிர்த்தனமான பேச்சுக்கு சம்பிரதாயமான எதிர்ப்பைக் கூட இந்திய அரசு காட்டவில்லை. இந்தப்புறத்தில் அடிபட்ட தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறுகிறார் சோனியா. அந்தப் புறம் பன்னாட்டு முதலாளிகளிடம் பல்லிளித்துச் சமாதானம் கூறிக் கொண்டிருக்கிறது காங்கிரசு அரசு.
குர்கான் போராட்டம் மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் அடைந்துள்ள விழிப்புணர்வைக் காட்டிலும், பன்னாட்டு முதலாளிகளும் இந்தியத் தரகு முதலாளிகளும் அடைந்துள்ள எச்சரிக்கை உணர்வே துலக்கமாகத் தெரிகிறது. தொழிலாளி வர்க்கத்தின்மீது சட்டபூர்வமாகவே பாசிசத்தை நிலைநாட்டுவது ஒன்றுதான் மறுகாலனியாக்கக் கொள்ளைக்குத் தேவையான உத்திரவாதத்தை வழங்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
குர்கான் அடக்குமுறையின் உண்மையான பொருளைத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் போலீசு வெறியாட்டமோ தொழிற்சங்க உரிமை பறிப்பு குறித்த பிரச்சினை மட்டுமோ அல்ல் இவை விளைவுகள் மட்டுமே. உரிமைகள் ஏதுமற்றக் கொத்தடிமைகளாய் தொழிலாளர்கள் சுரண்டப்படும் கொடுமை நாட்டின் ஒவ்வொரு தொழில் நகரத்திலும் பரவி வருகிறது. கிராமங்களில் அது விவசாயிகளின் தற்கொலையாக, காரணம் அறியவொண்ணாத பட்டினிச் சாவாக வடிவமெடுக்கிறது. நாடு முழுமையும் ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த மரணமும், அடிமைத்தனமும், அடக்குமுறையும் மறுகாலனியாக்கத்தின் விளைவுகள். இந்த உண்மையைத் தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும்போது, "மறுகாலனியாக்கத்தின் ஜாலியன்வாலா பாக்' என்றழைக்கப்படும் அரசியல் முக்கியத்துவத்தை குர்கான் போராட்டம் பெற்றுவிடும்.