தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். இவர்கள் தங்களின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அரசிடம் போராடிப் பெற்ற சலுகைதான் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) ஆகும். அரசு அளிக்கும் இந்த உதவித் தொகை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்டால்தான், அவர்களால் தமது கல்விச் செலவுகளை ஈடுசெய்ய முடியும். ஆனால், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சென்ற (200405) ஆண்டிற்கான உதவித் தொகை இந்த ஆண்டு ஜூலை வரை வழங்கப்படவில்லை.
மாணவர்கள் திரண்டு முதல்வரிடம் உதவித் தொகை கேட்கும் போதெல்லாம் அரசிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை என்று அறிவித்து வந்தார், அவர். உண்மையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே இந்தத் தொகை கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை முதல்வர், சில பேராசிரியர்கள், அலுவலர்கள் அடங்கிய கூட்டுக் களவாணிக் கும்பல் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு, அதில் வரும் வட்டியை அனுபவித்துக் கொண்டிருந்தது. உதவித் தொகையைத் தமது வங்கிக் கணக்கில் சேர்த்து வட்டியைப் பெருக்கிக் கொள்வதற்காக, இந்த உதவித் தொகையை மாணவர்களுக்குக் காலந்தாழ்த்திக் கொடுப்பது, போலி ஆவணங்கள் தயார் செய்து மொத்தப் பணத்தையும் சுருட்டிக் கொள்வது முதலான மோசடிகளை எதிர்த்தும், எல்லோருக்கும் கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்கக் கோரியும் போராட்டத்துக்கு மாணவர்களை அணிதிரட்டினார், சென்னை மாவட்ட பு.மா.இ.மு. செயலாளரான தோழர் கார்த்திகேயன்.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், பேராசிரியர்கள் சாய்ராம், ரவிக்குமார் ஆகியோர் 12.7.05 அன்று மாணவர்களிடம் கோரிக்கை மனுவில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த தோழர் கார்த்திகேயனைப் பிடித்து இழுத்துச் சென்று, தனியறையில் அடைத்து, ஆடைகளைக் கிழித்து, ஆபாசமாக ஏசிக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரிடமிருந்து செல்போன், கடிகாரம், பணம் முதலானவற்றைப் பறித்துக் கொண்டு, கல்லூரிக்குள் கலாட்டா செய்து தங்களைத் தாக்க வந்ததாகப் பொய்ப் புகார் கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். இதனடிப்படையில் பொய் வழக்கு தொடுத்த போலீசார், தோழரைச் சிறையிலடைத்தனர்.
மாணவர்களின் நியாயவுரிமைக்காகப் போராடிய தோழரை ரௌடிகளைப் போலத் தாக்கிய சாந்தாராம், சாய்ராம், ரவிக்குமார் ஆகியோர் பார்ப்பன பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இன் உறுப்பினர்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் மாநில மாநாட்டை பச்சையப்பன் கல்லூரி வளாகத்திலேயே நடத்த ஏற்பாடு செய்த பொழுது, பு.மா.இ.மு.; எஸ்.எஃப்.ஐ. ஆகிய மாணவர் அமைப்புகள் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, பு.மா.இ.மு. தோழர் கார்த்திகேயன் மீது ஆத்திரப்பட்டதற்கும், மூர்க்கத்தனமாகத் தாக்கியதற்கும் இதுவும் முக்கியக் காரணமாகும்.
மறுநாள், 13.7.05 அன்று தோழர் கார்த்திகேயன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீதியடைந்த நிர்வாகம் அன்றைய தினமே, உடனடியாக உதவித் தொகை வழங்கியது. வங்கியில் வைத்து வட்டியை சுருட்டிக் கொண்டு இத்தனை நாளும் ஏய்த்து வந்த முதல்வர் கும்பலின் மோசடியை இது உறுதிப்படுத்தியது.
தோழர் கார்த்திகேயன் தாக்கப்பட்டது விதிவிலக்கான விவகாரமல்ல் கல்வி நிறுவனங்களின் நிர்வாக முறையும் பேராசிரியர்களின் மன இயல்பும் எவ்வாறு ஜனநாயக விரோதமாக, பாசிசமயமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இத்தாக்குதல் இன்னும் ஒரு சான்று; பல ஜனநாயகவாதிகளையும் மொழிப்போர் வீரர்களையும் கொடுத்த பச்சையப்பன் கல்லூரி இன்று ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக மாறிக் கொண்டிருப்பதற்கான நிரூபணம். இப்பாசிச ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் குற்றவாளிகளான முதல்வர் மற்றும் பேராசிரியர்களைக் கைது செய்து பணிநீக்கம் செய்யக் கோரியும் தமிழகம் எங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை பு.மா.இ.மு. நடத்தி வருகிறது.
தஞ்சையில், 18.7.05 அன்று ரயிலடி அருகேயும், 20.7.05 அன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகிலும் திருச்சியில் 22.7.05 அன்று அண்ணாசிலை அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திரளாக மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், வழக்குரைஞர்கள், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளின் பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். பு.மா.இ.மு.வின் நியாயமான போராட்டம் மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.