கோவை மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, பஞ்சாலைத் தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம். இந்நகராட்சியின் ஆணையாளரான திரு.கே.ஆர். செல்வராசு அவர்கள் இலஞ்ச, ஊழல், அதிகார முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற நகராட்சியாக, இதை மாற்றிய "பெருமை'க்குரியவர் என்றால் மிகையல்ல.
நகராட்சி ஊழியர்கள், தனது வீட்டின் எல்லா வேலைகளையும் செய்வதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள்! நகராட்சி வாகனங்கள், தனது குழந்தைகள் பள்ளி சென்று வரவும் தனது மனைவிஉறவினர்கள் கோயில் குளங்களுக்குச் சென்று வருவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை! வீட்டு வரியா?
புதிய வீட்டுமனை அங்கீகாரமா? பால் விற்பனையா? குடிநீர் குழாய் இணைப்பா? சாலை, சாக்கடை கட்டுமானப் பணிகளா? நகராட்சி ஒப்பந்தப் பணிகளா? இன்னும் இன்னும் என்னென்ன வழிகளிலெல்லாம் இலஞ்ச, ஊழலும் அதிகார முறைகேடுகளும் செய்ய முடியுமோ அவ்வளவையும் திறமையுடன் செய்து வருபவர்தான் ஆணையாளர் திரு.செல்வராசு அவர்கள்!
இந்த ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விடிவெள்ளி நுகர்வோர் நல மன்றம் ஆகிய அமைப்புகள் சார்பாக கேலிச் சித்திரத்துடன் கூடிய தட்டி ஒன்று ஆகஸ்ட் 1ம் தேதி நகராட்சி முன்புறம் கட்டப்பட்டது. அதைக் கட்டிய ஒரு சில மணி நேரங்களிலேயே ஆணையாளர் உத்தரவின் பேரில் திருடப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டது. பு.ஜ.தொ.மு. தோழர்கள் இருவர் தட்டி பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே வரவழைக்கப்பட்ட போலீசு, தோழர்களைக் கண்டதுமே, மிரட்ட வந்ததைக் கைவிட்டுத் திரும்பச் சென்று விட்டனர். அதுவரை இப்படி தட்டி கட்டலாமா எனப் பேசிய அதிகாரிகள், தட்டியைத் தாங்கள் எடுக்கவே இல்லை எனக் கூறிவிட்டனர். 3ஆம் தேதி தட்டி படத்துடன், ஆணையரின் யோக்கியதையை அம்பலப்படுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும் தேடித் தேடிக் கிழிக்க ஆட்களை ஏவினார் ஆணையாளர்.
மறுபுறம், ஆணையாளரே பேச்சு வார்த்தைக்குத் தூதுவிட்டுப் பார்க்கிறார். பு.ஜ.தொ.மு. சார்பாக பல்வேறு பிரச்சினைகளையொட்டி பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என போலீசு அனுமதி மறுத்து வருகிறது. போலீசின் இந்த ஜனநாயக மறுப்பை அம்பலப்படுத்தியும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு யார் காரணம் என்பதை அம்பலப்படுத்தியும் பெரிய சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன. போலீசின் ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்குப் பின் நகராட்சி ஆணையாளர் நகராட்சி வாகனங்களை வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்துவதில்லை. மக்களிடையேயும், இந்த அம்பலப்படுத்தும் இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
பு.ஜ. செய்தியாளர் உடுமலை.